Tuesday 29 December 2020

🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..29.12.'20

 





🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..29.12.'20

ஸ்ரீதத்த  ஜெயந்தி

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலை நடத்தும் மும்மூர்த்திகளும் பிரம்மா விஷ்ணு சிவன் மூவரின் அம்சமே என்பதை உலகுக்கு உணர்த்துவதே தத்தாத்ரேய அவதாரம்.

தத்தாத்ரேயர் அனுமன் போல் சிரஞ்சீவியாவார்.

அத்திரி முனிவரும் அவர் மனைவி அனுசூயாவும் காட்டில் வசித்தபோது, அனுசுயா தனக்கு மும்மூர்த்திகளே குழந்தைகளாகப் பிறக்க வேண்டினாள்.

இதை அறிந்த மும்மூர்த்தியரும் தம் தேவியரிடம் ஆலோசனை கேட்டனர். தாமே கற்பில் சிறந்தவர்கள் என்ற பெருமையில் இருந்த முத்தேவியர் அவளுக்கு சோதனை வைத்து அதில்  அவள் வெற்றி பெற்றால் அவள் கேட்டபடி நடக்கலாம் என்றனர். அவள் தோற்று விடுவாள் என எண்ணினர்.

மும்மூர்த்திகளும் துறவி வடிவில் ஆசிரமம் வந்து அவளை நிர்வாணமாக உணவிட வேண்டினர். ஒரு நிமிடம் துணுக்குற்ற அனுசுயா தம் கற்பின் மீது நம்பிக்கை வைத்து,  கணவருக்கு பாதபூஜை செய்த நீரை மும்மூர்த்திகள் மேல் தெளித்து அவர்களை குழந்தைகளாக வேண்டினாள். அத்துடன் அவர்களுக்கு புகட்ட பால் வர வேண்டினாள். பின் அவர்கள் வேண்டியபடி உடலில் ஆடையின்றி பால் புகட்டினாள்.

வீடுகளில் திரும்பிய அத்திரி முனிவர் அனுசுயா சொன்னவைகளைக் கேட்டு, மூன்று குழந்தைகளையும் சேர்த்து அணைக்க, ஒரு உடல், மூன்று தலை, இரண்டு கால்கள், ஆறு கைகளுடன் குழந்தை இணைந்தது. அதற்கு தத்தாத்ரேயர் என்று பெயரிட்டார்.

இவ்விஷயம் அறிந்த மூன்று தேவியரும் அனுசுயாவின் வீட்டுக்கு வந்து தம் கணவரை பழைய வடிவில் திருப்பித்தர வேண்ட, அத்திரி, 'குழந்தையில்லாத எங்களுக்கு இந்தக் குழந்தையும் வேண்டும்' என்றார். 

உடன் மும்மூர்த்திகளும் சுய வடிவம் பெற்று, 'உங்கள் விருப்பப்படி இந்தக் குழந்தை இங்கேயே இருக்கும். இவன் பெரிய ரிஷியாக விளங்குவான்' என்று கூறி மறைந்தனர்.

இவரது அவதாரம் நடந்த தலம் சுசீந்திரம் என்று கூறப்படுகிறது. தாணுமாலயனாக மும்மூர்த்தி ரூபமாக  அங்கே இறைவன் காட்சி தருகிறார்.

வடமாநிலங்களில் குரு என்பது தத்தரையே குறிக்கிறது. அலகாபாதில் இவருக்கு தனி ஆலயம் உண்டு.

ஸ்ரீதத்தாத்ரேயரை நினைத்தாலே நம் பாவங்கள் அனைத்தும் விலகுவதோடு,  இவரை  உபாஸித்து வணங்கித் தொழுதால், ஞானமும் யோகமும் கைகூடும் மனோதிடமும் பெருகும் என்பது நம்பிக்கை!

இன்று தத்தாத்ரேய ஜயந்தி. நாமும் அவரை வேண்டி ஞானம் தர வேண்டுவோம்🙏

இன்றைய கோலம் சிக்குக் கோலம்.

நிவேதனம் சாமை பொங்கல்

🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..28.12.'20

 



🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..28.12.'20


திருப்பாவை போன்றே திருவெம்பாவை நோன்பும் கடைப் பிடிக்கப் படுகிறது. இதுவும் மார்கழியில் சிவபெருமானை வேண்டி கன்னிப் பெண்கள் கடைப்பிடிக்கும் நோன்பாகும். 


அதிகாலை எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து 

கோயில்சென்று சிவகாமி 

சமேத நடராஜரைக் கண்டு வணங்குவர். இந்த விரதம் இருப்போர் ஒரு நேர உணவு மட்டுமே உண்பர்.


இந்நோன்பு நோற்கும் கன்னிப் பெண்கள் விடிகாலையில் எழுந்து தம் தோழியரையும் அழைத்துக் கொண்டு ஆற்றுக்குச் சென்று நீராடி ஈசனை வணங்கிப் பாடுவார்கள். இதனைக் கண்ட மாணிக்கவாசகப் பெருமான் இந்நிகழ்ச்சியை

திருவெம்பாவையாக பாடல்களாகப் பாடினார். இப்பாடல்களையே இன்றும் திருவெம்பாவைக் காலங்களில் கோயில்களில் பாடுவது வழக்கம். 


ஆதியும் அந்தமும் இல்லாத அந்த சிவபெருமான் அருளை அத்தனை பேரும் பெற வேண்டி உறங்குவோரையும் விடிகாலை  சென்று எழுப்பி அவர்களும் புண்ணியம் பெற பாடத் தூண்டுகின்றனர்.

தொடரும்..


இன்றைய கோலம்..பீகாரின் நாட்டுப்புறக் கலையான மதுபானி வகைக் கோலம்.


Madhubani Paintings, also known as Mithila Paintings are the quintessence folk art form of Mithila Region of Bihar


Madhubani’ which means, ‘forest of honey,’ has a lineage of more than 2500 years.These paintings are the local art of Madhubani district of Bihar, which is also the biggest exporter of Madhubani paintings in India.


இன்றைய நிவேதனம்..சேமியா பொங்கல்

🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..27.12.'20




🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..27.12.'20

ஆண்டாள் மகத்துவம் எத்தனை சொன்னாலும் திகட்டாது.

ஆண்டாள் தனது பதினைந்தாம் வயதில் ஸ்ரீ ரங்கநாதப் பெருமாளை மணந்து இறைவனுடன் இரண்டறக் கலந்தாள். அதற்கு முன்பு அவள் பாடிய திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் வைணவ நூல்களுள் மிகச் சிறப்பு வாய்ந்தவை. இவற்றின்  இலக்கிய புலமை, தத்துவம், பக்தி ஆகியவை மிகச் சிறப்பானது. 

திருப்பாவையின் முப்பது பாடல்களும் ஆண்டாள் தன்னை ஆயர்பாடி கோபியாக நினைத்து கண்ணனை கணவனாகப் பெற வேண்டி பாடப்பெற்றவை.

இவரது இரண்டாவது படைப்பான நாச்சியார் திருமொழி இறைவனை நினைந்துருகிப் பாடும் காதல்ரசம் மிகு பாடல்களின் தொகுப்பாக,  ஜெயதேவரின் கீத கோவிந்தம் எனும் நூலினை ஒத்ததாக உள்ளது.   இது வடமொழி மறைகளுக்கு நிகராக  ஓதப்படுகின்றது.

இதிலுள்ள ’வாரணமாயிரம்’ பாடல் மிகவும் புகழ் பெற்றது. 

ஆண்டாளின் கொண்டையும், அவள் கையிலுள்ள கிளியும் மிக பிரசித்தமானது.

ஆண்டாளின் இடக்கையில் இருக்கும் கிளி தினமும் புதியதாக  செய்யப்படுகிறது.

இந்த கிளியைச் செய்வதற்கு  நான்கறை மணி நேரம் ஆகுமாம். மாதுளம் மரத்தின் பூக்கள் கிளியின் அலகு மற்றும் வாய்ப்பகுதி செய்வதற்கும், மூங்கில் குச்சிகள் கிளியின் கால் பகுதிக்கும், வாழையிஇலை மற்றும் நந்தியாவட்டை மர இலைகள் உடல் பகுதி செய்வதற்கும் பயன்படுத்தப் படுகின்றன. 

ஆண்டாள் திருவடிகளே சரணம்🙏

இன்றைய நிவேதனம்..குடைமிளகாய் பொங்கல்

இன்றைய கோலம்..சன்ஸ்கார் பாரதி


Saturday 26 December 2020

கீதா ஜயந்தி...25.12.'20






கோதுமை ரவா கல்கண்டு பொங்கல்

பயத்தம்பருப்பு பாயசம்

இன்று கீதா ஜயந்தி.

பகவான் கிருஷ்ணர்உபதேசித்த ஸ்ரீமத் பகவத் கீதையின் முதல் சுலோகத்திலேயே தர்ம க்ஷேத்திரம் எனப்புகழப்படுகிறது உலகிலேயே மிகப் புண்ணியத் தலமாகப் போற்றப்படும் குருக்ஷேத்திரம்.ரிக்வேதம் தோன்றிய காலத்திற்கும் பழமை வாய்ந்தது.

பாண்டவர்களின் முன்னோர்களில்ஒருவரான குரு மகாராஜா, இவ்விடத்தில் உண்மை, தயை, அன்பு, தூய்மை, தானம், தர்மம்,தவம், பிரம்மசரியம் இவை தழைக்க வேண்டி, தன் உடலை சிதைத்து விதைகளாகத் தர,

மகாவிஷ்ணு அவற்றை அப்பூமியில் விதைத்தார். அவரது தியாகத்தை மெச்சிய விஷ்ணு, இருவரங்கள் தர, குருவும் இவ்வூர் தன் பெயரால் அழைக்கப்பட வேண்டுமென்றும், இங்கு வாழ்ந்தவர்எத்தனை பாபம் செய்தாலும் சொர்க்கம் அடையவும் வரம் கேட்டார். சரஸ்வதி, யமுனை ஆறுகளை எல்லைகளாகக் கொண்டு கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கியகுருக்ஷேத்திரம்,இடைப்பட்ட சில நூற்றாண்டுகளில் பெருமை குன்றினாலும், தன் புனிதம், புகழ் இவற்றைஇன்றளவும் இழக்கவில்லை.

இங்கு கால் வைத்த இடமெல்லாம் ஆலயங்கள்,கண் பார்த்த இடமெல்லாம் புண்ணிய தீர்த்தங்கள்! ஒவ்வொன்றும் ஒவ்வொருவரலாற்றுக்கு சான்றாக நிற்கின்றன! நம்மை மகாபாரத காலத்துக்கே அழைத்துச்செல்கின்றன.

தீர்க்கதரிசியான ஸ்ரீ கிருஷ்ணபகவான், பகவத்கீதையை உபதேசிக்க குருக்ஷேத்திரம் சரியான இடம் என்பதை அறிந்தே, இவ்விடத்தை பாரதப்போர் நடத்தத் தேர்ந்தெடுத்தார்.  

சூரிய கிரகணத்தன்று இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில்நீராடுவதால் மறுபிறவி கிடையாது என்ற நம்பிக்கை.

இங்குள்ள ‘ஜ்யோதிசர் தீர்த்’ என்ற இடமே அர்ஜூனனுக்கு பகவான் கீதையை போதித்த இடமாகும். மனம் வெதும்பி, தைரியம்இழந்து, உளம் சோர்ந்து, விரக்தி அடைந்து அர்ஜூனன் போர் செய்ய மறுத்தபோது, கண்ணபரமாத்மா தர்மத்தை எடுத்துச் சொல்லி, ‘பிறப்பும், இறப்பும் என்றும் நிகழக்கூடியது; உன் கடமையைச் செய், பலனை எதிர்பாராதே! தர்மத்தை நிலை நாட்ட போர் செய்ய வேண்டியது க்ஷத்திரியனாகிய உன் கடமை. பாசங்களிலிருந்து மனதை விலக்கி உன் கடமையைச்செய்!’ என்று அறிவுறுத்தி, தன் விசுவரூப தரிசனத்தைக் காட்டி, அர்ஜூனனை உற்சாகம்பெறச் செய்த இடம். அவ்விடத்தைக் காணும் போதே மெய் சிலிர்க்கிறது.

அங்குள்ள ஆலமரத்தினடியில்தான்கீதோபதேசம் நடந்ததாகக் கூறப்படுகிறது. அம்மரம் 5000 வருடத்திற்கும் மேற்பட்டதாம்.பலமுறை வெட்டப்பட்டும் துளிர்த்து விட்டதாம். அம்மரத்தின், விழுதுகளை அளவாகவெட்டி, மேல்பக்கம் கம்பி வலை போட்டு பராமரிக்கிறார்கள். அம்மரத்தின் கீழ்கிருஷ்ணரின் பாதங்கள் பளிங்கினால் செய்து வைக்கப்பட்டுள்ளன. 

பிரம்மாண்டமான, அகன்ற,பெரிய ஆல மரத்தைக் காணும்போது, ‘இதன் இலையும், வேரும், விழுதுகளும் ஆண்டவனின்உபதேசத்தைக் கேட்டிருக்குமோ?’ என்று வணங்கி, வழிபடத் தோன்றுகிறது. அருகில்கீதோபதேச சிலை ஒன்று காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகளால், கண்ணாடிப் பெட்டிக்குபெட்டிக்குள் அமைக்கப்டுள்ளது.

‘ஜ்யோதிசர் தீர்த்’ 1000 அடி நீளமும், 500 அடி அகலமும்உள்ளது. சூரிய கிரகணத்தின்போது இங்கு வரும் மக்கள் இத்தீர்த்த நீரை, ஆலமரத்திற்குஊற்றி, இதில் நீராடி நீத்தார் கடன் செய்து, இங்கு அமர்ந்து பகவத் கீதையைப் படித்துவிட்டுச் செல்வார்களாம். உலகின் புனித நூல்களில் தலை சிறந்ததான கீதை தோன்றிய இடத்தில்அமர்ந்து தியானம் செய்து, மனக் கண்ணால் கீதாசாரியனைக் காணும்போது மனம் எங்கோபறப்பது போலுள்ளது! 

ஒவ்வொரு ஆண்டும் இங்கு நவம்பர் – டிசம்பரில் நடக்கும்‘கீதா ஜயந்தி’ உற்சவத்திற்கு உலக நாடுகளிலிருந்தெல்லாம் மக்கள் கூடுகிறார்கள். நம்வாழ்வில் ஒருமுறை கண்டிப்பாகச் சென்று, தரிசித்து புண்ணியம் பெற வேண்டிய இடம் குருக்ஷேத்திரம்.

வைகுண்டம் செல்ல வழிகாட்டிய குருக்ஷேத்திர பூமியில் மார்கழி ஏகாதசியன்று பல்லாயிரக் கணக்கான மக்கள் வருகை தந்து அந்தப் புண்ணிய பூமியை வணங்குகிறார்கள். அத்திருத்தலத் தின் மண்ணைப் பிரசாதமாகத் தங்கள் ஊருக்கு எடுத்துச் செல்கிறார்கள்.

அன்று விரதம் இருந்து அங்கு நடைபெறும் பூஜையிலும் பஜனையிலும் கலந்துகொள்கிறார்கள்.வைகுண்ட ஏகாதசியான இன்று பகவத்கீதையையும் படித்து பலன் பெறுவோம்

குருக்ஷேத்திரம் டில்லியிலிருந்து சண்டிகர் செல்லும்வழியில் 180 கி.மீ. தொலைவில் உள்ளது.

🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..25.12.'20

கீதாஜயந்தி

குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் பகவான் கிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு உபதேசித்த பகவத் கீதை பிறந்தது மார்கழி மாதம், வளர்பிறை பதினோறாம் நாள் என்று புராண வரலாறு கூறுகிறது. வடநாட்டில் ஒவ்வொரு வருடமும் இந்த நாளை கீதா ஜெயந்தி என்று மிகச்சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

இந்த மார்கழி மாத சுக்ல பட்ச ஏகாதசியை "மோட்ச ஏகாதசி' என்றும் போற்றுவர். அதாவது கீதை பிறந்தது வைகுண்ட ஏகாதசி நாளில்!

குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் முதல்நாள் கௌரவர் படைகளைப் பார்த்ததும் அர்ஜுனனுக்கு குழப்பம் ஏற்பட்டு 'நம் உறவினர்களைக் கொன்று இழந்த ராஜ்ஜியம் பெற வேண்டுமா'என்று மனம் வருந்தி காண்டீபத்தைக் கீழே வைத்து தேரோட்டியான கிருஷ்ணரின் முகத்தைப் பார்த்தான்.

