Saturday 23 May 2020

பேரனும் நானும்...(9.2.2020)

நேற்று என் பேரன் க்ஷிதீஜ் 'பாட்டி உனக்கு Mojito Mocktail பண்ணித் தரேன். சூப்பரா இருக்கும்.குடிச்சுப் பாரு' என்றான்.நான் 'என்னது மோக்டெய்லா?அப்படின்னா?' என்றேன்! அவனோ 'பயப்படாத. அதில் ஆல்கஹால் இல்ல. ஸோடா சேர்த்து பண்ற ஜூஸ்' என்றான். என்ன செய்கிறான் என்று கூட இருந்து பார்த்தேன்.

சில புதினா இலைகள், சர்க்கரை, எலுமிச்சை துண்டுகள் சேர்த்து நசுக்கி அதில் எலுமிச்சை சாறு,soda,icecubes சேர்த்து கலக்கி இரண்டு glass களில் ஊற்றி என்னிடம் ஒன்றைக் கொடுத்து 'Cheers..குடி பாட்டி' என்றான். அருமையாக இருந்தது mocktail!




நம் குழந்தைகள் செய்து கொடுத்து சாப்பிடுவதை விட பேரன், பேத்திகள் செய்து கொடுத்து சாப்பிடுவதில் சந்தோஷம் ஜாஸ்திதான்!

வேலன்டைஸ்டேஸ்பெஷல்க்விஸ்..(12.2.2020)

#வேலன்டைஸ்டேஸ்பெஷல்க்விஸ்



இனிய தாம்பத்தியத்துக்கு ரொமான்ஸ் மிக அவசியம். ரொமான்ஸ் இல்லாத வாழ்க்கை இனிப்பில்லாத ரசகுல்லா போன்றது! உங்கள் வாழ்வில் ரொமான்ஸ் எப்படி உள்ளது என்பதை அறிய, கீழுள்ள கேள்விகளுக்குப் பதிலளித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

1. உங்கள் திருமண நாளுக்கு இன்னும் ஒரு வாரம் உள்ளது. உங்கள் துணைக்கு என்ன பரிசு கொடுப்பீர்கள்?

#a. எதுவுமில்ல. பரிசு கொடுப்பதில் ஆர்வமில்லை.
#b. கடைசி நேரத்தில் ஒரு கார்டு வாங்கிக் கொடுப்பேன்.
#c.  என் பார்ட்னருக்கு மிகவும் விருப்பமான ஒரு பொருளை பரிசாக வாங்கிக் கொடுப்பேன்.
#d. ஏற்கனவே பரிசு வாங்கி, ஒரு தனிப்பட்ட கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டேன்.

2. உங்கள் துணைக்கு நீங்கள் வைத்துள்ள செல்லப் பெயர்

#a. வித்தியாசமான பெயர்.
#b. ஹனி.
#c.  அவர்(ள்) சொந்தப் பெயரே (சுருக்கமாக)
#d. பேபி, டார்லிங்

3. ஒருவருக்கொருவர் மஸாஜ் செய்து கொள்வதுண்டா?

#a. தினசரி வேலைக்குப் பின் என் துணைவர்(வி) செய்வார்.
#b. சோர்வுற்ற நேரங்களில் இருவரும் ஒருவொருக்கொருவர் செய்து கொள்வோம்.
#c.  காதல், மென்மை இவற்றுடன் மஸாஜ் எண்ணெய் சேர்த்து செய்வோம்.
#d. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மெல்லிய இசையுடன் மஸாஜ் எண்ணெய் கொண்டு செய்வோம்.

4. உங்கள் துணை உங்களை அணைத்துக் கொள்ள விரும்பும்போது...

#a. விருப்பத்துடன் நீங்களும் அணைத்துக் கொள்வீர்கள்.
#b. அணைப்பதில் விருப்பமின்றி தவிர்த்து விடுவீர்கள்.
#c.  எப்போதும் சுகமான அணைப்பில் இருக்க விரும்புவீர்கள்.
#d. உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் தடுக்கமாட்டீர்கள்.

5. உங்கள் இருவருக்குள்ளும் பெரிய சண்டை. தவறு உங்கள் பக்கம் என்றுணர்ந்து ஒப்புக் கொண்ட பின்பும் உங்கள் துணை கோபத்துடன் இருக்கிறார். அவர் கோபத்தை எப்படி மாற்றுவீர்கள்?

#a. ‘நான் தவறு செய்ததை மன்னித்து விடுங்கள். இனி இது பற்றி பேச வேண்டாம்’ என்று முற்றுப்புள்ளி வைத்து சகஜமாகிவிடுவீர்கள்.
#b. ‘என்னை மன்னித்துவிடு’ என்று ½ மணிக்கொரு முறை போன் செய்வீர்கள்!
#c.  சில பூங்கொத்துகளுடன் ‘ஸாரி’ சொல்லிவிட்டு, ‘இனி எப்போதும் இப்படி சண்டை போட மாட்டேன்’ என்பீர்கள்.
#d. நீங்கள் தவறு செய்ததன் காரணத்தை விளக்கி, மன்னிப்பு கேட்டு, அதன்பின் அன்பு மழையால் குளிப்பாட்டுவீர்கள்!

6. உங்கள் துணையின் பிறந்த நாளுக்கு எப்படிப்பட்ட பரிசைத் தேர்ந்தெடுத்து வாங்குவீர்கள்?

