Sunday 16 August 2020

அஜா ஏகாதசி..(15.8.2020)


மும்மூர்த்திகளில் ஒருவரான மகாவிஷ்ணுவை வணங்கி வழிபடும் விரதங்களில் முதன்மையானது ஏகாதசி விரதம். இந்த ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பவர்கள் அரசர்கள் செய்யும் அஸ்வமேத யாகம் செய்த பலனை பெறலாம் என்று புராணங்கள் கூறுகின்றன.

ஒவ்வொரு ஏகாதசியும் தனித்தனி பலன்களை நமக்கு அருள வல்லது. நம் முன்வினைகளைப் போக்கி நல்வினைகளைத் தரக் கூடியது. நம் துன்பங்களின் காரணமான முன்வினைகளை. நீக்கி, இப்பிறப்பில் நாம் நலமுடன் வாழ அருள்வது ஏகாதசி விரதம். அத்தகையதொரு ஏகாதசி விரதம் இன்றைய அஜா அல்லது அன்னதா ஏகாதசி.

அஜா ஏகாதசி விரதத்தின் பெருமைகளைத் தமக்கு விளக்கி அருளுமாறு யுதிஷ்டிரர் பகவான் கிருஷ்ணனிடம் கேட்க பகவான் எடுத்துரைக்கிறார்.

'தர்ம புத்திரரே, அஜா ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கும். பொதுவாக விரத முறைகள் வழிபாடுகள் அனைத்தையும் கடைப்பிடிக்க வாய்ப்பில்லாதவர்கள் இந்த அஜா ஏகாதசி அன்று வெறும் உபவாசம் இருந்தாலே முழு விரத முறையையும் கடைப்பிடித்த பலன்களைப் பெறுவார்கள். 
ரகுவம்சத்தில் தோன்றிய ஹரிச்சந்திரன் இந்த விரதத்தை அனுஷ்டித்து தன் துன்பம் நீங்கப் பெற்றான்' என்றுரைத்தார்.

உலகம் போற்றும் சத்தியசந்தனாக விளங்கிய ஹரிச்சந்திர மகாராஜா தன் முன்வினைப்பயன்களால் தன் நாட்டை இழந்தான். மேலும் தன் மனைவி, மகனையும் பிரியும் நிலை வந்தது. ஆனாலும் தன் இயல்பில் மாறாது சுடுகாட்டைக் காக்கும் வேலையைச் செய்து சத்தியத்தையே கடைப்பிடித்து
வந்தான்.

ஒருநாள் ரிஷி கௌதமரை சந்தித்து அவர் பாதங்களைப் பணிந்த ஹரிச்சந்திரன் தன் வாழ்க்கையில் நடந்த துயரங்களை எடுத்துக்கூறினான்.

அவற்றைக் கேட்ட முனிவர் மிகவும் மனம் வருந்தி, 'நாம் படும் துன்பத்தின் காரணம் முன்வினைப்பயன்தான். அதை அழிக்கும் சக்தியுடைய விரதம் அஜா ஏகாதசி விரதம். அந்த நாளில் நீ முழு உபவாசம் இருந்து, ஹரியை நாள்முழுவதும் மனதாலும் வாக்காலும் சிரத்தையுடன் துதித்தால் ஹரி மகிழ்ந்து உன் வினைப்பயன்களை நீக்குவார். மேலும் நீ விரைவில் நன்னிலை அடைவாய். நீ அடையும் நன்னிலையே இந்த ஏகாதசி விரதத்தின் மகிமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும்' என்று உபதேசித்தார்.

ஹரிச்சந்திரனும் அதன்படி விரதமிருந்து உபவாசம் அனுஷ்டிக்க விரைவில் அவன் வினைப்பயன்கள் நீங்கின. அவனோடு வாதம் செய்தவர் தோற்றார். அவன் துன்பங்கள் யாவும் நீங்கின. தன் பிள்ளையோடும் மனைவியோடும் இணைந்தான். அவன் ராஜ்ஜியம் மீண்டது என்று பகவான் கிருஷ்ணர் அவற்றை எடுத்துரைத்தார்.

அதோடு அவர் யுதிஷ்டிரனிடம், 'ஓ பாண்டு புத்ரா! நீயும் இப்போது இந்த அஜா ஏகாதசியின் சிறப்புகளை அறிந்து கொள்!' எனக் கூறத் தொடங்கினார். இந்நாளில் மேற்கொள்ளும் விரதம் நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களின் விளைவால் இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்கும் துன்பங்களை உடனடியாக நீக்க வல்லது. இதனால் அவர்கள் அனைவரும் இறுதியில் வைகுண்டலோகத்தை அடைவர்.

'எவரொருவர், இந்நாளில் இந்த விரதத்தின் மகிமையை விவரிக்கும் இந்தக் கதையினை கேட்பவர் சொல்பவர் படிப்பவர்கள் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார்' என ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனிடம் கூறியதாக  பிரம்ம வைவர்த்த புராணம் விவரிக்
கின்றது.

