Tuesday 23 March 2021

மகளிர்_தினம்(8.3.'21)


 உலக மகளிர் தினம் ( International Women's Day). ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டு உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.


உலக மகளிர் தினம் ( International Women's Day). ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டு உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வலியுறுத்துவதற்காக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

18 ம் நூற்றாண்டில் அமெரிக்காவில்  பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருந்தனர்.  பெண்களுக்கு ஆரம்ப கல்வி கூட மறுக்கப்பட்டது.

1857 ம் ஆண்டு முதல் பெண்கள் தொழிற்சாலைகள் ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தும் ஊதியம் மிகக் குறைவாகவே தந்ததால்
பெண்கள் மிகுந்த வருத்தமடைந்து, ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் வழங்கக்கோரி குரல் எழுப்பினர்.  அமெரிக்க அரசு இதற்கு செவி சாய்க்காததால் பெண் தொழிலாளர்கள் 1857ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1910ம் ஆண்டு டென்மார்க் நாட்டில் உலகின் பல நாடுகளை சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்து கொண்ட மாநாட்டில்  ஜெர்மனி கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரே செர்கினே, மார்ச் 8ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட விரும்பியும் இந்த தீர்மானம் நிறைவேறவில்லை.

1920 ல் ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா, ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.
இதையடுத்து 1921ம் ஆண்டு முதல் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடபட்டு வருகிறது. 1975ம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா பிரகடனப்படுத்தியது.
பலநாடுகளில் சர்வதேச மகளிர் தினத்துக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.

நம் வாழ்வில் பெண்களைக் கொண்டாடி, உலகிற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் நாள் இது. அதே நேரத்தில், சர்வதேச மகளிர் தினத்தின் நோக்கம் பாலின சமத்துவம்.

சமமான பகிர்வு என்பதை தாண்டி இந்த உலகில் எல்லாவற்றையும் சமத்துவமாக மாற்றுவதற்கு அனைவருக்கும் தேவையான பகிர்வை கொடுக்க வேண்டும் என்பதே இதன் பின்னணி. அந்த வகையில் இந்த உலகை நீடித்து கொண்டு செல்வதற்கு ஆண்களையும் விட அதிமாக உழைக்கும் பெண்களுக்கு மரியாதையான அன்பான வார்த்தைகளால் வாழ்த்துக்களை கூறுவோம்!

இந்த ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் கருப்பொருள் "DigitALL: பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம் ஆகும். இந்த கருப்பொருள், தொழில்நுட்பம் மற்றும் ஆன்லைன் கல்விக்கு பெண்கள் ஆற்றி வரும் பங்களிப்பை அங்கீகரித்து கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பெண்கள் தமக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது.. பெண் உரிமைகளை வலியுறுத்தும் நாள் இது …ஆணுக்குப் பெண்ணிங்கே சரிநிகர் சமானம் என்ற பாரதி வாக்கை  உண்மையாக்க மாற்றம் நம்மிடமிருந்து உருவாகட்டும்!

அனைத்து மகளிருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!

மறதி..வரமா சாபமா?

 #Sunday_special

மறதி..வரமா சாபமா?

இந்த வார மத்யமர் பதிவுக்கான தலைப்பு என்ன?? ஹி..ஹி..மறந்தே போச்சே! எத்தனையோ யோசித்தும் நினைவு வராமல் போக, சங்கர்சாரின் பதிவைத் தேடி எடுத்து பார்த்தால் அவரே பதிவு போட மறந்து மறுநாள் போட்ட தலைப்பு..மறதி!

மறதிக்கும் எனக்கும் ரொம்...ப உறவாச்சே! ஐந்து நிமிஷத்துக்கு முன்பு வைத்தது கூட அடுத்த நிமிஷம் மறந்து விடும் மறதிசிகாமணியாச்சே நான்😄 

கேஸில் பாலை வைத்துவிட்டு அடுத்த வேலைக்குப் போய் மறந்துபோய், திரும்ப வந்து தீய்ந்த பாத்திரத்தை கைவலிக்க தேய்த்த கதை நிறைய!  சிலசமயம் நினைவு வந்து ஓடிவர, மேடை முழுதும் பாலாறாக ஓடிக் கொண்டிருக்கும்! 