#a. அடிக்கடி உப்யோகிக்கக்கூடிய ஒரு பொருள்.
#b. உங்கள் துணைக்கு மிகவும் பிடித்த, உங்களை எப்போதும் அவருக்கு நினைவுபடுத்தும் பொருள்.
#c.  ஒரு கைக்கடிகாரம், மிகப் பெரிய ரெஸ்டாரெண்டில் டின்னர், எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் துணை விரும்பிய பொருள்.
#d. இருவரையும் உணர்ச்சி பூர்வமாக இணைக்கும் ஒரு பொருளுடன், நெஞ்சைத் தொடும் வாசகங்களுடன் ஒரு வாழ்த்து அட்டை.

7. உங்கள் துணையுடன் கவலைகளை மறந்து ஜாலியாக ஒரு டிரிப்...

#a. திருமணமான புதிதில் அடிக்கடி, பின்பு வருடம் ஒரு முறை.
#b. விடுமுறையும், நேரமும் கிடைக்கும்போது எல்லாம்.
#c.  தினசரி வாழ்க்கையில் சலிப்படைந்த துணை பலமுறை கேட்டபிறகு வேண்டா வெறுப்பாக.
#d. திருமண நாளின் சமயம் கண்டிப்பாக ஒரு வாரம் லீவுதான்... ஹனிமூனைப் புதுப்பிக்க!

8. வாலண்டைன் டே பற்றி உங்கள் கருத்து.

#a. தேவையில்லாதது.
#b. காதலைத் தெரிவிக்க ஒரு நாள்.
#c.  துணைக்காக ஒரு நாளை செலவிடும் உற்சாகம்.
#d. காதலும், ரொமான்ஸூம் இணைந்த உற்சாகமான தினம்.

9. ‘ஐ ல்வ் யூ’ – இந்த வார்த்தைகளை உங்கள் துணையிடம் சொல்வதுண்டா?

#a. தினமும்.
#b. எத்தனை முடியுமோ அவ்வளவு.
#c  துணையுடன் மனம் ஒன்றிய  நேரங்களில் மட்டும்.
#d. சொன்னதே இல்லை.

10. ‘ஐ லவ் யூ’ – என்ற வார்த்தைகளை எப்படிச் சொல்வீர்கள்?

#a. அன்பும், காதலும் நிறைந்த உணர்வோடு.
#b. கவிதை வாக்கியங்களுடன் இணைந்து.
#c.  உங்கள் துணை சொன்னபிறகு, நீங்களும் சொல்வீர்கள்.
#d. படுக்கையறையில் மட்டும்.

மதிப்பெண்கள்👇

#......A.......B.......C.......D....
#1.    1.       1.       2.       3.
#2.    3.       2.       1.       2.
#3.    1.       2.       2.       3.
#4.    2.       1.       3.       1.
#5.    1.       3.       2.       2.
#6.    1.       2.       3.       2.
#7.    2.       3.       1.       2.
#8.    1.       2.       1.       3.
#9.    2.       3.       2.       1.
#10.  3.       3.       1.       1.

#10முதல்16மதிப்பெண்..
ரொமான்ஸை நீங்கள் நெருங்கவே இல்லை. உங்கள் துணைக்கு இந்த ரொமான்ஸ் விஷயங்களில் விருப்பமும் ஈடுபாடும் இல்லை என்றாலும் உங்கள் மென்மையான காதல் உணர்வுகளை அவ்வப்போது அணைத்து, முத்தமிட்டு, ஐ லவ் யூ சொல்லி வெளிப்படுத்துங்கள். அதனால் மகிழ்ந்த துணை உங்களை சந்தோஷப்படுத்த கட்டாயம் விரும்புவார்.

பிறந்த நாள், மண நாட்களில் உங்கள் துணைவரின் மனதுக்குப் பிடித்த பரிசுகளை சர்ப்ரைஸாகக்  கொடுத்து அசத்துங்கள். உங்கள் ரொமான்ஸ் உங்கள் துணையையும் தொற்றிக் கொள்ள, வாழ்க்கையே ஜாலிதான்!

#17முதல்23வரை..

வாழ்த்துக்கள்! தாம்பத்திய வாழ்வில் ரொமான்ஸின் பங்கை அறிந்து வாழும் உங்கள் வாழ்க்கை நித்தம் பூக்கும் புத்தம் புதுமலர்! ஒருவருக்கொருவர் அன்புடன் விட்டுக் கொடுத்து ‘மேட் ஃபார் ஈச் அதரா’க வாழ்கிறீர்கள்.

ரொமான்ஸைப் புதிய வழிகளில் செயல் படுத்தி, மேலும் இறுக்கத்துடன் வாழ முயற்சி செய்யுங்கள். மனத் தேவைகளுடன், உடல் தேவைகளிலும் இணைந்து ஈடுபட்டு, இனிய காதல் வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள்.

#24முதல்30வரை..
நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பையும், காதலையும் காட்டிக் கொள்வதைவிட, செயற்கையாக வாழ்ந்து – அட்டைகள், கேண்டில் லைட் டின்னர் என்பதையே அதிகம் விரும்புபவர்கள். ரொமான்ஸ் என்பது இது போன்ற காரியங்களைச் செய்வது மட்டுமல்ல.

இருவரும் ஒன்றாகச் சேர்ந்து இருந்து, கைகோர்த்து, உடலாலும், உள்ளத்தாலும் இணைந்து வாழ துணை செய்வது. படித்த நிமிடமே மறந்துவிடும் வாழ்த்து அட்டை வாசகங்களைவிட, இனிய உணர்ச்சிகளாலும் காதலினாலும் துணையைக் கட்டிப் போட முயற்சி செய்யுங்கள்!