இத்தகைய சிறப்புகளை
உடைய இந்த நாளில் உபவாசம் இருந்து ஹரியை வழிபட வேண்டும். பொதுவாகவே சனிக்கிழமைகள் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தவை. சனிக்கிழமையும் ஏகாதசியும் இணைந்துவருவது மிகவும் சிறப்புக்குரியது. எனவே இந்த நாளைத் தவறவிடாமல் பகவான் விஷ்ணுவை வழிபட்டு சகல நலன்களையும் பெறுவோம்.





கோகுலாஷ்டமி ஸ்பெஷல்..(11.8.2020)

தினமும் கிருஷ்ண ஜயந்திதான்!

ஸ்ரீமத் பாகவத ரஹஸ்யம் படித்துக் கொண்டிருந்த போது அதில் கிருஷ்ண ஜயந்தியைப் பற்றிய பாகம் மிக அருமையாக இருந்தது. பாகவத ரகஸ்யம் படிக்கப் படிக்க திகட்டாத தேன்! ஒவ்வொரு வரியிலும் பக்தி ரஸம் ததும்புகிறது.

நான் பெற்ற இன்பம் அனைவரும்பெறும் ஆசையில் அதில் சிலவற்றைத் தொகுத்து எழுதியுள்ளேன்.

நந்த மஹோத்சவம் மகிழ்ச்சி விழா. தினமும் கொண்டாட வேண்டும். ஜனங்கள் வருஷத்தில் ஒரே நாள்தான், ஸ்ரீகிருஷ்ணரின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். அதிகாலை 4 மணி முதல் 5½ மணி வரை தினமுமே நந்த மஹோத்சவம், பாலகிருஷ்ணன் பிறந்த தினம் கொண்டாடுங்கள். பகவான் எழுந்தருளும் தினமே விழா நாளாகும். விழாவிற்குப் பணம், காசு தேவையில்லை. அதற்கு அன்பே முக்கியம்.

கிருஷ்ண ஜயந்தியை ஆலயங்களில் கொண்டாடினால் போதாது. நம் ஒவ்வொருவர் வீடுகளிலும் விழா கொண்டாட வேண்டும். ஜீவாத்மாவின் இருப்பிடம் நம் சரீரமேயாகும். ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி கொண்டாடுவது என்றால் அப்பம், வடை, அவல் வெண்ணெய் விநியோகிப்பதல்ல. தயிரும், பாலும் கொடுப்பதா? இதெல்லாம் வேண்டுமென்பதில்லை.

விழாவை மனதில் (இதயத்தில்) கொண்டாட வேண்டும். மனிதன் தன் உடல் உணர்ச்சியற்றிருக்கும் நிலையை அடையும்போதுதான் பகவான் தோன்றுவார். தேக தர்மத்தை மறக்கும்போதுதான் விழா பயனுள்ளதாகும். பகவானை நம் இதயத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும். பகவான் நம் இதயத்தை அடைந்ததும் நமக்குப் பசி, தாகம் மறந்து போகும்.

ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி கொண்டாடுவதற்குக் கொஞ்சம் தயார் செய்ய வேண்டி வருகிறது. நம் உடலையே நாம் வடமதுரையாகச் செய்ய வேண்டும். இதயம் கோகுலமாக அமைய வேண்டும். இது ஆனதும் விழா தானாகவே நடக்கும். இதற்குப் பிறகு இதய கோகுலத்தில் பகவான் வந்து அமர்ந்து விடுவார். கோகுலம் – கோ, இந்திரியம், புலன். குலம் – சமூகம், கூட்டம், இந்திரியங்கள் கூடுமிடம் – இதயம்.

மகாப்ரபு, மதுராபுரி, மதுரா இவ்விரண்டும் ஒன்றே என்று கூறியிருக்கிறார். இந்த மதுவினால் (தேன்) உடலைப் பேணி வந்தால், உடல் மதுராவாகிவிடும். மது இரண்டு இடங்களில் அமைக்கப்
பட்டிருக்கிறது.

காமசுகம், செல்வசுகம் இவ்விரண்டிலும் மனம் சிக்கிக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டிலிருந்தும் மனதைப் பிரித்து விலக்கி வைக்க வேண்டும். பல தடவைகள் மனிதன் தன் உடலினால் காமத்தைத் துறந்து விடுகிறான். ஆனால் மனதினால் துறக்க முடிகிறதில்லை.

உடலை மதுராபுரியாக்க வேண்டுமானால் அதை யமுனா நதிக்கரையில் சேர்த்து வைக்க வேண்டும். யமுனா நதி பக்தி ஸ்வரூபமாகும். யமுனைக் கரை பக்தியின் கரையும் ஆகும். பக்திக் கரையை விட்டு விடாதீர்கள். இருபத்தி நான்கு மணி நேரமும் பக்திக் கரையில் தங்கியிருந்தால், உங்கள் சரீரம் மதுராபுரியாக ஆகி விடும். இக்காலத்தில் ஜனங்கள் உடலால் பாவம் செய்வதைவிட மனதால் செய்வதுதான் அதிகம்.

