Sunday 19 July 2020

சந்தோஷ தருணங்கள்..(30.6.2020)




மத்யமரில் குழுத்திறமை போட்டி...நாமும் செய்யலாம் என்று யோசித்தபோது எதிர்பாராத வேலைகளின் காரணமாக நேரமில்லாததால் விட்டுவிட்டேன்.

அச்சமயம் நான்கு நாட்கள் முன்பு சரோஜா அருணாசலம்Saroja Arunachalam சின்னஞ்சிறு கிளியே பாட்டுக்கு இரண்டு வரிகளுக்கு action செய்து வீடியோ அனுப்ப முடியுமா என்று கேட்க மகிழ்ச்சி தாங்கவில்லை எனக்கு. நானும் பங்கு கொள்ள கிடைத்த வாய்ப்பை எண்ணி double ok சொல்லிவிட்டேன்.

இரண்டு நாட்கள் அந்தப் பாட்டைப் போட்டு கேட்டு எனக்குப் பிடித்த வரிகளுக்கு எப்படி செய்யலாம் என்று யோசித்து (எனக்கும் நடனத்துக்கும் ரொம்ப தூ...ரம்!) ஏதோ அபிநயம் பிடித்து(!) ஒருவழியாக என் கணவரை வீடியோ எடுக்க சொல்லி அனுப்பிவிட்டேன். வீடியோ ரிலீஸ் ஆகும்வரை 'எப்படி வருமோ என்னவோ' என்று மனதில்  திக்திக்!

இன்று வீடியோவைப் பார்த்த
போது நான் செய்தது வேறு இரண்டு வரிகளுக்கான action என்றாலும் அது edit செய்யப்பட்ட வரிகளுக்கும் பொருத்தமாக இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது.

என் இரண்டு வீடியோக்களை இணைத்துள்ளேன்.

எந்த ஊரில் எந்த நாட்டில் இருந்தாலும் நம்மை இணைய வைக்கும் விஞ்ஞான முன்னேற்றம் நம்மால் எதுவும் எங்கிருந்தும் எவரோடும் செய்து சாதிக்க முடியும் என்பது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்.

அதை அடுத்து 'பிருந்தாவனமும் நந்தகுமாரனும்'  நடனமுஎன்ற இன்னொரு பாடலிலும் நான் இடம் பெற்றேன்.

இதற்கு காரணமான மத்யமர் குழுவுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன். உறுப்பினர்களுக்கு உற்சாகம் தந்து அவர்கள் திறமைகளை ஊக்குவித்து எங்கிருந்தாலும் ஏற்றம் பெற வைக்கும் மத்யமருக்கு ஒரு ஜே!

என்னையும் இந்த குழுத்திறமையில் இணைத்து என் திறமையை வெளிப்படுத்த காரணமான  தோழி சரோஜாவுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏🏼

இதில் பங்கு பெற்ற அனைத்து மத்யம தோழிகளுக்கும் வாழ்த்துக்கள்🌹







தந்தையர்_தினம்..20.6.2020


ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது.அதன்படி நாளை 21ம் தேதி தந்தையர் தினம். அப்பா என்றதுமே நம் மனம் நம்மையறியாமல் துள்ளுகிறதே!

உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையும் வேறுபகுதிகளில் பிற நாட்களிலும் இந்த தினம் கொண்டாடப்
படுகிறது.

அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் வில்லியம்ஸ் ஜாக்சன் ஸ்மார்ட் டோட் என்பவர் 1872 -ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ வீரராக இருந்தார். ஜாக்சன் ஸ்மார்ட்க்கும், அவர் மனைவி எல்லனுக்கும் பிறந்தவர் தான் சொனாரா ஸ்மார்ட் டோட்.

சொனாரா ஸ்மார்ட் டோட் 16 வயதாக இருக்கும் போது அவரது தாய் ஆறாவது பிரசவத்திற்கு பின் உயிர் இழந்தார். தன் மனைவி இறந்த பிறகு ஜாக்சன் ஸ்மார்ட் மறுமணத்தைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் தனது ஆறு குழந்தைகளையும் தனியாக வளர்த்தார். அவர்களின் எதிர்காலத்தை  மட்டுமே நோக்கமாகக் கொண்டு வாழ்ந்தார்.

அவரது இந்தத் தியாகச் செயல் அவரது மகள் சொனாரா ஸ்மார்ட்டை  வெகுவாக கவர்ந்தது.இந்நிலையில் 1909 ஆம் ஆண்டு சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.

இதையறிந்த சொனாரா ஸ்மார்ட் 'என் தந்தையின் தியாகம், அன்னையர்களின் தியாகத்திற்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை' எனக்கூறி தன் தந்தையின் பிறந்தநாளை தந்தையர் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என தேவாலயத்தில் வேண்டு
கோளிட்டார்.

இதற்கு அனுமதியும் கொடுக்கப் பட்டு, அவரது தந்தையின் பிறந்தநாளான ஜுன்5 தந்தையர் தினமாகக் கொண்டாடப் பட்டது.

பின்பு விடுமுறை நாளாக இருக்க வேண்டும் என்பதால் ஜூன் மூன்றாம் ஞாயிறன்று கொண்டாடப் படுகிறது. அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்சன் தந்தையர் தினத்தை அங்கீகரித்தார்.

தன்னலமின்றி தம் குழந்தைகளைச் சிறப்பாக வளர்க்கும் அனைத்து தந்தையரின் அன்புக்கும், பாசத்திற்கும், தியாகத்திற்கும் பரிசாக இந்த தந்தையர் தினம் விளங்குகிறது.