அர்ஜுனன் மனதில் உள்ளதை அறிந்த பகவான், அவனுக்கு உபதேசம் செய்தார். அதுவே பகவத் கீதை என்று போற்றப்படுகிறது. மேலும், அர்ஜுனனுக்கு விஸ்வரூபம் காட்டியும் அருளினார்.

பகவத் கீதையானது 18 அத்தியாயங்களில் 701 சுலோகங்களாக அமைந்துள்ளது. இவற்றில் மானிடர்கள் அமைதியாக வாழ, கடைப்பிடிக்கவேண்டிய கர்மம் மற்றும் தர்மம் ஆகியவற்றை பகவான் அருளியுள்ளார்.

பகவத் என்றால் இறைவன்; கீதா என்றால் நல்லுபதேசம். இதற்கு இன்னொரு பொருள் சொல்வதும் உண்டு. கீதா என்ற சொல்லை வேகமாகச் சொல்லிக்கொண்டே வந்தால் "தாகீ' என்று மாறும். "தாகீ' என்றால் "தியாகம்' என்று பொருள்.

வாழ்வில் வரும் சுகதுக்கங்களையும், இன்பதுன்பங்களையும் பகவானிடம் ஒப்படைத்து விடவேண்டும் என்பது இதன் தத்துவமாகும்
அர்ஜுனன் தன் உற்றார், குருமீது அம்பெய்யத் தயங்கியபோது, "தர்மத்தைக் காக்க அவர்களை அழிப்பதில் தவறில்லை. அதற்குரிய பலன்கள் என்னையே சேரும்' என்று கிருஷ்ணர் அருளினார். எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பலனை இறைவனுக்கே அர்ப்பணித்துவிடவேண்டும் என்பதே கீதையின் பொருள். எனவேதான் கீதை இந்துக்களின் ஐந்தாவது வேதமாகப் போற்றப்படுகிறது.
பகவான் அர்ஜுனனுக்கு உபதேசித்தபின், எந்த பிரதிபலனையும் பற்றிக் கருதாமல் தன் கடமையைச் செய்து வெற்றி பெற்றான்.

பகவத் கீதை பிறந்த குருக்ஷேத்திரப் போர்க்களமான அந்தத் திருத்தலம் ஹரியானா மாநிலத்தில் உள்ளது. அங்குள்ள பிரம்மசரோவர் எனும் தீர்த்தக்குளம் சுமார் 3,600 அடி நீளம், 1,200 அடி அகலம், 15 அடி ஆழம் கொண்டது. இந்த குளத்தின் நடுவே, மிக அழகான ஸ்ரீசர்வேஸ்வர மகாதேவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த தீர்த்தக்குளத்தில் ஒரே சமயத்தில் ஐந்து லட்சம்பேர் புண்ணிய நீராட முடியுமாம்.

பிரம்மசரோவரின் எதிர்புறத்தில் ஸ்ரீஜெயராம் வித்யாபீடம் அமைந்துள்ளது. இது 1973-ல் நிர்மாணிக்கப்பட்டது என்று கூறப் படுகிறது. இதனுள் அழகிய பீடத்தில் சதுர்வேதங்களும் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளன. மேலும் இங்கு ஸ்ரீஜெயராம் வித்யா பீடத்தின் முன்னே உள்ள பீஷ்மரின் அம்புப் படுக்கை வணங்கக் கூடிய ஒன்று.

குருக்ஷேத்திரத்தில் ஒரு பெரிய ஆலமரம் உள்ளது. அந்த மரத்தடியில்தான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்ததாக புராண வரலாறு கூறுகிறது. இந்த ஆலமரம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறப்படுகிறது. இங்கு கிருஷ்ணரின் கீதோபதேசக் காட்சியும் உள்ளது. மேலும், ஆலமரத்தடியில் கிருஷ்ணரின் திருப்பாதச் சிற்பமும் உள்ளது.

பிதாமகர் பீஷ்மருக்கும இங்கே கோவில் உள்ளது. அங்கே அம்புப்படுக்கையில் பீஷ்மர் சிற்பம் உள்ளது. சுற்றிலும் பாண்டவர்கள் நிற்கிறார்கள். அந்த இடத்தில் பக்தர்கள் அமர்ந்து விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்கிறார்கள்.

குருக்ஷேத்திரம் திருத்தலம் மார்கழி மாதத்தில் விழாக்கோலம் காண்கிறது. யுத்தம் நடந்த இந்த இடத்தில் வீழ்த்தப்பட்ட வீரர்கள் அனைவரும் வைகுண்டம் சென்றதாக புராணம் கூறுகிறது.

வைகுண்டம் செல்ல வழிகாட்டிய குருக்ஷேத்திர பூமியில் மார்கழி ஏகாதசியன்று பல்லாயிரக் கணக்கான மக்கள் வருகை தந்து அந்தப் புண்ணிய பூமியை வணங்குகிறார்கள். அத்திருத்தலத் தின் மண்ணைப் பிரசாதமாகத் தங்கள் ஊருக்கு எடுத்துச் செல்கிறார்கள்.  பிரம்ம
சரோவர் தீர்த்தத்தில் நீராடி, குருக்ஷேத்திரக் கோவிலுக்குச் செல்கிறார்கள். அன்று விரதம் இருந்து அங்கு நடைபெறும் பூஜையிலும் பஜனையிலும் கலந்துகொள்கிறார்கள்.வைகுண்ட ஏகாதசியான இன்று பகவத்கீதையையும் படித்து பலன் பெறுவோம்🙏

🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..24.12.'20



சூடிக் கொடுத்த சுடர்க்கொடி அரங்கனை அடைந்தாள். 

ஆண்டாள் சூடிய மலர் மாலைகள்  திருப்பதி பெருமாளுக்கு சார்த்துவதற்காக வருடந்தோறும் அனுப்பப்படுகிறது. இவ் வைபவம், புரட்டாசியில், திருப்பதி பிரம்மோற்சவத்தில் கருட சேவை அன்று நடைபெறுகிறது. 

ஆண்டாள் சூடிய மலர் மாலையை பெருமாள் சூடிக்கொண்டு பவனி வருகிறார். இந்த மலர்மாலை, துளசி, செவ்வந்தி மற்றும் சம்பங்கி பூக்களால் தொடுக்கப்பட்டது.

அதே போன்று, திருப்பதி பெருமாளின் மலர்மாலை, வருடந்தோறும் நடைபெறும் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவத்திற்காக அனுப்பப்படுகிறது.

இதே போன்று மதுரையில் நடைபெறும்  சித்திரைத் திருவிழாவின் போது, ஆண்டாளின் மலர்மாலை கள்ளழகருக்கு அணிவிப்பதற்காக, திருவில்லிப்புத்தூரிலிருந்து கொண்டு செல்லப்படுகிறது.

இன்றைய நிவேதனம்..சரவணபவன் காரப் பொங்கல்..ஓமவல்லி சட்னி

இன்றைய கோலம்..ஒரிஸ்ஸாவின் கலையான Chita or Jhoti எனப்படும் ஓவியவகை


🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..23.12.'20



ஆழ்வாரும் அரங்கத்து பெருமாளே தன் மகளுக்கேற்ற மணவாளன் என எண்ணினாலும்  இது எப்படி நடக்கும் என்ற கவலையில் ஆழ்ந்தார். ஸ்ரீ ரங்கப் பெருமான் அவர் கனவில் தோன்றி...கோதையை திருவரங்கத்துத் திருமுற்றத்துக்கு அழைத்து வருக. அங்கே தக்க முறையில் அவள் கைத்தலம் பற்றுவோம்...என்று சொல்ல மன மகிழ்ச்சியுற்றார்.

ஒரு நாள் அரங்கத்துக் கோயில் பரிவாரம் அனைவரும் எம்பிரானின் சத்திரம் சாமரம் போன்ற வரிசைகளோடு வில்லிபுத்தூர் வந்து பெரியாழ்வரைப் பணிந்தனர். ஆண்டாளை அழைத்து வர அரங்கன் பணித்ததாகச் சொன்னார்கள். ஆழ்வாருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

உடன் வட பெருங் கோயில் உடையானை வணங்கி இந்த மகிழ்ச்சியான விஷயத்தை சொல்லி, ஸ்ரீரங்கம் செல்ல அவன் அனுமதி பெற்றார்.

ஆழ்வாரும் அவர் தொண்டர்களும்  ஆண்டாளை பட்டுத் திரையிட்ட பல்லக்கில் ஏற்றி மேளதாளம் முழங்க இசைக்கருவிகள் இசைத்து ...
சூடிக் கொடுத்த சுடர்க்கொடி வந்தாள்!
சுரும்பார்க் குழற்கோதை வந்தாள்!
திருப்பாவை பாடிய செல்வி வந்தாள்!
தென்னரங்கனைத் தொழும் தேசியள் வந்தாள்!
எனும் முழக்கங்களோடு அழகிய மணவாளன் திருமண்டபத்தை அடைந்தனர்.

அங்கே பாண்டிய மன்னன் வல்லபதேவன் போன்ற சீடர்களும் கோவிற் பரிவாரமும் திரண்டிருந்தனர். பல்லக்கின் திரைச்சீலையை ஆழ்வார் திறந்தார். ஆண்டாள் தட்டுச் சேலையணிந்து, பருத்த செங்கழுநீர் மாலை சூடி, சீரார் வளையொலிக்க, சிலம்புகள் சத்தமிட, அன்ன நடையிட்டு அரங்கன் பால் சென்று நின்றாள். அவனைக் காதலுடன் கண்டு அவன் அரவணை மீதேறி, அவன் கைத்தலம் பற்றி  அவனடி சேர்ந்தாள். அங்கிருந்த அனைவரும் வியக்க மறைந்து போனாள்.

திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே! திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே! பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே! பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே! ஒருநூற்று நாற்பத்தொரு மூன்றுரைத்தாள் வாழியே! உயரரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே! மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே!

வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே! ஆண்டாள் திருவடிகளே சரணம்🙏

இன்றைய நிவேதனம்..குதிரைவாலி வெஜிடபிள் பொங்கல்

🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..22.12.'20




பெரியாழ்வார்  ஆண்டாளைப் பூமிப் பிராட்டியாகவே கருதலானார். சூடிக் கொடுத்த நாச்சியாரும் மார்கழி நீராடி, மாதவனை எண்ணி நோன்பு இருந்து, திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய பிரபந்தங்களைப் பாடி அருளினாள். 

மணப்பருவம் எய்திய ஆண்டாள் 'திருமால் தவிர வேறொருவரையும் மணக்க விரும்பவில்லை' என்று கூறுவதைக் கேட்டு மனம் வருந்தினார் விஷ்ணு சித்தர்.

ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்டு, '108 திருப்பதிகளிலே வாழும் எம்பிரான்களில் எவரை மணக்க விரும்புகிறாய்?'என மகளிடம் கேட்டார். அவர்கள் குண நலன்களைக் கூறுமாறு ஆண்டாள் கேட்டுக் கொண்டாள். 

அதற்கு இணங்கிய ஆழ்வார் வில்லிப்புத்தூரில் தொடங்கி பாண்டி மண்டலம், தொண்டை மண்டலம், மலைநாடு, சோழநாடு, வட திசைத் திருப்பதிகளில் உறையும் எம்பிரான்கள் மற்றும் திருவேங்கடவன், அழகர், திருவரங்கன் ஆகியோரது பெருமைகளை விரிவாக கூறினார். 

இவற்றுள் ஸ்ரீரங்கம் அழகிய மணவாளனின் கண்ணழகு, குழலழகு ஆகியவற்றால் கவரப்பட்ட கோதை அவரையே தன் மணாளராக விரும்பி

அன்று முதல்  ஸ்ரீரங்கப் பெருமானை மணப்பது போல் கனவு காணலானாள். பெரியாழ்வாரோ'இதெல்லாம் நடக்குமா?' என்று கவலைப் பட்டார்.

இன்றைய நிவேதனம்..கல்யாணப் பொங்கல்

இன்றைய கோலம்..மகாராஷ்டிராவின் Warli கோலம்.


🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..21.12.'20

 



பெரியாழ்வார் துளசிச் செடியின் கீழிறந்து எடுத்து வளர்க்கப்பட்ட குழந்தையை தம் சொந்தப் பெண்ணாய் கண்ணும் கருத்துமாய் வளர்த்தார்.‌அவளுக்கு கோதை எனப் பெயரிட்டார்.

இளம் வயதிலேயே, தனக்குத் தெரிந்த சமயம் சார்ந்த கருத்துக்கள் மற்றும் தமிழ்மொழி போன்ற அனைத்தையுமே விஷ்ணுசித்தர் கோதைக்குச் சொல்லிக் கொடுத்தார். 

இதனால் கோதை இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவளாயும் தமிழ்த்திறமை கொண்டவ

ளாகவும் இருந்தார். சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டாள். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தாள். 

கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவிடுவாள். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூட்டப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்துகொண்டு, அவள் சூடிய மாலையை நீக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். 

அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி கோதை அணிந்த மாலைகளே தனக்குப் உவப்பானவை எனவும் அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இதனாலேயே 'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' என்றும் 'இறைவனையே ஆண்டவள்' என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.

இன்றைய நிவேதனம்..அவல் முப்பருப்பு பொங்கல்


Tuesday 22 December 2020

🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..20.12.'20

 


🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..20.12.'20


ஆண்டாளின் கதை நாம் அறிந்ததே. சற்று விபரமாகப் பார்ப்போம். ஸ்ரீவில்லிபுத்தூரில்முகுந்தபட்டர் குமுதவல்லி இருவரும் அவ்வூர் பெ ருமாளான வடபத்ர சாமியின் பரம பக்தர்கள். ஆலயத்தில் பணி புரிந்து வந்த அத்தம்பதியர்க்கு மகனாகப் பிறந்தவர் கருடனின் அம்சமான விஷ்ணு சித்தர். அவரும் பெருமாளிடம் அத்யந்த பக்தி கொண்டிருந்தார். அவரது பக்தியில் மகிழ்ந்த மகாலக்ஷ்மி அவருக்கு வளர்ப்பு மகளாக ஆண்டாள் என்ற பெயரில் அவதரித்தாள்.

மதுரையில் நடந்த போட்டியில் கிடைத்த பொற்கிழி பரிசை பெருமாள் கருட வாகனத்தில் வந்து பெறச் செய்தார். அச்சமயம் அங்கிருந்த அத்தனை பக்தர்களும் பகவானை தரிசித்தனர். மக்களின் கண் திருஷ்டி பகவானை பாதித்து அவருக்கு தீங்கு ஏற்படுமென்று  பயந்த பெரியாழ்வார்  திருப்பல்லாண்டு பாடலைப் பாடினார்.

அவரது பக்தியை மெச்சிய மகாவிஷ்ணு..நீரே பக்தியில் பெரியவர்..எனப் பாராட்டினார். அதுமுதல் விஷ்ணு சித்தர் பெரியாழ்வார் என அழைக்கப் பட்டார். இந்த பல்லாண்டு பாடலே இன்று உலகம் முழுவதிலுமுள்ள திருமால் ஆலயங்களில் பாடப்படுகிறது.

இன்றைய நிவேதனம்..கோதுமைரவா பட்டாணி பொங்கல்..பரங்கி சட்னி


இன்றைய கோலமும்..விளக்கமும்..

 A mandala, which is Sanskrit for “circle” or “discoid object,” is a geometric design that holds a great deal of symbolism in Hindu and Buddhist cultures.


Mandalas are believed to represent different aspects of the universe and are used as instruments of meditation and symbols of prayer most notably in China, Japan, India and Tibet.


Saturday 19 December 2020

🕉️ மகத்தான_மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..19.12.'20

 





🕉️ #மகத்தான_மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..19.12.'20

வட இந்தியாவில் 

ராதையின் பக்தி பிரபலமாக போற்றப்படுகிறது. பெண் பக்தைகளில் மீராபாய் 

கண்ணனிடம் கொண்ட  ஆழ்ந்த பக்தியைப் போல தமிழகத்தில் ஆண்டாளின் பக்தி போற்றப்படுகிறது. 

இவரது  30 பாடல்களைக் கொண்ட திருப்பாவையில் கோதை  தன்னை  கோபிகையாக உருவகப் படுத்தி கண்ணனின் திருவடியை அடைதலையே தன் வாழ்வின் இலட்சியமாகப் பாடியுள்ளாள்.

