Tuesday 12 January 2021

🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..12.1.'21



தீபம் இதழில் பிரசுரமான என் கட்டுரை..

ஹனுமத் ஜயந்தி
இன்று ஹனுமனின் பிறந்தநாள். அனுமன் கதை நாம் அறிந்ததே. இன்று அவரது வித்யாசமான ஆலயம் பற்றி அறிவோம்.

மார்கழியில் வரும் அமாவாசையும், மூல நட்சத்திரமும் சேர்ந்த தினம் ஹனுமத் ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. ராமபக்தியில் திளைத்து ராமரின் நினைவிலேயே இன்றும் ஹனுமான் சூக்ஷ்ம ரூபமாக இருப்பதாக ஐதீகம். இன்றும் ராமரின் கதை சொல்லப்படும்  இடத்தில் எல்லாம் ஹனுமான் சென்று பயபக்தியுடன் கேட்பதாக கூறப்படுகிறது. அந்த ஹனுமானின் ஆலயங்கள் நாடு முழுதும் உள்ளது. பால  ஹனுமான், பஞ்சமுக ஹனுமான், வீர ஹனுமான் என்று பல பெயர்களில் அழைக்கப்படும். ஹனுமத் ஜெயந்தி நாட்டில் மார்கழி மாத அமாவாசையிலும், வட  நாடுகளில் சித்திரை பௌர்ணமி அன்றும், ஆந்திராவில் 41 நாட்கள் விமரிசையாகவும் கொண்டாடப்படுகிறது. 

நல்லாத்தூரில் ஆலயம் கொண்டு அருள் தரும் வீரமங்கள ஆஞ்சநேயர் ஸ்ரீவியாசராயரால் உருவாக்கப்பட்டவர். 15ம் நூற்றாண்டில் விஜயநகர அரசர்களின் குருவாக விளங்கிய வியாசராயர் ஒருமுறை துன்புற்ற போது,ஆஞ்சநேயரைத் துதித்து தன் துன்பம் நீங்கப் பெற்றால், தம் வாழ்நாள் முழுதும் ஹனுமனுக்கு பல ஆலயங்கள் எழுப்புவதாக வேண்டிக் கொண்டார். அவ்வாறே  732 ஹனுமான் ஆலயங்களை ஏற்படுத்தினார். அவற்றுள் பிரசித்தமான ஒன்றே குசஸ்தலை ஆற்றின் கரையில் அமைக்கப்பட்டுள்ள வீரமங்கள ஆஞ்சநேயர் ஆலயம். 

வியாசராயர் தன்  சீடர்களுடன் ஆஞ்சநேயரின் சிலையை திருப்பதியில் பிரதிஷ்டை செய்ய எடுத்துச் சென்றபோது, நதியில் வெள்ளம் வந்துவிட்டதால் நல்லாத்தூரிலேயே ஆலயம் எழுப்பி, அனுமனை ஸ்தாபித்தார். அதனாலேயே திருப்பதியை நோக்கி செல்வது போன்றும், ஹனுமானின் முகம் திருப்பதி இருக்கும் திசை நோக்கியும்  உள்ளதாம்.

பல நாட்கள்  மண்ணில் பாம்புப் புற்றில் புதைந்து கிடந்த ஆஞ்சநேயரை அக்கோயிலில் குடிகொண்டிருக்கும் நாகங்கள் பூஜித்து வந்ததாம். சென்னையைச் சேர்ந்த திரு சக்கரவர்த்தி என்ற தொழிலதிபரின் கனவில் தோன்றிய ஆஞ்சநேயர் தனக்கு ஆலயம் எழுப்பும்படி கூறி, அவரால் சீர்திருத்தப்பட்டு அழகிய ஆலயம் உருவாகியது. 1998ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இன்றும் நாகங்கள் இந்த ஹனுமனை தினமும் வந்து வழிபட்டு செல்வதாகக் கூறப்படுகிறது.

அடி உயர ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பால ஆஞ்சநேயராகக் காட்சிதரும் இவரின் அங்கத்தில் அணிந்திருக்கும் ஆபரணங்களின் அழகே அழகு. கிழக்கு பார்த்த சந்நிதியில் வடக்கு நோக்கியவாறு காட்சிதரும் ஆஞ்சநேயரின் கண்கள் கிழக்கு பார்த்து அமைந்திருப்பது சிறப்பு. 

வலக்கை அபய ஹஸ்தமாகவும், இடக்கையில் தாமரை மொட்டும் தாங்கியபடி காட்சி தரும் அவரது கைகள்  கேயூரம், அங்கதம், கங்கணம் என்ற ஆபரணங்களோடு விளங்குகிறது. தாமரை ஞானம், ஐஸ்வர்யம், வெற்றி மூன்றையும் உணர்த்துவதால் முத்தேவியரான லட்சுமி, சரஸ்வதி, துர்கையை எடுத்துக் காட்டுகிறது. கால்களில் தண்டை, நூபுரம் இவற்றுடன் பிரம்மச்சாரி என்பதன் அடையாளமாக கௌபீனம், தலையில் முடியப்பட்ட சிகை, பூணூல் இவற்றோடு வைணவர்களின் அடையாளமாக நெற்றியில் திருமண்   உள்ளது. பிங்காக்ஷம் என்னும் பொன்வண்ண கண்மணிகளுடன் , பாதி மூடிய விழிகளால் பக்தர்களுக்கு தன்  அருளை வாரி வழங்குகிறார்.

பஞ்சமுக குண்டலங்களைக் கொண்ட அவரது அகன்ற காதுகள் சதாநேரமும் ராமகதையில் லயித்துள்ளது.இரண்டு கைகளிலும் கேயூரம், கங்கணம், பரிஹரியாஜா என்ற அழகிய ஆபரணங்களும், காலில் தண்டை, நூபுரம் அணிந்து சர்வாலங்கார பூஷிதனாகக் காட்சி தருகிறார். கோரைப்பல், இடுப்புப் பட்டை,கழுத்தில் நவரத்னம் பதித்த சாலிக்ராம மாலை, தலைக்கு மேல் உயர்ந்த வாலில் கட்டிய மணி என்று அத்தனை அழகாய் இருக்கிறார் பால  ஆஞ்சநேயர். 