நாம் தீர்த்த ஸ்தலங்களுக்குப் போவது நல்லது. நம் உடலையும் தீர்த்த ஸ்தலம் போல் புனிதமாக்க வேண்டும். பக்தி கண்களாலும், காதுகளாலுல் கூட நடை பெறுகிறது. கண்களால் பக்தி செய்வது என்றால் கண்களில் பகவானை எழுந்தருளச் செய்து உலகைப் பாருங்கள். இவ்விதம் பார்ப்பவர்களுக்கு உலகமே பகவான் ஸ்வரூபமாகத் தோன்றும். துளஸிதாஸருக்கும், ஹனுமானுக்கும் உலகில் சீதாராமனைத் தவிர வேறு எதுவுமே தென்படவில்லையாம். ஒவ்வொரு புலனிலும் பக்திரஸத்தை நிரப்பி வையுங்கள். ஒவ்வொரு புலன் மூலமும் பக்தி செய்யுங்கள். உங்கள் இதயமே விரைவில் கோகுலமாகிவிடும்.

சரீரத்தைத் தவிர மனதினாலும் தினமும் கோகுலம் செல்லுங்கள். உடல் எங்கிருந்தாலும் மனதை பிருந்தாவனத்திற்கு அனுப்புங்கள்.

யசோதை மடியில் பாலகிருஷ்ணன் இருந்து விளையாடிக் கொண்டிருப்பதாயும் கோபிகள் அவளைப் பார்க்க வேகமாய் ஓடிக் கொண்டிருப்
பதாயும் பாவனை செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு லீலையைப் பற்றியும் சிந்தனை செய்யுங்கள்.

பகவானை தரிசித்த பிறகு அவன் ஸ்வரூபத்தை, கண்களை மூடிக்கொண்டு உள்ளத்தில் பார்க்க முயலுங்கள். தியானத்திலும், தரிசனத்திலும் ஒன்றிப்பு ஏற்படும்போது, பிறந்த தின விழா கொண்டாடும் வாய்ப்பும் உண்டாகிறது.

ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி அதிகாலை 4 மணிக்குக் கொண்டாடப்பட்டது. தியானம் செய்ய காலை 4 முதல் 5 மணி வரை பிரம்ம முகூர்த்தம். சிறந்த காலம்.

பகவான் பஜனை அதிகாலை நேரத்தில் செய்யப்பட்டால் நாள் முழுவதும் ஆனந்தம் கிடைத்துவிடும். அதிகாலையில் எழுந்து தினமும் அரை மணி நேரம் பகவானை தியானம் செய்யுங்கள். பகவானுடன் ஒன்றி சற்று நேரம் அமர்ந்திருங்கள், காலை நேரத்தில் ஜபம், தியானம், பிரார்த்தனை இவற்றைத் தினமும் செய்து வந்தால், நாள் முழுவதும் பகவான் நம்மை பாபச் செயல் செய்வதிலிருந்து காப்பான்.

ஸ்ரீ மத் பாகவத ரகஸ்யம் தசம ஸ்கந்தத்திலிருந்து தொகுத்தது...

என் கைவண்ணத்தில் சில
ஸ்ரீ கிருஷ்ண தரிசனங்கள்🙏🏼


















Thursday 6 August 2020

பாவம் போக்கும் சிம்மாசலம்..(31.1.2020)


பாவம் போக்கும் சிம்மாசலம்

சென்ற வாரம் விசாகப்பட்டினம் சென்றபோது சிறப்பான சிம்மாசலம் கோயிலை தரிசித்து வந்தோம். அருமையான ஆலயம்.

நரசிம்மர் பெரும்பாலும் மலைக்கோயில்களிலேயே வீற்றிருக்கிறார். வேலூர் அருகிலுள்ள சோளிங்கர், ஆந்திராவிலுள்ள அஹோபிலம்,  சிம்மாசலம், கர்நாடக மாநிலம் மேல்கோட்டை, காஞ்சிபுரம் மாவட்டம்  சிங்கப்பெருமாள் கோயில், நாமக்கல், மதுரை ஒத்தக் கடைநரசிம்மர் கோயில்கள் சிறப்பானவை.

திருமால் எடுத்த பத்து அவதாரங்களில் பரபரப்பான நொடியில்  தன் பக்தன் பிரஹலாதனைக் காக்க மனிதனும். மிருகமும் கலந்த உருவமெடுத்து தூணிலிருந்து வெளிப்பட்ட தனிப்பெரும் அவதாரம் அது.

பிரஹலாதன் கருவிலேயே நாரத முனியால் நாராயண மந்த்ரோபதேசம் பெற்றவன். அவனுடைய நாராயண பக்தியினால் தானே கடவுள் என்ற இரண்யனின் கட்டுப்பாட்டுக்குள் அடங்காத  பிள்ளை அவன்.

