Friday 24 June 2022

ஏகாதசி ஸ்பெஷல்🙏..22.12.'19.



சபாஷ் மத்யமர் கோலப்போட்டி

Entry..2

Kerala Mural art Rangoli


ஏகாதசி ஸ்பெஷல்🙏

பீதாம்பரம் கரவிராஜித சங்கசக்ர கௌமோதக ஸரஸிஜம் கருணா சமுத்ரம்ராதா ஸஹாயம் அதி சுந்தர மந்தஹாஸம் வாதாலயேசம் அனிஸம் ஹ்ருதி பாவயாமி.’’

Monday 21 June 2021

அன்புள்ள அப்பா 🙏🏼

 




அப்பா என்றதும் மனதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேது? அப்பா-மகள் உறவு சற்று ஆழமானது... வித்யாச
மான பாசம் கொண்டது!  இந்த வார்த்தையை சொல்லும்
போதே மனம் சிலிர்க்
கிறது..கண்கள் குளமாகிறது..!

முதல் குழந்தை பெண்தான் வேண்டும் என்று என் அப்பா ஆசைப்பட்டு பிறந்தவளாம் நான் என்று என் அம்மா சொல்வார். எனக்கு கீழே மூன்று தம்பிகள் இருந்தாலும் என் மீது ஒரு தனி பாசம் என் அப்பாவுக்கு என்பதை நான் பலமுறை உணர்ந்ததுண்டு.

என் இரண்டு வயதிலிருந்தே மாலையில்  அலுவலகத்தி
லிருந்து அப்பா எப்பொழுது வருவார் என்று வாசலிலேயே காத்திருப்பேனாம். அப்பாவும் பிஸ்கட் சாக்லேட் என்று ஏதாவது வாங்கி வருவாராம். அப்பா வந்ததும் அன்று நடந்ததெல்லாம் அவரிடம் சொல்லிவிட்டே அவரை உடை மாற்ற விடுவேனாம்! நான்கு வயது வரை வெளியில் சென்றால் அப்பாவை என்னைத் தூக்கி வரச் சொல்லி அடம் செய்வேனாம்!

நான் படிக்கும் நாட்களில் எனக்கு கணக்கில் சந்தேகம் வந்தால்(எனக்கு கணக்கு வராத பாடம்!) பொறுமையாக சொல்லித் தருவார். எனக்கு கல்லூரி சென்று படிக்க ஆசை இருந்தும் அப்பாவிற்கு இஷ்டமில்லாததால் அனுப்ப வில்லை. நானும் அதைப் பொருட்படுத்தவில்லை.

எனக்கு பத்தொன்பது வயதில் திருமணம் முடிப்பதில் அப்பா உறுதியாக இருந்தார். நான் திருச்சியிலும் என் பெற்றோர் முசிறியிலும் இருந்ததால் அடிக்கடி பெற்றோரைப் பார்க்கலாம் என்ற ஆசையில் இருந்தேன்.ஆனால் சில மாதங்களிலேயே உத்திர பிரதேசத்தில் மதுராவுக்கு மாறிப் போன போது ரயில் நிலையத்தில் என் அப்பா கண்கள் கலங்க நின்றது இன்னும் என் மனதில் நிற்கிறது. இனி நினைத்தால் பெண்ணை பார்க்க முடியாதே என்று அம்மாவிடம் சொல்லி வருத்தப் பட்டாராம்.

என் அப்பா கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்ளா விட்டாலும் எல்லா பாட்டுகளும் பாடுவார். ராகம் தாளம் எல்லாம் தெரியும். ராக ஆலாபனை செய்து என்னைப் பாடச் சொல்லி கேட்பார். நான் பாடகியாக வேண்டும் என்ற ஆசை என் அப்பாவுக்கு உண்டு. அதை என்னால் நிறைவேற்ற முடியவில்லை.