அவரது பின்பக்கம்மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களும் வடிக்கப் பட்டுள்ளன. அவர்முன் நின்று நம் வேண்டுதல்களை முறையிடும்போது 'யாம் இருக்க கவலையில்லை' என்று பாதி திறந்த அருள் விழிகளால் நம்மைப்  பார்த்து கையசைத்து ஆறுதல் சொல்வது போல தோன்றுகிறது. மிக்க வரபிரசாதியானவராம்   இவர்! மலை போன்ற துன்பங்களையும் பனிபோல நீக்குவதில் இந்த ஹனுமனுக்கு இணை இவரே என்று கூறுகின்றனர். திருமண பாக்கியம், குழந்தைப்பேறு, 
நல்ல வேலை, நோயற்ற வாழ்விற்கு இந்த ஹனுமனை வழிபட்டால் உடன் பலன் நிச்சயம்.

ஆஞ்சநேயரின் கருவறை விமானத்தில் தெற்கில் சங்கு, சக்ரதாரியான யோக   ஆஞ்சநேயரும்,
வடக்கில் இடுப்பில் கைகளுடன் காட்சி தரும் வீர ஆஞ்சநேயரும், கிழக்கில் பக்த ஆஞ்சநேயரும், மேற்கில் பத்து கரங்களும், ஐந்து முகங்களும் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயரும் அழகுறக் காட்சி தருகின்றனர்.

ஆஞ்சநேயர் சன்னிதியை சுற்றிலும் சீதா, லக்ஷ்மண ஸ்ரீராமர், லக்ஷ்மி வராகர், லக்ஷ்மி நரசிம்மர், லக்ஷ்மி ஹயக்ரீவர், மங்கள கணபதி, தக்ஷிணாமூர்த்தி,நாகதேவதை, வாகனங்களுடன் நவகிரக சன்னிதிகள் அமைந்துள்ளன. சனீஸ்வரர் ஆஞ்சநேயரை நேருக்கு நேர் பார்த்தவாறு அமைந்துள்ளார். அதனால் இத்தலம் ராகு, கேது தோஷப் பரிகாரத் தலமாகப் போற்றப்படுகிறது. 

வெளியில் 42 அடியில் சுதைரூபமாகக் காட்சி தரும் அமர்ந்த ஆஞ்சநேயரின் வால்  அவரது இடது கைக்குள்ளாக வெளியில் வந்திருப்பது போல் அமைத்திருப்பது அற்புதமான கலையம்சமாகும்.

வைகானச ஆகமப்படி பூஜைகள் நடைபெறும் இவ்வாலயத்தில் ராமநவமி, ஹனுமத் ஜெயந்தி மிக விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றன. மற்றும் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகள் மிக விசேஷமானவை.

ஆலயம் நல்லாத்தூரில் குசஸ்தலை ஆற்றின் கரையில் திருத்தணியிலிருந்து 
20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

ஆலய நேரம்---காலை 6 -12---மாலை 4 -8    தொலைபேசி...04118-270666

இன்றைய நிவேதனம்..பால் பாயசம்..தேங்காய்ப்பால் பொங்கல்

ஆஞ்சநேயர் கோலம்

🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..11.1.'21





மார்கழி இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. ஒரு மாதம் பூராவும் விடிகாலை எழுவது, பூஜை, திருப்பாவை, கோலம், பஜனை, பொங்கல் என்று உற்சாகமாகப் போயிற்று! எல்லா ஆலயங்களும் இந்த மாதம் பூராவும் விழாக் கோலம் கொண்டு சிறப்பாக வழிபாடுகள் நடந்தன.

திருப்பாவை நாயகி ஆண்டாளின் திருத்தலமான ஸ்ரீவில்லிப்புத்தூரில் கூடாரவல்லி எனும் இன்றைய நாளில் பக்தர்கள் ஆண்டாளை தரிசிக்க திரளாக வருவர்.

இன்றுதான் ஆண்டாள் விரதத்தைப் பூர்த்தி செய்கிறாள். மார்கழி இரண்டாம் நாள் ஆண்டாள் கண்ணனின் தரிசனத்திற்காக கடுமையான விரதம் மேற்கொள்ளும்படி தன் தோழிகளைக் கேட்டுக் கொள்கிறாள். அந்த தரிசனம் கிடைத்தபின்பு ஆண்டாள் தன் விரதத்தைப் பூர்த்தி செய்வதை 27ம் பாசுரத்தில் குறிப்பிட்டு    பாடிப்புகழ்கிறாள்.

'மூட நெய் பெய்து முழங்கை வழிவார' என்பதன் பொருள் என்ன? ஆண்டாள் ஏன் அப்படி சொல்கிறாள்?ஆண்டாளும் தோழிகளும் கண்ணனின் தரிசனம் பெற்று பிரசாதத்தை சாப்பிட்டு முடித்து விட்டால் கண்ணன் கிளம்பி விடுவானே!

அதனால் அக்காரவடிசிலை  கையிலெடுத்துவிட்டு, சாப்பிடாமல் அவனோடு பேசியே பொழுதைக் கழிப்பார்களாம்! அதற்குள் கையிலிருக்கும் அக்கார அடிசிலிருந்து நெய் பிரிந்து முழங்கை வரை வந்து விடுமாம்!

திருமண வரம் வேண்டுவோர்  இந்த நாளில்,  தவறாமல் பெருமாள் கோயிலுக்குச் சென்று ஆண்டாள் சந்நிதியில் நின்று ‘கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ என்னும் திருப்பாவை 27 வது பாசுரத்தைப் பாடி வேண்டினால் விரைவில் திருமணம் நடைபெறும்.

கூடாரவல்லி அன்று அக்காரஅடிசிலும் வெண்ணெயும் நிவேதிக்க வேண்டும். இதற்கு ஒரு காரணம் உண்டு. ஆண்டாள் நாச்சியார், அந்தக் கண்ணனே தனக்கு மணவாளனாகினால் 108 பாத்திரங்களில் அக்கார அடிசிலும் வெண்ணெயும் சமர்ப்பிக்கிறேன்’ என்று வேண்டிக்கொண்டாளாம். 

அவள் திருமண மகிழ்ச்சியில் மறந்திருப்பாளென நினைத்த ஸ்ரீராமாநுஜர் அவள் சார்பாக  அந்த வேண்டுதலை நிறை 

வேற்றினாராம். இதனால் 'பெரும்புதூர் மாமுனிக்கு பின் ஆனாள் வாழியே' என்றபடி அவருக்கு தங்கையாகிறாள் ஆண்டாள்! அவர் ஸ்ரீவில்லித்தூர் வந்தபோது ஆண்டாள் 'அண்ணா' எனக் கூப்பிட்டபடி எட்டடி முன்னால் வந்து விட்டாளாம்.அதனாலேயே இன்றும் அங்கு மூலவரை விட்டு எட்டடி முன்னால் உற்சவர் உள்ளது.