அனைத்து தந்தையர்க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்💐





Saturday 11 July 2020

அபரா ஏகாதசி..(17.6.2020)


விரதங்களிலே சிறப்பு வாய்ந்து ஏகாதசி விரதம் என்று பெருமாளே கூறுவதாக புராணங்கள் கூறுகின்றன. அதன்படி ஏகாதசி அன்று முழு உபவாசம் இருந்து பால்,பழம்,கிழங்கு மட்டும் சாப்பிடலாம்.மறுநாள் துவாதசி அன்று  துளசி தீர்த்தம் அருந்தியபின் உணவு சாப்பிடலாம். இன்று ,அபரா ஏகாதசி' எனப்படுகிறது.

ஏகாதசி விரதம் பித்ரு சாபத்தை போக்குவதாகவும், இதனால் வைகுண்டத்தை அடையலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த விரதத்தின் மூலம் விஷ்ணுவின் அருள் கிடைப்பதோடு வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது ஐதீகம்.

அபரா ஏகாதசிக்கான கதையைக் காண்போம். அம்பரிஷன் என்னும் மன்னன் விஷ்ணுவின் மீது அதீத பக்தி உள்ளவன். ஒரு வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணுவின் அருளைப் பெற்றான்.

ஒருமுறை மன்னன் ஏகாதசி விரதம் இருந்து அதை முடிக்கும் வேளையில் துர்வாச முனிவர் அங்கு வந்தார். மன்னன் அவரை வரவேற்று உணவு உண்ண வரும்படி அழைத்தார். முனிவர் ஆற்றில் நீராடி விட்டு வருவதாக கூறிச் சென்றார்.

வெகு நேரமாகியும் முனிவர் வரவில்லை. விரதம் முடிவதற்குள் மன்னன் சாப்பிடவில்லை என்றால் விரத பங்கம் ஏற்பட்டுவிடும் என்பதால் துளசி தீர்த்தத்தை அருந்தி உபவாசத்தை முடித்துக்கொண்டார்.

பசியுடன் வந்த துர்வாசர் தன்னை விட்டு விரதத்தை முடித்த மன்னர் மேல் கடும் கோபம் கொண்டார். தனது சிகையில் இருந்து ஒரு முடியை பிடுங்கி அதை அம்பரிஷனை கொல்வதற்கு ஏவ, அது பூதமாக மாறி மன்னனை துரத்தியது.

மன்னன் விஷ்ணுவை பிரார்த்தனை செய்தான். உடனே விஷ்ணுவின் சக்கராயுதம் துர்வாசரை துரத்தியது.

இதனால் துர்வாசர் மும்மூர்த்திகளிடம் முறையிட, அவர்களோ 'நாங்கள் எதுவும் செய்ய முடியாது.
நீ அம்பரிஷனிடமே போய் மன்னிப்பு கேள்' என்று கூறினர். முடிவில் துர்வாசர் மன்னனிடமே சென்று மன்னிப்பு கேட்டார்.

மன்னனும் சக்கரத்தாழ்வாரை பூஜித்து துர்வாச முனிவரை காப்பாற்றினான். துர்வாசர் மன்னனுக்கு நன்றி கூறி ஆசி வழங்கினார். இதுவே அபரா ஏகாதசிக்கான கதை.

ஸ்ரீ கிருஷ்ணர் அர்ச்சுனனிடம், 'ஆனி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை அபரா ஏகாதசி என்று அழைப்பர். இந்த ஏகாதசி விரதம் அனைத்து பாவங்களையும் அழிப்பதுடன், அளவில்லா (அபரா) செல்வத்தையும் வழங்கக் கூடியது.  இவ்விரதத்தை கடைப்பிடிப்பவர் மக்களிடத்தில் பேரும், புகழும் பெறுவர்.

'மேலும் பிரம்ம ஹத்தி தோஷம், பைசாசப் பிறவி, பிறரை நிந்திப்பது, குரு நிந்தனை, பொய் சாட்சி, பொய் பேசுதல், போலி சாஸ்திரங்களை உருவாக்குதல், ஜோதிட சாஸ்திரம் மூலம் பிறரை ஏமாற்றுதல், போலி வைத்தியனாக தொழில் செய்து மக்களை ஏமாற்றுதல் போன்ற பாப கர்மங்களினால் விளையும் பாபங்களும் இந்த ஏகாதசி விரதத்தின் மகிமையால் நீங்கப் பெறுகிறது.

'மூன்று புஷ்கரங்களிலும் நீராடுதல், கார்த்திகை மாதத்தில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல், கங்கை நதி தீரத்தில் பித்ருக்களுக்கு பிண்டதானம் செய்தல் இவற்றால் கிடைக்கப் பெறும் புண்ணியத்தை, அபரா ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக அனுஷ்டிப்பதன் மூலம் ஒருவர் பெறலாம்.

'கஜ தானம், அஸ்வம் தானம், யக்ஞத்தில் ஸ்வர்ண தானம் இவற்றால் கிட்டும் புண்ணியபலனுக்கு இணையான புண்ணிய பலனை அபரா ஏகாதசி விரதத்தின் மூலம் பெறலாம்.