சிறு வயதில் அவர் என் கைபிடித்து பள்ளி அழைத்துச் சென்றது, எனக்கு சைக்கிள் ஓட்ட சொல்லிக் கொடுத்தது, நான் படிப்பில் சிறப்புப் பெற்றபோது பெருமிதப் பட்டது, என்னைப் பாடச் சொல்லி ரசித்தது, எனக்கு குழந்தைகள் பிறந்தபோது ஒரு தாத்தாவாக சந்தோஷப் பட்டது, அவர்களின் படிப்பு,திருமணம் இவற்றை பாசத்தோடு ரசித்து அனுபவித்து பாராட்டி வாழ்த்தியது, கொள்ளுப் பேரன் பேத்திகளுடனும் விளையாடி மகிழ்ந்தது, என் சஷ்டி அப்த பூர்த்திக்கு வந்து வாழ்த்தியது... என்று அவரின் பாசத்துக்கு சான்றாக எத்தனை விஷயங்கள்!

நான் அப்பாவைப் பார்க்க போகிறேன் என்றால் என் தம்பியிடம் 'ரயில் எப்ப வரும்? ஸ்டேஷனுக்கு போகலியா?' என்று பத்து முறை கேட்பார் என்று என் தம்பி பரிகசிப்பான்!
நான் சென்றாலே அவருக்கு ஒரு சந்தோஷம். பழைய கதையெல்லாம் சொல்லுவார். 'இன்னும் பத்து நாள் இருந்துட்டு போ' என்பார். 'உன் மாப்பிள்ளைக்கு சமைத்து போடணுமே' என்றால் அவரையும் அழைத்து வந்து விடு என்பார்! இருவருமே வங்கியில் பணி புரிந்ததால் என் கணவருடன் அலுக்காமல் வங்கி விஷயங்களைப் பற்றிப் பேசுவார்!

அவருக்கு பிடித்த சமையலை செய்து போடுவேன். மோர்க்களி, புளிப்பொங்கல், அரிசி நொய் உப்மா, மெதுவடை எல்லாம் என் அப்பாவுக்கு பிடித்தவை. மாம்பழ சீசனில் என் கணவர் எல்லா வகை மாம்பழமும் வாங்குவார். தினமும் மாம்பழம் சாப்பிட்டு விட்டு சர்க்கரை ஏறிவிட்டதா என்று டெஸ்ட் பண்ணுவார்!

நான் 2013 டிசம்பரில் ஜெர்மனிக்கு என் பிள்ளை வீட்டுக்கு என் மருமகள் பிரசவத்திற்காக சென்றிருந்தபோது என் அப்பாவுக்கு மூச்சு விட முடியாமல் வெண்டிலேட்டரில் இருப்பதாக ராஜமுந்திரியில் இருந்த என் தம்பி சொன்ன
போது எனக்கு என்ன செய்வ
தென்று தெரியவில்லை. ஏதாவது ஆகிவிட்டால் அப்பாவைப் பார்க்கக்கூட முடியாதே என்று கடவுளிடம் எதுவும் ஆகாமல் இருக்க
வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். நல்ல வேளையாக இரண்டு நாளில் சரியாகி வீடு வந்து விட்டார் என்றபோதுதான் நிம்மதி
யாயிற்று.

திரும்பி பிப்ரவரியில் வந்ததும் மறுநாளே கிளம்பி தம்பி வீட்டுக்கு ராஜமுந்திரி
சென்றோம். அப்பா சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்தார். ..என்னப்பா இப்படி வெண்டிலேட்டர்க்
கல்லாம் போய் பயமுறுத்
திட்டியே...என்றபோது,..அதைவிடு.அது முடிஞ்ச கதை. நீ லண்டன்லாம் பார்த்தியா? லண்டன் ரொம்ப அழகான நகரமாமே? ராணியைப் பார்த்தியா?...என்றெல்லாம் ஆர்வமாகக் கேட்டார்.

..ஏப்ரலில் திருச்சி வந்துவிடு. டிக்கெட் வாங்குகிறேன்..
என்றபோது..கண்டிப்பா வரேன். தாத்தாச்சாரி கடை மாம்பழம் சாப்பிடணும்..
என்றவருக்கு மார்ச் மாதம் மீண்டும் மூச்சு விட முடியாமல் கஷ்டப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாக தம்பி சொன்னதும் மறுநாளே கிளம்பிச் சென்றோம்.

22 நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்தவர் உடல்நிலை மோசமாகி ICUவில் இருந்தபோது அசைவே இல்லை. ஏப்ரல் 5ம்தேதி காலை எங்கள் திருமண
நாளானதால் நானும் என் கணவரும் கோயிலுக்கு சென்று விட்டு அப்பாவைப் பார்த்து வர ஆஸ்பத்திரி போனபோது டாக்டர்..நிலைமை மோசமாகி விட்டது..என்று சொன்னார். எனக்கு அழுகை வந்துவிட்டது.