அவன் தந்தை ஹிரண்யனுக்கு தன் நாட்டிலுள்ள பிற எல்லோரையும் போல் அவனும் தன் னுடைய பக்தனாக வேண்டும் என்று வெறி. ஹிரண்யன் பிரஹலாதனை பல விதங்களில் துன்புறுத்தியும், நாராயண நாமத்தால் அவற்றையெல்லாம் தன் மீதான பக்தி சிலிர்ப்பாகவே அனுபவித்தான் ப்ரஹலாதன்.

அவற்றில் ஒரு தண்டனையாக கடலில் தள்ளிவிட்டான். அதுவே விசாகப் பட்டினம் அருகிலுள்ள கடல். அவன் பிழைத்துவிடக் கூடாது என்பதற்காக மேலே ஒரு மலையையும் தள்ளிவிட்டான்.
'ஹரியே சரி' என்ற ப்ரஹலாதன் நாராயணா என பகவானை சரண் அடையக் கூப்பிட்டான். 

கடலில் அமிழ்ந்து கொண்டிருக்கும் ப்ரஹலாதனை காப்பாற்ற வேண்டும் என்ற அவசரத்தில், ஒரு கையில் பீதாம்பரத்தைப் பிடித்துக்
கொண்டு குதித்த வேகத்தில் பகவானின் பாதங்கள் பாதாளம் வரை சென்று விட்டனவாம்.எனவே இங்கு பாததரிசனம் கிடையாது.

ஹிரண்யகசிபுடன் 32 ரூபங்கள் எடுத்துப் போர் புரிந்தாராம் ஹரி. அதில் ஒன்று வராகநரசிம்மர் அவதாரம் ஆகும். பாதாளம் சென்று பிரகலாதனைக் காப்பாற்றியபோது அவன் மேல் கிடந்த மலையுடன் மேலே வந்தார் பெருமாள். அந்த மலையே சிம்மாசலம்.

இங்கு கோயில் கொண்டிருக்கும் நரசிம்மர்,  வராக முகத்துடன் மனித உடலோடு, சிங்கத்தின் வால்கொண்டு, வராக நரசிம்மனாக காட்சி அளிக்கிறார்.
பிரஹலாதனின் விருப்பத்திற்கிணங்க,
ஹிரண்யாக்ஷனை வதம் செய்த வராஹ ரூபம் மற்றும் ஹிரண்யகசிபுவை
அழிக்கப் போகும்
நரசிம்ஹ ரூபம் கலந்து வராக நரசிம்மராக காட்சி தருகிறார். இக்கோயில் கருவறை சுற்றுச்சுவரில் ஒரு பிறை மாடத்தில் மூலவர் வராக நரசிம்மரின் முழு உருவமும் சிற்ப வடிவில் காணப்படுகிறது.

பகவானுக்கு ஆராதனம் இல்லாமல் போகவே, புற்று மூடி அந்த இடம் காடாக மாறிவிட்டது. பின்னொரு காலத்தில் புரூரவஸ் என்ற சக்கரவர்த்தி இந்த இடத்தைக் கடந்து செல்லும் போது, அவரது விமானம் தடைபட்டது.   நரசிம்மமூர்த்தி அவரதுகனவில் தோன்றி, தான் இங்குள்ள கங்கதாரா என்ற தீரத்தத்தின் அருகில் உள்ள புற்றில் இருப்பதாகச் சொல்ல, அவரை அக்ஷயதிருதியை அன்று எழுந்தருளச் செய்து, கங்கதாரா தீர்த்தத்தில் திருமஞ்சனம் செய்து பிரதிஷ்டை செய்தார் புரூவரஸ்.

எனவே அக்ஷயதிருதியை அன்று மட்டுமே  பெருமான் நிஜரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.மற்ற
நாட்களில் சந்தனக் காப்பிட்ட
தரிசனம் தான்.

சந்தனக்காப்பில் எப்படி ஒரு வருடம் எனத் தோன்று
கிறதா?வைகாச சுக்ல திருதியை, வைகாச பவுர்ணமி, ஜ்யேஷ்ட பவுர்ணமி, ஆஷாட பவுர்ணமி என்று வருஷத்தின் நான்கு தடவைகள், சுமார் 500 கிலோ சந்தனம் சாத்துகிறார்கள். அதனால் எல்லா நாட்களும் சந்தனகாப்பு பளபளக்க  காட்சியளிக்கிறார் இந்த வராஹ நரசிம்மர்! அக்ஷயதிருதியை அன்று லட்சக்கணக்கான மக்கள் நிஜரூப தரிசனம் செய்ய வரிசையில் காத்திருப்பராம்!