எனவே திருமண வரம் வேண்டுபவர்கள் கூடாரவல்லி அன்று  வீட்டிலேயே ஆண்டாள் வழிபாடு செய்து அக்கார அடிசல் மற்றும் வெண்ணெயினைப் பெருமாளுக்கு சமர்ப்பித்து வேண்டிக்கொண்டால் திருமணம் விரைவில்  கைகூடும்.

ஆண்டாள் பூமகளின் திருஅவதாரம். கூடாரவல்லி நாளில் நம் தாயாகிய பூமித் தாயைப் போற்றிப் புகழ்ந்து நற்பலன்களைப் பெறுவோம்.

இன்றைய நிவேதனம்..மில்லட் பொங்கல், அக்கார அடிசில்


🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..9.1.'21





மார்கழி வளர்பிறை ஏகாதசி இன்று அனுஷ்டிக்கப் படுகிறது.அதற்கு சபலா ஏகாதசி என்று பெயர். இவ்வருடம் ஜனவரியில் வரும் இந்த சபலா ஏகாதசி டிசம்பர் 31 அன்று மீண்டும் வருவது சிறப்பாகக் கூறப்படுகிறது.

இதற்கான கதை வித்யாசமானது. மாகிஷ்மன் என்ற மன்னனின் மூத்த மகன் லும்பக். அவன் நற்குணங்களின்றி தீய வழியில் வாழ்ந்ததால், அரசன் அவனை நாடு கடத்தி விட்டான். செல்வந்தனாக சொகுசாக வாழ்ந்தவன் காடுகளில் வாழ முடியாமல் உணவின்றி தவித்தான். ஒருநாள் இரவு உணவின்றி பசியால் தூங்க முடியாமல் தவித்தான். மறுநாள் தன் விதியை நொந்தபடி இறைவனை வேண்டி கிடைத்த பழங்களைக் கொண்டு வந்து சாப்பிட்டும் பசி அடங்காததால் அன்றும் தூக்கமின்றி கழித்தான்.

அவனுக்கே தெரியாமல் சபலா ஏகாதசி அன்று விரதம் இருந்ததால் அவன் நற்புத்தி அடைந்தான். மனம் திருந்தி நாட்டுக்குச் சென்றவனை அரசன் மகிழ்ந்து வரவேற்று அவனை மன்னனாக்கினான்.அவனும் பக்தியுடன் நல்ல முறையில் அரசாண்டு விஷ்ணுலோகம் அடைந்தான். 

அறியாமல் விரதம் இருந்தாலும் நற்பலன்களையும் மோட்சத்தையும் தரும் இந்த ஏகாதசி விரதம். 

ஏகாதசி நாட்களில்  உண்ணாமலும், உறங்காமலும் விரதம் இருக்கவேண்டும். அன்று துளசி இலை பறிக்கக்கூடாது. பூஜைக்குரிய துளசியை முதல்நாளே பறித்துவிட வேண்டும். மறுநாள் துவாதசியன்று சூரிய உதயத்திற்குள் நீராடி துளசி தீர்த்தம் அருந்திய பின்பே உணவு உண்ண வேண்டும்..

துவாதசியன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் உணவில் இடம்பெற வேண்டும். அகத்திக் கீரையில் பாற்கடல் அமுதமும், நெல்லி, சுண்டைக்காயில் லட்சுமியின் அருளும் இருப்பதாக ஐதீகம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து நாம் சாப்பிட வேண்டும். அன்று பகல் முழுவதும் உறங்காமல் நாராயண நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும். 

இந்த வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமாக தீராத நோய்கள் அகலும். சகல செல்வங்களும் உண்டாகும். சபலா என்பதற்கு வெற்றி என்பது பொருள். இந்த விரதம் இருப்பவர்கள் வாழ்வில் பல வெற்றிகளைப் பெற்று சிறப்பாக வாழ்ந்து நாராயணன் திருவடி அடைவர்.

சென்ற ஆண்டு நான் போட்ட பெருமாள் கோலங்களில் சில உங்கள் பார்வைக்கு..

இன்றைய நிவேதனம்..பயத்தம்பருப்பு பாயசம்..கோதுமைரவா மில்க்மெய்ட் பொங்கல்


Saturday_special..9.1.2021

 என் மருமகள் ஆர்த்தி மிக நன்றாகப் பாடுவாள். நடனம் ஆடுவாள்.ஆனால் இளம் வயதில் அவளை யாரும் உற்சாகப் படுத்தி ஆடவோ பாடவோ சொல்லவில்லை என்று குறைப்பட்டுக் கொள்வாள். 

அவள் திருமணத்தில் நலங்கின்போது அப்பொழுது பிரபலமான  சந்திரமுகி திரைப்படத்தில் வரும் பாட்டான 'ராரா' பாட, அவள் பாட்டில் என் மகனோடு சேர்ந்து மயங்கி விட்டோம் நாங்களும்! எந்தப் பாட்டும் கேட்டதும் அப்படியே பாடுவாள். நடனமும் அப்படியே! இத்தனைக்கும் அவள் முறையாக நடனமோ இசையோ கற்றுக் கொள்ளவில்லை.  

எங்கள் சஷ்டிஅப்த பூர்த்தியின்போது என் பெண்ணும் அவளுமாக ஆடிய நடனத்தைப் பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்தனர். சென்னையில் நாங்கள் குடியிருந்த பில்டிங்கில் சுதந்திர தினத்தன்று அவள் ஆடிய 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே' நடனத்துக்கு பலத்த கைதட்டல் கிடைத்தது!

இப்பொழுது அவர்கள் எங்களுடன் இருப்பதால் அனந்து அவர்களின் 'மத்யமர்  மார்கழி வைபவத்தில் @ திருப்பாவைக்கு நடனம் ஆடச் சொன்னேன். இரண்டு நாளில் practice செய்து அருமையாக ஆடினாள். 