என்னைத் தாலாட்டி சீராட்டி பாராட்டி வளர்த்து திருமணத்தின்போது கண்கலங்கிய அப்பா இப்படி கண் திறக்காமல் இருக்கிறாரே என்ற வருத்தத்தில் அவரைத் தொட்டு அப்பா..அப்பா என்று கூப்பிட்டதும் சடாரென்று திரும்பி சில நிமிடம் என்னைப் பார்த்தவர் அப்படியே கண்ணை மூடிக் கொண்டார்.

அன்று மதியம் மறைந்து
விட்டார் என்ற செய்தி வந்தபோது கதறி விட்டேன். அவருடன் இருந்து அவருக்கு பணிவிடை செய்தது என்னால் மறக்க முடியாத நாட்கள். இறப்பதற்கு இரண்டு நாள் முன்புவரை என்னுடன் பழங்கதையெல்லாம் பேசியவர் போய்விடுவார் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. இன்று அப்பா என்னுடன் இல்லை என்றாலும் அவரின் ஆசிகள் என்னை இன்றும் சிறப்பாக  வாழவைப்பதை உணர்கிறேன்.

அப்பா ஒரு சம்பவம் அல்ல...ஒரு சரித்திரம்!
அப்பாவின் அன்பு சிறுதுளி அல்ல..பெரும் சமுத்திரம்!

அப்பா..உங்கள் அன்பு
கடல் போன்றது..
வெளியே தெரியாது
ஆனால் ஆழம் அதிகம்.

அப்பா..உங்களுக்கும்,
 கடவுளுக்கும்
சின்ன வேறுபாடு தான்
கண்ணுக்கு தெரியாதவர்
கடவுள். எனக்கு கடவுளாய் இருந்தவர் நீங்கள்!

உங்கள் தோள்கள் எனக்கு ஒரு காலத்தில் விலை மதிப்பற்ற சிம்மாசனம்..உங்கள் மடி விலை உயர்ந்த பட்டு மெத்தை!

அப்பா..உங்கள் அன்பை மிஞ்சும் அளவு வேறு எந்த
அன்பும் இந்த உலகில்
இல்லை!

அப்பா..உங்களை வணங்குகிறேன்🙏🏼
என்றும் உங்கள் ஆசியை வேண்டுகிறேன்🙏🏼
என்றும் எனக்கு துணையாக இருக்க இறைஞ்சுகிறேன்🙏🏼

Saturday 5 June 2021

எனக்கு பிடித்த திரைப்படம்

 


எனக்கு பிடித்த திரைப்படம்


DDLJ...தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே (ஹிந்தி)


1995 ஆம் ஆண்டு ஆதித்யா சோப்ரா என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் உருவான தில்வாலே துல்ஹனியா லேஜாயங்கே  ஷாருக்கானும் கஜோலும் நடித்த இந்தி திரைப்படம்.  ஷாருக்கான், ராஜ்  என்ற கேரக்டரிலும் கஜோல், சிம்ரன் என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். அவர்கள் மட்டுமே பிரதானமாக நடித்த காதலை மையமாக வைத்து எடுத்த படம். அவர்கள் அதில் நடித்த மாதிரியே தெரியாது..அந்தக் கதாபாத்திரங்களாகவே மாறி விட்டது போலத் தோன்றும்!


படமும் பாடல்களும் மிகப் பிரபலமாயிற்று. வட நாடுகளில் மட்டுமன்றி இந்தி தெரியாத மாநிலங்களிலும் வசூலை அள்ளிய படம். 

திரைப்படம் வெளியாகி 21 வருடங்கள் மும்பையில் உள்ள மராத்தா மந்திர் என்ற திரையரங்கில் ஓடியது. 


குடும்பப் பாங்கான காதல் கதை. இதன் பாடல்கள் இந்தி தெரியாதவர்களையும் தாளம் போட வைத்து ரசிக்க வைக்கும். ஆதித்யா சோப்ரா இயக்குநராக அறிமுகமான இப்படம் வெறும் 4 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டு 102.50 கோடி ரூபாயை வசூலித்தது.இந்தத் திரைப்படம் இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது. 