சந்தனக் காப்பு ஏன்? இத்தலத்
திலும் சைவ வைணவ
சண்டை வந்ததாக கதை உண்டு. முதலில் இந்த மூர்த்தி இங்கு லிங்க ரூபத்தில் வழிபடப்பட்ட
தாகவும், ராமானுஜர் ஸ்ரீகூர்மத்திலிருந்து
இந்த மலைக்கு வந்து நாராயணனின் தலம் இது என்றும் இங்கு வராகநரசிம்மனின் அர்ச்சா ரூபம் நிறுவப்படவேண்டும் என்றும் வாதம் செய்தாராம். முடிவில், உள்ளே இருப்பவர் நாராயணனா இல்லை நமசிவாயமா என்பதைக் கண்டுகொள்ள லிங்கத்தின் கீழே துளசியும் விபூதியும் இரவில் வைக்கப்பட்டு, காலையில் எது ஏற்றுக் கொள்ளப்பட்டதோ, அவரே அங்கே இறைவன் என்று முடிவு செய்யப்பட, அனைவ
ரும் அப்படியே செய்கின்
றனர்.

மறுநாள் காலையில் வந்து பார்க்கும்போது துளசி மட்டுமே அங்கே கிடந்ததைக் கண்டு உடையவரின் கருத்தில் உடன்பாடு கொண்டு அனைவரும் லிங்கத்தை அகற்றிவிட்டு அங்கே ராமானுஜரின் கட்டளைப்படி வராகநரசிம்மனின் அர்ச்சா
ரூபத்தை செதுக்கினர். அப்படி வழிபடும்போது, அவர் உடலில் ரத்தம் வழிந்த
தாகவும், ரத்தத்தை மறைக்க சந்தனத்தை உருவம் முழுவதும் சார்த்தி மூடிவிட்ட
தாகவும் சொல்லப்படுகிறது.

ஹரியும், சிவனும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையில் வராக லட்சுமி நரசிம்மமூர்த்தியை தரிசித்தால் சிவலிங்க உருவத்தில் நாராயணனின் நாமம் சாத்தப்பட்டிருப்ப
தாகவே தோன்றுகிறது. தூணிலிருந்து தோன்றிய மூலவர் தூண் போன்றே தரிசனமளிக்கிறார். வராகரும் இவருடன் அரூபமாக உள்ளார்.
நிஜரூபத்தில் பார்க்கும்போது சுவாமியின் கால்களுக்குக் கீழே பாதம் இல்லை. கைகள் நீண்டு இருந்தாலும் உள்ளங்கைகளும் விரல்களும் தெரியாது.

சிறிய மலையின் மீது கோயில் உள்ளது. எக்காலத்திலும் பக்தர்களின் கூட்டத்துக்கு பஞ்சம் இருக்காது போலுள்ளது. தங்குவதற்கு தேவஸ்தானம் நிறைய அறைகள் கட்டி உள்ளார்கள்.

பெருமாளை அருகிலேயே சென்று பார்க்க அனுமதிக்கிறார்கள். வெளியே வந்து கங்கதாரா அருவி நீர் ஐந்து இடங்களில் சிறிய முகத்துவாரம் வழியாக வருவதை தலையில் தெளித்துக் கொள்ள
லாம். 

11ம்  நூற்றாண்டில் கலிங்க நாட்டை வென்ற குலோத்துங்க சோழனால்  மலையை முழுக்க குடைந்தெடுத்து  பாறையால் செய்யப்பட்ட ஒரு தேர், சக்கரங்களுடன் குதிரைகள் இழுத்துச் செல்லும் முறையில் உள்ளது.  இங்கு 525 அதியற்புதமான சிற்பங்கள்  காட்சிய
ளிக்கின்றன.

வாழ்வில் உண்டாகும் துன்பங்களைப் போக்கி பக்தர்களைக் காப்பதில் சிம்மாசலம் நரசிம்மருக்கு இணை வேறு யாருமில்லை.
சனக, சனந்தன, சனாத, சனத்குமாரர்களுக்கும்,
தேவர்கள், நாரதர், ரிஷிகளுக்கும், இவர்  தரிசனமளித்ததாக
தலபுராணம் கூறுகிறது.

இவ்வாலயத்தில் கப்பஸ்தம்ப வேண்டுதல் மிகப் பிரசித்தம்.
அந்நாட்களில் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறினால் கோவிலுக்கு வந்து கப்பம் செலுத்துவதாக வேண்டிக் கொள்வதும், நோய் நொடியி
லிருந்து பாதுகாக்கவும், குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பிறக்க வேண்டிக் கொண்டு இங்குள்ள கப்பஸ்தம்பத்தில் கப்பம்
செலுத்துவதும் வாடிக்
கையாக இருந்ததாம்.

இன்றும் அந்த ஸ்தம்பம் இங்கே இருக்கும் மண்டபத்தில் வெள்ளிக் கவசத்துடன் உள்ளது. அந்தத் தூணின் கீழ் சந்தான கோபாலரின் திருவுருவம் உள்ளது. அந்த கம்பத்தை இரு கைகளாலும் அணைத்தவாறு நம் வேண்டுதல்
களைக் கூற வேண்டும்.