இப்பொழுதெல்லாம் பாலை இன்டக்ஷன் ஸ்டவ்வில் நேரம் set செய்து விடுவதால் பால் பொங்குவதில்லை! இப்பவும் அப்பப்ப காஃபிக்கு பாலை வைத்து விட்டு அது பொங்கி வழிவது சர்வசாதாரணம்!!

ஒருநாள் ஈயச் சொம்பில் ரசத்தை வைத்ததை மறந்து வேறுவேலையாகப் போய்விட்டேன். கொஞ்ச நேரத்தில் ஏதோ நாற்றம் வர ஈயச்சொம்பு பாவமாக 'என்னைக் காப்பாத்து' என்று உருகி அழுது கொண்டிருந்தது!

என்ன செய்வது..அதற்கு ஆயுள் அவ்வளவுதான்!

பலமுறை வெளியில் போகும்போது வாட்ச், பர்ஸ், மொபைல் என்று எதையாவது மறந்துவிட்டு கொஞ்சதூரம் போனதும் ஞாபகம் வர, என் கணவர் பாவம்..காரைத் திருப்பிக் கொண்டு வந்து வீட்டைத் திறந்து எடுத்துப் போவோம்!

நேரில் பார்த்துப் பழகிய நண்பர்களைக் கூட வெகுநாள் கழித்துப் பார்க்கும்போது யாரென்று யோசிக்க, அவர்களே 'என்னை தெரியலயா? நான்தான்..' என்று அவர்களே சொன்னபின்பே நினைவு வரும்!

சிலநாள் முன்பு என்னை வந்து விசாரித்த ஒருவரைப் பார்த்து நான் திருதிருவென விழிக்க, அந்தப் பெண்ணோ 'நீங்க ரெண்டு வருஷம் முன்னால எங்காத்துக்கு வந்தேளே' என்றதும் என் நினைவைக் கிண்டிக் கிளறி யாரென்று புரிந்து கொண்டு பேரைச் சொல்லவும்..பாவம் அவர் வெறுத்து விட்டார்! இதுபோல் நிறைய்....ய மறதிகள்!

என் தோழி ஒருத்தி கேஸில் ஒரு தவலையில் வெந்நீருக்கு தண்ணீரை வைத்துவிட்டு ஆஃபீஸுக்கு போய் விட்டாள். மாலை திரும்பி வந்து பார்த்தபோது பாத்திரம் தீய்ந்து கேஸும் தீர்ந்து நாறிக் கொண்டிருந்ததாம்! இதெல்லாம் மறதி சாபமான சம்பவங்கள்!

என் கணவருக்கு ஞாபகசக்தி நிறைய்..ய! அதனால் இப்போதெல்லாம் எந்த சாமானை எங்கு வைக்கிறேன் என்று அவர் காதில் போட்டு விடுவேன்! நான் கேட்கும்போது சரியாக சொல்லிவிடுவார்! 'தாயே..என்னை மட்டும் மறந்துடாதம்மா!' என்று கைகூப்பிக் கெஞ்சும்போது நானே சிரித்து விடுவேன்!

முகநூலும், கூகுளும் நாம் அவற்றில் அக்கவுண்ட் ஆரம்பித்த அன்றுமுதல் நடந்த நிகழ்வுகளை நாள் தப்பாமல் நமக்கு சொல்லிவிடுவ

தாலேயே நாம் எதை மறந்தாலும் அவற்றிலிருந்து குறிப்புகளை எடுக்க முடிவது நமக்கு வரமே!

சில இழப்புகளிலிருந்து நம்மைத் தேற்றி வெளிக் கொண்டுவர மறதி அவசியமே. மறக்க வேண்டிய விஷயங்களை மனதில் போட்டுக் குழப்பி நாம் அதிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும்போது அதை சிறிது சிறிதாக மறப்பதே நல்லது. 

நாம் வஞ்சிக்கப் பட்டாலோ, ஏமாற்றப் பட்டாலோ அந்த நினைவுகளிலிருந்து மாறி இயல்பு வாழ்க்கைக்கு வர மறதி அவசியமே!



மறதி, நம்மை கடந்த காலத்தில் இருந்து எதிர்காலத்தை நோக்கி முன்னேற உதவுகிறது. நடந்தவற்றையே நினைவில் கொண்டால்,  நிகழ்காலம் வீணாகிவிடும். இதனால் நமக்கு மறதியும் ஒரு வரம்தான். 