எவருமே பாராட்டி ஊக்கமளிக்கும்போதுதான் அவர்களுக்குள்ளிருக்கும் திறமை வெளிப்படும். நம் மத்யமர் திறமைகளை ஊக்கப்படுத்துவதால்தான் இன்று பலரும் தம் உள்ளே மறைந்திருந்த எழுத்து, இசை, நடனம், ஓவியம் போன்ற திறமைகளை வெளிக்காட்ட முடிகிறது. இன்று ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு தனித்திறமை மறைந்திருப்பதை மத்யமரில் எழுதுபவர்களிடமிருந்து கண்கூடாகக் காணமுடிகிறது. அதனால் அடையும் மகிழ்ச்சியும் தனிதானே! இதற்கு மத்யமர் தளம் உதவியாக இருப்பதை நினைத்து மிகப் பெருமையாக உள்ளது. 

இதில் நான் மட்டுமன்றி என் குடும்ப உறுப்பினர்களின் திறமையையும் வெளிப்படுத்த முடிவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் மருமகள் ஆர்த்தியின் திருப்பாவை நடனங்கள் உங்கள் பார்வைக்கு! மத்யமருக்கு நன்றிகள் பல🙏


🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..8.1.'21




மார்கழியின் மற்றொரு சிறப்புகச்சேரிகளும் இசைவிழாக்களும்!

ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் மார்கழி மாதக் கச்சேரிகள் இம்முறை இணையதளங்கள் மூலம் நடத்தப் படுகிறது.
ஆண்டாள் இயற்றிய திருப்பாவை, மாணிக்க வாசகரின் திருவெம்பாவை, நாம சங்கீர்த்தனம் முதல் தொடங்கி இசை கச்சேரிகள், நாடகம், நடனம் என கலைகள் அனைத்தையும் கொண்டாடும் மரபாக மாறி விட்டது மார்கழி திருவிழா.

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் முழுதும் கருநாடக இசைக் கச்சேரிகள் நடத்தப்
படுகின்றன.இதுவே டிசம்பர் இசை விழா அல்லது மார்கழி இசைவிழா என்றழைக்கப்
படுகிறது. இவ்விழா நடக்கும் இதைடிசம்பர் சீசன் எனப் மெட்ராஸ் மியூசிக் சீசன் என்றும் அக்காலம் முதற்கொண்டு சொல்லப்பட்டு வருகிறது.

அந்நாளில் இயல் இசைக் கலைஞர்கள் நம் நாட்டிலேயே இருந்தார்கள். அது ஒன்றே அவர்கள் தொழிலாகவும் இருந்தது. இன்றோ தம் வேலைநிமித்தம் வெளிநாடுகளில் இருப்போர் இந்த இசை நிகழ்ச்சிக்காக நம் நாட்டிற்கு வருகிறார்கள்.

1927 ஆம் ஆண்டு மியூசிக் அகாடமி தொடங்கப்பட்டது. அந்தநாளைக் குறிக்குமுகமாக ஒவ்வொரு ஆண்டும் ஒருமாதம் இசை விழா கொண்டாடப்
பட்டது.  இந்த விழாவில் கச்சேரிகள், ஹரி கதைகள்,  இசை விரிவுரைகள், விருது மற்றும் பட்டம் வழங்குதல் போன்றவை பாரம்பரியமாக நிகழ்த்தப்படுகின்றன. காலப்போக்கில் நடனம் மற்றும் நாடகங்களும் இவ்விழாவில் இடம்பெற்றன. இன்றோ பல ஊர்களிலும் பல சபாக்கள் போட்டி போட்டுக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.

இன்றைய நிவேதனம்..வெண் பொங்கல்..சர்க்கரைப் பொங்கல்

இன்றைய கோலம்..இழைகோலம்

🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..6.1.'21




மார்கழி மாதத்திற்கு ஏராளமான புராண சிறப்புகள் உண்டு. மற்ற மாதங்களில் ஒரு நாளோ, ஒரு கிழமையோ மட்டுமே  இறைவனுக்கு உகந்ததாக இருக்கும். ஆனால் மார்கழியில் மட்டும் அந்த மாதம் முழுவதும் இறைவனை வழிபடும் மாதமாகப் போற்றப்படுகிறது.


மார்கழி மாதம் தேவர் மாதம் எனப்படும். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கப்பட்டுள்ளதால், இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை.


நம்முடைய ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தை முதல் ஆனி வரையுள்ள காலம் பகல் எனவும், ஆடி முதல் மார்கழி  வரையுள்ள காலம் இரவு எனவும் ஆகும். இதன்படி தேவர்களுக்கு இரவுக் காலம் முடிகிற வைகறைப் பொழுது, மார்கழி மாதமாகும். சூரிய உதயத்துக்கு  முன்பான இந்தக் காலம் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படும்.


பெருமைகள் அதாவது 'பீடு' நிறைந்த மாதம் என்பதே மருவி 'பீடை' என்று ஆனது. 'பீடு' என்றால் 'பெருமை'எனப் பொருள்.


மார்கழியின் 30 நாட்களும் விரதம் இருந்து, பெருமாளைத் தனது கணவனாக ஆண்டாள் ஏற்றுக் கொண்டாள்.


மார்கழி மாதத்திற்கு ஏராளமான புராண சிறப்புகள் உண்டு. அதாவது, மகாபாரத யுத்தம் இம்மாதத்தில் தான் நடந்ததாம்.


திருப்பாற்கடல் கடையப்பட்ட

போது, முதலில் விஷம் வந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியது இந்த மார்கழி மாதத்தில்தான்.


இந்திரனால் பெரு மழை வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, 

கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மார்கழி மாதத்தில்தான் என்பது வரலாறு.


இறை வழிபாட்டிற்கு  சிறந்த மாதமாக கருதப்படும் இந்த மார்கழி மாதத்தில் நாமும் வைகறைத் துயிலெழுந்து இறைவனை எண்ணத்தால் துதித்துப் போற்றி அனைத்து செல்வங்களையும் பெறுவோம்.


இன்றைய கோலம்..Rangoli with a message..Welcoming vaccine for Corona


இன்றைய நிவேதனம்..அன்னாசிப் பொங்கல்


🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..5.1.'21




மார்கழியில் கோலம் போடுவதன் முக்கியத்துவம் பற்றி பார்த்தோம். இனி எப்படி கோலம் போட வேண்டும் என்று பார்ப்போம்.

பசுவின் சாணி ஒரு சிறந்த கிருமி நாசினி என்பதால் சாணத்தை நீரில் கரைத்து வாசல் தெளிக்கவேண்டும்.
கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்களினால் நோய்த் தொற்றுகள் ஏற்படும்.