108 வைணவத் தலங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆலயம்  ஆண்டாளின் பெருமை பேசும் சிறப்பான கோவில்.   அனைத்து வைணவக் கோவில்களிலும் ஆண்டாளுக்கு தனிச் சன்னதி மட்டுமே உண்டு. இங்கு மட்டுமே தனிக் கோயில்  அமைந்துள்ளது. 

நாச்சியார் என்ற பெயரில் பன்னிருஆழ்வார்களில், ஒருவராக ஆண்டாள் இருந்தாலும், தமிழகத்தில் அவள் ஒரு பெண் தெய்வமாகவே வழிபடப்

படுகிறாள். அவளது பிறந்த நாளான ஆடிப்பூரம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 

இன்றைய நிவேதனம்..தினை தக்காளி பொங்கல்


Thursday 17 December 2020

🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..2

 



🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..17.12.'20

ஆன்மீகமும் கலைகளும் கூடிக்குலவும் மகிமை மார்கழியில் மட்டுமே காணமுடியும்.ஹநுமத்
ஜெயந்தி,வைகுண்ட
ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் போன்ற இந்துப் பண்டிகை
களுடன், , மற்றும் ஆங்கிலப் புத்தாண்டும் மார்கழிக்கு மேலும் கூடுதல் முக்கியத்துவத்தை அளிக்கின்றது.கிறிஸ்துமஸ்
எனவே மார்கழி மாதம் மனமகிழ் மாதம்!

ஆண்டாள் திருப்பாவை பாடியதற்கான ஆதாரம் எது?அவள் கண்ணனைக் காதலித்து மணக்க விரும்பினாள். கோபி கைகளின் பக்தி அவளுக்கு வழிகாட்டியது!

கோபிகைகள் ஹேமந்த
ருதுவில் முதல் மாதம் 30 நாட்களும் கண்ணனை அடைய தேவி கார்த்தியா
யினியை வேண்டி விரதம் இருந்ததாக பாகவதம் கூறுகிறது.
காத்யாயினி மகாமாயே|
மகாயோகின்யதீஸ்வரி|
நந்தகோபஸுதம் தேவி|
பதிம் மே குருதே நம:
என்பதிலிருந்து கோபிகைகள் கோபாலனை கணவனாக அடைய விரதமிருந்தது தெரிகிறது.

பகவான் கிருஷ்ணரும் பகவத்கீதையில் 'தான் மாதங்களில் மார்கழி' என்றுரைக்கிறார். நமக்கு வேண்டியவற்றை இறைவனிடம் வேண்டிப் பெற மார்கழியே சிறப்பான மாதம்!

இன்றைய விசேஷங்கள்...
இன்று #ரம்பா_திருதியை
நேற்று திந்திரிணி கௌரி பூஜை பற்றிப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியே இன்றைய ரம்பா திருதியை.முறையாக ரம்பை செய்த பூஜையை ஏற்றுக் கொண்ட கௌரிதேவி,
காட்சி தந்தபோது, அழகுக்கு உரியவனாம் முருகனை மடியில் வைத்தபடி கார்த்தியா
யினியாக தங்கநிறமேனியுடன் காட்சி தந்தாள்.

ரம்பையின் பூஜையில் மகிழ்ந்த தேவி,மீண்டும் அவளை தேவ
லோகத்தில் முதல் அழகியா
கும்படி அவளுக்கு அருள்புரிந்த
தோடு, அவளது முகஅழகையும் செல்வங்களையும் மேலும் அதிகமாக அருளினாள்.

ரம்பை மேற்கொண்ட இந்த விரத நாள், அதுமுதல்  'ரம்பா திருதியை’ என்று பெண்கள் கொண்டாடும் தங்கத் திருவிழாவாக ஆகும்படி  ஆசீர்வதித்தாள்.

அழகும் ஐஸ்வரியங்களும் அள்ளித் தரும் நன்னாள்தான் ரம்பா திருதியை. வட
இந்தியாவில் ரம்பாதேவி யந்திரம் வைத்து அன்றைய தினம் விசேஷ பூஜைகள் செய்வர்.

இன்றைய நிவேதனம்..ரவை பொங்கல்

இன்று என் பெண்ணின் கோலம்..ஹ்ருதய கமலம்

Hridaya Kamalam` (lotus of the hearts) is drawn to ensure success and wealth.
The Hridaya Kamalam kolam is usually drawn to invoke Goddess Lakshmi.
It is believed that drawing this rangoli in one go without removing the hand from the ground has spiritual benefits...

Wednesday 16 December 2020

🕉️ #மகத்தான_மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..1



 

🕉️ #மகத்தான_மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..16.12.'20


மார்கழி..16.12.'20..

பக்தியை எடுத்துக் காட்டுவதே கோலமும் பஜனையும்!விடிகாலை எழுந்து வீதியெங்கும் பெண்கள் தண்ணீர் தெளித்து சுத்தப்படுத்தி வண்ணவண்ணக் கோலங்களால் அழகு படுத்துகின்றனர். பனி படர்ந்த இளங்காலைப் பொழுது உள்ளத்தையும் உடலையும் மகிழ்வுறச் செய்கின்றது. 

இன்றுமுதல் திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்களைப் படிப்பது நன்மை தரும்.

இன்றைய நிவேதனம்..வெண்பொங்கல்



இன்றைய விசேஷ நாட்கள்..

மார்கழி சுக்லபட்ச துவிதியையானஇன்று #திந்திரிணி_கெளரி_வ்ரதம் அனுஷ்டிக்கப் படுகிறது. தன் அழகுக் குறைபாட்டால் தேவலோக மங்கையான ரம்பை இந்த நன்னாளில் 

மஞ்சளால் அம்பிகையை பிரதிமையாக  செய்து, விரதம் இருந்து பூஜை செய்தாள்.  


திந்திரிணி என்றால் புளி. புளிய மரத்தின் அடியில் அம்பாளை பூஜிக்க வேண்டும். புளியஞ்சாதம் மற்றும் புளிப்பு பொருட்கள் அம்பாளுக்கு நிவேதனம் செய்ய வேண்டும்.

கணவன் மனைவிக்குள் ஒற்றுமை, அன்பு, பாசம் ஏற்பட கெளரியை பூஜிக்க வேன்டும் என்கிறது ஶ்ரீ பாகவதம்.கெளரி என்றால் வெண்மை அல்லது தூய்மை எனப்படும்.


திருமணம் ஆனவர்களுக்குள் கருத்து வேற்றுமை,நீங்கி  ஒற்றுமை ஏற்படவும், நோய்கள் நீங்கி ஆரோக்கியம் ஏற்படவும் இந்த கெளரிவிரதம் தக்க பரிஹாரமாகும்.சிவனுடன் கூடிய பார்வதி தேவியை  வைத்து ஸ்வர்ண கெளரி விரதம் போல் இப்பூஜையை செய்ய வேண்டும்.


#குசேலர்_தினம்

மார்கழி மாத முதல் புதன் கிழமை குசேலர் தினமாகும். குசேலர், கிருஷ்ணனைத் தரிசிக்க அவல் கொண்டு சென்ற நாள் என்பதால் அன்று குருவாயூரில் குசேலர் 

தினமாகக் கொண்டாடப் 

படுகிறது.


பக்தர்கள், இலையில் அவல், அச்சு வெல்லம் எடுத்து வந்து குருவாயூரப்பனை வணங்குவதுடன் அவல் தானமும் செய்வர். 

அன்றைய தினம் , ஸ்ரீ குருவயூரப்பனக்கு அவலும் அவல் பாயசமும் நைவேத்யம் செய்யப்படுகிறது .இதனால் , ஸ்ரீ கிருஷ்ணன் அருள் புரிந்து , தம் வீட்டுக்கு செல்வம் சேரும் என்பது நம்பிக்கை.


இன்றைய நிவேதனம்...வெண்பொங்கல்


என் மகள் போட்ட இன்றைய கோல விளக்கம்..


#Alpana, is a form of Rangoli that is practiced in Bengal. It is a representation of the artistic sensibility of the people of that state of India.

This art form represent from amalgamation of the past experiences as well as contemporary designs.

The changing moods of the seasons are reflected very well in the Alpana designs.


🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆

 


🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..(15.12.'20)


'மாதங்களில் நான் மார்கழி' என்று கண்ணன் கீதையில் கூறியிருப்பதிலிருந்தே இந்த மாதத்தின் புனிதத்தன்மை உணரப் படுகிறது. மார்கழி இம்முறை 29 நாட்களே இருப்பதால் இன்று முதல் திருப்பாவை, திருவெம்பாவை ஆரம்பம்.


ஆண்டாளும் மார்கழி மாதத்திலேயே பாவை நோன்பு  நோற்கிறாள்.மாணிக்க வாசகரின் திருவெம்பாவைப் பாடல், மற்றும் திருப்பள்ளி எழுச்சி பாடல்கள் சிவன் கோயில்களிலும், ஆண்டாளின் திருப்பாவையும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பள்ளிஎழுச்சியும் வைணவத்திருக்கோயில்களிலும் பொழுது புலருமுன் மக்களைத் துயிலினின்றும் எழுப்பி தெய்வீகத்தை நிறைத்து ஊரெங்கும் பக்தி மணம் பரவச் செய்கின்றது. ஆண்டாளின் திருப்பாவை  பாடல்கள், கேட்கத் தெவிட்டாத மனம் மயக்கும் பாசுரங்கள் நம்மை மெய்மறக்கச் செய்கின்றன.

என் மகள் போட்ட இன்றைய கோலமும்..விளக்கமும்..

This Margazhi... bringing to you different types of Rangolis and their significance all over India...Today’s special is chukkalu leni muggulu... rangoli without dots from Andhra.

These designs are made without dots. They are similar to free hand drawings of lines and curves, but use occasion specific elements to make different muggu patterns.


Monday 14 December 2020

கேக் போய் லட்டு வந்தது டும்..டும்..டும்😀

 கேக் போய் லட்டு வந்தது..டும் டும் டும்😀(7.12.'20)

என் வீட்டில் எல்லோரும் இனிப்பு பிரியர்கள். என் கணவருக்கு இரவு சாப்பிட்டதும் கண்டிப்பாக ஸ்வீட் வேணும். என் பிள்ளைக்கோ காலை, இரவு இரண்டு வேளையும் ஸ்வீட் வேண்டும். நான்கு நாளைக்கு ஒருமுறை ஏதாவது ஸ்வீட் செய்வது என் வேலை! முன்பெல்லாம் கடையிலிருந்து அவ்வப்போது ஸ்வீட் வாங்குவோம். கொரோனா வந்தபின் அது நின்று விட்டது. 

இந்தமுறை என்ன ஸ்வீட் பண்ணலாம் என்று யோசித்தபோது மைசூர் கேக் என்று நான் எழுதி வைத்திருந்த ரெசிபியை செய்யலாமென்று தோன்றியது. இந்த ரெசிபி எழுதி வைத்திருந்த தோடு சரி..இதுவரை செய்ததில்லை.

நான் செய்ய ஆரம்பித்தபோது உள்ளே வந்த என் பிள்ளை..அம்மா நெய் வாசனை அடிக்கற்தே..ஸ்வீட் பண்றியா..சீக்கிரம் பண்ணு...என்றபடி டி.வி. பார்க்க சென்றான். 

என் மாட்டுப்பெண்..நானும் இந்த புது ஸ்வீட் டை தெரிஞ்சிக்கறேனே...என்றாள். நானும் அந்த methodல் செய்ய ஆரம்பித்தேன். நெய்யில் மைதா கடலைமாவு வறுத்து சர்க்கரை பாகில் போட்டுக் கிளற வேண்டும். கிளறும்போது கலர் ப்ரௌன் ஆகிவிட, ..ஏம்மா இந்த கலரா இருக்கு..என்ற என் மாட்டுப் பெண்ணிடம்...மாவை ரொம்ப வறுத்துட்டேனோ...என்றபடி கிளறி பதமானதும் தட்டில் கொட்ட, அடர் சிவப்பில் இருந்த கேக்கை பார்க்கவே பிடிக்கவில்லை. அது soft cakeஆக இல்லாமல் ஹார்டாகி விட்டது. எங்கே தப்பு என்பதும் புரியவில்லை. 

சுவாமிக்கு நிவேதனம் பண்ணி..எங்காத்தில் எல்லாமே முதலில் சுவாமிக்கு தான் அர்ப்பணம்! பாவம் அவர்தான் எதுவும் கமெண்ட் தரமாட்டார்!

..என்னம்மா ஸ்வீட் ரெடியா...என்றபடி வந்த என் பிள்ளை ஒரு கேக்கை ஆசையாக வாயில் போட்டவன்..என்னம்மா கேக் இது? செங்கல் கட்டி மாறி இருக்கே? டேஸ்ட் சரியில்லை.. என்றான். (அடராமா! அரைமணி நேரம் கிளறிப் பண்ணியிருக்கேன். செங்கல் கட்டியாமே🙄)

அடுத்து என் ஆத்துக்காரர்..எங்கம்மா நெல் உளுத்த மாவுனு என் சின்ன வயசுல பண்ணுவா. அதை துண்டமா போட்டிருக்கயா..(ஹ்ம்ம்..நெய்யைக் கொட்டி பண்ணினா நெல் உளுத்தமாவுனு கிண்டல்😏)

என் மாட்டுப்பெண் ஒரு துண்டை வாயில் போட்டவள்.. எங்க பாட்டி விரதநாள்ள ஒரு சத்துமாவு பண்ணித்

தருவா. அதே டேஸ்ட்மா. நீங்க ஸ்வீட் எக்ஸ்பர்டாச்சே. பரவால்ல. ஏதோ ஸ்வீட்னு சாப்பிடலாம்மா..(வஞ்சப் புகழ்ச்சியோ🤔)

ஆளுக்கொரு கமெண்ட் தர நான் ஒரு துண்டு வாயில் போட்டுப் பார்த்தேன்.அது கேக்குமில்ல..பர்ஃபியுமில்ல..மைசூர் பாகாவுமில்ல! 

எத்தனை நெய் சர்க்கரை போட்டு பண்ணியதை ஏதாவது பண்ணி எல்லாரையும் சாப்பிட வைக்கணுமே. யோசிச்சேன். எல்லா துண்டத்தையும் உடைத்து மிக்ஸியில் பொடி பண்ணினேன். 4ஸ்பூன் நெய்யில்  மிந்திரி பருப்பைத் போட்டு லாடுகளாகப் பிடித்தேன். வாயில் போட்டேன். டேஸ்ட் அருமை! 

தட்டில் வைத்திருந்ததை எடுத்து வாயில் போட்ட என் பிள்ளை..என்னம்மா தீபாவளி மாதிரி ஸ்வீட்ஸ் பண்ணிண்டிருக்க. இது சூப்பர். இது என்ன லாடு?..என்றான்.

..இது மைசூர் லாடு..என்று நான் சொன்னபோது வந்த என் மருமகள்.. அட இதுதான் அந்த மைசூர் கேக். அம்மா சாமர்த்தியம் பாருங்கோ. கேக் லாடுவா மாறியதும் சூப்பரா ஆயிடுத்தில்லையா..என்றாள். 

என் கணவர்..பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு..என்றவர் ஒன்றுக்கு இரண்டாக எடுத்துக் கொண்டார்!😀

எப்படியோ பண்ணியதை வீணாக்காமல் ஒரு புது ஸ்வீட் பண்ணின சந்தோஷம் எனக்கு😊.இந்த ஸ்வீட் நாலு நாளில் காலியாகிவிடும். அடுத்து என்ன ஸ்வீட் பண்ணுவது என்று யோசிக்க ஆரம்பித்தேன்!


ஆன்மிக_தரிசனம்..1

ஆன்மிக தரிசனம்(..9.12.'20)

ஆன்மீகம் என்பது ஆன்மாவைப் பற்றிய ஞானம். நம்முள் குடிகொண்டிருக்கும் ஆன்மாவை, பிறவி, பிணி, மரணம் என்ற தளைகளிலிருந்து மீட்க, நாம் நம்மை உணர்ந்து  இறைவனோடு சேரும் வழியாகும்.பெரியோர்களால் அதற்கான பாதயாகக் காட்டப்பட்டவையே ஆலய வழிபாடு, பண்டிகைகள், பூஜைகள், ஜபங்கள், பஜனைகள் மற்றும் கதாகாலட்சேபங்கள்.

ஆன்மிகப் பயணங்கள் நமக்குள் பக்தியைப் பெருக்குவதை ஆலய தரிசனங்கள் மூலம் நன்கு அறிய முடியும். நாம் வேண்டுவதும் விரும்புவதும் நிறைவேறும்போது மனதில் இறைபக்தி அதிகரிப்பதை நம்மால் உணர முடியும். 