இந்தப் படத்துக்குப் பிறகு ஷாரூக் கான் - கஜோல் இணை, பாலிவுட்டின் பிரபலமான திரை ஜோடிகளில் ஒன்றாக மாறியது. இருவரும் சேர்ந்து பல படங்களில் நடித்தனர்.


‘டிடிஎல்ஜே’ (DDLJ) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தத் திரைப்படத்தில்

ஆண் பெண் என இரண்டு என்.ஆர்.ஐ இந்தியர்கள்.. ஒருவர் ஐரோப்பிய வாழ்க்கை முறையை விரும்பும் அல்ட்ரா மாடர்ன் இளைஞர், அந்தப் பெண்ணோ தாம் விரும்பும் ஒருவரை இந்திய கலாச்சாரத்தோடு இணைந்தவரை திருமணம் செய்து கொள்ளவிரும்புகிறார், 


இரன்டு பேரும் ஒரு பெரிய ரயில் பயணத்தில் தனியாக பயணிக்கும் கட்டாயம். அதன் பின் என்ன ஆகிறது என்பது கதை. தம்மையறியாமலே இருவரும் காதலித்து கடைசியில் இருவரும் இணையும் வரை நடக்கும் சுவையான சம்பவங்களே திரைக்கதை!


இந்தப் படத்தை பார்த்தபோது உண்மையிலேயே இருவரின் நடிப்பும் மனதைத் தொட்டது. தமக்குள் காதல் இருப்பதை அறியாமலே இருவரும் பேசிக் கொள்வதும் கோபித்துக் கொள்வதும் ஒரு இயல்பான இருவருக்கிடையில் இருக்கும் குணத்தையே காட்டும். 


இந்தப் படத்தை தியேட்டரில் பார்த்ததோடு வீட்டிலும் பலமுறை போட்டுப் பார்த்திருக்கிறோம். கஜோலின் அழகு குறைவாக இருந்தாலும் அவர் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். டீன்ஏஜில் இருந்த என் பெண் பிள்ளைகள் நான்கைந்து முறை தியேட்டருக்கு சென்று அந்தப் படத்தைப் பார்த்தார்கள்!


அந்தப் படத்தில் ஐரோப்பாவின் அழகிய இடங்களும் ரயில் பயணங்களும் மிக அருமையாகப் படமாக்கப் பட்டிருக்கும். நான் பத்து வருடம் கழித்து ஐரோப்பா சென்றபோது கஜோலும் ஷாருக்கும் இறங்கிய அந்த ஸ்டேஷனை என் பிள்ளை அழைத்துச் சென்று காட்டினான். அவ்வளவு தூரம் என்னைக் கவர்ந்த படம் அது!


Friday 4 June 2021

எனக்கு பிடித்த ஃபோட்டோ..

 




நம் குழந்தைகள் பிறக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை விட நம் பேரன் பேத்திகள் பிறந்ததும் அவர்களைத் தூக்கிக் கொஞ்சும் மகிழ்ச்சிக்கு ஈடிணை கிடையாது. 


என் பெண் வயிற்றுப் பேரன் மும்பையில் பிறந்தபோது அவனை முதலில் தூக்கியவள் நான்தான்! அந்த மகிழ்ச்சிக்கு ஈடிணையேது? இன்றும் பாட்டி பாடாடி என்று சுற்றி வருவான். நான் செய்யும் ரசம், மைசூர்பாகு அவனுக்கு மிகவும் பிடிக்கும்.


அவன் பிறந்த நான்கு நாளில் எடுத்த புகைப்படமும், இன்று பதினைந்து வயதில் அவனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் எனக்கு மிகப் பிடித்தவை!


ராதாபாலு

Saturday 29 May 2021

இன்று உலக தம்பதியர் தினம்..💞💕💏

 


இன்று உலக தம்பதியர் தினம்..💞💕💏


ஒருவராய்ப் பிறந்தோம்..

இருவராய் இணைந்தோம்..

இதயத்தால் கலந்தோம்..


ஒருவருக்கொருவர் 

விட்டுக் கொடுத்து 

மனதால் இணைந்து

சின்னச் சின்ன சந்தோஷங்களையும் இணைந்து ரசித்து..


எத்தனை கஷ்டம் 

வந்தாலும் அதனை 

எதிர்நோக்கி 

வெற்றி கண்டு...