அனைவருக்கும் காதலுடன் என்றும் வாழ இனிய காதலர்தின வாழ்த்துக்கள்!





Friday 22 May 2020

Sundaytopic..என் உயிர் நீதானே...(14.2.2020)




திருமணத்தில் கூறப்படும் சப்தபதி மந்திரத்தில் ஏழாவது அடியில் வரும் மந்திரம் 'கணவனும்,
மனைவியும் வாழ்நாள் முழுதும் உற்ற தோழர்களாக இருப்போம்.'

கணவரும், மனைவியும் அடுத்தவர் குறைகளை பெரிது படுத்தாமல், அதிக எதிர்பார்ப்புகள் இன்றி, நிறைகளைப்  போன்றே குறைகளையும் ரசித்து குடும்பம் நடத்தினால் வாழ்க்கை என்றுமே இன்பமயம்தான்!

எனக்கு 19 வயதில் திருமணமாகி, உடன் குழந்தைகள் பிறந்துவிட,
வாழ்க்கையின் சிரமங்கள்  என்னை தடுமாறச் செய்தபோது, வங்கி அதிகாரியான என் கணவர், என்னிடம் அதிகாரம் காட்டாமல், கோபப்படாமல் என்னை அரவணைத்த ஆசைக் கணவர்!

குழந்தைகளைக் காலை வேளைகளில் தயார்
செய்ய நான்  சிரமப்பட்ட
போது, தானும் பங்கு கொண்டு எனக்கு ஆதரவு கொடுத்த அன்புத் தோழன்!

கம்ப்யூட்டர் அறிமுகமான புதிதில் அதை இயக்கும் முறையை புரியும்படி விளக்கமாக எடுத்துச் சொன்ன ஆசான்!

எனக்கு வயிற்றிலும்,
காலிலும் அறுவை சிகிச்சைகள் நடந்தபோது வீட்டில் அத்தனை வேலைகளும் செய்து, ஒவ்வொரு வேளையும் கையில் மாத்திரையும், தண்ணீ
ருமாக என்முன் நின்று என்னைக் கண்கலங்க வைத்த தாயுமானவர்!

நான் ஆலயங்கள்  பற்றியும்,
பயணக் கட்டுரைகளும் நிறைய எழுதுவதால், எந்தக் கோயிலுக்கு சென்றாலும்
'என் மனைவி எழுத்தாளர்'
என்று பெருமையோடு சொல்லி,அங்குள்ள ஸ்பெஷல் பற்றியெல்லாம் கேட்டு எனக்கு சொல்லி எழுத உதவும் என் காரியதரிசி!

எங்களுக்கு எதிலும் ஒளிவு,
மறைவு கிடையாது. எந்த விஷயமானாலும் இருவரும் கலந்து பேசி முடிவெடுப்
போம். பணி ஓய்வு பெற்றபின் இன்று நாங்கள் தனிக்குடித்தனம் நடத்தும் இந்த நேரத்திலும், நான் செய்யும் அத்தனை வேலைகளிலும் எனக்கு உறுதுணையாக இருக்கும் நல்ல துணைவர்!

எனக்கு சில சமயங்களில் கோபம் வந்து ஏதாவது சொன்னாலும் அதைக் கண்டு கொள்ளவே மாட்டார்! 'உங்களுக்கு என்மேல் கோபம் வரவில்லையா'
என்றால், 'உன்னை என்று மணந்து கொண்டேனோ,
அன்றிலிருந்து உன் கோபத்தையும் சேர்த்து காதலிக்க ஆரம்பித்து விட்டேன்! உன் கோபத்துக்கும் நான் அடிமை' என்று வசனம் பேசி என்னை சிரிக்க வைக்கும் அழகிய காதலர்!

எங்களுக்கு திருமணமாகி 40 வருடங்களைக் கடந்து விட்டோம். ஆனாலும் ‘இன்று புதிதாய் மணந்தோம்’ என்ற ரீதியில்தான் வாழ்கிறோம். இன்றும் என்னை அவ்வப்போது அவர் காதலோடு பார்க்கும்போது 'என்ன பார்வை உந்தன் பார்வை' என்று பாடுவேன்!

நேரம் கிடைக்கும்போதெல்
லாம் என்னை சீண்டுவதும் தீண்டுவதும் இன்னும் தொடரும் செயல்கள்! கோபமோ தாபமோ நாங்கள் பேசாமல் இருந்தது
மில்லை..விலகிப் படுத்தது
மில்லை!

ஊடல்...கோபம் இல்லாத வாழ்க்கை யாருக்கேனும் உண்டா என்ன? அவர் அலுவலகத்துக்கும், குழந்தைகள் பள்ளிக்கும் சென்ற நாட்கள்..நேரம் ரெக்கை கட்டிப் பறக்கும்! ஒரு நாள் அவர் ‘pant'டுக்கு பட்டன் தைக்கச் சொன்னார். நான் மறந்துவிட்டேன். மறு நாள் காலை நேர அமளியில், ‘என் pantல் பட்டன் கூட தைக்காமல் நாள் முழுக்க அப்படி என்னதான் செய்கிறாய்?’ என்று சத்தம் போட்டார்.

சமையல் டென்ஷனிலிருந்த எனக்கும் ‘ஈகோ’ கிளம்பியது. ‘சே, நானென்ன சும்மாவா இருக்கிறேன்?’ என்று கேட்க வாயெடுத்தேன். அப்படிக் கேட்டால் கோபம் இன்னும் அதிகமாகும்.