அபரா என்றால் அபாரமான அதாவது அபரிமிதம் என்று அர்த்தம். எவர் ஒருவர் இவ்விரதத்தை விதிப்பூர்வமாக அனுஷ்டிக்கிறாரோ, அவர்  மஹாவிஷ்ணுவின் அபரிமித கருணைக்கு பாத்திரமாவதுடன்,பக்தி மற்றும் சிரத்தையில் வளர்ச்சியையும் காண்பர்' என்றுரைத்தார்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் திருவாயால் அருளப்பட்ட இந்த அபரா ஏகாதசியை அநுஷ்டித்து நாமும் நற்பலன்களைப் பெற்று வைகுண்ட பதியின் பாதங்களைச் சரணடைவோம்🙏🏼

இன்றைய நிவேதனம்..திரட்டுப்பால், பயத்தம்பருப்பு பாயசம்




Friday 10 July 2020

தனித்திறமைகள்..(15.6.2020)

ஹைதராபாதில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பேரன் க்ஷிதீஜிடமிருந்து ஃபோன்கால். எப்பொழுதும் எல்லா விஷயங்களையும் என்னிடம் பகிர்ந்து கொள்ளும் செல்லப் பேரன்!

...ஹை பாட்டி எப்டி இருக்க? தாத்தா நன்னாருக்காளா?...

..ஓ..சூப்பரா இருக்கோம். நீங்கள்ளாம் எப்படி இருக்கேள்?

...All are fine patti...

...ஃபுட்பால் விளையாட்றயா? Regular practice உண்டா? Online classes ஆரம்பிச்சாச்சா? வேற எப்படி பொழுது போற்து?..

...எல்லாம் நடக்கற்து பாட்டி. அங்க வந்து இருக்க முடியலயேனு ரொம்ப sad நான். போர் அடிக்கற்து. நான்  ஒரு film songக்கு choreograph பண்ணிருக்கேன் பாட்டி‌. அந்த வீடியோ உனக்கு அனுப்பிருக்கேன். பார்த்து எப்படி இருக்குனு சொல்லு...

...நீதான் சூப்பர் dancer ஆச்சே. யார் ஆட்றா?...

...அது suspence பாட்டி. நீயே பாரு...

...சரிடா கண்ணு! பார்த்துட்டு சொல்றேன்...

நான் வீடியோ பார்த்து ரசித்து அதை நீங்களும் பார்த்து மகிழ இணைத்துள்ளேன்! பார்த்து கமெண்ட் பண்ணுங்கோ ஃப்ரண்ட்ஸ்!



#Sunday_topic #தனித்திறமைகள்..(12.6.2020)


என் பேத்தி ஸாய்லி  நான்காம் வகுப்பு படிக்கிறாள்.

கையினால் சிறு  பொம்மைகள்,
பறவைகள்,பூக்கள் மிக அழகாகச் செய்வாள். பள்ளியில் பரிசுகளும் பெற்றிருக்கிறாள்.

தற்சமயம் கொரோனா விடுமுறை நாளில் அவள் செய்த Doll 🏠. அதைப் பற்றிய விளக்கமும் அவளே சொல்கிறாள்.
பார்த்து ரசித்து அவளை வாழ்த்துங்கள்!



Thursday 9 July 2020

#Sunday_special #அன்புள்ள..(6.6.2020)






6.6.2020
அன்புள்ள அம்மா
அநேக நமஸ்காரம். நலம்.நலமறிய அவா. இங்கு நான் உன் மாப்பிள்ளை பேரன் பேத்திகள் கொள்ளு பேரன் பேத்திகள் எல்லாரும் நலம்.நீ எப்படி இருக்கிறாய்?

ஏன்மா..அப்பாவை விட்டு எந்த இடமும் போகாத நீ சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டாயே? பாவம்..அப்பா நீயில்லாமல் எட்டு வருடம் ரொம்பவே கஷ்டப்பட்டார். அப்பா வந்ததும் இப்போ சந்தோஷமாக இருப்பாயே!

நான் கடந்த 14 வருடமாக உன்னிடம் நேரில் பேச முடியாத விஷயங்களை இந்த கடிதத்தில் எழுதி அனுப்புகிறேன். நான் குழந்தையாய் இருந்தபோது சாப்பிட ரொம்ப படுத்துவேன் என்பாயே? உன் வேலையெல்லாம் விட்டு எனக்கு சாதம் ஊட்டுவதற்குள் எவ்வளவு கஷ்டப்பட்டாயோ?

இரவில் உன் புடவையைப் பிடித்துக் கொண்டு தூங்கும்போது தூக்கம் வராமல் அந்தப் புடவையை வாயில் கடித்து கிழித்து விடுவேன் என்று சொல்லியிருக்கிறாய். உனக்கு ரொம்பப் பிடித்து வாங்கிக் கொண்ட பட்டுப் புடவையை நான் கிழித்தபோது ரொம்ப வருத்தப் பட்டாய் என்று சித்தி சொன்னார். நான் எவ்வளவு கஷ்டப் படுத்திருக்கேன் உன்னை.

நிற்க..எனக்கு வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்தையும் காரணத்தோடு சொல்லிக் கொடுத்த நீ இப்படி கடிதம் எழுதும்போது 'நிற்க' என்று போடுவது ஏன் என்று சொல்லவில்லையே! முன்பெல்லாம் இப்படி எழுதும்போது 'நிற்க என்றால் எழுந்து நின்று படிக்கணுமா'என்று நான் கேட்பேன்! அது கடிதம் எழுதும் முறை என்பாய்!

உன் ஒவ்வொரு கடிதமும் பல கதை சொல்லும்...
நீ கண்ணெதிரில் நின்று பேசுவது போலிருக்கும்...
மணிமணியான எழுத்துக்கள் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போன்றிருக்கும்...
சிலமுறை 4,5 பேப்பர்களில் எழுதி கவரில் வைத்து ஒட்டி அனுப்புவாய். அதிலுள்ள விஷயங்களைப் படிக்கும்போது நான் நம் வீட்டுக்கு வந்துவிட்டாற்போல உயிரோட்டமாக இருக்கும்.