ஆசை அன்பு

நேசம் பாசம்

அனைத்திலும்

இணை பிரியாமல்..


இன்றுபோல் என்றும் இனிமையாய் வாழ

இதயம் கனிந்த 

தம்பதியர் தின நல்வாழ்த்துக்கள்!



Thursday 27 May 2021

என் வாழ்க்கை இலக்கு




நாம் பிறந்து வளரும்போது நம் வாழ்க்கையின் இலக்கு பற்றியெல்லாம் யோசிப்ப

தில்லை. நமக்கு எல்லா வசதிகளும் செய்ய நம் பெற்றோர் இருக்கிறார்கள் என்ற நிம்மதி. நானும் அப்படித்தான் படித்து முடித்தேன். கல்லூரிப் படிப்பு தேவையில்லை என்ற என் பெற்றோரின் முடிவுக்கு கட்டுப்பட்டு 18 வயதில் திருமணம். 


அப்பொழுதெல்லாம் மணியனின் பயணக் கட்டுரைகளைப் படித்து பாரிஸையும், சுவிஸ்ஸையும், லண்டனையும் வாழ்வில் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை. அதெல்லாம் நடக்காது என்று மனது சொல்லும். அப்பொழு

தெல்லாம் மும்பை டில்லிக் காரர்களையே 'ஆ' வென்று வாய் பிளந்து பார்ப்போம். நான் படித்து வளர்ந்தது சென்னை

யானாலும் என் அப்பா வங்கி

யில் பிறகு சிறிய ஊர்களுக்கு மாறுதல்.என்னையே ..மெட்ராஸ் எப்படிங்க இருக்கும்? ஊருக்குள்ளயே கடல் இருக்குமாமே..என்றெல்லாம் கேட்டவர்கள் உண்டு!


என் கணவருக்கு மதுரா மாற்றல் ஆக... நீ டில்லி, ஆக்ரா தாஜ்மஹால் எல்லாம் பார்க்கலாம்...என்றார்கள். அங்கு டில்லி, ஆக்ரா, வாரணாசி, ஜெய்ப்பூர், உதய்பூர், ஹரித்வார், ரிஷிகேஷ் எல்லாம் பார்த்தபின் மீண்டும் தமிழகத்தில் பாபநாசம் (குடந்தை அருகில்) கிராமத்துக்கு மாற்றல்! 


அப்பொழுது என் இலக்கு பெண் பிள்ளைகளின் படிப்பு. அவர்களை சிறந்த படிப்பு படித்து வாழ்வில் ஒரு உயர்நிலையை அடைய வைக்க வேண்டும் என்று ஊக்கம் கொடுத்தேன். யாராவது ஒருவராவது மாநில முதலாக வரவேண்டும் என்பது  என் ஆசை. அங்கிருந்து குடந்தை, ஈரோடு, மதுரை என்று பல ஊர் பள்ளிகளில் படித்தாலும் என் மூத்தமகன் மாநில மூன்றாமிடமும் இரண்டாம் மகன் மாநில முதலிடமும் பெற்றதில் மகிழ்ச்சியடைந்தேன்.


எனக்கு மருத்துவர்களைப் பார்க்கும்போது தெய்வமாகத் தோன்றும். என் பிள்ளைகளுக்கு மருத்துவப் படிப்பில் ஆர்வமில்லாததால் என் பெண்ணை மருத்துவ

ராக்க விரும்பினேன். அவளுக்கும் ஆர்வம் இருந்து முனைந்து படித்து மருத்துவ

ரானாள்.  கடைசி மகன் இன்ஜினியர். IIT, IIMல் யாரும் படிக்கவில்லை என்ற என் ஆசை நிறைவேறியது என் கடைக்குட்டி மகனால்.  மும்பை IITயில் M.Tech படித்து லண்டனில் பணிபுரிகிறான்.


என் மூத்த மகன் பொறியியலில் மூன்று Ph.Dக்கள் பெற்று ஜெர்மனியில் பணி புரிகிறான். இரண்டாம் மகன் IIMல் இடம் கிடைக்காததால் XIMபுவனேஸ்வரில் MBA படித்து சொந்தத் தொழில் செய்கிறான்.குழந்தைகளுக்கு திருமணமாகி நவரத்தி

னங்களாய் பேரன் பேத்திகள். 