‘அட்டா, நேற்று பட்டன் தைக்க எடுத்தேனா, சட்டையைத் தொட்டதும் உங்கள் ஞாபகம் வந்து, எதோ பழைய நினைவுகளில் மூழ்கி பட்டன் தைக்கவே மறந்து போச்சு! சாரி, இதோ இப்ப தைத்துவிடுகிறேன்’ என்று கூலாக சொன்னேன்.

அதற்கு மேலும் சத்தம் போடுவாரா என்ன? பிறகு நான் அவரை ‘தாஜா’ செய்ய... (தவறு என்னுடைய
தாயிற்றே!) அவர் என்னைக் கொஞ்ச... இது போன்ற சந்தர்ப்பவாத சமாளிப்புகள் எங்கள் தாம்பத்யத்துக்கு மெருகூட்டும் ரகசியங்கள்!

ஒருவர் செய்த தவறுகளை திரும்பத் திரும்பச் சொல்லிக் காட்டாமல், சரியான சமயத்தில் சொல்லிப் புரியவைப்பது, ஒருவர் அழகை மற்றவர் தாராளமாகப் புகழ்வது, விட்டுக் கொடுப்பது... இவற்றால் தாம்பத்ய சுவை கூடுமென்பது என் அனுபவம்!

வெளியில் அலுவலகத்தில் ஆயிரம் கவலை, டென்ஷன் என்று வேலை முடித்து ஓய்ந்து வீட்டுக்கு வரும் கணவன் அன்பும், ஆதரவும் தேடுவது மனைவியிடம்தான்.
அதைப் போர்க்கள
மாக்காமல், பூஞ்சோலை.
யாக்கினால், கணவன் மகுடிக்கு மயங்கி ஆடும் நாகம்தான்!

எங்கள் தாம்பத்யத்தில் சில நாள் முன்பு கூட சுவாரஸ்யம்தான்! ‘லைட்டை அணை’ என்று என் கணவர் சொல்ல, நானோ லேசாக அவரை அணைக்க முயன்றேன். ‘ஏய்! என்ன இது?’ என்றார் அவர். ‘நீங்கதான லைட்டா அணைக்கச் சொன்னீங்க?’ என்று நான் ‘கடி’க்க ‘என்ன ரொமேன்ஸா?’ என்றார் குரல் குழைய. சேச்சே! இது ரொ’விமன்’ஸ் என்று நான் திரும்பவும் கடிக்க... அதற்குப் பின் அங்கு பேச்சுக்கு இடமேது!?

காலை நாங்கள் இருவரும் இணைந்து கம்ப்யூட்டரில் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்த என் பேரன்...தாத்தா வேலன்டைன்ஸ் டேக்கு எங்க போலான்னு plan பண்றியா? பாட்டிக்கு என்ன gift தரப்போற?..என்று சிரித்தான்! அவரோ..நானே உன் பாட்டிக்கு giftதான்...என்று சொல்ல, நானோ..நான்தான் உங்களுக்கு gift...என்று வேகமாக சொல்ல, என் பேரனோ...வேலன்டைன்ஸ் டேல சண்டை போடக்கூடாது. ஜாலியா இருக்கணும்...என்று எங்களுக்கே அட்வைஸ் செய்கிறான்!

Thursday 21 May 2020

#சார்மினாரும்மகாதேவர்ஆலயமும்...(13.2.2020)


பாரிஸின் ஈஃபில் டவர், ஆக்ராவின் தாஜ்மஹால் , டில்லியின் குதுப்மினார் போல் ஹைதராபாதின் சிறப்பு சார்மினார். நான்கு உயர்ந்த  கோபுரங்களுடன் சதுர வடிவில் கிரானைட் மற்றும் சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்டு,  பழைய ஹைதராபாத் நகரில் நெருக்கமான கடைகள் நிறைந்த இடத்தில் ம்யூஸி நதியின் கரையில் அழகுற கம்பீரமாகக் காட்சிதரும்  சார்மினார் தற்சமயம் தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப் படுகிறது.

சார்மினார் 1591ஆம் ஆண்டு, பிளேக் நோய் முற்றிலுமாக அழிக்கப்பட்டதன் அடையாளமாக, பெர்சிய கலைக் கட்டிட நிபுணர்களால் முகம்மது குதுப் ஷா என்ற அரசரால் கட்டப்பட்டது. சார்மினாரை மையமாக வைத்தே பழமையான நகரமான ஐதராபாத் உருவாக்கப்பட்டது. மன்னர்
தன் காதலி பாக்மதியை முதலில் சந்தித்ததன்  நினைவாக இதைக் கட்டியதாகவும், பாக்மதி என்ற நகரின் பெயரே  ஹைதராபாத் என மாற்றப்பட்டதாகவும் கூறப்
படுகிறது.





முகம்மதியரின் முதல் நான்கு கலிஃபாக்களைக் குறிக்கும் விதமாக 48.7 மீட்டர் உயரத்தில் நான்கு கோபுரங்கள் உயர்ந்து நிற்கின்றன. இரண்டு தளங்களை உடைய கோபுரங்களின் உள்ளே காணப்படும் அழகான கட்டமைப்பு கண்ணுக்கு விருந்து! மேல் தளத்தில் தொழுகைக்கான பள்ளிவாசல் உள்ளது. மேலே ஏறிச் செல்ல 149 வளைந்து செல்லும் படிகள் உள்ளன.