பின் அங்குள்ள ஊழியர் ஒரு பட்டுத் துணியினால் நம்மைத் தூணுடன் கட்டி இறைவனிடம் நம்மை வேண்டிக் கொள்ள சொல்கிறார். திருமணம் பிள்ளைப்பேறு வியாபார விருத்தி போன்ற வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறுவதாகக் கூறப்படுகிறது.  தம்பதியர் இந்த வேண்டுதலை இணைந்து செய்ய வேண்டும்.இதற்கு 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்
படுகிறது.

இங்குள்ள நரசிம்ம தீர்த்தம், கங்காதாரா தீர்த்தம் எனும் இரு அருவிகளிலும் நீராடி வராஹநரசிம்மரை
வணங்கி, மலைப் பாதையில் கிரிவலம் வந்து வணங்குவதால் தீரா நோய்கள் தீர்ந்து பாவங்கள் விலகும் என்பது ஐதீகம். உடல் வளமும் உள்ள வளமும் பெற இந்த வராஹ லட்சுமிநரசிம்மர் பேரருள்  புரிகிறார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டி
னத்திலிருந்து 5 கி.மீ தொலைவிலுள்ளது
இத்திருத்தலம்.










ஹைதராபாதில் ஒரு பூரி..(6.2.2020)


ஒரிஸ்ஸா சென்றபோது பூரி ஜகன்னாதரை கண்குளிர மனம் மகிழ  தரிசித்ததுண்டு. ஹைதராபாதிலும்
அச்சு அசலாக அதே போன்ற கோவில் இருப்பதை அறிந்து மனதை ஈர்க்க தரிசிக்க சென்றோம்.

ஆஹா! வாயிலிலிருந்து பார்க்கும்போதே ஆலய அழகு மெய்சிலிர்க்க செய்கிறது.இரு புறமும் அமர்ந்த நிலையில் பிரம்மாண்டமான சிம்மங்கள் நம்மை வரவேற்க, உள்
நுழைந்ததும் பொற்கவசம் பூட்டிய துவஜஸ்தம்பம்.

அதற்கு நேர் எதிரில் சில படிகள் ஏறிச்சென்றால் ஸ்ரீஜகன்னாதர் தன் அண்ணன் பலராமன், தங்கை சுபத்ராவுடன் தரிசனம் தரும் கர்ப்பகிரஹம். வெண்ணிறத்தில் ஆதிசேஷ அவதாரமான பலராமரும், மகாமாயா ரூபமாக மஞ்சள்நிற சுபத்ரையும், சூரிய சந்திரரை இரு கண்களாகக் கொண்ட கருமைநிற கண்ணனும் நம் கண்களை அகலவிடாமல் கட்டிப் போடும் அழகு! சன்னிதியை விட்டு நகரவே மனமில்லை! இங்கும் பூரி போன்றே வரப்ரசாதி
யானவராம் பெருமான்.

உள்ளே விசாலமான முன் மண்டபத்தின் அழகு நம்மை மயக்குகிறது. ஜகன்னாதர், சுபத்ரை, பலபத்ரரை தரிசிக்கும்போது பூரியிலேயே இருப்பது போன்ற உணர்வு.
பூரியைப் போன்றே இங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேப்ப மரத்தில் விக்ரகங்கள் செய்யப் படுமாம். ரத்யாத்ராவும் உண்டு.

கலிங்கா கல்சுரல் டிரஸ்டினால் பராமரிக்கப்படும் இவ்வாலயத்தில் ஒரிஸ்ஸாவிலிருந்து வந்து இங்கு இருக்கும்  அர்ச்சகர்களே அங்குள்ள முறைப்படியே பூஜை செய்கின்றனர். சுற்றிலும் கணபதி, காசிவிஸ்வநாதர், விமலா தேவி, மகாலக்ஷ்மி, ஹனுமான் மற்றும் நவகிரகங்களுக்கு தனித்தனி சன்னிதி உள்ளது. ஒவ்வொரு சன்னிதியும் தனிப்பட்ட வேலைப்பாடுடன் அழகுற அமைந்துள்ளன.

2009ம் ஆண்டில் 3000 சதுர அடிப் பரப்பளவில் மூன்று பக்க வாசல்களுடன்  கட்டப்பட்டுள்ள இவ்வாலயத்தை உருவாக்க கிட்டத்தட்ட 600 டன் sand stone எனப்படும் மணல் பாறைகள்
ஒரிஸ்ஸாவிலிருந்து தருவிக்கப் பட்டு 60 சிற்பிகளால் பூரி ஆலயம் போன்றே மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளது.

கருவறையைச் சுற்றியுள்ள மண்டபத் தூண்கள் sand stone கொண்டு செந்நிறத்தில் உருவாக்கப்பட்டு நுணுக்கமான சிற்பக் கலையுடன்  திகழ்கிறது.
70அடி உயர கோபுரத்தின் மேல் அமைந்துள்ள ஷிகாரா எனும் சக்கரம் மிக அழகானது.