சிறுவயது முதலே என் பெற்றோர் எங்களைப் பல ஆலயங்களுக்கு அழைத்துச் செல்வதுண்டு. பக்தியை எனக்குள் உருவாக்கிய என் பெற்றோருக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். சுவாமிமலை சுவாமி நாதஸ்வாமி என் பிறந்தவீடு, புகுந்த வீடு இரண்டிற்கும் குலதெய்வம் என்பதால் வருடம் தோறும் செல்வோம். 

சென்னையில் பெற்றோருடன் இருந்தபோது வடபழனி முருகனையும், மயிலை கபாலி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருவேற்காடுகருமாரியம்மன், மாங்காடு காமாட்சி,கந்தசாமி கோயில் மற்றும் பல ஆலயங்களுக்கு அடிக்கடி செல்வோம்.

திருப்பதிக்கு செல்வது கடினமாக நினைத்த காலங்கள் அவை. 1971ல் முதன்முதலாக திருப்பதி தரிசனம். மெய்சிலிர்த்த அனுபவம்! கூட்டமில்லாததால் 2,3 முறை அற்புத தரிசனம்! அதன்பின் அடிக்கடி திருப்பதி தரிசனம்! இருமுறை நடந்து ஏறிச் சென்று கோவிந்தனை தரிசித்திருக்கிறேன்.

என் அப்பாவிற்கு அடிக்கடி வரும் மாற்றலால் கரூர், ஈரோடு, நாகர்கோவில், வேலூர், திருவண்ணாமலை கன்யாகுமரி, ஸ்ரீ வில்லி புத்தூர்  ஆலயங்களுக்கு  அருகிலிருந்த பல ஆலயங்களிலும் சென்று தரிசிக்கும் வாய்ப்பு.

தஞ்சை பெரிய கோவிலுக்கு பல முறைகள் சென்றாலும் இன்னும் பிரமிப்புதான். அங்கு பிரகதீஸ்வரர் சன்னிதியில் சுற்றுப் பிரகாரத்தில் உள்ளே ராஜராஜசோழனால் செதுக்கப்பட்ட 64 நடன தோற்றங்கள் காணக்கிடைக்காத பொக்கிஷம். அவற்றில் கடைசி சில தோற்றங்கள் முற்றுப் பெறவில்லை. இதனைக் காண சிறப்பு அனுமதி பெற வேண்டும்.

கோபுரத்திலுள்ள ஆங்கிலேயனின் வடிவம் நம் நாட்டில் ஆங்கிலேய ஆட்சி வருமென்பதை ஆயிரம் வருடங்களுக்கு முன்பே எடுத்துக் கூறுவது வியப்பான விஷயம்.

கடவுள் நம்பிக்கையும் பக்தியும் நிறைந்த என் கணவருடன் திருமணத்திற்கு பின் தரிசித்த ஆலயங்கள் பல! என் கணவருக்கு மாயக்கண்ணன் பிறந்த மதுராவுக்கு மாற்றல்!மதுராவில் கண்ணன் ஆலயங்கள் அத்தனையும் அதிஅற்புதம்! 

ஆஹா..கண்ணனிடம் பக்தியும் காதலும் கொண்ட என் சந்தோஷத்துக்கு அளவேது! நினைத்தால் பிருந்தாவன பிரவேசம்! அங்குள்ள ஒவ்வொரு ஆலயத்திலும் காட்சி தரும் ராதாகிருஷ்ணனின் அழகைக் காண இரு கண்கள் போதாது.

எங்கள் முதல் திருமண நாளன்று காசியில் இருந்தோம். என் கணவரின் 85  வயது தாத்தா தன்னை காசிக்கு அழைத்துப் போக விரும்பினார். 

எனக்கும் மாமனார் இல்லாததால் நாங்களும் பித்ருகாரியம் செய்யலாமென்பதால் முதல் வருடம் எங்கள் திருமண நாளன்று, தனியாக காசியாத்திரை சென்றவர் என்னையும் அழைத்துச் சென்றார். அலகாபாத் கயா எல்லாம் சென்று தரிசித்தோம். கங்கையின் அழகில் மெய்மறந்தேன் நான்! 

அத்துடன் அருகில் டில்லியில் உத்தரசுவாமிமலை, ராஜஸ்தான் புஷ்கர் பிரம்மா கோயில், ஹரித்வார் ரிஷிகேஷ் தரிசனம்.

மீண்டும் தமிழ்நாட்டுக்கு மாறிவந்தபோது மதுரைவாசம்.நினைத்த நேரம் மீனாக்ஷி அம்மன் தரிசனம். ராமேஸ்வரம், குருவாயூர், திருவனந்தபுரம், மருதமலை, திருத்தணி, காளஹஸ்தி, காஞ்சி, மகாபலிபுரம் என்று  புகழ் பெற்ற பாடல் பெற்ற பல ஆலய தரிசனங்கள். 

அடுத்து மகாராஷ்டிராவில் கோலாப்பூருக்கு மாற்றல். மகாலக்ஷ்மியை மனமார அடிக்கடி தரிசித்தேன்! பின் மும்பை வாசம். மும்பையின் மகாலக்ஷ்மி, மும்பாதேவி, சித்திவிநாயகர், பாபுல்நாத் போன்ற  பெரும்பாலான ஆலயங்களை தரிசித்தோம். மேலும் சீரடி, பூனா, நாக்பூர், நாசிக், கோவாவின் சிறப்பான ஆலயங்கள், அஷ்டவிநாயகர் ஆலயங்களை தரிசித்தது மனதை மிகவும் மகிழ்வித்தது. 

புவனேஸ்வரில் என் மகன் படித்தபோது அங்குள்ள கட்டிடக் கலை சிறப்பு மிக்க ஆலயங்களான பூரி,  கொனாரக்  இவை கண்கவர் அழகுச்சிலைகளுடன் காட்சி தரும் ஆலயங்கள். 

சண்டிகரில் இருந்தபோது அருகிலிருந்த குருக்ஷேத்திர தரிசனம் மறக்க முடியாதது. அங்கு பாரதப்போர் நடந்த இடமும் பகவத்கீதை உபதேசித்த இடமும் தரிசித்து மனம் சிலிர்த்தேன். 

அமிர்தசரஸில் தகதகக்கும் பொற்கோயில் கண்களை அகற்ற முடியாத அழகு. மனாலியில்  இடும்பா ஆலயம், மனு மற்றும் காயத்ரி தேவி ஆலயங்களை வேறிடத்தில் காண முடியாது.

பீகாரில் என் பெண் இருந்தபோது அருகிலிருந்த கல்கத்தா காளி கோவில்,   சீதை பிறந்த இடமான சீதாமரி ஆலயம் தரிசித்தேன்.

சென்ற ஆண்டு திருநெல்வேலி அருகிலுள்ள நவ திருப்பதி, நவ கைலாயம், திருச்செந்தூர்,திருநெல்வேலி ஆலயங்கள் தரிசனம். 

தஞ்சை மாவட்டத்தின் பல பிரசித்தி பெற்ற ஆலயங்களை தரிசித்து விட்டேன். அறுபடை வீடு, சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்கள் தரிசனம் செய்தாயிற்று. சமீபத்தில் நவகிரக ஆலயங்கள் , சப்தஸ்தான ஆலயங்கள் தரிசித்தோம். தற்போது பாடல் பெற்ற 274 சிவாலயங்களை தரிசித்துக் கொண்டிருக்கிறோம்.

பல ஆலயங்களை தரிசித்தபோது  இவ்வாலயங்களைப் பற்றி வாரமாத இதழ்களில் எழுதினால் பலரும் பயன் பெறுவார்கள் என்றுஎன் கணவர் கூறினார். ஆலயங்களைப் பற்றி அறிந்து தரிசிக்கும் போதே அல்லாமல் சிறப்புகளையும் கேட்டு அறிந்து கொள்வேன். புகைப்படங்களும் எடுத்து கட்டுரைகளுடன் இணைத்து எழுதுவேன். 

இப்படி நான் எழுதிய ஆலயதரிசனக் கட்டுரைகள் மங்கையர் மலர், பக்தி,சக்தி, விகடன், ஞானபூமி, ஞான ஆலயம், இந்து தமிழ், பெண்மணி, சிநேகிதி போன்ற பல இதழ்களில் தொடர்ந்து பிரசுரமானது. வெளிநாடு

களுக்கு சென்றாலும் அங்குள்ள ஆலயங்களைத்  தேடிச் சென்று தரிசித்து விட்டே வருவேன்.

வெளிநாட்டு ஆலயம் பற்றி அடுத்த பதிவில்...


ஆன்மிக தரிசனம்..2

 ஆன்மிக தரிசனம்..2..(11.12.2020)

அயல்நாட்டு ஆலயங்கள்
என் பிள்ளைகள் வெளி
நாட்டில் இருப்பதால் நான் அந்த நாட்டுக்கு செல்வதுடன் அருகில் இருக்கும் வேறு நாடுகளுக்கும் சென்று வருவேன். போகும்போதே அங்கு என்ன கோவில் இருக்கிறது என்று நெட்டில் பார்த்து விபரங்களுடன் செல்வேன்.

பெரிய பிள்ளை ஜெர்மனியில் இருப்பதால் அங்கிருந்து ஸ்விட்சர்லாந்து சென்றோம். அங்கு ஜுரிச் சிவசுப்ரமணிய சுவாமி ஆலயம் சென்று வந்தோம். நதிக்கரையில் அமைந்துள்ள அழகான அற்புத ஆலயம்.

சின்ன பிள்ளைக்கு சிங்கப்பூரில் வேலை. அங்கு ஏழெட்டு முறை சென்றிருக்கிறேன். 

அங்குள்ள பல ஆலயங்கள் தரிசனம் செய்திருக்கிறோம். கோவில்களின் அழகும் சுத்தமும், நாள்முழுவதும் நடக்கும் அன்னதானமும் வியக்க வைக்கும் அற்புதமான விஷயங்கள்!

அங்குள்ள தண்டாயுதபாணி ஆலயம் முதலில் அங்கு வேலைக்குச் சென்ற தமிழர்களால் ஒரு வேல் வைத்து தமிழ்க் கடவுள் முருகனுக்கு உருவான முதல் கோயில். இன்று மிகச் சிறப்பான வேண்டுதலை நிறைவேற்றும் ஆலயமாக உள்ளது. கார்த்திகை, தைப்பூசம் சிறப்பான விழா.

கெய்லாங் சிவன் கோவிலின் கலையழகு கண்ணுக்கு விருந்து. அங்கு வெளிபிரகாரத்திலுள்ள சிவலிங்கத்திற்கு எவரும் அபிஷேகம் செய்யலாம்.

சைனாடவுனிலுள்ள மிகப் பழமை வாய்ந்த மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி மிகவும் விசேஷமாக நடைபெறும்.

அழகு நிறைந்த கிருஷ்ணன் ஆலயம், அருள் பொங்கும் ராமர் ஆலயம் என்று ஒவ்வொன்றும் தனி அழகு. ஒருமுறை அன்னையர் தினமன்று ஸ்ரீ நிவாச பெருமாள் ஆலயம் சென்றோம். தேவி மகாலக்ஷ்மிக்கு தாமரைப் பூக்களால் அலங்கரித்து சன்னதியில் அழகுற விளக்குகள் ஒளிவீசின. 'என்ன விசேஷம்?'என்றபோது 'இன்று அன்னையர் தின சிறப்பு வழிபாடு. நாம் பெற்ற அன்னைக்கு மட்டுமா சிறப்பு? இவ்வுலகையே உருவாக்கி நம்மைக் காப்பாற்றும் அவளன்றோ முதல் தாய்' என்றபோது மனம் சிலிர்த்தது. நான் எந்த ஆலயத்திலும் இது போன்ற வழிபாடு கேள்விப்பட்டதில்லை.

மலேசியாவில் கோலாலம்பூரிலுள்ள Batu Caves பத்துமலை முருகன் கோவில் சுண்ணாம்புப் பாறையாலான மலையில் அமைந்துள்ளது. 280 படிகள் ஏறிச் சென்றால் மேலே முருகன் சன்னதி அமைந்துள்ளது. இங்கு தைப்பூச விழா மிக விமரிசையாக நடைபெறும். உலகின் பல பகுதி மக்களும் இவ்விழாவில் கலந்து கொள்ள வருவார்கள்.

நாங்கள் அங்கு தரிசனம் முடித்து வந்தபோது நல்ல பசி. அங்கிருந்த குருக்களிடம், அருகில் சைவ சாப்பாடு ஹோட்டல் இருக்கா என்றபோது, 'இங்கு கிடைப்பது கஷ்டம். என்னுடன் இங்கேயே சாப்பிடுங்கள்' என்றார். ஆஹா..முருகனின் பிரசாதம் என்று மனம் நெகிழ்ந்தோம். அவர் எங்களைப்பற்றி கேட்க நாங்கள் குடந்தை என்றதும், தனக்கும் சுவாமிமலைதான் சொந்த ஊர் என்றார். நம் ஊர் மனிதர்கள் உலகம் முழுதும் இருப்பதை நினைக்க சந்தோஷமாக இருந்தது.

அடுத்தமுறை சிங்கை போனபோது இந்தோனேசியாவில் இந்துக் கோயில்கள் நிறைந்த பாலிக்கு சென்றோம். பாலி முழுக்க முழுக்க இந்துக்கள் வாழும் தீவு. ஊரில் திரும்பிய இடமெல்லாம் கோயில்கள்! சின்னச் சின்ன சந்நதிகள்! ஆனால் எதிலும் ஆண்டவன் உருவமில்லை. அருவத்தையே இறைவனாக வணங்குகிறார்கள் இவர்கள். இரண்டு வீடுகளுக்கு ஒரு ஆலயம் உள்ளதால் பாலியை'ஆயிரம் கோயில் உடைய தீவு' என்றே அழைக்கிறார்கள்! ஆனால் என்ன, எந்தக் கோயிலுக்குள்ளேயும் நம் யாரையும் அனுமதிப்பதில்லை.

'நானும் இந்துதான்'என்று சத்தியம் செய்தாலும்  ம்ஹூம்! நோ என்ட்ரிதான்!

பாலி மக்களும்கூட ஆலயத்திற்குள் செல்ல பிரத்யேக உடை அணிந்தே செல்கின்றனர். ஒவ்வொருவரும் ஒரு வட்டத்தட்டில் பழங்கள்,இனிப்புகளை அழகாக அடுக்கி வைத்தபடி செல்லும் அந்த அழகே தனிதான்.

கடலுக்கு நடுவில் உள்ள பாறையின் மேல் அமைக்கப்பட்டுள்ள 'தானாலாட்' என்ற கற்கோவில் ஜாவா தீவுகளிலிருந்து வந்த குருமார்களால் 16-ம் நூற்றாண்டில்  கட்டப்பட்டது. இப்பாறையில் மூன்று முகங்களைக் கொண்ட நீரூற்று உள்ளது. இதனை சுயம்புவாக உருவான சிவா,விஷ்ணு, 
பிரம்மா உருவங்களாகவே வழிபடுகிறார்கள். இவற்றிலி
ருந்து வரும் நீர் இனிப்பாக உள்ளதும் அதிசயமே!

'அகுங்க்' என்ற மலையில் அமைந்துள்ள 'புரா பெஸாகி' என்ற தேவி ஆலயம் இங்குள்ள மிகப் பழமையான, புனித ஆலயமாகப் போற்றப்படுகிறது.

'புரா தீர்த் ஆம்புல்' என்ற ஆலயம் மிகப் பெரியது. இதில் உள்ள சிலைகளும், கருட உருவங்களும் மிக அற்புதமான கலையழகுடன் விளங்குகின்றன. இங்கு உள்ள புனித நீரூற்றுகளில் நீராடுவதால் உடல் ஆரோக்கியமும், செல்வமும் கிட்டும் என்பது நம்பிக்கை.

அடுத்தமுறை நான் சென்றது தாய்லாந்து நாட்டின் பாங்காக்.இங்கு புத்த ஆலயங்களே அதிகம்.
 ‘வாட் போ’என்ற ஆலயம்  தாய்லாந்தின் ‘முதல் பல்கலைக் கழகம்’ என்ற சிறப்புடையது.  கைகளில் தலையைத் தாங்கி ஒருக்களித்தவாறு படுத்தபடி காட்சி தரும் 46 மீட்டர் நீளமான சிலை, புத்த பிரான் நிர்வாண நிலையை அடைந்ததைக் குறிப்பிடும் மிகக் கலையழகு மிக்க சிலை.