Saturday 13 March 2021

மாதவம்..Sunday_special

என்னைப் பொறுத்தவரை என்னை சரியாக வழிநடத்திய  பாசமான பெற்றோர்...அன்பும் காதலும் கொண்ட நான் ஆசைப்படும் எதையும் நிறைவேற்றும் நல்ல கணவர்...அறிவான ஆதரவான சிறந்த குழந்தைகள்...என்னைப் புரிந்து கொண்டு இசைவாக நடக்கும் மருமகள்கள்..நவரத்தினங்களாய் பேரக் குழந்தைகள்...இவையே என் தவப்பயன்தான் என்று நித்தமும் அந்த இறைவனுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்🙏

நான் எழுதப் போவது என் கணவரின் சித்திப் பாட்டி அதாவது என் மாமியாரின் சொந்த சித்தி. தர்மாம்பாள் என்ற அவரை தம்முப் பாட்டி என்றுதான் நாங்கள் அழைப்போம்.அந்த நாளையப் பெண்ணான அவரது தைர்யமும் சாமர்த்தியமும் என்னை வியக்க வைத்த விஷயங்கள்! 

குடந்தையில் நாங்கள் இருந்தபோது அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து ஜாங்கிரி, முறுக்கெல்லாம் செய்து தருவார்! அவர் பட்சணம் செய்யும்போது நானும் கற்றதோடு அவரின் வாழ்க்கை பற்றியும் நிறைய தெரிந்து கொண்டேன்.

அவர்  ஒரு நூற்றாண்டிற்கு முன்பு பிறந்தவர். என் மாமியாரைவிட சில மாதங்களே பெரியவர். என் மாமியாரின் அம்மாவும், அவர் பாட்டியும் ஒரே நேரம் கர்ப்பமாயிருந்ததாகவும்,என் மாமியாரின் அம்மா மாப்பிள்ளை எதிரில் வரவே மிகவும் வெட்கப்படுவார் என்றும் சொல்வார்!

ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து 15 வயதில் திருமணம் நடந்தது. அந்தக்கால முறையில் திருமணம் நடந்தது முதலே மடிசார். வீட்டு வேலைகள் அனைத்தும் அவர் தலையில். அவர் புகுந்த வீட்டில் பட்ட கஷ்டங்களைக் கேட்டால் மனம் கலங்கிவிடும். 

மாமியாரின் கொடுமை மட்டுமல்லாது அவரது இரண்டு புக்ககத்து விதவை அத்தைகளும் படுத்திய பாட்டை கதை கதையாக சொல்லி வருத்தப் படுவார். வீட்டு வேலைகள் அத்தனையும் செய்துவிட்டு ஒருவேளை சாப்பாடு கூட சரியாகப் போடாமல் கஷ்டப் படுத்துவார்களாம். 

'உங்க ஆத்துக்காரர்ட்ட சொல்ல மாட்டேளா'ன்னு கேட்டால், 'என்னை அவர்கூட பேச விட்டால்தானே' என்பார். அவருக்கு காஃபி கொடுக்கும்போது பேசலாம்னு பார்த்தா மூன்று பெண்களும் சேர்ந்து பேச வந்து விடுவார்களாம். 

தனியாகப் பேசுவதைக் கண்டாலே..'அவனை மயக்கப் பார்க்கறியா' என்பதோடு அவர்களைத் தனியாக படுக்கவும் அனுமதிக்க மாட்டார்களாம். அவர் கணவரும் பயந்து கொண்டு அவர்கள் சொல்வதைத்தான் கேட்பாராம்.

ஏழெட்டு மாதமாகியும் கர்ப்பமாகவில்லை என்ற சாக்குடன் பிறந்த வீட்டுக்கு அனுப்பி விட, அவரின் பெற்றோர் திரும்ப சமாதானம் செய்து கொண்டுவிட, இப்படியே இரண்டு வருடங்களாக... 'உங்கள் பெண்ணுக்கு குழந்தை பிறக்காததால் நாங்கள் வேறு திருமணம் செய்யப் போகிறோம்' (அவரோடு படுத்தால்தானே எனக்கு குழந்தை பிறக்கும் என்பார்!) என்று சொல்லி மொத்தமாக திருப்பி அனுப்பிவிட, பாவம் அவர் வாழாவெட்டி என்ற பெயரோடு பிறந்தவீட்டில் இருந்த நாட்களின் கொடுமையை சொல்லும்போது என் கண்கள் கலங்கிவிடும். 