நான்கு புறமும் உள்ள வாசல்கள் உயர்ந்த வளைவுகளுடன் சுற்றியுள்ள நான்கு சாலைகளைப் பார்த்து இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. நான்கு பக்கங்களிலும் பெரிய  கடிகாரங்கள் அமைக்கப்
பட்டுள்ளன.சார்மினாரிலிருந்து கோல்கொண்டா கோட்டைக்கு ஒரு சுரங்கப் பாதையும் உண்டு எனப்படுகிறது.

சார்மினாரின் உள்ளழகு வளைவுகளைக் கொண்ட நுழைவாயிலுடன்  இஸ்லாமிய கலாசாரப்படி அழகுற அமைந்
துள்ளது. தொழுகைக்கான 45 அறைகளும் உண்டு. சுற்றிலும் உள்ள லட் பஜாரில்(Lad Bazaar) ஹைதராபாதின் சிறப்பான கல், முத்து நகை விற்கும் கடைகள் சார்மினாரின் அழகுக்கு மேலும் மெருகு சேர்க்கின்றன. இரவில் அந்த இடமே வண்ண விளக்
கொளியில் தகதகக்கிறது. நான்கு பக்கமும் நீண்டு இருக்கும் இந்த சிறப்பான கடைத்தெரு பற்றி  சரோஜினி நாயுடு அவர்கள் In the bazaars of Hyderabad என்று கவிதை எழுதியுள்ளார்.





சார்மினாரின் அழகை ரசிப்ப
தோடு, அந்தக் கடைகளின் அழகு...கண்களைக் கட்டி இழுக்க..மனதை மயக்க கல் வைத்த, முத்து பதித்த வளையல் மற்றும் நெக்லஸ்களை வாங்காமல் எந்தப் பெண்ணாலும் வர முடியாது! தரமான முத்துக்
களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கடைகளும் உண்டு.

அவ்விடத்தில் கிடைக்கும் உஸ்மானியா பிஸ்கட் மற்றும் ஈரானியன் டீயின் சுவை அமிர்தம்! விடுமுறை நாளில் விடிகாலை நேரம் 6 மணிக்குள் இங்கு வந்து பிஸ்கட்டும், டீயும் சாப்பிடுவது பலரின் வழக்கமாம்!



கடைகளைப் பார்த்துக் கொண்டே வந்து கொண்டிருந்த என் கண்களில் பட்டது ஸ்ரீமகாதேவர் ஆலயம். அட..நம்ம சாமி என்றபடியே சென்று தரிசித்தேன்.  1857ம் ஆண்டு தோன்றிய அந்த சிவாலயம் மிக அழகாகக் காட்சியளிக்கின்றது. அங்கு நகைக்கடைகள் வைத்துள்ள வடநாட்டு மார்வாரி வியாபாரிகளால் ஏற்படுத்தப் பட்ட கோவில்.

கீழுள்ள சிவலிங்கம் முதலில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம். பின் ஆலயம் சில படிகள் மேலே ஏறிச் சென்று உயரத்தில் விஸ்தரிக்
கப்பட்டு  கணபதி, லக்ஷ்மி நாராயணர், சாய்பாபா, மகாலக்ஷ்மி, ராமர், ஹனுமன் , துர்கை போன்ற தெய்வ சன்னிதிகள் அமைக்கப்பட்டது. இங்குள்ள ஸ்படிக லிங்கம் மிக அருமையாக உள்ளது. சார்மினாரின் சத்தமான கடைத்தெருவில் இருந்தும், அங்கு காணப்படும்  தெய்வீகமான அமைதியான ஏகாந்த சூழ்நிலையில் தியானம் செய்ய முடிகிறது. எல்லா தெய்வங்களின் சிறப்பான நாட்கள் கொண்டாடப்
படுகிறது. கீழுள்ள ஹாலில் பிரவசனங்கள் நடைபெறுமாம். தினமும் 400 பேரும், தீபாவளி சமயம் 10000 மக்களும் தரிசனத்துக்கு வருவதுண்டாம்.












இவ்விடத்தை சுற்றி பல மார்வாரிகள் வாழ்கின்றனர். தினமும் லட்சக் கணக்கில் நகை வியாபாரம் நடைபெறுகிறதாம்.  இதற்கு ஒரு சுவையான காரணம் கூறப்படுகிறது! ஔரங்கசீப் அரசனான பின்பு அந்த இடத்தின் தலைவனாக  ஐந்தாம் நிஜாம் நியமிக்கப்பட்டபோது அங்கு நகைக்கடைகள் வைத்திருந்த மார்வாடிகளுக்கு வீடுகள் கட்டிக் கொள்ள இடம் ஒதுக்கினாராம். சார்மினார் செல்லும் வழியில் அவர்கள் கடைகளில் காணப்படும் நவரத்தினங்களைக் காண்பது நல்ல சகுனமாக எண்ணினார்
களாம். எப்படியோ இன்று அந்த உலகப் புகழ் பெற்ற சார்மினாருக்கு நிகராக ஸ்படிகலிங்கேஸ்வரரும் அருள் செய்து கொண்டுள்ளார்!



ஹைதராபாத் செல்பவர்கள் சார்மினாரைக் கண்டு சிற்பக் கலையை ரசிப்பதோடு  அவசியம் மகாதேவரையும் தரிசித்து வரவும்.

