Monday 14 December 2020

கேக் போய் லட்டு வந்தது டும்..டும்..டும்😀

 கேக் போய் லட்டு வந்தது..டும் டும் டும்😀(7.12.'20)

என் வீட்டில் எல்லோரும் இனிப்பு பிரியர்கள். என் கணவருக்கு இரவு சாப்பிட்டதும் கண்டிப்பாக ஸ்வீட் வேணும். என் பிள்ளைக்கோ காலை, இரவு இரண்டு வேளையும் ஸ்வீட் வேண்டும். நான்கு நாளைக்கு ஒருமுறை ஏதாவது ஸ்வீட் செய்வது என் வேலை! முன்பெல்லாம் கடையிலிருந்து அவ்வப்போது ஸ்வீட் வாங்குவோம். கொரோனா வந்தபின் அது நின்று விட்டது. 

இந்தமுறை என்ன ஸ்வீட் பண்ணலாம் என்று யோசித்தபோது மைசூர் கேக் என்று நான் எழுதி வைத்திருந்த ரெசிபியை செய்யலாமென்று தோன்றியது. இந்த ரெசிபி எழுதி வைத்திருந்த தோடு சரி..இதுவரை செய்ததில்லை.

நான் செய்ய ஆரம்பித்தபோது உள்ளே வந்த என் பிள்ளை..அம்மா நெய் வாசனை அடிக்கற்தே..ஸ்வீட் பண்றியா..சீக்கிரம் பண்ணு...என்றபடி டி.வி. பார்க்க சென்றான். 

என் மாட்டுப்பெண்..நானும் இந்த புது ஸ்வீட் டை தெரிஞ்சிக்கறேனே...என்றாள். நானும் அந்த methodல் செய்ய ஆரம்பித்தேன். நெய்யில் மைதா கடலைமாவு வறுத்து சர்க்கரை பாகில் போட்டுக் கிளற வேண்டும். கிளறும்போது கலர் ப்ரௌன் ஆகிவிட, ..ஏம்மா இந்த கலரா இருக்கு..என்ற என் மாட்டுப் பெண்ணிடம்...மாவை ரொம்ப வறுத்துட்டேனோ...என்றபடி கிளறி பதமானதும் தட்டில் கொட்ட, அடர் சிவப்பில் இருந்த கேக்கை பார்க்கவே பிடிக்கவில்லை. அது soft cakeஆக இல்லாமல் ஹார்டாகி விட்டது. எங்கே தப்பு என்பதும் புரியவில்லை. 

சுவாமிக்கு நிவேதனம் பண்ணி..எங்காத்தில் எல்லாமே முதலில் சுவாமிக்கு தான் அர்ப்பணம்! பாவம் அவர்தான் எதுவும் கமெண்ட் தரமாட்டார்!

..என்னம்மா ஸ்வீட் ரெடியா...என்றபடி வந்த என் பிள்ளை ஒரு கேக்கை ஆசையாக வாயில் போட்டவன்..என்னம்மா கேக் இது? செங்கல் கட்டி மாறி இருக்கே? டேஸ்ட் சரியில்லை.. என்றான். (அடராமா! அரைமணி நேரம் கிளறிப் பண்ணியிருக்கேன். செங்கல் கட்டியாமே🙄)

அடுத்து என் ஆத்துக்காரர்..எங்கம்மா நெல் உளுத்த மாவுனு என் சின்ன வயசுல பண்ணுவா. அதை துண்டமா போட்டிருக்கயா..(ஹ்ம்ம்..நெய்யைக் கொட்டி பண்ணினா நெல் உளுத்தமாவுனு கிண்டல்😏)

என் மாட்டுப்பெண் ஒரு துண்டை வாயில் போட்டவள்.. எங்க பாட்டி விரதநாள்ள ஒரு சத்துமாவு பண்ணித்

தருவா. அதே டேஸ்ட்மா. நீங்க ஸ்வீட் எக்ஸ்பர்டாச்சே. பரவால்ல. ஏதோ ஸ்வீட்னு சாப்பிடலாம்மா..(வஞ்சப் புகழ்ச்சியோ🤔)

ஆளுக்கொரு கமெண்ட் தர நான் ஒரு துண்டு வாயில் போட்டுப் பார்த்தேன்.அது கேக்குமில்ல..பர்ஃபியுமில்ல..மைசூர் பாகாவுமில்ல! 

எத்தனை நெய் சர்க்கரை போட்டு பண்ணியதை ஏதாவது பண்ணி எல்லாரையும் சாப்பிட வைக்கணுமே. யோசிச்சேன். எல்லா துண்டத்தையும் உடைத்து மிக்ஸியில் பொடி பண்ணினேன். 4ஸ்பூன் நெய்யில்  மிந்திரி பருப்பைத் போட்டு லாடுகளாகப் பிடித்தேன். வாயில் போட்டேன். டேஸ்ட் அருமை! 

தட்டில் வைத்திருந்ததை எடுத்து வாயில் போட்ட என் பிள்ளை..என்னம்மா தீபாவளி மாதிரி ஸ்வீட்ஸ் பண்ணிண்டிருக்க. இது சூப்பர். இது என்ன லாடு?..என்றான்.

..இது மைசூர் லாடு..என்று நான் சொன்னபோது வந்த என் மருமகள்.. அட இதுதான் அந்த மைசூர் கேக். அம்மா சாமர்த்தியம் பாருங்கோ. கேக் லாடுவா மாறியதும் சூப்பரா ஆயிடுத்தில்லையா..என்றாள். 

என் கணவர்..பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு..என்றவர் ஒன்றுக்கு இரண்டாக எடுத்துக் கொண்டார்!😀

எப்படியோ பண்ணியதை வீணாக்காமல் ஒரு புது ஸ்வீட் பண்ணின சந்தோஷம் எனக்கு😊.இந்த ஸ்வீட் நாலு நாளில் காலியாகிவிடும். அடுத்து என்ன ஸ்வீட் பண்ணுவது என்று யோசிக்க ஆரம்பித்தேன்!


No comments:

Post a Comment