Tuesday 12 January 2021

🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..11.1.'21





மார்கழி இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. ஒரு மாதம் பூராவும் விடிகாலை எழுவது, பூஜை, திருப்பாவை, கோலம், பஜனை, பொங்கல் என்று உற்சாகமாகப் போயிற்று! எல்லா ஆலயங்களும் இந்த மாதம் பூராவும் விழாக் கோலம் கொண்டு சிறப்பாக வழிபாடுகள் நடந்தன.

திருப்பாவை நாயகி ஆண்டாளின் திருத்தலமான ஸ்ரீவில்லிப்புத்தூரில் கூடாரவல்லி எனும் இன்றைய நாளில் பக்தர்கள் ஆண்டாளை தரிசிக்க திரளாக வருவர்.

இன்றுதான் ஆண்டாள் விரதத்தைப் பூர்த்தி செய்கிறாள். மார்கழி இரண்டாம் நாள் ஆண்டாள் கண்ணனின் தரிசனத்திற்காக கடுமையான விரதம் மேற்கொள்ளும்படி தன் தோழிகளைக் கேட்டுக் கொள்கிறாள். அந்த தரிசனம் கிடைத்தபின்பு ஆண்டாள் தன் விரதத்தைப் பூர்த்தி செய்வதை 27ம் பாசுரத்தில் குறிப்பிட்டு    பாடிப்புகழ்கிறாள்.

'மூட நெய் பெய்து முழங்கை வழிவார' என்பதன் பொருள் என்ன? ஆண்டாள் ஏன் அப்படி சொல்கிறாள்?ஆண்டாளும் தோழிகளும் கண்ணனின் தரிசனம் பெற்று பிரசாதத்தை சாப்பிட்டு முடித்து விட்டால் கண்ணன் கிளம்பி விடுவானே!

அதனால் அக்காரவடிசிலை  கையிலெடுத்துவிட்டு, சாப்பிடாமல் அவனோடு பேசியே பொழுதைக் கழிப்பார்களாம்! அதற்குள் கையிலிருக்கும் அக்கார அடிசிலிருந்து நெய் பிரிந்து முழங்கை வரை வந்து விடுமாம்!

திருமண வரம் வேண்டுவோர்  இந்த நாளில்,  தவறாமல் பெருமாள் கோயிலுக்குச் சென்று ஆண்டாள் சந்நிதியில் நின்று ‘கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ என்னும் திருப்பாவை 27 வது பாசுரத்தைப் பாடி வேண்டினால் விரைவில் திருமணம் நடைபெறும்.

கூடாரவல்லி அன்று அக்காரஅடிசிலும் வெண்ணெயும் நிவேதிக்க வேண்டும். இதற்கு ஒரு காரணம் உண்டு. ஆண்டாள் நாச்சியார், அந்தக் கண்ணனே தனக்கு மணவாளனாகினால் 108 பாத்திரங்களில் அக்கார அடிசிலும் வெண்ணெயும் சமர்ப்பிக்கிறேன்’ என்று வேண்டிக்கொண்டாளாம். 

அவள் திருமண மகிழ்ச்சியில் மறந்திருப்பாளென நினைத்த ஸ்ரீராமாநுஜர் அவள் சார்பாக  அந்த வேண்டுதலை நிறை 

வேற்றினாராம். இதனால் 'பெரும்புதூர் மாமுனிக்கு பின் ஆனாள் வாழியே' என்றபடி அவருக்கு தங்கையாகிறாள் ஆண்டாள்! அவர் ஸ்ரீவில்லித்தூர் வந்தபோது ஆண்டாள் 'அண்ணா' எனக் கூப்பிட்டபடி எட்டடி முன்னால் வந்து விட்டாளாம்.அதனாலேயே இன்றும் அங்கு மூலவரை விட்டு எட்டடி முன்னால் உற்சவர் உள்ளது.

எனவே திருமண வரம் வேண்டுபவர்கள் கூடாரவல்லி அன்று  வீட்டிலேயே ஆண்டாள் வழிபாடு செய்து அக்கார அடிசல் மற்றும் வெண்ணெயினைப் பெருமாளுக்கு சமர்ப்பித்து வேண்டிக்கொண்டால் திருமணம் விரைவில்  கைகூடும்.

ஆண்டாள் பூமகளின் திருஅவதாரம். கூடாரவல்லி நாளில் நம் தாயாகிய பூமித் தாயைப் போற்றிப் புகழ்ந்து நற்பலன்களைப் பெறுவோம்.

இன்றைய நிவேதனம்..மில்லட் பொங்கல், அக்கார அடிசில்


No comments:

Post a Comment