உன் மனவருத்தங்களைக் கோடிட்டுக் காட்டி எழுதும் நீ 'இதற்காக கவலைப் படாதே. புக்ககத்தில் நல்ல பெயர் வாங்கு. பொறுப்போடு இரு'என்று எத்தனை அறிவுரை சொல்லியிருக்கிறாய். இன்றுவரை அதையெல்லாம் நான் கடைப்பிடிக்கிறேன் அம்மா.

என் நான்கு குழந்தைகள் பிரசவத்திற்கு நம் வீட்டுக்கு வரும்போது எப்படி என்னைப் பார்த்துக் கொள்வாய்...
அப்பா தம்பிகளுக்கும் செய்து கொண்டு எனக்கு பத்தியம், கைக்குழந்தை வேலைகளை சற்றும் சலிக்காமல் முகம் சுளிக்காமல் செய்த நீ தெய்வம்மா. ஒவ்வொரு முறை நான் அங்கு வரும்போதும் நீ அடைந்த சந்தோஷம்..
 நான் கிளம்பும்போது வெடித்து அழுகையாய் வெளிவரும்.. நான்தான் கல் நெஞ்சுக்காரி..
எனக்கு அழுகையே வந்ததில்லை.. இப்போது உன்னை நினைக்கும்போதே கண்ணீர் பெருகுகிறது...
உன்னிடம் எவ்வளவோ பேச மனம் துடிக்கிறது..
நீ என்னருகில் இல்லையே.

உனக்கு இதயநோய் வந்து சென்னை ராமச்சந்திரா மருத்துவ மனையில் இருந்தபோது எனக்கு உன்னைப் பார்க்க வரக்கூட முடியாதபடி குடும்பப் பொறுப்புகள். நீ பழையபடி சரியாக வேண்டி அத்தனை தெய்வங்களிடமும் வேண்டிக் கொண்டேன். நல்லவேளை நீ உடம்பு நலமாகி வந்தவுடன் உன்னைப் பார்க்க வந்தேன். அப்பவும் நீ 'உன் குழந்தைகள், கணவர் கஷ்டப்படப் போகிறார்கள். சீக்கிரம் திரும்பப் போ' என்றாய்.

உன் பேத்தி கல்யாணத்திற்கு வருவதற்கு டாக்டர் எந்த அதிர்வும் இதயத்திற்கு தரக்கூடாது, எந்நேரமும் மாரடைப்பு வரலாம் என்று எச்சரித்தும் நீ அவள் திருமணத்திற்கு போயே தீருவேன் என்று தைரியமாகக் கிளம்பி வந்தாயே. நீ நல்லபடி இருக்கணுமே என்று எங்கள் இதயமெல்லாம் 'திக் திக்' என்று இருந்தது. எவ்வளவு சந்தோஷமாக ஒவ்வொன்றையும் அனுபவித்து மகிழ்ந்தாய்.

உன் செல்லப் பேரனுக்கு நீதான் பெண் பார்த்து முடிவு செய்தாய். 'என் பேரன் ரொம்ப நல்ல பையன். ரொம்ப புத்திசாலி. உன்னை நன்றாக வைத்துக் கொள்வான்' என்று நீ சொன்னதை அவள் இன்னமும் சொல்வாள்.

அவன் திருமணத்தைப் பார்க்கா விட்டாலும் நிச்சயதார்த்தத்தில் அவர்களை மாலையும் கழுத்துமாகப் பார்த்து சந்தோஷப் பட்டாயே. அது முடிந்த ஒரே மாதத்தில் நீ மறைந்தது எங்களால் தாங்க முடியவில்லை.

கொள்ளுப் பேரன் பேத்திகள் பிறக்கப் போவதை அறிந்த நீ அவர்கள் பிறக்கும்போது இல்லை.நீ மறைந்த பதினைந்தாம் நாள் உன் முதல் பேரனுக்கு பெண் பிறந்தாள். நீதான் அவனுக்கு பெண்ணாக வந்து பிறந்தாயோ?

பாட்டு கோலம் தையல் சமையல் ஓவியம் எழுத்து எல்லாவற்றிலும் உன்னைப் போலவே என்னையும் உருவாக்கினாய். சமைக்கும்போது கூட 'பளிச்'சென்று இருப்பாயே! நீ புடவை கட்டுவதும் தலைவாரி பொட்டு இட்டுக் கொள்வதும் கூட அழகுதான்! நான் உன் அளவு perfect இல்லை அம்மா!

என்னுடைய சின்ன துணுக்கு எந்த புத்தகத்தில் வந்தாலும் அதுபற்றி உடன் ஃபோன் செய்து பாராட்டுவாயே. இப்பொழுது ஃபேஸ்புக்கில் மத்யமர்னு ஒரு தளத்தில் நம் மனதின் எண்ணங்களைத் தொகுத்து எழுதலாம். அதில் இப்பவும் நிறைய எழுதுகிறேன். படித்து பாராட்ட நீயில்லையே அம்மா.

புட்டபர்த்தி சென்று மூன்று நாள் தங்க வேண்டும், சுவாமியை ஒவ்வொரு நேரமும் கண்குளிர தரிசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாய். அப்பா கவலையுடன் வேண்டாம் என்றபோதும் பிடிவாதமாக போக வேண்டும் என்றதால் நான் உங்களை அழைத்துச் சென்றேன்.