17 வயதில் ஒரு பெண் மணமாகி வாழாமலிருப்பது எத்தனை கஷ்டமான விஷயம். அதிலும் ஊராரின் ஏச்சு பேச்சு வேறு. இந்தக் காலம் போல் இன்னொரு திருமணமும் செய்ய முடியாத நிலை.

'இரண்டாவது மனைவிக்கும் குழந்தை பிறக்காவிட்டாலும், அவள் சாமர்த்தியமாக இருந்து விட்டாள். நான்தான் ஏமாளி' என்று அழுவார். பெற்றோர் காலத்துக்கு பின் உடன் பிறப்புகளுடன் அவர்களுக்கு சுமையாக இருக்க முடியாதவர் வெளியிடங்களுக்கு சென்று பட்சணம், சமையல் செய்து கொடுத்து சுயமாக சம்பாதிக்க ஆரம்பித்தாராம். 

இடையில் கணவரின் மரணம் கேட்டு அந்தக்கால முறையில் மடி செய்து விட்டார்களாம். அவருடன் வாழாவிட்டாலும் இதுதான் அவரால் நான் பெற்ற கோலம் என்பார். 

அவருக்கு 35 வயதாக இருந்தபோது இவரைப் பற்றி அறிந்த ஒருவர் 'அரசு வேலையில் இருந்த உங்கள் கணவருக்கு பென்ஷன் கிடைக்கும்' என்று சொல்ல, 'அதற்கு ஆதாரம் இல்லையே?'என்றபோது, 'இரண்டாவது மனைவிக்கு பென்ஷன் வந்து கொண்டிருந்தால் உங்களுக்கு கிடைக்காது' என்றபோது யோசித்திருக்கிறார்!

தன்னைத் திருமணம் செய்து கொண்டு ஒழுங்காக வாழ்க்கை நடத்தாததால்தானே தான் இன்று இப்படி எல்லோராலும் ஏசப்படுகிறோம் என்று நிறைய அழுதபின் ஒரு முடிவுக்கு வந்தாராம். அந்த மனிதரின் பென்ஷனை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற உறுதியுடன் தனியாக அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார். 

அவர் கணவர் ஆசிரியராயிருந்த பள்ளியில் சென்று விபரங்களை சொல்லி அவர் வேலை பற்றிய அனைத்து விஷயங்களையும் அவர்கள் கைப்பட எழுதி வாங்கிக் கொண்டு, பென்ஷன் அலுவலகத்திற்கு சென்று அந்தப் பெயரில் யாராவது பென்ஷன் வாங்குகிறார்களா என்று விசாரித்ததில்,  இல்லை என்பதை அறிந்தார். தான் அவரது மனைவி என்பதை நம்பாதவர்கள் சாட்சிகளைக் கேட்டனராம்.

தன்னிடமிருந்த திருமணப் பத்திரிகை, கணவரின் புகைப்படம் மற்றும் அவர் பள்ளியில் பெற்ற விபரங்களுடன் பலமுறை சென்றாராம். அந்நாளில் விவாகரத்து பத்திரம் இல்லாததோடு, மீண்டும் அவர் திருமணம் செய்ததற்கான சாட்சியும் இல்லாததால், இவரே அவர் வாரிசு என்பதால் பென்ஷன் அப்ரூவ் ஆகியதாம்.

அவர் ஓய்வு பெற்ற நாளிலிருந்து அரியர்ஸ் சேர்ந்துவர, பாட்டி ஒரே நாளில் பணக்காரியாகிவிட்டேன் என்பார் சிரித்துக் கொண்டே! ஆனால் அதற்காக தான் இரண்டு வருடங்கள் நடந்த நடையும், அவர்களுக்கு கொடுத்த லஞ்சமும் வீண் போகவில்லை என்று மிகப் பெருமையாக சொல்வார்!