ஆலய சுற்றுச் சுவரில் உள்ளேயும் வெளியேயும் பாகவதம், மகாபாரதக் காட்சிகள், ஜகன்னாதர் உருவான வரலாறு, தசாவதாரங்கள், பாற்கடல் பரமன்,கீதோபதேசக் காட்சிகள் மிக  அழகான வண்ணச் சிலைகளாக தத்ரூபமாக செதுக்கப் பட்டுள்ளன. கலைஆர்வம் மிக்கவர் அவசியம் காண வேண்டிய ஆலயம்.

இங்கு ஜன்மாஷ்டமி, ஏகாதசி, ராமநவமி, சிவராத்திரி, கணேஷ் சதுர்த்தி போன்ற விழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்
படுகின்றன. ஆலயம் காலை 6-11, மாலை 5-9 வரையும் தரிசன நேரம். சனி, ஞாயிறுகளில் ஒலி, ஒளிக் காட்சி உண்டு.

ஆலயம் ஹைதராபாத் பஞ்சாரா ஹில் என்ற இடத்தில்  தெலுங்கானா பவன் மற்றும் KBR நேஷனல் பார்க்கிற்கு மிக அருகில் உள்ளது.
















யாதகிரி பஞ்ச நரசிம்மர் கோவில் ..(19.2.2020)


யாதகிரி பஞ்ச நரசிம்மர் கோவில்

ஓம் வஜ்ர நாகாய வித்மஹே;
   தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி;
   தந்நோ நாரசிம்ஹ
   ப்ரசோதயாத்!

நரசிம்மர் உக்ர தெய்வம் என்றாலும் தன்னை பக்தியுடன் வணங்குபவர்களின் துன்பத்தைப் போக்கி அவர்களைத் தன் குழந்தை போல் காப்பாற்றுவார். இது நாம் பிரகலாத சரித்திரத்
திலிருந்து அறிந்த விஷயம். ஆந்திரா நரசிம்ம மூர்த்திக்கு மிகப் பிடித்த இடம் போலும்! நிறைய நரசிம்மர் ஆலயங்கள்.மங்களகிரி, அந்தர்வேதி, அஹோபிலம், சிம்மாசலம், யாதகிரி, வேதாத்ரி, மட்டபல்லி என்று நிறைய்ய உள்ளன.

யாதகிரிகுட்டா, தெலுங்கானாவில் உள்ள விஷ்ணுவின் நான்காம் அவதாரமான பஞ்ச நரசிம்மர்
கோவில். இந்தக் கோவில்
ஐதராபாதில் இருந்து 65 கி.மீ துரத்தில் ஒரு சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது.

திரேதா யுகம் நடக்கும் போது  இங்கு ஒரு குகையில்
ரிஷிய சிருங்கர், சாந்தாதேவி இருவரின் புத்திரரான யது என்ற ரிஷி அனுமானின் அருள் பெற்று தவம்  இருந்தார். இவருக்கு மஹாவிஷ்ணு தரிசனம் தந்து அருள் புரிந்தபோது, ரிஷியும்
தான் நரசிம்ஹ மூர்த்தியாக அவரைப்பார்க்க விரும்பினார்.
முதலில் ஜ்வாலா நரசிம்ஹ
ராகவும்,  பின்னர் உக்ர நரசிம்மராகவும், பின் கண்டபேருண்ட நரசிம்மராகவும்  தோன்றினார். ரிஷியோ அந்தத் தோற்றங்கள் வேண்டாமென்று கூற யோக நரசிம்மராகக் காட்சி அளித்தார். அதிலும் திருப்தி படாமல் போனதால் சாந்தமாக லக்ஷ்மி நரசிம்மராக தரிசனம் கொடுத்து அருள் புரிந்தார்.  இதனால் இது பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரம் எனப் பெயர் பெற்றது.

பதினெட்டு புராணங்களில் ஒன்றான ஸ்கந்த புராணத்தில் இந்த கோயிலை பற்றிய தகவல்கள் உள்ளது. இன்றும் கருவறையில் இந்த ஐந்து ரூபங்களில் நரசிம்மஸ்வாமி
காட்சியளிக்கிறார்.

ரிஷி தவம் செய்த இடம் இப்போதுள்ள கோவிலில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. அங்கு முனிவர் பல காலங்கள் இறைவனை வழி பட்டு முக்தி அடைந்த பிறகு அங்குள்ள மக்கள் முறை அறியாது வழிபட்டதால் லட்சுமி நரசிம்மர் மலைக்குள் சென்று விட்டார்.