நீ ஆசைப் பட்டது போல் அற்புத தரிசனம்.  சுப்ரபாதம் நகர்பஜன் எல்லாவற்றுக்கும் நீயும் வந்தாயே.  உன் ஆசையை நான் நிறைவேற்றினேன் என்று சந்தோஷப்பட்டாயே..அதுதான் உன் கடைசி பயணம் என்று தெரியாமல் போயிற்றே.

மே 8ம் தேதி உனக்கு ஃபோனில் Mother's dayக்கு wish பண்ணிய போது உன்னால் பேச
முடியவில்லை. அப்படியும் என் பிள்ளை கல்யாணம் பற்றி பேசினாய். 'இன்னும் நாலு மாசம் இருக்கே கல்யாணத்திற்கு.நான் இருப்பேனோ மாட்டேனோ' என்றாய். அடுத்த ஒரே வாரத்தில் நீ எங்களை விட்டுப் போய்விடுவாய் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே அம்மா.

நீ மறைந்ததற்கு முதல்நாள் நான் உன்னிடம் பேச ஃபோன் செய்தபோது நீ தூங்கிக் கொண்டிருப்பதாய் சொன்னார்கள்.

மறுநாள் ஆஸ்பத்திரிக்கு போய் அட்மிட் செய்ய வீல்சேரில் அழைத்துப் போகும்போதே உன் தலை சாய்ந்து விட்டது என்று கேட்டு கலங்கி விட்டேன். நான் வந்தபோது கண்ணாடிப் பெட்டிக்குள் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த உன்னைப் பார்த்து கதறி விட்டேன்.

இன்னொரு பிறவி இருந்தால் அதில் நான் உன்னை சிறப்பாகக் கவனித்துக் கொண்டு நீ எனக்கு செய்தவற்றைத் திருப்பிச் செய்ய வேண்டும் என்பதே இறைவனிடம் என் வேண்டுதல்.
எப்பொழுதும் உன்
நினைவில் உன் அன்பு மகள்
ராதா

வெற்றிகள் தரும் வைகாசி விசாகம்..(4.6.2020)





இன்று முருகனின் வழிபாட்டுக்குரிய வைகாசி விசாகத் திருநாள். விசாக நட்சத்திரம் ஞானத்திற்குரிய  குருபகவானின் ஆதிக்கத்தில் வரும் நட்சத்திரம். இந்த ஆண்டு குருவருள் நிறைந்த வியாழக்
கிழமையில் வருவது சிறப்பு.

ஒருமுறை அசுரர்களின் கொடுமைகளை தாங்க முடியாத தேவர்கள், சிவபெருமானிடம் சென்று முறையிட, சிவபெருமான், அசுரர்களுடைய கொடுமையை களைந்து தேவர்களை காத்தருள விரும்பினார். அதன்படி தமது நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார்.

அவை தேவர்களால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கையானது, அந்த பொறிகளை சரவணப் பொய்கையிலே கொண்டுபோய் சேர்த்தது.

சரவணப்பொய்கையில் சேர்ந்த ஆறு தீப்பொறிகளும், ஆறு குழந்தைகளாக உருப்பெற்றன. இதுவே ஆறுமுகப் பெருமான் அவதரித்த தினமாக கருதப்படுகிறது. அது ஒரு வைகாசி மாதம் விசாகம் நட்சத்திர தினமாகும். எனவே தான் வைகாசி விசாகத்தில் முருகனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது.

உலகத்து உயிர்கள் யாவும் உய்யும் பொருட்டு முருகன், சிவபெரு
மானின் திருவிளையாடலால் குழந்தையான நாள். இந்நன்னாளில் முருகப்
பெருமானை விரதம் இருந்து வழிபட்டால், வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும். ஞானமும், கல்வியும் பெருகும். பகை விலகும். பாசம் பெருகும். எதிர்ப்புகள் அகலும். அன்றைய தினம் குடை, மோர், பானகம், தயிர்சாதம் போன்றவற்றை தானம் செய்தால், குலம் தழைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு.

அன்றைய தினம்  விநாயகப்
பெருமானை வழிபட்டு, வீட்டின் பூஜை அறையில் முருகப்பெருமான் படம்
வைத்து அதற்கு முன்னால்
ஐந்து முக விளக்கு ஏற்றி வைத்து, ஐந்துவித புஷ்பம் சமர்ப்பித்து, ஐந்து வகை பழங்களை அர்ப்பணித்து, கந்தனுக்கு பிடித்த அப்பமான கந்தரப்பத்தை நிவேதித்து கந்த சஷ்டி கவச பாராயணம் செய்ய வேண்டும்.

இந்த நன்னாளில் முருகப் பெருமானை நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்து வழிபட்டால் நல்லன யாவும் நடை பெறும்.
பசும் பால் அபிஷேகம்  ஆயுள் கூட்டும். பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்தால், பட்ட கடன்கள் தீரும். பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டால், கையில் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் கைகூடும்.

சர்க்கரையால் அபிஷேகம் செய்தால், சந்தித்தவர்கள் எல்லாம் நண்பர்களாக மாறுவர். இளநீரால் அபிஷேகம் இனிய சந்ததிகளைத் தரும்.  எலுமிச்சம் பழத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால், எம பயம் நீங்கும். மாம்பழத்தில் அபிஷேகம் செய்து பார்த்தால், மகிழ்ச்சியும் செல்வமும் கூடும்.திருநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால், திக்கட்டும் புகழ் கிட்டும்.

சந்தன அபிஷேகம்  சரும நோய்களைத்  தீர்க்கும். பன்னீரால் அபிஷேகம் செய்து பார்த்தால், பார்போற்றும் செல்வாக்கு நமக்கு சேரும். தேன் அபிஷேகம் செய்து பார்த்தால், தித்திக்கும் சங்கீதம் விருத்தி யாகும்.

வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் மழலைப்பாக்கியம் கிடைக்கும். மொத்தத்தில் வேண்டியதைப் பெற இந்நாள் மிகச் சிறப்பானதாகும்.

இன்று ஆலயங்கள் செல்ல முடியாத நிலையில் வீட்டிலேயே விரதம் இருந்து வழிபட்டு உமையவளின் அழகு மகனிடம் இறையருளை வேண்டுவோம்.

#Sunday_special #அன்புள்ள....(3.6.2020)

இது என் அருமைப் பேத்தி ப்ரீத்திக்கு எழுதிய அஞ்சல்! எட்டாம் வகுப்பு படிக்கும் அவளுக்கு கடிதம் எழுதுவது என்னவென்றே தெரியாது! இன்றுதான் உலகமே உள்ளங்கையில் ஆயிற்றே!
அவள் இது பற்றி அறியவே இந்த கடிதம்!

அவளுக்கு நான் வைத்த செல்லப் பெயர் 'பொம்மி'. என் சின்னப் பேத்தி ப்ரியங்கா எனக்கு 'பொம்மை'. ப்ரீத்தி குழந்தையாய் இருந்தபோது அவளுக்கு பாட்டி என்று சொல்ல வராமல் 'பட்டா' என்பாள்! அதேபோலதான் இன்றும் கூப்பிடுவாள்!

அன்புள்ள பொம்மி
பட்டா அநேக ஆசிகள். நீ எப்படி இருக்க? பொம்மைகுட்டி எப்படி இருக்கு? சமத்தா படிக்கறேளா? பாடமெல்லாம் ஸ்கூல்லருந்து வீடியோல வரதா? புரியற்தா?

அம்மா அப்பா நன்னா இருக்காளா? அப்பா அடிக்கடி டூர் போயிட்றாம்பியே..இப்போ அப்பாவோட நன்னா என்ஜாய் பண்றேளா? கொரோனாவால கிடைச்ச சான்ஸ்தான இது? உன் ஃப்ரெண்ட்ஸ்லாம் எப்டி இருக்கா?
பொம்மையோட சண்டை போடாம விளையாட்றயா?

எனக்கு உங்களை பார்க்க ஆசையா இருக்கு. ஆனால் அங்க வரமுடியாம இப்படி கொரோனா வந்துடுத்தே. நீங்களும் இங்க வர முடியல. நீங்கள்ளாம் ஒவ்வொரு வருஷமும் வந்து நாமெல்லாம் ஆட்டம் பாட்டம்னு  ஜாலியா இருந்ததை நினைச்சிண்
டிருக்கோம் நானும் தாத்தாவும்.

நீயும் க்ஷிதீஜும் வந்து எப்படியெல்லாம் விளையாடிண்டிருந்தேள். தினமும் சாயந்திரம் தாத்தா விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லித் தருவாளே!

நாமெல்லாரும் மலைக்கோட்டை போனது நினைவிருக்கா? 'இவ்வளவு பெரிய மலைல ஏறணுமா'னு சொன்ன நீ வேகவேகமா ஏறி முதல்ல போயிட்டயே. நீங்க ரெண்டு பேரும் அடிக்கடி சண்டை போட்டாலும் கொஞ்ச நேரத்தில மறந்து ஒண்ணா விளையாட ஆரம்பிச்சுடுவேள் இல்லையா?

நானும் தாத்தாவும் ஏப்ரல் ஆரம்பத்துல வந்து உங்களோடு இருந்துட்டு 14ந்தேதி லீவ் விட்டதும் உங்களை அழைச்சிண்டு திருச்சி வருவோமே. ஒரு தடவை நாம நாலு பேரும் ட்ரெயின்ல First classல வந்தது ஞாபகமிருக்கா? அப்பதான நீங்க முதல் தடவையா ரயில்ல வந்தது.  ப்ரியங்காக்கு குஷி தாங்காம டேன்ஸ்லாம் ஆடிண்டு வந்தாளே!  மேல ஏறி இறங்கினு என்ன பாடு படுத்தினா இல்லையா?அதல்லாம் நினைச்சுண்டு உங்களைப் பார்க்க ஆசையா காத்துண்டிருக்கோம் நாங்க!

தினமும் ஸுப் ஐஸ்க்ரீம் நுங்குனு விதவிதமா சாப்டுண்டு ஜாலியா இருக்குமில்லையா? இனி அடுத்த லீவுக்குதான் வரலாம்.

வீடியோல ஸ்கூல் பாடமெல்லாம் புரியற்தா?  Veterinary doctor ஆகணும்னு சொன்னியே.. அது சம்பந்தமான விஷயம்லாம் தெரிஞ்சுக்கோ. Blue cross trainingலாம் இப்போ கிடையாதில்லையா? அதல்லாம் இப்போ ரொம்ப miss பண்ணுவயே.

பொம்மைக்குட்டியோட சண்டை போடாத. அது உன்னை விட ஆறு வயசு சின்னக் குழந்தை. (எல்லாரும் அதை குழந்தைனு சொல்லியே ஏத்தி விடுங்கோனு நீ சொல்றது என் காதில விழற்து!) அவ புரியாம அப்பப்ப சண்டை போட்டா நீ கொஞ்சம் விட்டுக் கொடுத்து போ.எனக்கு கூடப் பிறந்த அக்கா தங்கை இல்லாதது எவ்வளவு வருத்தம் தெரியுமா?