இதைத் தவிர்க்கவே சாணத்தில் மகாலட்சுமி உறைவதாகவும், சாணப் பிள்ளையார் பிடித்து வைத்தால் நல்லது என்றும் கூறி வாசலில் சாணத்தைக் கரைத்துத் தெளிப்பதை பழக்கமாக்கினர் நம் முன்னோர்.

அதன்மீது அரிசி மாவில் கோலமிட வேண்டும். செருப்பு போட்டுக் கொண்டு கோலமிடக் கூடாது.

மேலிருந்து கீழ் நோக்கி புள்ளிகள் வைத்து, கீழிருந்து மேல் நோக்கி கோலம் வரைய வேண்டும். அழித்து, அழித்து கோலம் போடக் கூடாது.

பொதுவாக, கோலம் போடுவதில் பல பலன்கள் உள்ளது. குனிந்து கோலமிடுவது, நல்ல யோகா செய்வது போன்ற பயன்தரும். 

மார்கழியில் விடிகாலை ஓஸோன் ஈதிகமாக இருப்பதால் கோலமிடும்போது நல்ல சுத்தமான காற்றை சுவாசிக்கலாம்.

புள்ளிகள் வைத்துக்  கோலம் போடுவதால், புத்தி சிதறாமல் ஒரு நிலையில் இருக்க பயிற்சியாகும். தலைக்கு ரத்த ஓட்டம் பாய்வதால், ஞாபக சக்தி அதிகரிக்கும்.

நாம் நடக்கும் போது நம் காலடிபட்டு எறும்பு, பூச்சி போன்ற பல உயிர்கள் இறந்து போவதால் ஏற்படும்  தோஷத்
தினால் கன்னிப்பெண்களுக்கு
திருமணத்தில் தடை வரும்.
மார்கழிக் குளிரில் பறவை
களும், எறும்புகளும்  உணவு கிடைக்காமல் திண்டாடும். நாம் வாசலில் அரிசிமாவில்  கோலம் போடுவதால், எறும்புகளுக்கு உணவாகும். இதனால் திருமண தோஷம் நீங்கி விரைவில் மணமாலை கிட்டும்! மேலும் அன்னதானம்
செய்த பயன் கிடைக்கும்.

இன்றைய கோலம்..Doodle art Rangoli

நிவேதனம்..அவல் க்ரீன் பொங்கல்

Monday 4 January 2021

🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..4.1.'21

 



மார்கழிக் கோலம்...

அதிகாலையில் எழுந்து கோலம் இட்டு, சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து, பூக்களால் அலங்கரித்து மார்கழியை வரவேற்பது வழக்கம்.

தேவர்களுக்கு இரவுக் காலம் முடிந்து பொழுது புலர்வது  மார்கழியில்தான். அவர்களை வரவேற்கவே அழகிய கோலம். 

இந்நாளில் கோலப் போட்டிகள் நிறைய நடைபெறுவதால் விதவிதமான கோலங்கள் போடும் முறைகள் உள்ளது.

விடிகாலையில் வாசலில் இரண்டு விளக்குகள் ஏற்றுவது தேவர்களை வரவேற்க என்பதுடன்,மார்கழி மாதத்தில் சூரியன் சற்று நேரம் கழித்து வருவதால், அதிகாலை இருள் வெகுநேரம் இருக்கும்.  வழிப்போக்கர்களுக்கு வெளிச்சம் தருவதற்காக இப்பழக்கம் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.. 

அந்நாளில் தங்கள் வீட்டில் பெண் அல்லது பிள்ளைகள் திருமணத்திற்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதை மற்றவர் அறிந்து கொள்ள அந்த வீட்டின் வாயிலில் மட்டும் கோலத்தின் மீது பூசணிப் பூ வைப்பார்கள். எல்லா வீடுகளிலும் வைக்கும் வழக்கம் கிடையாது.

இனது விடிகாலை வீதி பஜனைக்கு வருபவர்கள் கண்ணில் பட்டு இதன் விவரத்தை அவர்கள் புரிந்து கொண்டு தை மாதம் திருமணம் பேசி முடிப்பார்களாம்! அக்கால வழக்கங்கள் ஒவ்வொன்றுக்கும் எத்தனை அர்த்தங்கள்!

கோலம் பற்றிய விபரங்கள் தொடரும்...

இன்றைய கோலம்..ராஜஸ்தானின் மண்டனா ரங்கோலி. அந்நாளில் மண் வீடுகளின் சுவற்றிலும், தரையிலும் போடப்படும். கடவுளை வரவேற்கவும், துர்சக்திகளிடமிருந்து வீட்டைக் காக்கவும் இவை வரையப்படுவதாக சொல்லப்படுகிறது.

இன்றைய நிவேதனம்..ஐந்தரிசி ட்ரைஃப்ரூட்ஸ் பொங்கல்

Sunday 3 January 2021

🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..3.1.'21




விடியற்காலத்தில் இறைவனைத் துயில் எழுப்புவதற்காக பாடப்படும் பாடல்களே திருப்பள்ளி எழுச்சி எனப்படும்.திருப்பள்ளி

யெழுச்சி என்பது,‘சுப்ரபாதம்’ 

என வடமொழியில் அழைக்கப்படுகிறது. 

இது அதிகாலைப் பொழுதில் இருள்நீங்க ஒளி எழுவதுபோல, 

ஆன்மீக விழிப்பின்றி உறங்கிக் கொண்டிருக்கும் நம் ஆத்மாவைத் துயிலெழுப்பி இறைவனின் அருளை உணரச் செயயப் பாடப்படும் பாடல்கள் ஆகும். இது இறைவனைத்

 தூக்கத்திலிருந்து எழுப்புவது போல் நம்முள் உறங்கும் இறைவனைத் துயில் எழுப்புவதாக சொல்லப்படுகிறது.


திருவரங்கத்தைச் சேர்ந்த தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய ஸ்ரீரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே திருப்பள்ளியெழுச்சிவகை படைப்புகளுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது.

திருப்பதி உட்பட அனைத்து வைணவ ஆலயங்களிலும் மார்கழி மாதம் தொண்டரடிப்

பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே பாடப்பெற்று வருகிறது.இதைப் போன்றே மாணிக்க வாசகர்  ஈசனை எழுப்புமுகமாக, திருப்பெருந்துறையில் இருந்தபோது, விடிகாலையில்  திருப்பள்ளியெழுச்சி என்னும் பத்து பாடல்களை பாடினார்.