பல ஆண்டுகள் கழித்து ஒரு பக்தையின் கனவில் தோன்றி தான் இருக்கும் இடத்தை காட்டி அங்கு  இறைவன் அவரின் ஐந்து உயரிய அவதாரங்களால் காட்சியளித்தார். அவ்விடமே தற்சமயம் குன்றின் மேலுள்ள குடவரைக் குகை ஆலயம். அதன்பின்பே இங்கு  முறையான பூஜைகள் தொடங்கப்பட்டன. இங்கு பாஞ்சராத்ர முறைப்படி பூஜை நடைபெறுகிறது.

இங்கு பல அர்ச்சனை சேவைகள் நடைபெறுகின்றன. நாங்கள் 216 ரூபாய் கொடுத்து சஹஸ்ரநாம அர்ச்சனைக்கு சென்றோம். நரசிம்மர் ஐந்து ரூபங்களில் அழகுறக் காட்சி தருகிறார். 12அடி நீளமும், 30அடி உயரமும் கொண்ட குடவரைக் கோயிலில் பாறையில் சுயம்புவாக காட்சி தருகின்றனர் ஐவரும். அவற்றிற்கு கவசம் அணிவிக்கப் பட்டுள்ளது. ஆஞ்சநேயரும் அங்கு உள்ளார். அருகில் ஆறடிக்கும் மேல் உயரத்தில் லக்ஷ்மியும் நரசிம்மப் பெருமானும் பொற்கவசம் பூண்டு நின்ற நிலையில் அற்புதக் காட்சி தருகின்றனர். அர்ச்சனைகள் இந்த நரசிம்மருக்கே. காணும்போதே மெய்சிலிர்க்க வைக்கும் தரிசனம்.

சகஸ்ரநாமம் முடியும்வரை அரைமணி நேரம் அமர்ந்து இறைவனை கண்குளிர, மனம் நெகிழ தரிசித்தோம். இவர் வைத்ய நரசிம்மராக விளங்கு
கிறார். நோய் நொடியில்லாத வாழ்வை வேண்டிக் கொண்டேன். பின் அர்ச்சனை, தீபாராதனை முடித்து அபிஷேக தீர்த்தம் சடாரி குங்குமம்  பெற்றுக் கொண்டு வெளிவந்தபோது மனம் நிறைந்திருந்தது.

பில்லி, சூன்யம், ஏவல் போன்
றவை விலகவும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் இங்கு வருகிறார்கள். ஒரு மண்டலம் (40 நாட்கள்) பிரதட்சிணம் என்னும் வேண்டுதல் இங்கே பிரசித்தம். திருமணப்பேறு, பிள்ளைப்பேறு உள்ளிட்ட எல்லா நலன்களும் இத்தலம் வந்தால் கிட்டுகின்
றனவாம்.தீய சக்திகளாலும், தீய கிரகங்களாலும் பீடிக்கப் பட்டவர்களை காப்பாற்றி நல்வழி படுத்துபவராகவும்,   பல சமயங்களில் பக்தர்களின் கனவுகளில் நரசிம்மர் தோன்றி அவர்களுக்கு தேவையான மருத்துவ மூலிகைகளைத் தந்து பக்தர்களின் நோயைத் தீர்ப்பதும், அவர்களின் உடல் ஆரோக்கி
யத்திற்கு நல்லாசியும் வழங்குவதாகக் கூறப்படுகிறது. நரசிம்மர் காட்சிதந்த தினமாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 28-ஆம் தேதி கொண்டாடப்
படுகிறது.

கர்ப்பக்கிரஹத்தின் மேல் சிகரத்தில் தங்க சுதர்சனச்சக்கரம் உள்ளது. முன்பெல்லாம் இந்தச்சக்கரம் பக்தர்கள் வரும்போது அந்தப்பக்கம் திரும்பிஒரு காம்பஸ் போல் வழிக்காட்டுமாம். தற்சமயம் ஆலயத்தில் புனருத்தாரணம் செய்வதால் அந்த சக்கரம் கழற்றி வைக்கப் பட்டிருப்பதாகவும், கும்பாபிஷேகத்திற்கு பின்பு மீண்டும் பொருத்தப்படமென்றும் கூறினார்கள்.

ஆஞ்சநேயர் இருந்த தலம் என்பதாலோ என்னமோ ஏகப்பட்ட குரங்குகள்! நம் கையில் இருப்பதைப் பிடுங்க ஆயத்தமாக உட்கார்ந்திருக்கின்றன!

ஆதி  நரசிம்மர் கோவில் இவ்வாலயத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்து பளிச்சென காட்சி தரும் இவ்வாலயத்தில் இரண்டு அதிசயங்கள் உள்ளன, ஒன்று ஹனுமான் இங்கிருந்து தாவிய போது வந்த ஹனுமானின் கால் அடித் தடம். மற்றொன்று அங்கு உள்ள தண்ணீர் வற்றாத தெப்பகுளம்.

யாதகிரி செல்ல ஹைதராபாதிலிருந்து நிறைய பஸ் வசதி உள்ளது.தெலிங்கானா செல்பவர்கள் உடல்நல ஆரோக்யம் வேண்டி அவசியம் தரிசிக்க வேண்டிய ஆலயம்.