விசா பாலாஜி.. ஹைதராபாத்..(15.2.2020)


நேற்று வேலன்டைன்ஸ்டே பற்றி எழுதிய கையோடு ஹைதராபாதிலுள்ள பிரசித்தமான விசா பாலாஜியை தரிசிக்கச் சென்றோம்.பெயரே வித்யாசமாக இருக்கிறதில்
லையா? ஆம்..வெளிநாடு செல்ல விசா கிடைக்கா
விட்டாலோ, தாமதமானாலோ இவ்வாலயம் வந்து இந்த பாலாஜியை தரிசித்தால் உடன் தடங்கல் நீங்கி விசா கிடைக்குமாம்.

ஹைதராபாதிலிருந்து 30  கிலோ மீட்டர் தொலைவில் 'உஸ்மான் சாகர்' என்னும் ஏரிக் கரையில் அமைந்துள்ள சில்கூரில் அமைந்துள்ள ஆலயத்தின் பெருமை பெரிதினும் பெரிது!



தெலுங்கானாவிலுள்ள மிகப் பழமையான 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயிலை பக்த ராமதாசரின் மாமன்களான வெங்கண்ணாவும், அக்கண்
ணாவும் கட்டியதாகக் கூறப்
படுகிறது. காலப் போக்கில் அழிந்துவிட்ட அக்கோயில்  500 ஆண்டுகளுக்கு முன்பு கண்டு
பிடிக்கப் பட்டது.






மாதவ ரெட்டி என்ற பக்தர் அறுவடை முடிந்தபின் தவறாமல் திருப்பதி செல்லும் வழக்க
முடையவர். திரும்பியதும்தமது நிலத்தில் விளைந்த பொருட்
களின் ஒருபகுதியை தானம் செய்யும் வழக்கமுடையவர். முதுமையில் செல்ல முடியாமல் வருத்தமுடன் நிலத்தில் அமர்ந்தி
ருக்கும்போது  பாலாஜி அவர் கனவில் தோன்றி 'இனிமேல் திருப்பதிக்கு நீ வரவேண்டாம். நானே உன் வயலில் உள்ள எறும்பு புற்றினுள் குடி கொண்டிருக்
கிறேன்' எனக்கூறி மறைந்தார்.

மறுநாள் புற்றை அகற்றியபோது பூதேவி, ஸ்ரீதேவி சமேதகராக திருப்பதி பாலாஜியின் திருமணக் கோலச் சிலையைக் கண்டு ஊர்மக்கள் கூடி ஆகமவிதிப்படி ஆலயம் உருவாக்கினார். இப்பொழுதும் பெருமாள் தலையில் கடப்பாரை வெட்டு இருக்கிறதாம்.

இவர் 'விசா பாலாஜியானது எப்படி?' வெளிநாடு செல்ல விரும்புவோர், பெருமாள் காலடியில் பாஸ்போர்ட்களை வைத்து வணங்கி வேண்டிக்
கொண்டால் உடனே வேண்டுதல் நிறைவேறுமாம்.

இதற்கு ஒரு முறை உண்டு. வெளிநாடு செல்ல முக்கியமாக அமெரிக்க விசா கிடைக்க வேண்டிக் கொள்பவர்கள் 11 சுற்றுகள் சுற்ற வேண்டும்.பின் விசா கிடைத்தபின் 108 சுற்றுகள் சுற்றி பிரார்த்தனையை முடிக்க வேண்டும். மேலும் திருமணம், குழந்தை வேண்டியும் இங்கு வேண்டிக் கொண்டு பிரார்த்தனை நிறைவேறியதும் 108 பிரதட்சிணங்கள் செய்ய வேண்டும்.

இங்கு எப்பொழுதும் கூட்டம்! ஆயிரக் கணக்கானோர் ஆலயத்தை சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கணக்கு வைத்துக் கொள்ள ஆலயத்தில் ஒரு எண்கள் எழுதிய அட்டை தரப்படுகிறது. அங்குள்ள ஜன நெரிசலே அந்த ஐயனின் பெருமையை உணர்த்துகிறது.

இங்கு உண்டியல் இல்லை. VIP க்க
ளுக்கு சிறப்பு தரிசனம் கிடையாது. மற்றுமொரு விசேஷ அம்சமாக இந்த கோயிலின் நிர்வாகமும் மத்திய, மாநில அரசாங்கத்தின் அறநிலையத்துறை கட்டுப்
பாட்டில் இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

இந்தக் கோயிலுக்கு வாரந்தோறும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அருகில் அழகிய கைலாசநாதர் கோயில் ஒன்றும் உள்ளது. இதனருகில் இருந்த புற்றிலி
ருந்துதான் பெருமாள் எடுக்கப் பட்டாராம்.

மனதிற்கினிய தரிசனம் முடித்ததும் வயிறு 'என்னையும் கொஞ்சம் கவனி' என்று கூற, ஹோட்டலுக்கு சென்றோம்.

ஹைதராபாதில் நான் கண்டு வியந்த விஷயம் ஊர் முழுதும் ஏகப்பட்ட ஹோட்டல்கள்! எங்கெங்கு நோக்கினும் ஹோட்டல்கள்!! விதவிதமாய் சாப்பாடு!! அத்தனை மாநில, வெளிநாட்டு சாப்பாடுகள் விதவிதமாய்க் கிடைக்கிறது. எந்த ஹோட்டல் போகலாம் என்று யோசிக்க வேண்டியுள்ளது!

நாங்கள் மெட்ரோ பில்லர் அருகிலுள்ள Gud Gudee (Tickling your taste buds என்று அர்த்தம்!) என்ற ஹோட்டலுக்கு சென்றோம்.   அன்று Valentine's day க்காக ஸூப், starters, Main course எல்லாமே ஸ்பெஷலாம்! காஷ்மிரி நான், ப்ளூ ஷூ ஜுஸ், கமல் கலோட்டி
( தாமரை தண்டு கபாப்),வெஜ் டகாடக் என்று எல்லாமே இதுவரை எந்த ஹோட்டலிலும் சாப்பிடாத சுவையில் இருந்தது!