தமிழர்களால் உருவாக்கப்பட்ட மாரியம்மன் ஆலயம் அழகு. அந்த அம்மனை வழிபடுவதால் ஆரோக்கியமாக வாழலாம் என்பது அந்நாட்டு மக்கள் நம்பிக்கையாம்!

நம் நாட்டில் பிரம்மாவிற்கு ஆலயம் கிடையாது.  இங்கு பிரம்மா ‘எரவான்’ என்ற பெயரில் கோவில் கொண்டு, பக்தர்களின் ஆசைகளையும்,  கனவுக
ளையும் நிறைவேற்றி வைக்கிறார்! இந்நாட்டினர் இவரை ‘நான்குதலை புத்தர்’ என்று கூறி, வாசனைப் பூக்களையும், பத்திகளையும் ஏற்றி வைத்து வணங்குகின்றனர். தங்கள் விருப்பம் நிறைவேறி விட்டால் இவர் எதிரில் நடனமாடி, தம் நன்றியைத் தெரிவித்துக் கொள்வார்களாம்!

இது மட்டுமா? காதல் கடவுளாக நின்று காட்சி தருகிறார் 
திருமூர்த்தி பகவான்! 
சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரும் இணைந்த இவரை வணங்கி வழிபட்டோரின் காதல் தங்கு தடையின்றி நிறைவேறி, காதலித்தவரையே கைப்பிடிக்கலாமாம்!  வியாழக்கிழமை இரவுகளில் இந்தக் கடவுள் சொர்க்கத்
திலிருந்து கீழே இறங்கி வருகிறார் என்பதால் அந்த நாளில் இவ்வாலயம் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது!சிவப்பு வண்ணப்பூக்கள், 
சிவப்பு பழம், சிவந்த மெழுகுவர்த்திகளே இவ்விறைவனுக்கு காணிக்கை! வேடிக்கையான வழிபாடு!

உலகின் மிகப் பெரிய கோவிலாகப்  போற்றப்படும் அங்கோர்வாட் என் அடுத்த விசிட்! இந்து  ஆலயமான அங்கோர்வாட் ஆலயம் பண்டைய 'காம்போஜம்' என்றழைக்கப்பட்ட கம்போடியா நாட்டிலுள்ளது. உலகின் எட்டாவது அதிசயம்' எனப் புகழப்படும் அங்கோர்வாட் ஆலயம் உயர்ந்து, நிமிர்ந்து, 
வானளாவ நின்று நம் இந்தியக் கலாசாரத்திற்கு ஒரு எடுத்துக் காட்டாக விளங்குகிறது. யுனெஸ்கோ
வினால் உலகப் பண்பாட்டுச் சின்னமாக   திகழ்கிறது.

இரண்டாம் சூர்ய வர்மனால் உருவாக்கப்பட்ட அங்கோர்வாட் ஆலயம் பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இவ்வாலயத்தைக் கட்டி முடிக்க 37 ஆண்டுகள் ஆயிற்றாம். பிரம்மாண்டமான ஆலயம். சூரிய வர்மனால் உருவாக்கப்பட்ட விஷ்ணு சிலை அவனை அடுத்து வந்த அரசன் புத்தமதத்திற்கு மாறியதால் முத்தாக மாறிவிட்டது. ஏகப்பட்ட ஆலயங்கள். சிற்பக்கலை கண்களைக் கவர்கிறது.

மலைமேலுள்ள  ஆயிரம் லிங்க நதியின் அடியில் பல சிவலிங்கங்களும் மற்ற
இறை உருவங்களும்
செதுக்கப் பட்டிருப்பது வியப்பு. மூன்று கி.மீட்டர் ஏறிச் செல்வது சற்று கடினமே. எனினும் காணவேண்டிய இடம். அங்கோர்வாட் பற்றி ஒரு தனி பதிவு போட வேண்டும்!

ஆன்மிக தரிசனம்-3

 ஆன்மிக தரிசனம்-3..(12.12.'20)

ஆயிரம் ஆலயங்களை தரிசித்தாலும் மேலும் பாடல் பெற்ற,வித்யாசமான, விசேஷமான, வரப்ரசாதியான தெய்வங்களை தரிசிக்கும் ஆவல் மட்டும் குறைவதில்லை.
அதில் கிட்டும் ஆனந்தம்...
அவ்வாலயம் பற்றிய ஆச்சரியம்..
அங்கெல்லாம் போக முடியுமா என்ற ஆதங்கம்...
அந்த தரிசனம் கிட்டியதும் கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவேது!

தினமும் வளர்ந்து கொண்டிருக்கும் தஞ்சாவூர் நந்தி...
எப்பொழுதும் சிவன் சன்னிதியில்நீர் சுரக்கும் திருவானைக்காவல்...
அன்னை முகத்தில் வியர்வை முத்துக்கள் காணப்படும் புன்னைநல்லூர் முத்துமாரியம்மன்..
இவை போன்று மும்பை தஹானு என்ற இடத்திலுள்ள சந்தோஷி மாதா ஆலயத்தில் அன்னையின் வலக்கை மேலிருந்து குங்குமம் வருவது அதிசயமாக இருந்தது.

ஆந்திராவில் மங்களகிரி மலையில் அருள் செய்யும் நரசிம்மரிடம் நம் வேண்டுதல் நிறைவேற பானகம் வாங்கிக் கொடுக்க வேண்டும். அதை அர்ச்சகர் வாயில் விடும்போது
'களக்' என்று சத்தம் வருகிறது. அது நின்றவுடன் பானகம் விடுவதை நிறுத்தி மீதியை நமக்கு பிரசாதமாகக் கொடுப்பார்கள். அத்தனை பேரும் கொடுக்கும் பானகம் அப்பெருமான் வாயில் விடப்பட்டும் ஒரு ஈ எறும்பு கூட அங்கு காணப்படாதது இறையருளன்றோ!

திவ்யதேசங்களில் 89வதாகவும், பரமபதத்தின் எல்லை எனப்படுவதும், பாண்டி நாட்டு  நவ திருப்பதிகளில் ஐந்தாவதாக வரும் விளங்கும் ஆழ்வார்திருநகரியில் பிறந்தவர் சடகோபன் என்கிற நம்மாழ்வார். அவர் பிறந்தது முதல் அசையாமல் இருந்தபோது அவர் பெற்றோர் அங்கிருந்த பெருமாள் கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். அவர் ஓடிச்சென்று அங்கிருந்த உறங்காபுளி மரத்தின் கீழ் அமர்ந்து விட்டார்.

16 ஆண்டுகள் உணவின்றி பேசாமல் இருந்தவர் மதுரகவியாழ்வார் வந்து பேசியதும் பதில் கூறினார்.
அவரை நம்மாழ்வார் என்று கூறி மதுரகவி ஆழ்வார் அவரை குருவாக ஏற்றதால் அது குருஸ்தலமாகிற்று.

நம்மாழ்வார் 35வயதில் உயிர் நீத்த பின் அம்மரத்தடியில் புதைத்து ஆலயம் உருவாகியது. 5000 வருடத்துக்கு முந்திய மரம் 7 கிளைகளோடு மிக அழகாகக் காட்சியளிக்கிறது. அதைப் பார்த்தபோது மெய்
சிலிர்த்தது.பெருமாளின் மண்டபத்தை விட நம்மாழ்
வாரின் மண்டபம் சற்று பெரியது. நான் தரிசித்து பிரமித்த ஆலயம் இது!

சபரிமலை...ஐயப்பனை தரிசிக்க அத்தனை ஆவல்..ஆசை. ஆனால் அங்கு போக முடியுமா என்ற நம்பிக்கை மிகக் குறைவாகவே இருந்தாலும்..ஐயப்பா எனக்கு உன் தரிசனம் தரமாட்டியா?..
என்று வேண்டினேன்.

திடீரென்று ஒருநாள் என் தம்பி ஃபோன் செய்து தான் நண்பருடன் சபரிமலை போவதாகவும் எங்களையும் வரும்படி கேட்டான். ஆஹா..
எப்படிப்பட்ட வாய்ப்பு. விரதமில்லாததால் 18படி ஏற முடியாது. சுற்றிச் சென்று தரிசிக்கலாம் என்றான் என் தம்பி.

தமிழ் மாதங்களின் முதல் ஐந்து நாட்கள் ஐயன் சந்நிதி திறந்திருக்கும் என்பதால் நாங்கள் ஆவணி மாதம் சென்றோம். நல்ல கூட்டம். பம்பையிலிருந்து மேலே செல்ல 41/2 மணி நேரமாயிற்று. மாலை 5மணிக்கு மேலே சென்றோம். சன்னதிக்கு முன்னால் இருமுடி கட்டியவர்கள் வரிசையைப் பார்த்தாலே எப்ப தரிசனம் கிடைக்குமோ என்ற பயம் வந்து விட்டது. தங்குவதற்கு அறைகளும் கிடைக்கவில்லை.
என்ன செய்வது? இரவு முழுதும்  விழித்திருந்து விடிகாலை தரிசனம் முடித்து திரும்பலாம் என் எண்ணினோம்.

திடீரென்று ஒரே பரபரப்பு. 18படிகளை சுத்தம் செய்த பின்பே மாலை அணிந்தவர்
களுக்கு தரிசனம் என்றதும் அனைவரும் வரிசையில் அமர்ந்து விட்டனர். நாங்கள் தரிசனம் செய்ய மட்டுமே சென்றதால் வேகமாகச் சென்று தரிசன வரிசையில் நின்றோம். அங்கு அதிக கூட்டமில்லாததால் அரை மணிக்குள் தரிசனம். ஐயன் ஐயப்பனை சன்னிதி முன் நின்று நிதானமாக தரிசித்தோம். கூட்டம் இல்லாததால் இன்னொரு முறையும் தரிசனம். ஐயப்பனின் சிரிக்கும் கண்களும் குவிந்த வாயும் என்னிடம் ..இப்ப சந்தோஷமா... என்பது போல இருந்தது! நான் காண்பது நிஜமா கனவா என்று தோன்றியது. இன்னமும் என் கண்களுக்குள் தெரிகிறது அந்த சபரிவாசனின் தரிசனம்🙏

திரும்ப வரும்போது பெண்களின் சபரிமலை எனப்படும் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் ஆலயம், மன்னார்சாலை நாகராஜா ஆலயங்களை தரிசித்து வந்தோம்.

சென்ற ஆண்டு  திட்டமிடாமல் திடீரென்று சென்றது சார்தாம் யாத்திரை.நாங்கள் சென்றது அக்டோபரில் கடைசி ட்ரிப் என்பதால் சற்று பயந்தபடியே சென்றோம். ஆனால் இறைவனருளால் அனைத்து தரிசனங்களும் மிக அற்புதமாகக் கிடைத்தது.
பத்ரியில் சஹஸ்ரநாம தரிசனம், கேதாரேஸ்வரருக்கு நாங்களே செய்த அபிஷேகம் மற்றும் ஹரித்வார், ரிஷிகேஷ் என எல்லா இடங்களிலும் நல்ல தரிசனம்.
கேதார்,பத்ரி பற்றி நான் மத்யமரில் எழுதியவை..
https://www.facebook.com/groups/Madhyamar/permalink/1223278714526607/
பத்ரி பற்றி...
https://www.facebook.com/groups/Madhyamar/permalink/1214274642093681/

ஹைதராபாத் சென்றபோது நான் கண்டு ரசித்த ஆன்மிக அருங்காட்சியகம் சுரேந்திர புரி. யதுகிரி பஞ்ச நரசிம்மர் ஆலயத்திற்கு அருகிலுள்ள சுவாரசியமான அனைவரும் சென்று கண்டு ரசிக்க வேண்டிய இடம்.புராண இதிகாசங்களைப் பற்றி,
அத்தனை கடவுளின் சரித்திரமும், லீலைகளும், நேரில் பார்ப்பது போல் தத்ரூபமாக அறிந்து கொள்ளும் ஒரு அற்புத
ஆன்மிகக் களஞ்சியம்! பாரதத்தின் அத்தனை ஆலயங்களின் மாதிரியும் அங்கே உள்ளது.
அதற்கான லிங்க்..
https://www.facebook.com/groups/Madhyamar/permalink/1321026784751799/

இத்தனை ஆலயங்களை தரிசித்தும் இன்னும் தரிசிக்க வேண்டிய ஆலயங்களாக நான் விரும்புவது காஷ்மீரிலுள்ள வைஷ்ணோ தேவியும், நேபாளில் முக்தி நாத்தும். இறையருள் இருந்தால் அந்த ஆசை நிறைவேறும் என்று நம்பிக்கை உண்டு.

அமாசோம பிரதட்சணம்

அமாசோம பிரதட்சணம்..(14.12.'20)

இன்று அமாவாசையும் சோமவாரமும் இணைந்த அமாசோம பிரதட்சண நாள். ‘மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன்’ என்கிறர் பகவான் ஸ்ரீகிருஷ்ணர், பகவத் கீதையில். அரச மரத்தின் சமஸ்கிருத பதம் ‘அஸ்வத்த விருக்ஷம்!’ மரங்களிலேயே மிக புனிதமும், பெருமையும், உயர்வும் கொண்ட்து அரசமரம். ஸ்ரீமந்நாராயணனின் அம்சமாகப் போற்றப்படுவது அரச மரம்.

அரச மரத்தின் வேரில் பிரம்மாவும், மத்தியில் விஷ்ணுவும், மேல் பகுதியில் சிவனும் குடி கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மற்ற அனைத்து தெய்வங்களும், உப தேவதைகளும் அரச மரத்தின் பழங்களில் வாழ்வதாயும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

உபநிஷதங்களில் மனித உடல், மரத்துக்கு உவமையாகக் கூறப்படுகிறது, உலகியல் ஆசைகள் நிறந்த உடல் மரமாகவும், அதை ‘ஞானம்’ என்ற கோடரியால் வெட்டும்போது, இறைவனை அடையலாம் என்றும் கூறப்படுகிறது. அகன்று, ஆழமாக பூமிக்கடியிலுள்ள வேர் ‘ஆத்மா’. அரசமரம் பெரும்பான்மையான இடத்தை ஆக்ரமித்துக் கொண்டு அகன்று, பெரிதாக வளரும். அதனுடைய இலைகள் சிறு காற்றுக்கும் ‘சல் சல’வென்று சத்தம் ஏற்படுத்தும். 

மனிதன் ‘தான்’ என்ற பெருமையில், ஆணவம் அடைவது போல், அரசின் பூக்களும், பழங்களும் மனிதர்களுக்கு எவ்வகையிலும் பயன்படுவதில்லை. மரம் எந்த தச்சு வேலைகளுக்கும் உபயோகப்படாது. ஆனால் யாகங்கள், ஹோமங்கள் போன்ற புனித காரியங்களுக்கு அரசமர சமித்துகள் மட்டுமே ஏற்றவை.

இது போன்று மனித உடலும் அழகு, ஆரோக்கியம், பலம் இவற்றுடன் விளங்கினாலும். இறுதியில் எதற்கும் உபயோகப்படாமல் அழியக் கூடியது என்பதே உண்மை. மண்ணில் மறைந்துள்ள அரசமர வேர் போன்ற நம் ‘ஆத்மா’வை இறைவன் பால் திருப்புவதே நாம் பிறவி எடுத்ததன் பயன். அதனை உணர்த்தவே இறைவன் ‘மரங்களில் நான் அரசு’ என்று உரைக்கிறார்.

சகல தேவர்களும் இதில் வாழ்வதாலேயே இதனை சமித்துகள் தவிர, வேறு விஷயங்களுக்கு வெட்டுவது பாபம். அப்படி வெட்டுவது தன் மூதாதையரேயே கொலை செய்வதற்குச் சமம் என்பர். அதனாலேயே இம்மரத்தைத் தண்ணீர் விட்டு வளர்ப்பதும், பூஜிப்பதும், பிரதட்சிணம் செய்வதும் ஒருவர் செய்த பாபங்களை அழித்து, விஷ்ணு லோகம் அடையச் செய்யும் எனப்படுகிறது.

திங்கட்கிழமையும், அமாவாசையும் சேர்ந்து வரும் நாட்களில் அரச மரத்தை 108 முறை பிரதட்சிணம் செய்வது மகா புண்ணியம் தரும். நீண்ட ஆயுள், பிள்ளைப் பேறு, நோயிலிருந்து நிவாரணம், வைகுண்ட பிராப்தி இவை கண்டிப்பாகக் கிட்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

ஒரு புனித நாளில் இம்மரக் கன்றை நட்டு, தினம் நீர் ஊற்றி, எட்டு வருடங்கள் சொந்த மகன் போல் வளர்க்க வேண்டும். பின் அம்மரத்திற்கு முறைப்படி உபநயனம் செய்வித்து, பூணூல் அணிவித்த பின், அதன் பக்கத்தில் ஒரு வேப்பங்கன்று நட்டு, இரண்டுக்கும் திருமணம் செய்ய வேண்டும். அப்படிச் செய்பவர்களுக்கு குறையாத செல்வம், நிறைந்த இறையருள், நீண்ட ஆயுள், முன்னோர்களுக்கு முக்தி ஆகிய அத்தனை பேறுகளும் கிட்டும். வைகாசி மாதம் இம்மரத்திற்கு நீர் ஊற்றி வழிபடுவது மிக உயர்ந்த பலனைத் தரும்.