என் மகன் ஜெர்மனியில் இருப்பதால் என் பாரிஸ், சுவிஸ் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. 2005ம் ஆண்டு முதல் விமானப் பயணம்! முதல் வெளிநாட்டு பயணம்! என் ஆசை நிறைவேறியது. பாரிஸின் ஈஃபில் டவரையும், சுவிஸ்ஸின் ஆல்ப்ஸ் மலையையும் கண்விரியப் பார்த்து மகிழ்ந்தேன். ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில் அழகிய ரைன் நதி ஓரத்தில் நடந்து மகிழ்ந்தேன்! நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அழகிய நகரமான லண்டன் சென்று வந்தோம்! என் இலக்கு நிறைவேறியது! அத்துடன் என் லிஸ்ட்டில் இல்லாத பல நாடுகளும் பார்த்தாச்சு! 


காசி யாத்திரை, சார்தாம் யாத்திரை இன்னும் பல முக்கிய ஆலயங்களின் தரிசனத்தில் மெய்சிலிர்த்

தோம். ஸ்ரீ சத்ய சாய் பாபா என் குரு. புட்டபர்த்திக்கு பலமுறை தரிசனத்துக்கு சென்றிருக்

கிறேன். ஒருமுறை அங்கு சர்வீஸ் செய்ய அருள் செய்ய அவரை வேண்டினேன். சாயி பக்தையான என் தோழி அதற்கான முறைகளை செய்து என்னை சர்வீஸுக்கு அழைத்துச் சென்றாள். அதிர்ஷ்டவசமாக அங்கு சுவாமி வந்து அமர்ந்து தரிசனம் தரும் இடத்தை சுத்தம் செய்து துடைத்து பக்தர்களின் வரிசையை சரிசெய்யும் பணி. எட்டு நாட்கள் சுவாமி முன்னால் அமர்ந்து தரிசிக்கும் அற்புத பாக்யம். இன்று நினைத்தாலும் மெய்சிலிர்க்க

வைக்கும் அனுபவம்.


எல்லா கடமைகளையும் முடித்த நிலையில் அடுத்து அழகிய தூணும் திண்ணையுமாக, தோட்டத்தில் காய்கறி பூச்செடிகளும், தென்னையும், வேப்ப மரமும் இரு பக்கம் நின்றிருக்க காவிரிக் கரையில் கிராமிய அமைப்பில் இன்றைய வசதிகளோடு ஒரு வீடு வாங்கும் ஆசையும் சமீபத்தில் நிறைவேறியது. 


என் வாழ்க்கைக்கான இலக்குகளை என்னுள் உருவாக்கிய இறைவனே அவற்றை நிறைவேற்றியும் வைத்துள்ளான் என்றே நான் நம்புகிறேன். என்றும் இறைசிந்தனையும், எல்லாம் அவனே என்ற ஆத்ம சமர்ப்பணமும் கொண்டு அவன்தாள் பணிந்து எவருக்கும் கஷ்டம் தராமல் அவன் இணையடி அடைய வேண்டும் என்பதே எங்கள் இறுதி இலக்கு🙏



Wednesday 5 May 2021

மத்யமர்_குறுங்கதை



உணர்வுகள்

காவேரியும் குமாரசாமியும் மிகவும் அந்நியோன்ய தம்பதிகள்.  அவள் கணவர் குமாரசாமி விவசாயி. நிறைய நிலங்கள் இருந்தது. உணவுக்கு பஞ்சமில்லாத வாழ்வு. சொந்தமாக ஒரு சிறிய வீடு. ஒரே பிள்ளை சுகுமார். 


அவனுக்கு சிறுவயது முதலே பிடிவாதம், கோபம் எல்லாம் உண்டு. அவன் சகவாசம் சரியில்லை. காவேரியும், குமாரசாமியும் எவ்வளவோ புத்திமதி  சொல்லியும் அவன் திருந்துவதாக இல்லை. பத்தாம் வகுப்புவரை தட்டுத் தடுமாறி தேறியவன் எப்போதும் கண்டவர்களுடன் ஊர் சுற்றுவது, சிகரெட், மது என்று பொழுதைக் கழித்தான்.