நான் சென்று சாப்பிட்ட சில ஹோட்டல்கள்...
99 Dosa Hubல் 99 வகையான விதவிதமான தோசைகள்..எதை சாப்பிடுவது என்று ஒரே dilamma!



Variety panipuri..ஐயப்பா ஸொசைட்டியிலுள்ள இந்தக் கடையில் 7 வித பானிபூரி..ஒவ்வொன்றிலும் வித்யாசமாக..இஞ்சி..பூண்டு..புதினா..எலுமிச்சை..நார்மல் என்று விதவிதமான பானிகளுடன் குட்டி பூரிகள் சுவையோ சுவை!




தந்தூரி மட்கா சாய்..டீயை தந்தூரி அடுப்பில் சுடவைத்து மண்குவளைகளில் குடிப்பது..அருமையான சுவை!

சட்னி...மாதாபூரிலுள்ள இந்த ஹோட்டலில் பல தினுசு சட்னிகள்



Cloud Dine...இது ஒரு வித்யாசமான அனுபவம் தரும் ஹோட்டல்.  ஹைதராபாதில் ஹைடெக் சிட்டியில் ஜெர்மன் டெக்னாலஜியில் உருவாக்கப்
பட்ட முதல்  Cloud Dine ஹோட்டல். 26 இருக்கைகள் மட்டுமே! 160அடி உயரத்தில், பெல்ட்டுகள் இணைத்த நாற்காலியில் க்ரேன் மூலம் மேலே அழைத்து செல்லப் பட்டு, வெட்ட வெளியில் ஜில்லென்ற காற்றில் உயர்ந்து நிற்கும் பக்கத்து கட்டிடங்களையும் அருகிலுள்ள ஃப்ளை ஓவர்களையும் நோட்டமிட்டபடி சாப்பிடலாம்.  ஒரு சாப்பாட்டின் விலை..அதிகமில்லை.

.
5000 ரூபாய்தான்!! (இந்த முறை போகவில்லை. அடுத்த முறை ட்ரை பண்ண ஆசை!)

Platform 65..Train Restaurant குக்கட் பள்ளி என்ற இடத்திலுள்ள இந்த  ஹோட்டலில்  இடையிலுள்ள தண்டவாளங்களில் வரும் toy trainல் உணவு கொண்டு வரப்பட்டு பரிமாறப் படுகிறது!



இதுபோல் விதவிதமாய் ஹோட்டல்கள்! வித்யாசமான ருசியில் உணவு! இங்குள்ளோர் வாழ்க்கையை ரசித்து மட்டுமல்ல..ருசித்தும் வாழ்கிறார்கள்!!

சிவராத்திரி ஸ்பெஷல் மும்பையின் கைலாயம்..(21.2.2020)



மேலை நாட்டு நாகரீகத்தில் திளைக்கும் மும்பையில்,
அமைதியாக, இயற்கை அழகுடன் ஈசன் அருள் பொங்க நிம்மதி தரும் ஆலயம் ஒன்று இருக்கிறது. அதுதான் 'மலபார் ஹில்'லுக்குத் தெற்கில் அமைந்துள்ள பாபுல்நாத் ஆலயம். சென்ற மாதம் மும்பை சென்றபோது தரிசித்தேன்.

இச்சிவாலயம் கடல் மட்டத்திலிருந்து 1600 அடி உயரத்தில் மிக விஸ்தா
ரமாக, அழகாக, சிற்பக் கலை நேர்த்தியுடன் கடலை நோக்கி அமைந்துள்ளது. பழமையும்,
அளவற்ற மகிமையும் பொருந்திய இவ்வாலயம் கைலாயத்திற்கு இணையாகக் கூறப்படுகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாண்டுரங்க் என்ற ஒரு பொற்கொல்லர் இருந்தார். அவரிடமிருந்த மாடுகளை தினமும் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வான் வேலைக்காரன் பாபுல். அவற்றுள் கபிலா என்ற ஒரு பசுமாடு மட்டும் தினமும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பால் பொழிவதைக் கண்டான். இவ்விஷயத்தை எஜமானிடம் சொல்ல, அவரும் அவ்விடத்தைத் தோண்ட, அங்கு ஒரு மிகப் பெரிய சிவலிங்கம் இருக்கக் கண்டார். அவ்விடத்திலேயே ஒரு ஆலயம் அமைத்து அந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். இவ்வாலயம் அமைய பாபுல் ஒரு காரணமாயிருந்ததால், இறைவனுக்கு 'பாபுல் நாத்' என்று பெயர் வழங்கலாயிற்று. பாண்டுரங்க் குஜராத்தைச் சேர்ந்தவர். அவரால் உருவாக்கப்பட்ட இவ்வாலயம் குஜராத்தி இனத்தாரால் மிக அருமையாக பராமரிக்கப்
படுகிறது.





உயரமாக அமைந்துள்ள இவ்வாலயத்திற்கு 110 படிகள் ஏறிச்செல்ல வேண்டும். ஒரு லிஃப்டும் இயங்குவதால் முதியோர் மற்றும் ஏறமுடியாதவர்
கள் லிஃப்டில் செல்ல வசதி உண்டு. ஆலய வெளித் தோற்றமே நம் மனதை கொள்ளை கொள்கிறது. நெடிதுயர்ந்து நிற்கும் கோபுரம் சிற்ப வேலைப்பாடுகளுடன் கலையழகு கொண்டு காட்சியளிக்கிறது.