சோமவார அமாவாசையன்று விடியற்காலையில் அரசமர ப்ரதட்சணம் செய்வது மிக விசேஷமாகும். அரச பிரதட்சணத்தால் பெண்களின் மலட்டுத் தன்மை நீங்கி, பிள்ளைப் பேறு உண்டாகும். இதனாலேயே ‘அரச மரத்தைச் சுற்றி விட்டு அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தாள்’ என்ற வழக்கு உண்டாயிற்று!. இம்மரத்தின் மருத்துவக் காற்று பெண்களின் உடலில் பட்டு, மலட்டுத் தன்மை நீங்குவதாக விஞ்ஞானக் குறிப்புகள் உரைக்கின்றன.

மாங்கல்ய தோஷம் ஜாதகத்தில் இருக்கும் பெண்கள், விடிகாலை மரத்தை சுத்தம் செய்து, கோலம் போட்டு, மரத்தை அலங்கரித்து வைதீகரின் உதவியோடு பூஜை செய்து, ஒரு வெள்ளை நூலால் மரத்தில் 108 முறை பிரதட்சிணம் செய்தவாறு சுற்ற வேண்டும். இதனால் தோஷம் நீங்கி திருமணம் நடைபெறும். அரசமரத்தின் கீழே நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதும், நாக தோஷம் நீங்குவதற்கேயாகும்.

இன்று கார்த்திகை சோமவார அமாவாசை நாள். மிகப் புண்ணியமான சிறப்பான தினம். இன்று கீழ்கண்ட சுலோகத்தைச் சொல்லி அஸ்வத்த பிரதட்சிணம் செய்து, இகபர சுகங்களை அடைவோமாக!

மூலதோ ப்ரம்ம ரூபா: மத்யதோ விஷ்ணு ரூபிணேஅக்ரத: ஸிவரூபாய வ்ருக்ஷ ராஜயதே நம:


Tuesday 24 November 2020

தீபாவளி நினைவுகள்..13.11.2020.

தீபாவளி_நினைவுகள்


தீபாவளி என்றதும் நினைவுக்கு வருவது புத்தாடை👗, இனிப்பு🥣, பட்டாசு💈 இவையே! நரகாசுரனின் வேண்டுதலில் நாம் என்ஜாய்💃🕺செய்கிறோம்!


என்றும் நினைவில் நிற்கும் இனிய தீபாவளி...☺️

சிறு வயதில் பெற்றோர் வாங்கித் தரும் உடைகளே. இந்தக் காலம் போல கடைக்குப் போய் நமக்கு பிடித்ததை நாம் வாங்கிக் கொள்வதெல்லாம் கிடையாதே! பிடிக்குமோ பிடிக்காதோ அதைத்தான் உடுத்திக் கொள்வோம். கவுனோ பாவாடை சட்டையோ...இதான் அந்நாளைய உடை! 


விடிகாலை எழுந்து முதலில் நாம்தான் பட்டாசு வெடித்து ஊரை எழுப்ப வேண்டும் என்ற ஆவலில் என் தம்பிகள் தூங்கவே மாட்டார்கள்! அக்கம் பக்கம் எல்லோரும் தீபாவளி கொண்டாடி சாப்பிட்டு 11 மணிக்கு தெருவே காலியாகிவிடும். என் தம்பிகள் வெடிக்காத வெடி, வாணம், சக்கரம் இவற்றை எடுத்து அதிலிருந்து மருந்தைக் கொட்டி அதை புஸ்வாணமாக எரியவிட்டு அடையும் சந்தோஷம் இருக்கே..

அது அலாதியானது😅அன்று நூறு ரூபாய்க்கு நாங்கள் நான்கு பேர் வெடித்த பட்டாசு இன்று ஆயிரம் ரூபாய்க்கு கிடைப்ப

தில்லை.


அம்மா மூன்று நாட்கள் முன்பே ஆரம்பித்து நாலைந்து ஸ்வீட், காரங்கள், மருந்து எல்லாம் செய்வார். அன்று அ.ஆ.பவன், Grand sweets, கங்கா பவன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ், திருநெல்வேலி அல்வா என்று அத்தனை கடை பட்சணங்களின் சுவையும் அருமை அம்மாவின் கைபக்குவத்திலேயே கிடைக்கும்! என் அம்மா செய்யும் மைசூர் பாகின் சுவை இன்னமும் நாவில் ருசிக்கிறது. அந்தக் காலம் பொற்காலம்!


திருமணமானதும் எங்கள் தலைதீபாவளி மறக்க முடியாதது.நாங்கள் இருந்தது திருச்சி. என் பிறந்தவீடு முக்கால் மணி நேரப் பயணத்தில் முசிறி. தீபாவளிக்கு முதல்நாள் கை நிறைய பட்டாசுகளுடன்..(ஸ்வீட், ட்ரெஸ், தீபாவளி கிஃப்டாக வாட்ச், செயினெல்லாம் எங்க வீட்டு உபயமாச்சே😄) எங்கள் வீட்டுக்கு சென்றோம். பட்டாசு வெடித்து அத்திம்பேரை வரவேற்றார்கள் என் தம்பிகள்! 


என் கணவர் மச்சினன்களுடன் வெடிக்க அந்த வருடம் புதிதாக வந்திருந்த ராக்கெட்,ஏரோப்ளேன், 

ஆட்டம்பாம்,  வெடி எல்லாம் வாங்கி வந்திருந்தார். 


அன்று இரவு ராக்கெட் வைக்க பாட்டிலெல்லாம் ரெடி செய்து கொண்டு வெடிக்க ஆரம்பித்

தார்கள். அந்த நாட்களிலெல்லாம் தீபாவளிக்கு முதல்நாள் இரவும் வெடிக்கும் வழக்கம் உண்டு. இப்பொழுது வெடிப்பதே குறைந்து விட்டதே!  


எங்கள் வீட்டில் நிறைய பட்டாசு இருப்பதைப் பார்த்து பக்கத்து வீடு, எதிர்த்த வீட்டில் இருந்த என் தம்பிகளின் நண்பர்களும் சேர்ந்து கொள்ள, ஆளுக்கு ஒரு பாட்டிலில் ராக்கெட்டை வைத்து, சற்று இடைவெளி விட்டு நின்று , சேர்ந்து பற்றவைத்தார்கள். ஒவ்வொன்று ஒவ்வொரு திசையில் போக, அதிக உயரம் செல்லாத ராக்கெட் ஒன்று நேராக எங்கள் வீட்டு எதிரில் இருந்த தோட்டத்தில் போய் விழுந்து, பெரிதாக எரிய ஆரம்பித்து விட்டது. வெளியில் இருந்த முள்வேலி காய்ந்து இருந்ததால் நிமிடத்தில் நெருப்பு சரசரவென்று பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது.


முள்வேலியைத் தாண்டிச் செல்ல தயங்கியபடி  எல்லோரும் விலகி நிற்க, என் கணவர் சட்டென்று பக்கெட்டில் தண்ணீரை எடுத்துக் கொண்டு ஓடிப்போய் வேலியைத் தாண்டிச் சென்று நெருப்பில் கொட்டினார். என் அப்பா, பக்கத்து வீட்டுக்காரர்களும் ஆளுக்கொரு வாளியில் தண்ணீர் கொண்டுவந்து தர, அத்தனை வாளித் தண்ணீரும் கொட்டிய பின் கிட்டத்தட்ட அரைமணி நேரத்துக்கு பிறகே நெருப்பு அணைந்தது. 


அவசரமாக ஓடிய என் கணவர் செருப்பு போட்டுக் கொள்ளாமல் போனதால் கால் முழுதும் வேலி கிழித்து, காலில் முள் குத்தி நடக்க முடியாமல் திண்ணையில் அமர்ந்து விட்டார்.  முழங்கால் வரை முள் கீற்றி ஒரே ரத்தம். மாப்பிள்ளைக்கு இப்படி ஆகிவிட்டதே என்று என் அப்பா மிகவும் கவலையாகி விட்டார்.


என் கணவரோ நிமிடத்தில் ஹீரோவாகி விட்டார்! தெருவில் இருந்தவர்கள் வந்து விசாரித்ததோடு ஒரே பாராட்டு! "வெறும்காலோடு போய் முள்ளைக் கூட கவனிக்காமல் தண்ணீர் கொட்டினாரே.  சமயத்தில தன்னைப் பத்தி நினைக்காம வேகமா ஓடினாரே. நல்லவேளை..கொஞ்சம் தாமதிச்சிருந்தாலும் தோட்டம் முழுக்க நெருப்பு பிடிச்சிருக்கும்" என்று ஒரே Hero worship!என்னவரை பெருமைப்படுத்திய தீபாவளியை மறக்க முடியுமா?

நினைவுகள் தொடரும்...


தமிழ்தினம்

 தமிழுக்கும் அமுதென்று பேர் என்றுரைத்த பாரதி வழிநின்று வாழ்த்துகிறேன் சார்வரி எனும்

இப்புத்தாண்டில் நாம் 

நிறைந்த நல்வாழ்வும் 

சீரிய சிந்தனையும் 

ஓங்கிய ஒற்றுமையும் பெற்று நோய் நொடியின்றி வாழ யாதுமாகி நின்ற காளி அருள் புரிய வேண்டி🙏🏼


Monday 9 November 2020

பரீட்சைக்கு நேரமாச்சு Sunday_special..30.10.'20

 'பரீட்சைக்கு நேரமாச்சு' என்ற தலைப்பைக் கேட்டதும் என் நினைவுக்கு வந்தது சிவாஜி நடித்த திரைப்படம்தான். அதில் பரீட்சை எழுதச் செல்லும்  Y.G.மகேந்திரன் நடித்த வரதுக்குட்டியின் மரணம் என் மனதை வெகுநாள் பாதித்தது.

நான் எப்பவுமே பள்ளி செல்ல அடம் பிடித்ததோ அழுததோ கிடையாது. முதல் வகுப்பு படிக்காமலே இரண்டாம் வகுப்பிற்கு தாவியவள்!
சென்னையில்தான் என் பள்ளிப் படிப்பு முழுவதும்.  வகுப்பிலும் முதல் ரேங்க்கை பெரும்பாலும் தவறவிட்டதில்லை. அப்பொழு
தெல்லாம் 11ம் வகுப்பு S.S.L.C. அதன்பின்பு P.U.C..பின்புதான் பட்டப்படிப்பு.

நான் 11ம் வகுப்பில் இருந்தபோது வங்கிப் பணியில் இருந்த என் அப்பாவுக்கு ஆஃபீஸராக பதவி உயர்வு கிடைத்தது. சாதாரணமாக ஏப்ரல், மே மாதங்களில் transfer வரும்.என் அப்பாவுக்கு அக்டோபர்
மாதம் பதவி உயர்வுடன் ஈரோடு சென்று உடன் பதவி ஏற்க வேண்டும். என் அம்மா தனியாக எங்கும் செல்ல மாட்டார். அப்பாதான் வீட்டு வரவு செலவெல்லாம் கவனிப்பதால் அம்மா சென்னையில் தனியாக இருக்க பயப்பட்டார்.

நாங்கள் நான்கு குழந்தைகள் படித்துக் கொண்டிருந்தோம். என் தம்பிகள் சிறிய வகுப்புகளில் படித்ததால் அவர்களுக்கு பள்ளியில் இடம் கிடைத்து விடும்.நான் S.S.L.C என்பதால் எப்படி வேறு பள்ளி சென்று படிப்பது என்றெல்லாம் கவலை.

என் அப்பா ஈரோடு சென்று அங்கிருந்த பள்ளிகளில் விசாரித்தபோது கலைமகள் கல்வி நிலையம் மிக நல்ல பள்ளி என்று தெரிந்தது. அப்பள்ளி 11ம் வகுப்பில் ஒவ்வொரு வருடமும் 100 % தேர்ச்சி பெறும் பள்ளி என்றும் அங்கு அட்மிஷன்  கிடைப்பது மிகவும் கடினம் என்றும் சொன்னார்களாம்.

தன் பெண்ணுக்கு அங்கு அட்மிஷன் கிடைக்கும் என்பதில் என் அப்பாவுக்கு 100% நம்பிக்கை!அங்கு எனக்கு அட்மிஷன் கிடைக்குமா என்று கேட்க, அவர்கள் பள்ளியில் வைக்கும் பரீட்சையில் தேறினால் மட்டுமே சேர்த்துக் கொள்வோம் என்று சொல்லி விட்டார்களாம்.

சென்னை வந்த என் அப்பா விபரம் சொல்ல, என் அம்மா என்னை நன்றாக எழுதி அட்மிஷன் வாங்கும்படி அறிவுரை சொல்லி அனுப்ப, நாங்கள் ஈரோடு சென்றோம்.

அப்பொழுதெல்லாம் 10,11ம் வகுப்புகளில் Electives என்று ஒரு subject  எடுக்க வேண்டும். நான் Chemistry எடுத்திருந்தேன். எனக்கு தமிழ்,ஆங்கிலம்,
Chemistryயில் பரீட்சை வைத்தார்கள்.  நல்லவேளை கணக்கில் பரீட்சை இல்லை! எனக்கு பிடிக்காத, வராத பாடம் கணக்கு! எப்படியோ மனப்பாடம் செய்து கணக்கில் 80 மார்க் வாங்கி விடுவேன்!

நான் என் வாழ்க்கையிலேயே மிகவும் பயந்து தேற வேண்டுமே என்று கடவுளை வேண்டியது அந்த பரீட்சைக்கு மட்டுமே! அன்றைய நிலையில் அப்பாவை விட்டுத் தனியாக இல்லாமல் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும், அதற்கு நான் கண்டிப்பாக பாஸ் ஆகவேண்டுமே என்ற கவலை ஒன்றுதான்.

அங்கிருந்த ஆசிரியைகள் என் கையெழுத்தைப் பார்த்து மிகவும் பாராட்டினார்கள். எனக்கு அந்த சிறந்த பள்ளியில் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. மிகக் கட்டுப்பாடான பள்ளி. காலை 7 மணிக்கு ஸ்பெஷல் கிளாஸ்.பின்பு மாலை 6 மணிவரை பள்ளி வாசம்! ஒவ்வொரு கேள்விக்கும் எப்படி பதில் எழுத வேண்டும் என்று ஆசிரியைகள் சொல்லிக் கொடுப்பது மனதில் அப்படியே பதிந்து விடும். இறுதித் தேர்வில் 80% வாங்கி தேர்ச்சி பெற்றேன்.  கல்லூரிப் படிப்பிற்கு என் பெற்றோர் அனுமதிக்காதது எனக்கு மிகவும் வருத்தம்.

என் முதல் இரண்டு பிள்ளைக
ளும் எந்தக் கவலையும் படாமல் பரீட்சைக்கு செல்வது எனக்கு ஆச்சரியமான விஷயம்!
பெரியவனிடம்..எப்படி பரீட்சை எழுதினாய்?..என்றால்,..பரீட்சை முடிந்து விட்டது. இனி என்ன செய்வது?..என்று கூலாக சொல்லி விடுவான். +2வில்
மாநில மூன்றாமிடமும், மாவட்ட முதலிடமும் பெறறவ, பிலானியில் B.E. படித்து, ஜெர்மனியில் MS, Ph.Dமுடித்து, இப்பொழுது பெர்லின் யூனிவர்சிடியில்  Professorஆக பணி புரிகிறான்.

இரண்டாமவன் +2 பரீட்சை சமயம் உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தது. அவனோ கிரிக்கெட் பார்த்துக் கொண்டே படிப்பான். எனக்கோ ஒரே டென்ஷன். எப்படி மார்க் வாங்குவானோ என்று பயந்தேன். ..ஏன் கவலைப்படுகிறாய்? நான் நல்ல மார்க் வாங்குவேன்..என்றான்.  Commerce எடுத்து +2வில் தமிழக முதல் மாணவனாக வந்து அன்றைய முதல்வர் திரு கருணாநிதி கையால் பரிசும், KKR பாமாயில் கம்பெனியார் கொடுத்த மாருதி800 காரும் பரிசாகப் பெற்றான்.