வேலைக்குப் போக வேண்டிய வயதில் வீண் பொழுது போக்கி யதோடு விலை உயர்வான உடைகள், பைக் இவற்றை வீட்டில் பிடிவாதம் செய்து வாங்கி ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு ஊரை சுற்றிக் கொண்டிருந்தான். விவசாயத்தில் அவனுக்கு சிறிதும் நாட்டமில்லை.


குமாரசாமிக்கு மகனைப் பற்றிய கவலையில் காச நோய் வந்து  உடல்நிலை மோசமாகியது. காவேரி மகனிடம் வேலைக்கு செல்லாவிட்டாலும் விவசாயம் பார்த்துக் கொள்ளும்படி கெஞ்சினாள். அவனோ எதைப் பற்றியும் கவலையின்றி ஊதாரியாகத் திரிந்தான். 


குமாரசாமி காவேரியிடம் "காவேரி பூமிதான் நமக்கு தாய். விவசாயம்தான் நம் தொழில். ஒரு காணி நிலமாவது நமக்கு சொந்தமா இருக்கணும். நம்ம பிள்ளை ஒருநாள் மனசு மாறி வந்து அதை வெச்சு விவசாயம் செய்யணும். இதான் என் ஆசை" என்றார்.


குமாரசாமியின் உடல்நிலை மோசமாக, வழியின்றி நிலத்தை விற்று வைத்தியம் செய்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்ததைக் கேட்டும் குடிபோதையில் இருந்த சுகுமாரை நான்குபேர் பிடித்து அழைத்து வந்து கொள்ளி போடவைத்து காரியம் செய்தார்கள்.


போதை தீர்ந்ததும் இனி சொத்துக்கள் தனக்குதான் என்பதால் சுகுமார் தன் தாயைத்  துன்புறுத்தி மீதமிருந்த நிலங்களை தன் பெயருக்கு மாற்றிக் கொண்டவன் எல்லாவற்

றையும் விற்று பணத்துடன் சிங்கப்பூருக்கு  செல்வதாகக் கூறிவிட்டு சென்றுவிட்டான். காவேரி எவ்வளவோ அழுதும், கெஞ்சியும் அவனைத்  தடுக்க முடியவில்லை. 


அவர்கள் வீட்டை நல்ல வேளையாக விற்காததால் காவேரி அதைத் தன் பெயருக்கு மாற்றிக் கொண்டாள். வீட்டை சுத்தம் செய்தபோது குமாரசாமியின் பெட்டியில் ஒரு பத்திரம் கிடைத்தது. அதை தெரிந்த  நண்பரிடம் காட்டி என்னவென்று கேட்டாள். அவர் அது ஒரு நிலப் பத்திரம் என்றும், குமாரசாமி இறப்பதற்கு சில நாட்கள் முன்பு  இரண்டு  ஏக்கர் நிலம் வாங்கியிருப்பதாகவும் அது இருக்கும் இடத்தையும் சொன்னார்.


அங்கு சென்று பார்த்தவளுக்கு தன் கணவர் செய்த காரியத்தை நினைத்து கண்கலங்கியது. மகனுக்கு தெரிந்தால் இதையும் விற்றுவிடுவான் என்று சொல்லாமல் இருந்திருக்

கிறாரென்று புரிந்தது. ஆற்றுக்கு அருகிலிருந்த அந்த நிலத்தில் விவசாயம் செய்தால் பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்து பலன் தரும். ஆனால் தன்னால் முடியாது என்பதால் நம்பிக்கையானவர்களிடம் குத்தகைக்கு கொடுத்தாள். 


தன்னிடமிருந்த பணத்தை வைத்து வாசலில் ஒரு சிறிய பெட்டிக்கடை வைத்தாள். காலை நேரங்களில் இட்லிக்கடை வியாபாரம் நன்றாக நடந்தது. இந்த வருமானம் அவளுக்கு போதுமானதாக இருந்தது.


தன் கணவர் நினைவு வரும் நேரங்களில் அவர் எப்போதும் அமர்ந்திருக்கும் சாய்வு நாற்காலி அருகில் அமர்ந்து தன் உணர்ச்சிகளை, எண்ணங்களை அவரிடம் பேசுவதாக நினைத்து சொல்வாள். மனம் ஆறுதலடைவது போல் உணர்வாள்.


நாட்கள் ஓடின. வயது எழுபதானாலும், மகன் என்றாவது ஒருநாள் வருவான் என்ற நம்பிக்கையில் நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறாள் காவேரி