கர்ப்பக் கிரகத்தில் நுழையுமுன்பு இடப்பக்கம் சன்னிதி கொண்டுள்ள கஜமுகனை வணங்கி உள்ளே செல்வோம். கருவறையில் நடுநாயகமாக பெரிய சிவலிங்கம் உள்ளது. நாக கவசம் சாற்றப்பட்டுள்ளது.

சுயம்புவாகத் தோன்றிய ஈசனைக் காணும்போது நம் மனம் நிச்சலனமாகிறது. அங்கு ஒரு தெய்வீக அலை நிலவுவதை உணர முடிகிறது. சன்னதியிலேயே தனித்தனி மண்டபங்களில் துர்க்கையும், சிவபெருமான் கணபதியையும், பார்வதியையும் அணைத்த நிலையில் அழகான சிலைகளும் காட்சி தருகின்றன. சிவனின் மிகப்பெரிய மீசை வித்தியாசமான அமைப்பைக் காட்டுகிறது!



வடநாட்டு முறைப்படி இந்த சிவலிங்கத்திற்கு எல்லோரும் அவரவரே அபிஷேகம்,
அர்ச்சனை, நைவேத்யம் செய்யலாம். இது போன்று பூஜை செய்யும்போது நம் மனம் இறைவனுடன் ஒன்றுவதை நன்கு உணரமுடியும். சன்னதியிலேயே
50, 60 பித்தளைக் குடங்கள் உள்ளன. பூஜை செய்ய விரும்புவோர்,
வெளியிலுள்ள குழாயிலி
ருந்து நீர் பிடித்துக் கொணர்ந்து முறையாக அபிஷேகம், அர்ச்சனை செய்து, மனத்திருப்தியுடன் செல்கின்றனர். அங்குள்ள ஊழியர்கள் உடனுக்குடன் இறைவனின் மேலுள்ள பூக்களை அகற்றி, சுத்தம் செய்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆலயம் மிக சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது.

பாபுல்நாத் ஈசுவரர் மிக வரப்ரசாதி. மனத்தூய்மையுடன் தம்மை வழிபடுவோர்க்கு வேண்டிய வரம் தந்து அருள்பவர். ஒவ்வொரு திங்களன்றும் இங்கு இறைவனை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். மாத சிவராத்திரிகள், கார்த்திகை சோம வாரங்களில் சிறப்பு அபிஷேக அர்ச்சனைகள் உண்டு.

இங்கு ஐந்து அர்ச்சகர்கள் இணைந்து செய்யும் 'பஞ்சாட்சர'
பூஜை மிக விசேஷமானது. சிவராத்திரி அன்று இரவு-பகலாக இங்கு பக்தர்கள் பலமணி நேரம் வரிசையில் நின்று இறைவனை தரிசித்துச் செல்வர். இங்குள்ள பக்தர்கள் சிவலிங்கத்தை அணைத்து, தலையை லிங்கத்தில் வைத்து வணங்குவார்கள்.

கர்ப்பக் கிரகத்தின் வெளிச்சுவர்களில் பல கடவுள்களின் அற்புதமான சிற்பங்கள் மிக அழகாகக் காட்சியளிக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு! இங்கு விராடரூப ஸ்ரீகிருஷ்ணரின் சன்னதி பல சிரங்களும்,
கரங்களும் கொண்டு பகவானின் விசுவரூப தரிசனத்தைக் காட்டுகிறது. இது எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பு.

காயத்ரி, லக்ஷ்மி நாராயணர், ஹனுமன் சன்னதிகளிலுள்ள விக்ரகங்கள் எழிலான தோற்றத்துடன் காட்சியளிக்கின்றன.
சீதலாதேவியும், நாகதேவதையும் இணைந்த சன்னதி மிக விசேஷமானதாகக் கூறப்படுகிறது.



சீதலாதேவி கழுதை வாகனத்தில் இடக்கையில் மணியும் வலக்கையில் விசிறியும் கொண்டு காட்சி தருகிறாள். நம்மூர் மாரியம்மன் போல் அம்மை நோயை அழிக்கும் தெய்வமாகப் போற்றப் படுகிறாள். குழ்ந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள், நோய்கள், அம்மை, காலரா இவற்றிலிருந்து மக்களைக் காக்கும் தெய்வம் இவள். கையிலுள்ள மணி துர்தேவதைகள், தோஷங்களை அண்டாது செய்யும். வலக்கையிலுள்ள விசிறியால் பக்தர்களை இதமாக விசிறி, அவர்கள் துன்பங்களைப் பறந்தோடச் செய்யும் இத்



தேவிக்கு சிறப்பான வழிபாடு செய்யப்
படுகிறது. 

வாலுகேஷ்வர், பூலேஷ்வர் என்று பல சிவத்தலங்கள் மும்பையில் இருந்தாலும், தனிப்பெருமையும், சிறப்பும் கொண்டு மகாலட்சுமி,
மும்பாதேவிக்கு இணையாக மும்பையில் ஈசனாக விளங்குகிறார் பாபுல்நாத் ஈசன்! மும்பை வருவோர் தவறாமல் தரிசிக்க வேண்டிய தலம் இது!



மும்பை விக்டோரியா டெர்மினஸ் ஸ்டேஷனிலிருந்து இவ்வாலயத்திற்கு டாக்ஸியில் செல்லலாம்.