மார்கழி மாதம் முழுதும் சிவாலயங்களில் முதல் 20 நாட்கள் அவர் இயற்றிய திருவெம்பாவையும்,  அடுத்த 10 நாட்கள் திருப்பள்ளியெழுச்சியும்  இசைக்கப் படுகின்றன.

இன்றைய நிவேதனம்..சம்பா ரவை மாங்காய்ப் பொங்கல்


🌺புத்தாண்டே வருக🌻..1.1.2021



2020..ஆரம்பித்தபோதே ஆனந்தம்தான். எப்பொழுதும் நவராத்திரியிலிருந்தே நான்  பிஸியாகி விடுவேன்.மார்கழி முழுவதும் விடிகாலை பூஜை, விதவிதமாய் கோலம்.. நேரம் சரியாக இருக்கும். 

ஜனவரி 3 மும்பையில் என் பெண்ணின் மாமனாருக்கு 75வயது நிறைவு விழாவுக்கு சென்றபோது அங்குள்ள மத்யமர் தோழிகளான Mohana Iyer, Viji Kannan இருவரையும் சந்தித்தது இவ்வருடத்தின் முதல் சந்தோஷம்!

பொங்கல் முடிந்ததும் relaxation ற்காக ஹைதராபாதிலுள்ள பெண் வீட்டிற்குச்  சென்று ஒரு மாதம் இருந்துவிட்டு  வருவோம். அதனாலேயே இரண்டு வருடங்களாக மத்யமர் ஆண்டு விழாவிற்கு

வரமுடியவில்லை. இந்த ஆண்டும் அதேபோல் சென்று பல ஆலயங்கள்,  விசாகப்பட்டினம், ஹோட்டல் சாப்பாடு என்று ஜாலியாக enjoy பண்ணிவிட்டு  வந்தோம்! 

ஏப்ரல் மாதம் பிள்ளைகள் வீட்டுக்கு லண்டனும் பெர்லினும் சென்றுவர விஸா apply செய்திருந்தோம். அங்கு போக வேண்டிய இடங்களுக்கெல்லாம் லிஸ்ட் போட்டு, அதில் Lalitha Padma Balachandranனை சந்திக்க Denmark போகும் programmeம் உண்டு...! 

நாங்கள் குடந்தையில் புண்யக்ஷேத்ரம் என்ற இடத்தில் வீடு கட்டிக் கொண்டிருந்ததால் திருச்சியிலிருந்து இங்கு மார்ச் 18 வந்தோம்...

மார்ச்22முதல் ஊரடங்கு ஆரம்பிக்க... 

கொரோனாவால் உலகமே ஸ்தம்பிக்க...

விஸா cancel ஆகி என் ஆசை புஸ்வாணமாயிற்று!

கட்டிட வேலைகளும் நின்றுவிட...

வெளியில் எங்கும் செல்ல முடியாமல்...

இங்கு மாசில்லாத காற்றும், காலடியில் காவேரியும்..

பசுமையான சுற்றுச் சூழலும் எங்களுக்கு புத்துணர்வுதர..

இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை இன்பமயம்தானே!

ஜூன் மாதத்தில் என் கணவரின் சித்தப்பா பிள்ளை கொரோனாவிற்கு பலியாக..சற்றே நிலைகுலைந்து போனோம் நாங்கள். வெளியில் வரவே பயந்த நாட்கள் அவை..

மனிதரைப் பார்த்து மனிதரே பயந்த கொடுமையான நாட்கள்...

ஜூலைக்குப் பின்பே வீட்டு வேலைகள் நடந்து, எங்கள் ஆசைப்படி வீடு கட்டி ஆகஸ்ட்டில் கிரகப்ரவேசம் செய்தோம். சென்னையிலிருந்து வந்த என் பிள்ளை குடும்பம் இந்த சூழ்நிலையில் மயங்கிப் போனார்கள்!

பங்களா போல வீடு..பக்கத்தில் தோட்டம்..விளையாட நாய்க்குட்டி..மாஸ்க் போட வேண்டாம்..கால்வீசி நடக்கலாம்..காவேரியில் குளிக்கலாம் என்று பேத்திகளுக்கு பரம சந்தோஷம்!

பேத்திகளுக்கு online classes.. என் பிள்ளைக்கும் work from home என்பதால் கடந்த ஆறு மாதங்களாக இங்குதான் இருக்கிறார்கள். என் பெண்ணும் குழந்தைகளுடன் வர ஒரே கொண்டாட்டம்தான்.

பேத்திகளோ இனி ஜூன்மாதம் பள்ளி திறக்கும்போது போனால் போறும் என்று ஒரே குஷியில் இருக்கிறார்கள்!

வீட்டு வேலைகள் அதிகம் என்பதால் மத்யமரில் அதிகம் என்னால் எழுத முடியவில்லை. இந்தமுறை 'மத்யமர் மார்கழி வைபவத்'தில் கலந்து கொண்டு  திவ்யதேசங்கள் பற்றி பேசியதும், என் மருமகள் திருப்பாவைக்கு நடனம் ஆடியதும் மறக்க முடியாத சந்தோஷ நேரங்கள்!

கொரோனாவால் பல கஷ்டங்கள் வருத்தங்கள் இருந்தாலும் குடும்ப மக்கள் ஒன்றாக இருக்கும்போது ஒருவரை ஒருவர் இன்னும் அதிகம் புரிந்து கொள்ளவும், நேசிக்கவும் முடியும் என்பது மறுக்க முடியாத நிஜம். 

சென்ற ஆண்டு நாம் நினைத்தே பார்க்காத மாற்றங்களைத் தந்தாலும் அவை நம்மை நம் மனதை சுற்றுப் புறத்தை எப்படி தலைகீழாக மாற்றியது என்பதை நம்மால் மறக்க முடியாது.  

இனிவரும் 2021ம் ஆண்டு நமக்கு ஏற்றங்களைத் தரும் சிறந்த ஆண்டாக இருக்க இறையருளை வேண்டுவோம்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💐💐

🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..31.12.'20



மாணிக்கவாசகப் பெருமான் திருவண்ணாமலையை தரிசிக்கும்போது பாடிய திருவெம்பாவையில் சிவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறார். பாசுரங்கள் 'எம்பாவாய்' என்று அதன் இருபது பாடல்களிலும் முடிவதால் அதுவே திருவெம்பாவை என்ற பெயராய் அமைந்தது.