வேலைக்காரம்மா வராததால அம்மாக்கு நிறைய வேலை இருக்குமே. நீ இப்பல்லாம் அம்மாக்கு துணி உலர்த்தி, வீடு பெருக்கியல்லாம் help பண்றேனு ஃபோன்ல சொன்னியே..எனக்கு சந்தோஷமா இருந்தது. எப்பவும் அப்படி இருக்கணும்..ஓ.கேயா?

தினமும் ஸ்லோகமெல்லாம் சொல்றேளா? Godதான் நம்ம கஷ்டமெல்லாம் போக்கணும்னு வேண்டிக்கோ. நேரம் கிடைக்கும்போது மொபைல்ல பேசு.

இந்த லெட்டர் எதுக்கு நான் எழுதிருக்கேன்னு யோசிக்கறயா? நான் Face bookல மத்யமர்னு ஒரு க்ரூப்ல மெம்பர். உங்களுக்
கல்லாம் ஸ்கூல்ல தர மாதிரி எங்களுக்கு ஒவ்வொரு weekendலயும் ஒரு homework  தருவா.அதுல இந்த வார topicதான் Letter writing!

உனக்கு லெட்டர் எழுதணும்னு தோணினதால எழுதிருக்கேன். பொறுமையா படிச்சு புரிஞ்சுக்கோ.

முன்னல்லாம் இப்போ மாதிரி மொபைல் கம்ப்யூட்டர் email ,phoneலாம் கிடையாது. நினைச்சா பேச முடியாது. எந்த விஷயமானாலும் லெட்டர்லதான் எழுதுவோம்.

நான் எங்கம்மாக்கு ஏன்..உன் அப்பா, அத்தைக்கல்லாம்
கூட இப்டிதான் லெட்டர் எழுதுவேன். கொஞ்சமா எழுத போஸ்ட் கார்ட், நிறைய விஷயம் எழுத Inland cover, Full cover, Envelopeனல்லாம் உண்டு. இப்படி எழுதும்போது எங்களுக்கல்லாம் அவாளோட நேர பேசற மாதிரி happyயா இருக்கும். நான் இதை வாட்ஸப்ல அனுப்பிருக்கேன். படிச்சு நீ எப்படி enjoy பண்ணினேனு சொல்லு. Okயா!

சரிடா செல்லம்! அம்மா அப்பாவுக்கு என் wishes சொல்லு. உனக்கும்,பொம்மைக்கும் என் Lovely kisses! Bye!
உன்னைப் பார்க்க ஆசையோடு காத்திருக்கும்...
பட்டா








மோகினி ஏகாதசி (2.6.2020)


விரதங்கள் எதற்காக இருக்கிறோம்? நம் ஆரோக்யமான வாழ்விற்கு அவ்வப்போது விரதம் இருக்க வேண்டியது அத்யாவசியமானது.

தினமும் தூங்கி எழுவதும், அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஓய்வு எடுப்பதும், நம் வெளி உறுப்புகளுக்கு தரும் ஓய்வாகவே கருதப்படுகிறது.

ஆனால் நாம் சாப்பிட்டதை ஜீனணித்து கழிவுகளை நீக்கி நமக்கு ஆரோக்கியம் தரும் உள் உறுப்புகளுக்கு நாம் ஓய்வே கொடுப்பதில்லை. இதைப்பற்றி நாம் சிந்திப்பதும் இல்லை.

நம் உள் உறுப்புகளுக்கு அவ்வப்போது ஓய்வளிப்பதோடு, அத்துடன் ஆன்மிகத்தையும் கலந்து, நம் மனதையும் சாந்தப்படுத்தும் வழிமுறையை, விரதங்கள் மூலம் நம் முன்னோர்கள் நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள். அத்தகைய விரதங்களில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது ஏகாதசி விரதம்.

வைகாசி மாதத்தில்  வளர்பிறை காலத்தில் வரும் ஏகாதசி   'மோகினி ஏகாதசி' எனப்படுகிறது. விஷ்ணு பகவான் வைகாசி மாத வளர்பிறை ஏகாதசியின்போதுதான் மோகினி அவதாரம் எடுத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. அதனால்தான் இதற்கு `மோகினி ஏகாதசி' என்ற பெயர் வந்தது.

சீதைப் பிராட்டியைப் பிரிந்து வாடிய ராமச்சந்திரமூர்த்தி, தன் துன்பம் தீர்க்கும் வழியைத் தனக்கு உபதேசம் செய்யுமாறு, வசிஷ்ட முனிவரிடம் கேட்டார். பரம்பொருளான ராமரின் திருவுளம் அறிந்துகொண்டார் வசிஷ்டர். இந்த உலகிற்கு மோகினி ஏகாதசியின் சிறப்பை உணர்த்தவே, ராமபிரான் இவ்வாறு கேட்பதை உணர்ந்த வசிஷ்டர், குருவின் ஸ்தானத்தில் இருந்து ராமருக்கு மோகினி ஏகாதசியின் மகிமையை எடுத்துச் சொல்லி ராமபிரானை ஏகாதசி விரதம் அநுஷ்டிக்க உபதேசித்தார்.

கிருஷ்ணாவதாரத்தில், இந்த நிகழ்வினை தர்ம புத்திரருக்கு எடுத்துக்கூறும் பகவான் கிருஷ்ணர், மோகினி ஏகாதசியின் மகிமைகளையும் எடுத்துரைத்தார்.