'நான் கிரிக்கெட் பார்க்கிறேன். மார்க் வராது என்றாயே. அவர்கள் மாதிரி எனக்கும் கார் பரிசு கிடைத்தது பார்' என்றான் என்னிடம். இதைக் கேட்ட என் மனம் ஈன்ற பொழுதின் பெரிதுவந்ததை எப்படி சொல்வேன்! XIMB புவனேஸ்வரில் M.B.A படித்து இன்று Education Consultant ஆக இருக்கிறான்.

என் மகள் 2 வயதிலிருந்து என் பிள்ளைகள் பள்ளி செல்லும்
போது தானும் பள்ளிக்கு செல்வேன் என்று அழுது அடம் பண்ணுவாள். அவள் ஏழாம் வகுப்பு படிக்கும்போது என் கணவருக்கு ஈரோடு மாற்றலாக அவளும் பத்தாம் வகுப்பு வரை நான் படித்த கலைமகள் பள்ளியில் படித்தாள். 'பரீட்சைக்கு நேரமாச்சு கிளம்பு' என்று சொல்லும்வரை படித்து என் விருப்பம் போல மருத்துவர் ஆனாள்!

கடைக்குட்டி பிள்ளைக்கு பள்ளி செல்வதும், பாடம் படிப்பதும், பரீட்சை எழுதுவதும் சிறிதும் பிடிக்காத செயல். தமிழில் எப்பவும் ஃபெயில் மார்க்! எப்படி பாஸ் பண்ணி மேலே படிப்பானோ என்று எங்களுக்கு ஒரே கவலை. கணிதம் கரும்பு என்றால், கம்ப்யூட்டரோ கல்கண்டு அவனுக்கு! மற்ற பாடங்களில் பாஸ் மார்க் வாங்கினாலும் இவற்றில் 100 மார்க் வாங்கி விடுவான். இப்படி படித்தவன் +2வில் 95% எடுத்து பாஸ் செய்தது எப்படி என்பது எங்களுக்கு இன்றும் புரியாத விஷயம்!  மும்பை IITயில் M.Tech முடித்து இன்று லண்டனில் பணிபுரிகிறான். 

அன்று பரீட்சைக்கு நேரமாச்சு என்று பள்ளிக்கு அவசர அவசரமாக அனுப்பினோம்!இன்றோ நம் வீட்டுக் குழந்தைகளை 'பரீட்சைக்கு நேரமாச்சு' என்று சொல்லி வீட்டிலேயே கம்ப்யூட்டரில் எழுதச் சொல்கிறோம். இது புதிய அனுபவம்.

என் பெரிய பேத்தி எட்டாம் வகுப்பு. அவள் onlineல் பரீட்சை எழுதியதைப் பார்த்தேன். கம்ப்யூட்டர் திரையில் கேள்வித்தாள் தெரிய, இவள் பதில் எழுதும் தாளை காமிரா முன் வைத்து எழுதினாள். 'உலகம் உள்ளங்கையில்' என்பது உண்மைதானே!

என் சின்ன பேத்தி இரண்டாம் வகுப்பு. தினமும் அவளை எழுப்பி கம்ப்யூட்டர், Earphone எல்லாம் சரி பண்ணி படிக்க சொல்வது வித்யாசமான விஷயம்!  முதல் period முடிந்ததும் வெளியே வந்து ஏதாவது சாப்பிடுவதும் குடிப்பதும் அவளுக்கு ஜாலியாக இருக்காம்! 'நான் இப்படியே எப்பவும் படிக்கிறேன். ஸ்கூல் எதற்குப் போகணும்?' என்பாள்.நாம் நினைத்தும் பார்க்காத இந்த நிலைமைக்கு காரணம் யாரறிவார்? நம்மை எந்தப் பரீட்சைக்கு தயார் செய்கிறாரோ அந்தக் கடவுள்?

பள்ளியில் எழுதுவது மட்டுமா பரீட்சை? நம் அன்றாட வாழ்க்கையில் செய்யும் ஒவ்வொரு செயலும் நமக்கு பரீட்சைதான்.  ஒரு சின்னக் குழந்தை குப்புறத்திக் கொள்வதோ...காலையில் வாசலில் போடும் புள்ளிக் கோலமோ...அலுவலகத்தில்
மிக முக்கிய பணியோ..
அனைத்துமே பரீட்சைதான்!

இந்த உலகமே ஒரு பள்ளிதான்..ஈசனே இவ்வுலகை நடத்தும் ஆசிரியர்..பள்ளியில் 'பரீட்சைக்கு நேரமாச்சு' என்று பரபரக்கும் நாம், வாழ்க்கை என்று முடியுமோ, அதற்குள் அந்த இறைவனைப் பாடிப் பணிந்து அவனை அடைய பக்தி செய்வோம் என்று நினைப்பதில்லை. நாம் பிறந்தது முதல் இறப்பதுவரை அவன் வைக்கும் பரீட்சைகள்தான் நம் இன்பதுன்பங்கள். எவ்வளவு கடினமான பரீட்சையிலும் நம் வாழ்க்கையை இறை அருளுடன் நடத்தி , பக்தி செய்து முக்தியைப் பெறுவோம்🙏🏼

Sunday 8 November 2020

மலரும் நினைவுகள்

Saturday_special..7.11.2020

நான் முறையாக கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டவள். நான் பாட்டு கற்றுக் கொள்ளும்போதே மேடையில் பக்க வாத்யத்துடன் பாடியதுண்டு. சின்ன வயதில் சினிமா பாட்டுகளை நானும் என் தம்பியும் இணைந்து பாடியதுண்டு. 

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு என் மகனுடன் இணைந்து பாடிய அனுபவம் மறக்க முடியாதது. என் கடைசி பிள்ளை திரைப்படப் பாடல்களை மிக நன்றாகப் பாடுவான். 

நாங்கள் மும்பையில் இருந்தபோது Vashi Fine Arts society 'ல் நான் உறுப்பினராயிருந்தேன். அங்கு திரைப்பாடல் நிகழ்ச்சி ஒன்றில் நானும் என் மகனும் இணைந்து திரு S.P.B அவர்கள் பாடிய அந்திமழை பொழிகிறது பாடலைப் பாடினோம். எங்கள் இருவருக்குமே முதல் அனுபவம். 

அந்தநாளில் இப்பொழுது போல் காமிரா மொபைல் இல்லாததால் வீடியோ இல்லை. என் பெண் பாடலை மட்டும் record செய்தாள். 

புகைப்படங்களும் சரியாக வரவில்லை. இந்த ஒரு புகைப்படம் மட்டுமே இருந்ததால், இத்துடன் பாடலை இணைத்தேன்.நீங்களும் கேட்டு ரசிக்கலாமே!




Wednesday 28 October 2020

நவராத்திரி நினைவுகள்🙏🏼..24.10.'20

பண்டிகைகளில் எனக்கு மிக விருப்பமானது நவராத்திரி. அது பற்றிய நினைவுகள் என்றும் மறக்க முடியாதவை. மத்யமரில் நேரமின்மையால் எழுத முடிவதில்லை. ஆனாலும் நவராத்திரி பற்றி எழுதாமல் இருக்க முடியாததால் இந்த பதிவு!

நவராத்திரி பத்து நாட்களும் விதவிதமாய் உடை அணிந்து அழைத்தவர் வீடுகளுக்குச் செல்வதும், நம் வீட்டுக்கு பலரும் வந்து கொலுவைக் கண்டு களித்துப் பாடுவதும், பேசி மகிழ்வதும், தாம்பூலம் பெற்றுக் கொள்வதும், புதியவர்களை அறிமுகப் படுத்திக் கொள்வதும் அந்த காலத்தில் வெளியில் அதிகம்  செல்லாத பெண்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நல்ல வாய்ப்பு!

என் சிறு வயதில் கொலுவுக்கு அழைப்பவர் வீடுகளுக்குச் சென்று ஸ்ரீ கணநாதாவையும், ராரவேணு கோபாபாலாவையும் பாடிவிட்டு சுண்டல் வாங்கி வந்த நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளது! என்னுடன் என் தம்பி பையுடன் வருவான் சுண்டலைப் போட்டு எடுத்து வர! வீட்டுக்கு வந்ததும் என் அம்மா ஒவ்வொரு சுண்டலையும் பார்த்து அதிலுள்ள குறை நிறைகளை சொல்வார். அந்த பத்து நாட்களும் இரவு சுண்டல் பலகாரம்தான்!

டீன் ஏஜில் கொலுவுக்கு போகவும்,   பாடுவதற்கும் கொஞ்சம் தயக்கம்! நான் பாட்டு கற்றுக் கொண்டவள் என்பதால் பாடாமல் விட
மாட்டார்கள் ! சின்ன பாட்டை செலக்ட் பண்ணி பாடுவேன்.என் பாட்டை நிஜமாகவே ரசிப்பவர்களுக்கு கனராகப் பாட்டு! எந்தரோ மஹானு
பாவையும், ஜகதானந்தகாவையும் பாடச் சொல்லி கேட்டு ரசித்தவர்
களும் உண்டு. அது போன்ற நாளில் மனமே மகிழ்ச்சியில் துள்ளும்!

நவராத்திரியில் சுண்டல் செய்வது நமக்கு புரோட்டின் சத்து சேர வேண்டும் என்பதற்காக என்பார்கள்.தானியங்கள் என்பவை சக்தி. பெண் என்ப
வளே சக்திதானே! எனவே சக்தி எனும் பெண் தெய்வங்களுக்கு தானியங்களைக் கொண்ட சுண்டல், பாயசம் முதலானவை நைவேத்தியமாகப் படைக்கப்
படுகிறது.

தவிர, புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதங்களில் அடைமழை பெய்யும். இதனால் தோல் நோய்,கபம், சுரம் முதலானவை ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த நோய்களைப் போக்கும் சக்தி, தானியங்களுக்கு உண்டு. ஆகவே, நவராத்திரி நாளில் தானிய சுண்டல்கள்  செய்து அம்மனுக்கு நிவேதித்து அனைவருக்கும் வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் நம் முன்னோர்கள்.

கொலு பார்க்க செல்லும்போது கிடைக்கும் அனுபவங்கள் பலப்பல! ஆனால் பலரும் சுண்டல் செய்வதில் சிரத்தை எடுத்துக் கொள்ள மாட்டார்களோ என்று தோன்றும்! சில வீடுகளில் அரை வேக்காட்டில் இருக்கும்! சிலர் வீட்டில் ஓவராக வெந்து வாயில் ஈஷிக் கொள்ளும்! சிலர் காலை
யிலேயே செய்து வைத்து மாலை கொடுக்கும்போது ஊசல் வாசனைஅடிக்கும். இப்பொழு
தெல்லாம் சுண்டலின் மகத்துவம் மறைந்து விதவித பட்சணங்கள்  தரப்படுகிறது!

எனக்கு திருமணமானதும் உ.பி.க்கு மாற்றல். அங்கு மனிதர்களும் புதிது..புரியாத மொழி. நம் மனிதர்களும் இல்லாததால் கொலு வைக்க வழியில்லை.

தமிழ்நாட்டுக்கு மாற்றலானதும் என் குழந்தைகள் ஆசைப்பட, எங்கள் வீட்டு ஷோகேஸ் பொம்மைகள், அவர்கள் அட்டையிலும் பேப்பரிலும் செய்த பொம்மைகளை வைத்து சின்ன கொலு வைக்க ஆரம்பித்தோம். அதில் முத்தாலாரத்தி, ரங்கோலி, நவதானியக்கோலம் என்று தட்டுகளில் போட்டு வைப்பேன். தினம் விதவிதமாய் சுண்டலும் உண்டு. அந்த simple கொலுவிற்கு என் பெண் பிள்ளைகள் அவர்கள் நண்பர்கள், வகுப்பு ஆசிரியை
களைக் கூப்பிட, அவர்களும் வந்து என் குழந்தைகளின் ஆர்வத்தைப் பாராட்டி,நான் தரும் தாம்பூலத்
தையும் சுண்டலையும் பெற்றுச் செல்வார்கள்!

ஒருமுறை சரஸ்வதி பூஜை அன்று நிறைய பேரை கூப்பிட்டிருந்தேன். நிறைய சுண்டல், பாயசம் செய்து வைத்திருந்தேன். மாலை 4 மணி முதல் மழை ஆரம்பித்து விட்டது. அத்தனை சுண்டலையும் பக்கத்தில் இருந்தவர்களுக்கும், மழையில் எங்கள் வீட்டருகில் ஒதுங்கியவர்களுக்கும் கொடுத்தேன். அப்பொழுது தோன்றிய எண்ணம்தான் மங்கையர்மலரில் வெளியான என் 'வீடு தேடி வந்த சக்தி' கதைக்கான கரு...
https://www.facebook.com/groups/Madhyamar/permalink/949904075197407/

நாங்கள் மும்பையில் இருந்தபோது என் தோழி ஒருவர் அவர்கள் வீட்டில் இருந்த மரப்பாச்சி பொம்மைகளைக் கொடுத்து என்னை கொலுவில் வைத்துக் கொள்ள சொல்ல, அது முதல் பொம்மைகள், படி என்று வாங்கி இப்போது நிறைய பொம்மைகளுடன் பெரிதாகி விட்டது எங்கள் கொலு!

வெளிநாட்டு பொம்மைகள், என் கையால் செய்த Art from waste பொம்மைகள், நானே உருவாக்கும் தெய்வ உருவங்கள் என்று எங்கள் வீட்டு ஹால் முழுதும் ஆக்ரமித்துக் கொள்ளும் எங்கள் வீட்டு கொலு! இதை வைத்து மத்யமரில் நான் எழுதிய கட்டுரையின் லிங்க் இது..
https://www.facebook.com/groups/Madhyamar/permalink/957240644463750/

நவராத்திரியின் தத்துவம் ஒவ்வொரு பெண்ணும் சக்தியின் வடிவம் என்பதை உணர்த்துவதே!நாங்கள் மும்பையில் இருந்தபோது என் வீட்டு எதிரில் ஒரு மராட்டிய பெண் இருந்தார். அவரை கொலுவுக்கு மஞ்சள் குங்குமம் பெற்றுக் கொள்ள அழைத்தேன். மாலை வந்தவர் எங்கள் கொலுவை ரசித்துவிட்டு  சற்று நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு கிளம்பியபோது மஞ்சள் குங்குமம் கொடுத்தேன். அதனை எடுத்துக் கொள்ளாமல் மற்றவற்றை மட்டும் எடுத்துக் கொண்டார். தன் கணவர் இறந்து விட்டதால்  மஞ்சள் குங்குமம் பூ எடுத்துக் கொள்வதில்லை என்றார். எனக்கு சட்டென்று மனம் துணுக்குற்றது. நான் அதுவரை சுமங்கலிகளை மட்டுமே அழைத்து தாம்பூலம் தருவேன். விதவைகள் வந்தாலும் பழம் மட்டுமே கொடுப்பது வழக்கம்.

இதை என் கணவரிடம் மனம் வருந்திச் சொன்னபோது..இதில் எந்தத் தவறுமில்லை. எல்லா பெண்களும் சக்தி ரூபம்தான். மஞ்சள் குங்குமம் தவிர மற்றவைகளை அவர்களும் உபயோகிப்பார்களே.  இதுவும் அம்மனின் சங்கல்பம் என்று எண்ணிக் கொள். இனி இதுபோல் வித்யாசம் பார்க்காமல் எல்லா பெண்களுக்கும் கொடு..என்றார். எனக்கும் அது சரியெனத் தோன்ற, அது முதல் நான் எல்லாரையும் அழைத்து தாம்பூலம் தருவதை வழக்கமாக்கிக் கொண்டேன்.

சென்ற ஆண்டு எங்கள் வீட்டு கொலுவுக்கு குமுதம் சிநேகிதி திருச்சி ரோட்டரி மகளிர் கிளப் நடத்திய கொலு போட்டியில் பரிசு கிடைத்தது. இரண்டு ஆண்டு
களுக்கு முன்பு மங்கையர் மலரில்  சிறந்த கொலுவுக்கான பரிசு கிடைத்தது.