நவசக்திகள் ஒன்றுசேர்ந்து சிவபெருமானைத் துதிப்பது திருவெம்பாவையின் தத்துவமாகும். இதனை உணர்ந்து நோற்பதே பாவை நோன்பாகும்.பெண்கள் நோன்பு நோக்கச் செல்லும்

போது தூங்குபவளை எழுப்பும் காட்சி திருவெம்பாவையில் வருகின்றது. 

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி, சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்து ஈசன், அத்தன், ஆனந்தன் அமுதன், வேத விழுப்பொருள், சிவன், முன்னைப் பழம் என்று பலவாறு ஈசனைக் குறித்துப் பாடி நீராடி சிவபெருமானிடம்  வேண்டுவதாக அமைந்துள்ளது.

திருவெம்பாவையின் முதல் எட்டு பாடல்கள் சிவபெருமானின் புகழ்களைப் பாடியபடி நீராடச் செல்லுதலையும், ஒன்பதாவது பாடல் சிவபெருமானிடம் தங்கள் வேண்டுதல்களைக் கூறுவதாகவும், பத்தாவது பாடல் நீராடுதலையும் குறிப்பன.

தாய்லாந்தில் திருப்பாவை, திருவெம்பாவை மன்னர் முடிசூட்டலில் பாடப்படுகிறது.

இன்றைய கோலம்..ஐஸ்வர்யக் கோலம்

நிவேதனம்..காரட் பொங்கல்


🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..30.12.'20







(தீபம் ஆன்மிக இதழில் நான் எழுதி பிரசுரமான திருவாதிரை பற்றிய கட்டுரை)

திருவாதிரை

இன்று திருவாதிரை. ஆருத்ரா தரிசனம் எனவும் சொல்லப்படும் இந்நாள் சிதம்பரத்தில் மிக விசேஷம்.

நடராஜர் என்றதும் நம் நினைவில் தோன்றும் தலம் தில்லை அம்பலம் எனும் சிதம்பரம். அந்த சிதம்பரத்தில் நாம் தரிசிப்பது அங்கு வடிக்கப்பட்ட முதல் சிலை அல்ல. எப்படி, ஏன்?


தில்லைக்காக முதலில் செய்யப்பட நடராஜ உருவம் அங்கு நிறுவப் படவில்லை. ஆச்சரியமாக இருக்கிறதா? 

இப்பொழுது நாம் தரிசிப்பது முதல் சிலை அல்ல. அந்த சிலை இருப்பது திருநெல்

வேலி மாவட்டத்திலுள்ள செப்பரை என்ற ஊரில்! அதற்கான இறைவனின் திருவிளையாடலைப் பார்ப்போம்.


இந்த புண்ணிய பூமியில் அம்பலவாணரின் பஞ்ச சபைகள் அமைந்துள்ளன. தில்லை பொன் அம்பலம்,மதுரை வெள்ளி அம்பலம்,திருவாலங்காடு ரத்ன அம்பலம்,நெல்லை தாமிர அம்பலம்,குற்றாலம் சித்ர அம்பலம். ஆனால் உண்மையான தாமிரசபை நெல்லையில் உள்ளது அல்ல. நெல்லைக்கு அருகில் அமைந்துள்ள ராஜவல்லிபுரத்தில் அமைந்துள்ள செப்பரை அழகியகூத்தர் ஆலயம்தான் தாமிரசபை. அந்த சுவாரசியமான கதை என்ன?


சிங்கவர்மன் என்னும் மன்னன் சிதம்பரம் ஆலயத்தில் ஒரு நடராஜ சிலையைச் செய்யும்படி நமசிவாய ஸ்தபதியிடம் ஆணையிட்டார். அவரும் ஐம்பொன்னால் பொன்னார் மேனியனுக்கு ஒரு அழகு வடியும் அற்புதச் சிலையை உருவாக்கினார்.அதனைக் கண்ட அரசனுக்கு திருப்தி இல்லை. 'என் ஈசன் பொன்னம்பல வாணனுக்கு பசும்பொன் சிலை வடிப்பீராக' என ஆணையிட்டான்.


இரண்டாம் முறையாக வடித்த சிலையும்  பொன் வண்ணமாக இன்றி செப்பு நிறமாகவே இருந்தது. கோபம் கொண்ட மன்னன் சிற்பியை சிறையிலிட்டான். அன்று அவன் கனவில் தோன்றிய அம்மையப்பன் தான் மன்னன் கண்களுக்கு மட்டுமே பொன்னிறமாகத் தோன்றுவதாயும், மற்றவர்களுக்குத் தாமிரமாகத் தோன்றுவேன் என்றும் கூறினார். 


ஈசனின் திருவிளையாடலை உணர்ந்த அரசன் சிற்பியை விடுதலை செய்து அவர் இரண்டாவதாகச் செய்த சிலையை சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்தார். நம் ஆர்த்த பிறவி துயர்க்கெட கூத்தாடும் அய்யன் பொற்சபையாகிய தில்லையில்  கோயில் கொண்டார். மன்னனும் இறைவனின் ஆணைப்படி முதல் சிலையை அச்சிற்பியிடமே அளித்து விட்டார். 


சிற்பியிடம் இருந்த நடராஜர் சிலை என்னாயிற்று? 

இறைவனே அதற்கும் வழி சொன்னார். சிற்பியை அச்சிலையுடன் தென் திசை செல்லும்படியும், சிலையின் எடை கூடுமிடமே தாம் எழுந்தருளப் போகும் இடம் என்றும் உரைத்தார். அவ்வண்ணம் சென்ற சிற்பி நெல்லை மாவட்டம் செப்பரை  என்ற ஊருக்கருகில் சென்றபோது சிலை கனமாக இருந்ததால் மிகவும் களைப்பாக உணர்ந்து சிலையை அங்கு வைத்துவிட்டு, அருகில் கண்ணயர்ந்து விட்டார்.


தாமிரபரணியின் வடகரையிலிருந்த ராஜவல்லிபுரம்  என்ற ஊரில் மன்னன் ராமவர்மபாண்டியனின் அரண்மனை இருந்தது. மன்னன் தினமும் நெல்லை சென்று  காந்திமதி சமேத நெல்லையப்பரை தரிசித்த பின்பே உணவு அருந்துவார். ஒருநாள் தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து, 

நெல்லை செல்ல முடியாத அரசர் அன்று உணவு உண்ணாமலேயே உறங்கி

விட்டார். அச்சமயம் அவரது கனவில் தோன்றிய அம்பல

வாணன் சிதம்பரத்தி

லிருந்து தன் சிலையுடன் ஒரு சிற்பி வருவாரென்றும், 

அவர் கொண்டுவரும் நடராஜ விக்கிரகத்தை அவன் அரண்மனை  

அருகில் பிரதிஷ்டை செய்து,அதன் அருகில் எறும்புகள் ஊர்ந்து செல்லும் குழியின் மீது ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும்படியும், இனி நெல்லை  செல்லவேண்டாம்தன்னை இவ்விடத்திலேயே தரிசிக்கும்படியும் உரைத்தார்.