முன்னொரு காலத்தில், சரஸ்வதி நதிக் கரையில் பத்ராவதி எனும் நகரத்தை `த்யுதிமன்' என்பவன் ஆண்டு வந்தான். அவனுடைய அரசில் தனபாலன் என்ற வணிகன் ஒருவன் இருந்தான். தனபாலன் சிறந்த திருமால் பக்தன். அவனுக்கு ஐந்து மகன்கள் இருந்தனர். அவர்களுள் இளையவனான `திரிஷ்தபுத்தி' மிகவும் கீழ்த்தரமான செய்கைகளைக் கொண்டவன். திருடனாகவும், பெரியவர்களை மதிக்காமல், கடவுள்களை நிந்திப்பவனாகவும் இருந்தான்.

அவனது தீய நடவடிக்கைகளைப் பொறுக்க முடியாத தனபாலன், அவனை வீட்டை விட்டு வெளியேற்றினான். திரிஷ்தபுத்தி ஒரு திருடனாக மாறி
கொள்ளையடிப்பதில் ஈடுபட்டு, காவலர்களால் பிடிபட்டு, பல முறை தண்டிக்கப்பட்டான். கடைசியில் அவன் நாடு கடத்தப்
பட்டான். காட்டில் வாழ்ந்தபோது அவன் நோய்வாய்ப்பட்டு, அன்றாட வாழ்க்கையை வாழவே சிரமப்பட்டான்.

ஒவ்வொரு நாளையும் நரகமாகக் கழித்துக் கொண்டிருந்தவன், ஒருநாள் காட்டில் கௌண்டின்ய முனிவரின் குடிலைக் கண்டான். முனிவர் கங்கையில் நீராடிவிட்டு குடிலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவருடைய ஈர ஆடையிலிருந்து சிதறிய நீர்த்துளிகள் சில திரிஷ்தபுத்தியின் மேல் விழுந்தன.

உடனே, அவன் மனதில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. அவன், தான் செய்த தவறுகள் அனைத்துக்கும் பிராயச்சித்தம் தேட நினைத்து முனிவர் காலடியில் விழுந்தான்.

திரிஷ்தபுத்தியின் கதையைக் கேட்ட முனிவர், `பாவங்கள் செய்யப் பல வழிகள் இருப்பதுபோல, அவற்றிலிருந்து விடுதலை பெறவும் பல வழிகள் இருக்கின்றன. அவற்றுள் தலைசிறந்தது மோகினி ஏகாதசி விரதம். அன்றைய நாளில் விரதமிருந்து மனம், மொழி, மெய் ஆகியவற்றால் பெருமாளை வழிபாடு செய்தால் உனக்கு, உன் பாவங்களில் இருந்து விடுதலை கிடைக்கும்' என்றார்.

திரிஷ்தபுத்தியும் தன் உயிர் பிரியும் நாள்வரை, ஒவ்வொரு வருடமும் மோகினி ஏகாதசி நாளில் முனிவர் சொன்ன வண்ணமே விரதம் இருந்தான். இறுதியில் ஆயுள் முடியும்போது பாவங்கள் அனைத்தும் நீங்கி கருட வாகனமேறி, வைகுண்ட பதம் அடைந்தான். மோகினி ஏகாதசியின் பெருமையை உணர்த்தும் இந்தக் கதை  ஏகாதசி மகாத்மியத்தில் உள்ளது.

பொதுவாகவே, ஏகாதசி விரதம் பல புண்ணிய பலன்களை அருள வல்லது. பாவங்கள் போக்கி, நல்லருள் தருவது. அதிலும் மோகினி ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பகவான் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து, தேவர்களுக்கு அமிர்தம் வழங்கியதுபோல், இந்த விரதத்தை மேற்கொள்ளும் அனைவருக்கும் இறைவன் நன்மையை வாரிவழங்குவார் என்பது ஐதிகம்.

கருத்துவேறுபாடு  காரணமாகப் பிரிந்து வாழும் கணவன், மனைவி இந்த விரதத்தை  அனுஷ்டித்தால், கருத்துவேறுபாடு நீங்கி, சேர்ந்து வாழ்வார்கள் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.

இந்நாளில் காலை முதல் மாலை வரை விரதம் இருந்து, அன்றைய நாள் முழுவதும் பெருமாளுக்குரிய மந்திரங்கள்,  விஷ்ணு புராணம், விஷ்ணு சகஸ்கர நாமம் போன்றவற்றை பாராயணம் செய்வது நல்லது. மாலை பெருமாள் கோயிலுக்கு சென்று  வழிபட்ட பின்பு வீட்டிற்கு திரும்பி பால், பழம் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

 இந்த மோகினி ஏகாதசியில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுபவர்கள் நீண்ட நாட்களாக வாட்டி வதைக்கும்  நோய்களிலிருந்து விடுபடுவார்கள். உடல் சோர்வு நீங்கும்.

இவ்விரதம் இருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகப்படியான உதிரப் போக்கு ஏற்படும் நிலை தீரும். உடலில் ரத்த சோகை ஏற்பட்டு இருப்பவர்
களுக்கு அக்குறைபாடு நீங்கும். பெருமாளின் அருளால் சிறப்பான வெற்றிகளை பெறும்.

கருத்துவேறுபாடு  காரணமாகப் பிரிந்து வாழும் கணவன், மனைவி இந்த விரதத்தை  அனுஷ்டித்தால், கருத்துவேறுபாடு நீங்கி, சேர்ந்து வாழ்வார்கள் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.

இந்த நாளில் விரதமிருந்து, துளசித் தீர்த்தம் மட்டுமே அருந்தி எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்து, நாளை துவாதசி திதியன்று பாரணை செய்து விரதம் முடிக்க வேண்டும். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதும் செய்துவர, பிறவிப் பிணி நீங்கி இறைவனின் திருவடிகளைச் சேரலாம் என்பது நம்பிக்கை.