சென்ற ஆண்டு மத்யமர் நண்பர்களுடன் நவராத்திரி  மறக்க முடியாதது. மத்யமர்கள்
மோகன், ரேவதிமோகன் கிருஷ்ணமோகன், விஜயலக்ஷ்மி
கிருஷ்ணமோகன், ஜெயந்தி ஆகியோருடன் என் பேத்தியின் நடனம், எங்களின் பாட்டு, பின் வயிற்றுக்கு உணவு என்று செம ஜாலியாக இருந்ததை மறக்க முடியவில்லை.
https://www.facebook.com/groups/Madhyamar/permalink/1201906919997120/

நாங்கள் தற்சமயம் குடந்தையில் புண்யக்ஷேத்ரம் என்ற இடத்தில் வீடு கட்டிக் கொண்டு வந்துவிட்டோம். இந்த ஆண்டு எங்கள் வீட்டில் பண்டிகைகள் இல்லாததால் கொலு வைக்கவில்லை.  என் வீட்டில் இங்கிருக்கும் சுவாசினிகளை அழைத்து லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்து தாம்பூலம் பிரசாதம் கொடுத்தேன்.
இங்கு வேலை செய்யும் பெண்களுக்கு தாம்பூலத்துடன் புடவை வைத்துக் கொடுத்தேன்.  கொலு, கொண்டாட்டம்  இல்லாத குறையை இவற்றால் போக்கிக் கொண்டேன்.

தற்சமயம் என் பிள்ளை குடும்பம் எங்களுடன் இருப்பதால் வேலை அதிகம். மத்யமரில் அதிகம் பங்குபெற நேரமில்லை. கொலு இல்லாததால் 'Zoலு' வில் பங்கு கொள்ள முடியவில்லை! சென்ற ஆண்டு திருச்சி local tvல் ஒளிபரப்பான எங்கள் கொலு வீடியோவை இணைத்துள்ளேன்.
https://youtu.be/gxhAI7OWmUw

அடுத்த ஆண்டு கொரோனா காணாமல் போய் நாம் மீண்டும் முன்பு போல் ஒன்றிணைந்து சந்தோஷமாக பண்டிகை கொண்டாட்டங்களைக் கொண்டாட இறையருளை வேண்டுவோம்🙏🏼

Friday 16 October 2020

கொண்டாட்டம்..சந்தோஷம்..12.9.'20💃❤️

 கொண்டாட்டம்..சந்தோஷம்💃❤️


வாழ்க்கையில் வசந்தங்கள் அவ்வப்போது வரும்போது அவற்றை அந்த நேரங்களில் முழுவதும் அனுபவித்து விடுவது என் வழக்கம். சமீபத்தைய சந்தோஷம் புது வீடு! 


குடந்தையிலுள்ள 'புண்ய க்ஷேத்திரம்' என்ற இடத்தில் எங்கள் மனதுக்குப் பிடித்த மாதிரி கட்டிய என் கனவு வீட்டின் கிரஹப்ரவேசம் ஆகஸ்ட் 21ல் நடைபெற்றது. அதன்பின் வீட்டை சரிப்படுத்துவதில் மிகவும் பிஸி!


அத்துடன் விழாவுக்கு வந்திருந்த என் பெண், பிள்ளை, பேரன் பேத்திகளுடன் நாள் முழுதும் கொண்டாட்டம்! இதில் சில நாட்களாக மத்யமர் பதிவுகளைப் படித்து கமெண்ட நேரமே இல்லை.


செப்டம்பர் 7என் பேத்தி பிரியங்காவின் பிறந்தநாள். புதுவீட்டில் கொண்டாடிய முதல் விழா! கேக், கிஃப்ட் என்று உற்சாகம் களை கட்டியது. 


விழா என்றாலே அங்கு சங்கீதம், நாட்டியம் உண்டே! என் பெண்ணும் மருமகளும் இணைந்து ஆடிய நடனம் விழாவுக்கு மேலும் மெருகேற்றியது. 


'ராதே ராதே ராதே' என்ற பாடலுக்கு என் பெண் கிரிஜாவும் மாற்றுப்பெண் ஆர்த்தியும் ஆடிய நடனத்தை நீங்களும் ரசிக்கலாமே!


Sunday 16 August 2020

அஜா ஏகாதசி..(15.8.2020)


மும்மூர்த்திகளில் ஒருவரான மகாவிஷ்ணுவை வணங்கி வழிபடும் விரதங்களில் முதன்மையானது ஏகாதசி விரதம். இந்த ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பவர்கள் அரசர்கள் செய்யும் அஸ்வமேத யாகம் செய்த பலனை பெறலாம் என்று புராணங்கள் கூறுகின்றன.

ஒவ்வொரு ஏகாதசியும் தனித்தனி பலன்களை நமக்கு அருள வல்லது. நம் முன்வினைகளைப் போக்கி நல்வினைகளைத் தரக் கூடியது. நம் துன்பங்களின் காரணமான முன்வினைகளை. நீக்கி, இப்பிறப்பில் நாம் நலமுடன் வாழ அருள்வது ஏகாதசி விரதம். அத்தகையதொரு ஏகாதசி விரதம் இன்றைய அஜா அல்லது அன்னதா ஏகாதசி.

அஜா ஏகாதசி விரதத்தின் பெருமைகளைத் தமக்கு விளக்கி அருளுமாறு யுதிஷ்டிரர் பகவான் கிருஷ்ணனிடம் கேட்க பகவான் எடுத்துரைக்கிறார்.

'தர்ம புத்திரரே, அஜா ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கும். பொதுவாக விரத முறைகள் வழிபாடுகள் அனைத்தையும் கடைப்பிடிக்க வாய்ப்பில்லாதவர்கள் இந்த அஜா ஏகாதசி அன்று வெறும் உபவாசம் இருந்தாலே முழு விரத முறையையும் கடைப்பிடித்த பலன்களைப் பெறுவார்கள். 
ரகுவம்சத்தில் தோன்றிய ஹரிச்சந்திரன் இந்த விரதத்தை அனுஷ்டித்து தன் துன்பம் நீங்கப் பெற்றான்' என்றுரைத்தார்.

உலகம் போற்றும் சத்தியசந்தனாக விளங்கிய ஹரிச்சந்திர மகாராஜா தன் முன்வினைப்பயன்களால் தன் நாட்டை இழந்தான். மேலும் தன் மனைவி, மகனையும் பிரியும் நிலை வந்தது. ஆனாலும் தன் இயல்பில் மாறாது சுடுகாட்டைக் காக்கும் வேலையைச் செய்து சத்தியத்தையே கடைப்பிடித்து
வந்தான்.

ஒருநாள் ரிஷி கௌதமரை சந்தித்து அவர் பாதங்களைப் பணிந்த ஹரிச்சந்திரன் தன் வாழ்க்கையில் நடந்த துயரங்களை எடுத்துக்கூறினான்.

அவற்றைக் கேட்ட முனிவர் மிகவும் மனம் வருந்தி, 'நாம் படும் துன்பத்தின் காரணம் முன்வினைப்பயன்தான். அதை அழிக்கும் சக்தியுடைய விரதம் அஜா ஏகாதசி விரதம். அந்த நாளில் நீ முழு உபவாசம் இருந்து, ஹரியை நாள்முழுவதும் மனதாலும் வாக்காலும் சிரத்தையுடன் துதித்தால் ஹரி மகிழ்ந்து உன் வினைப்பயன்களை நீக்குவார். மேலும் நீ விரைவில் நன்னிலை அடைவாய். நீ அடையும் நன்னிலையே இந்த ஏகாதசி விரதத்தின் மகிமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும்' என்று உபதேசித்தார்.

ஹரிச்சந்திரனும் அதன்படி விரதமிருந்து உபவாசம் அனுஷ்டிக்க விரைவில் அவன் வினைப்பயன்கள் நீங்கின. அவனோடு வாதம் செய்தவர் தோற்றார். அவன் துன்பங்கள் யாவும் நீங்கின. தன் பிள்ளையோடும் மனைவியோடும் இணைந்தான். அவன் ராஜ்ஜியம் மீண்டது என்று பகவான் கிருஷ்ணர் அவற்றை எடுத்துரைத்தார்.

அதோடு அவர் யுதிஷ்டிரனிடம், 'ஓ பாண்டு புத்ரா! நீயும் இப்போது இந்த அஜா ஏகாதசியின் சிறப்புகளை அறிந்து கொள்!' எனக் கூறத் தொடங்கினார். இந்நாளில் மேற்கொள்ளும் விரதம் நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களின் விளைவால் இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்கும் துன்பங்களை உடனடியாக நீக்க வல்லது. இதனால் அவர்கள் அனைவரும் இறுதியில் வைகுண்டலோகத்தை அடைவர்.

'எவரொருவர், இந்நாளில் இந்த விரதத்தின் மகிமையை விவரிக்கும் இந்தக் கதையினை கேட்பவர் சொல்பவர் படிப்பவர்கள் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார்' என ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனிடம் கூறியதாக  பிரம்ம வைவர்த்த புராணம் விவரிக்
கின்றது.

இத்தகைய சிறப்புகளை
உடைய இந்த நாளில் உபவாசம் இருந்து ஹரியை வழிபட வேண்டும். பொதுவாகவே சனிக்கிழமைகள் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தவை. சனிக்கிழமையும் ஏகாதசியும் இணைந்துவருவது மிகவும் சிறப்புக்குரியது. எனவே இந்த நாளைத் தவறவிடாமல் பகவான் விஷ்ணுவை வழிபட்டு சகல நலன்களையும் பெறுவோம்.





கோகுலாஷ்டமி ஸ்பெஷல்..(11.8.2020)

தினமும் கிருஷ்ண ஜயந்திதான்!

ஸ்ரீமத் பாகவத ரஹஸ்யம் படித்துக் கொண்டிருந்த போது அதில் கிருஷ்ண ஜயந்தியைப் பற்றிய பாகம் மிக அருமையாக இருந்தது. பாகவத ரகஸ்யம் படிக்கப் படிக்க திகட்டாத தேன்! ஒவ்வொரு வரியிலும் பக்தி ரஸம் ததும்புகிறது.

நான் பெற்ற இன்பம் அனைவரும்பெறும் ஆசையில் அதில் சிலவற்றைத் தொகுத்து எழுதியுள்ளேன்.

நந்த மஹோத்சவம் மகிழ்ச்சி விழா. தினமும் கொண்டாட வேண்டும். ஜனங்கள் வருஷத்தில் ஒரே நாள்தான், ஸ்ரீகிருஷ்ணரின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். அதிகாலை 4 மணி முதல் 5½ மணி வரை தினமுமே நந்த மஹோத்சவம், பாலகிருஷ்ணன் பிறந்த தினம் கொண்டாடுங்கள். பகவான் எழுந்தருளும் தினமே விழா நாளாகும். விழாவிற்குப் பணம், காசு தேவையில்லை. அதற்கு அன்பே முக்கியம்.

கிருஷ்ண ஜயந்தியை ஆலயங்களில் கொண்டாடினால் போதாது. நம் ஒவ்வொருவர் வீடுகளிலும் விழா கொண்டாட வேண்டும். ஜீவாத்மாவின் இருப்பிடம் நம் சரீரமேயாகும். ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி கொண்டாடுவது என்றால் அப்பம், வடை, அவல் வெண்ணெய் விநியோகிப்பதல்ல. தயிரும், பாலும் கொடுப்பதா? இதெல்லாம் வேண்டுமென்பதில்லை.

விழாவை மனதில் (இதயத்தில்) கொண்டாட வேண்டும். மனிதன் தன் உடல் உணர்ச்சியற்றிருக்கும் நிலையை அடையும்போதுதான் பகவான் தோன்றுவார். தேக தர்மத்தை மறக்கும்போதுதான் விழா பயனுள்ளதாகும். பகவானை நம் இதயத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும். பகவான் நம் இதயத்தை அடைந்ததும் நமக்குப் பசி, தாகம் மறந்து போகும்.

ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி கொண்டாடுவதற்குக் கொஞ்சம் தயார் செய்ய வேண்டி வருகிறது. நம் உடலையே நாம் வடமதுரையாகச் செய்ய வேண்டும். இதயம் கோகுலமாக அமைய வேண்டும். இது ஆனதும் விழா தானாகவே நடக்கும். இதற்குப் பிறகு இதய கோகுலத்தில் பகவான் வந்து அமர்ந்து விடுவார். கோகுலம் – கோ, இந்திரியம், புலன். குலம் – சமூகம், கூட்டம், இந்திரியங்கள் கூடுமிடம் – இதயம்.

மகாப்ரபு, மதுராபுரி, மதுரா இவ்விரண்டும் ஒன்றே என்று கூறியிருக்கிறார். இந்த மதுவினால் (தேன்) உடலைப் பேணி வந்தால், உடல் மதுராவாகிவிடும். மது இரண்டு இடங்களில் அமைக்கப்
பட்டிருக்கிறது.

காமசுகம், செல்வசுகம் இவ்விரண்டிலும் மனம் சிக்கிக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டிலிருந்தும் மனதைப் பிரித்து விலக்கி வைக்க வேண்டும். பல தடவைகள் மனிதன் தன் உடலினால் காமத்தைத் துறந்து விடுகிறான். ஆனால் மனதினால் துறக்க முடிகிறதில்லை.

உடலை மதுராபுரியாக்க வேண்டுமானால் அதை யமுனா நதிக்கரையில் சேர்த்து வைக்க வேண்டும். யமுனா நதி பக்தி ஸ்வரூபமாகும். யமுனைக் கரை பக்தியின் கரையும் ஆகும். பக்திக் கரையை விட்டு விடாதீர்கள். இருபத்தி நான்கு மணி நேரமும் பக்திக் கரையில் தங்கியிருந்தால், உங்கள் சரீரம் மதுராபுரியாக ஆகி விடும். இக்காலத்தில் ஜனங்கள் உடலால் பாவம் செய்வதைவிட மனதால் செய்வதுதான் அதிகம்.

நாம் தீர்த்த ஸ்தலங்களுக்குப் போவது நல்லது. நம் உடலையும் தீர்த்த ஸ்தலம் போல் புனிதமாக்க வேண்டும். பக்தி கண்களாலும், காதுகளாலுல் கூட நடை பெறுகிறது. கண்களால் பக்தி செய்வது என்றால் கண்களில் பகவானை எழுந்தருளச் செய்து உலகைப் பாருங்கள். இவ்விதம் பார்ப்பவர்களுக்கு உலகமே பகவான் ஸ்வரூபமாகத் தோன்றும். துளஸிதாஸருக்கும், ஹனுமானுக்கும் உலகில் சீதாராமனைத் தவிர வேறு எதுவுமே தென்படவில்லையாம். ஒவ்வொரு புலனிலும் பக்திரஸத்தை நிரப்பி வையுங்கள். ஒவ்வொரு புலன் மூலமும் பக்தி செய்யுங்கள். உங்கள் இதயமே விரைவில் கோகுலமாகிவிடும்.

சரீரத்தைத் தவிர மனதினாலும் தினமும் கோகுலம் செல்லுங்கள். உடல் எங்கிருந்தாலும் மனதை பிருந்தாவனத்திற்கு அனுப்புங்கள்.

யசோதை மடியில் பாலகிருஷ்ணன் இருந்து விளையாடிக் கொண்டிருப்பதாயும் கோபிகள் அவளைப் பார்க்க வேகமாய் ஓடிக் கொண்டிருப்
பதாயும் பாவனை செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு லீலையைப் பற்றியும் சிந்தனை செய்யுங்கள்.

பகவானை தரிசித்த பிறகு அவன் ஸ்வரூபத்தை, கண்களை மூடிக்கொண்டு உள்ளத்தில் பார்க்க முயலுங்கள். தியானத்திலும், தரிசனத்திலும் ஒன்றிப்பு ஏற்படும்போது, பிறந்த தின விழா கொண்டாடும் வாய்ப்பும் உண்டாகிறது.

ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி அதிகாலை 4 மணிக்குக் கொண்டாடப்பட்டது. தியானம் செய்ய காலை 4 முதல் 5 மணி வரை பிரம்ம முகூர்த்தம். சிறந்த காலம்.

பகவான் பஜனை அதிகாலை நேரத்தில் செய்யப்பட்டால் நாள் முழுவதும் ஆனந்தம் கிடைத்துவிடும். அதிகாலையில் எழுந்து தினமும் அரை மணி நேரம் பகவானை தியானம் செய்யுங்கள். பகவானுடன் ஒன்றி சற்று நேரம் அமர்ந்திருங்கள், காலை நேரத்தில் ஜபம், தியானம், பிரார்த்தனை இவற்றைத் தினமும் செய்து வந்தால், நாள் முழுவதும் பகவான் நம்மை பாபச் செயல் செய்வதிலிருந்து காப்பான்.

ஸ்ரீ மத் பாகவத ரகஸ்யம் தசம ஸ்கந்தத்திலிருந்து தொகுத்தது...

என் கைவண்ணத்தில் சில
ஸ்ரீ கிருஷ்ண தரிசனங்கள்🙏🏼