கண்ணயர்ந்த சிற்பி விழித்துப் பார்த்தபோது சிலையைக் காணாமல் பதறி மன்னனிடம் முறையிட, இறைவன் கூற்றுப்படி மன்னனும் சென்று சிலையைத் தேடினர்.வேணுவனத்தில் சதங்கை ஒலியும், நடமாடும் சப்தமும் கேட்க அங்கு இருந்த நடராஜர் விக்கிரகத்தைக் கண்டு மனம் மகிழ்ந்தான் அரசன். இறைவன் அவ்விடமே தென்தில்லை, செப்பரை அம்பலம், தாமிர சபை என்று உரைத்து மறைந்தார்.


மன்னன் அவ்விடத்தில் ஆலயம் அமைத்து அழகிய நடராசசபை அமைத்தான். இவ்வாறு தில்லையில் செய்யப்பட்ட முதல் செப்புச்சிலை அங்கு நிறுவப்பட்டது. செப்பாலான விக்கிரகம் அமைந்த ஊர் செப்பரை எனப் பெயர் பெற்றது.


1221ம் ஆண்டு பெரும் மழை...அதனால் ஏற்பட்ட  வெள்ளத்தில் ஆலயம் முற்றிலும் அழிந்துபோயிற்று. ஆற்றில் தேடியதில் விக்கிரகங்கள் மீட்கப் பட்டு, இங்குள்ள அக்னீஸ்வரர் ஆலயத்தில் வைத்து வழிபடப் பட்டன. தன் சிறப்பை உலகறிய விழைந்த பெருமான் அர்ச்சகரின் கனவில் தோன்றி நெல்லை ஆரைஅழகப்ப முதலியாரின் உதவியுடன் ஆலயம் அமைக்கும்படி அருள, 

அவ்வாறே ஆலயம் மீண்டும் உருவாயிற்று.


செப்பரை ஆலயக் கற்கள் அரசவல்லிபுரத்துக்குக்  கொண்டு வரப்பட்டு ஆலயம் உருவாக்கப்பட்டு, சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. சிதம்பரம் போன்றே இங்கும் செப்புத் தகடு வேயப்பட்ட நடராஜ சபை அமைந்

துள்ளது. இதுவே உண்மை

யான தாமிரசபை.


அகத்தியர், திருமால், 

அத்திரி முனிவர் ஆகியோர் தவமிருந்து இறைவனை வழிபட்ட தலம் இது. கிருத யுகத்தில் ஆடல்வல்லான் தன் நடனக் காட்சியை அக்னி தேவனுக்கு இங்கு காட்டியதாக புராண  

வரலாறு. ராமபண்டியனின் எல்லைக்குட்பட்ட சிற்றரச

னான வீரபாண்டியன் இச்சிலையின் அழகில் மயங்கி இதனைப் போன்ற இரண்டு சிலைகளை கட்டாரி மங்கலத்

திலும், கரிசூழ்ந்த மங்கலத்

திலும் ஆலயங்களில் பிரதிஷ்டை செய்தான்.


இது போன்ற அழகில் வேறு யாருக்கும் சிலை செய்யக்கூடாது என்ற எண்ணத்தில் சிற்பியைக் கொலை செய்யும்படி கூற, வீரர்கள் அவரது கைகளை வெட்டி விட்டனர். இது அறிந்த மன்னன் ராமபாண்டியர் வீரபாண்டியனின் கைகளை வெட்டி விட்டார். சிற்பிக்கு மரக் கைகளை பொறுத்த மீண்டும் மிக அழகான, 

அற்புதமான ஒரு சிலையைச் செய்தார் சிற்பி. அதன் அழகில் மயங்கிய மன்னன் அதன் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளியதால் ஏற்பட்ட வடுவுடன்  அந்த நடராஜர் கருவேலங்குளம் ஆலயத்தில் காட்சி தருகிறார். 


ஆயிரம் ஆண்டுகள் பழமையான இவ்வாலயத்தில்  நடராஜர் சன்னதியே பிரதானமானது. நெல்லையப்பர், காந்திமதி அம்மனுக்கு சன்னதிகள் உண்டு. மழலைப் பேறு, கல்வி வளர்ச்சி, திருமணத்தடை இவற்றிற்கான பிரார்த்தனைகள் விரைவில் நிறைவேறும். 


வேண்டவளர்ந்த நாதர் என்ற பெயரில் சுயம்புவாக விளங்கும் ஈசனே நெல்லையப்பராகப் போற்றப்படுகிறார். இந்த லிங்கத்தின் நடுவில் அம்பிகை உருவத்தை அபிஷேக சமயங்களில் காணலாம். இது இவ்வாலய அதிசயமாகக் கூறப்படுகிறது. 


இங்கு திருவாதிரைத் திருநாள் சிதம்பரம் போன்றே மிக விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. அன்று நடக்கும் அபிஷேகங்களும், அலங்

கார ஆராதனைகளும்,

 நடராஜா புறப்பாடும் கண்ணுக்கு பெருவிருந்து. மற்றும் சிவராத்திரி, 

நவராத்திரி, பிரதோஷம் முதலிய விழாக்களும் கொண்டாடப் படுகின்றன.


இவ்வூர் மக்களின் முயற்சியினால் இவ்வாலயத்திற்கென தேர் அமைக்கப்பட்டு, 2007ம் ஆண்டு தேரோட்டமும், மகா கும்பாபிஷேகமும் நடத்தப் பெற்றது. இத்துணை சிறப்புப் பெற்ற இவ்வாலய இறைவனை திருவாதிரையில் சென்று வணங்கி பலன் பெறுவோம்.


இவ்வாலயம் திருநேல்வேலியிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் உள்ளது. தாழையூத்து வழியாக அரசவல்லிபுரம் சென்று அங்கிருந்து செப்பரை செல்லலாம்.


இன்றைய நிவேதனம்...தேங்காய்ப்பால் காய்கறி பொங்கல்..கோவில் சர்க்கரைப் பொங்கல்