'ஏன் பாட்டி! இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த பென்ஷனை ஏன் வாங்கினேள்?' என்றால்,'என்னைக் கடைசிவரைக் காப்பாற்றுவேன் என்று என் கைப்பிடித்தவர் தைரியமில்லாமல் அடுத்தவர் பேச்சைக் கேட்டு நடுவில் விட்டதால்தானே இந்த கஷ்டம். இன்று நான் அவர் பணத்தில் வாழ்கிறேன் என்ற நினைவே நான் பெற்ற வெற்றி. ஏதோ ஒரு விதத்தில் அவரைப் பழி வாங்கிய சந்தோஷம்' என்றபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 

வெறும் மூன்றாவது வரை படித்தவர் தனியாக,தைரியமாக இத்தனை விபரங்களை சேகரித்து மாதாமாதம் பென்ஷன் வாங்கியது எவ்வளவு பெரிய விஷயம். அந்த நாளில் இப்படிப்பட்ட பெண்களைக் காண்பதே அபூர்வம்தானே? எண்பது வயதுவரை வாழ்ந்து அவர் மறைந்த விஷயம் என் மனதை மிகவும் பாதித்தது.

என்னைப் பொறுத்தவரை இவர் கணவனோடு வாழ 'மாதவம்' செய்யாவிட்டாலும், தன் திறமையால் அவரால் கிடைத்த பணத்துடன் வாழ்ந்தது 'மா தவம்'தானே!

ராதாபாலு


Saturday 6 March 2021

Second Innings(28.2.'21)




#Sunday_special

இந்தத் தலைப்பை பார்த்ததும் நான் யோசித்தது..இது எத்தனையாவது இன்னிங்ஸ்?..என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு பருவமும் ஒரு இன்னிங்க்ஸ்தான்! ஒன்றில் பந்தாக..அடுத்ததில் பேட்( bat)டாக..மற்றொன்றில் ஆடுபவராக..இன்னொன்றில் மைதானமாக! இறுதியில் ஆட்டம் முடிந்து வெற்றியா தோல்வியா என்பதை தீர்மானிப்பவன் அந்த இறைவன்தான். ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா..!

பிறந்து 15 வயதுவரை சீரும் சிறப்புமாக வளர்க்கப் படுகிறோம். நம் ஆசைகள் மறுக்கப் படுவதில்லை. கேட்குமுன்பு எல்லாம் கிடைக்கும்.பெற்றோர் ஆலோசனைபடி படித்து முடித்து ஓரளவு உலகம் பற்றி அறிந்து கொள்கிறோம். எனினும் சரியான புரிதல் கிடைப்பதில்லை.

30வயது வரை..அடுத்து மேலே என்னபடிப்பது..என் வேலைக்குச் செல்வது..நாம் ஒரு முடிவெடுக்க பார்த்தவர் பழகுபவர் அவரவர் அனுபவம் கூற, எதிலும் குழம்பிப் போகாமல் நம் வாழ்வை தீர்மானிக்கும் பருவம் இதுதான். இங்குதான் நம் ஆசைகள் பந்து போல் அடிபடுகிறது! நம் ஆசைப்படியா..பெற்றோர் விருப்பப்படியா என்ற மன வேற்றுமைகள். ஆசை முறையானபடி நிறைவேறுபவர்கள் வெல்கிறார்கள்.

அடுத்தது வாழ்வில் முக்யமான திருமணகாலம். அதிலும் காதல் மோதல் என்று பல நிலைகள். திருமணங்கள் யாரால் நிச்சயிக்கப் பட்டாலும் விட்டுக் கொடுத்து வாழ்பவர்கள் வெற்றி பெற்றவர்கள்! மனதில் திருப்தி இல்லாவிட்டாலும் வாழக் கிடைத்த வழி என்று ஏற்றுக் கொள்கிறோம். 

40-50 வயது வரை..அடுத்தபடி குழந்தைகள்..குடும்பம் பெருக  குழந்தைகள் பெரியவர்களாகி அவர்கள் விருப்பங்கள் சில நமக்கு சரியெனத் தோன்றும்..பலதில் விருப்பம் இருக்காது. தலைமுறை இடைவெளியால் நம் பேச்சுக்கு மதிப்பில்லாமல் போகும் நிலை. எல்லாரிடமும் மனம் வேறுபட்டு..போதுமடா வாழ்க்கை..என்ற எண்ணம் வலுத்து ஆட்டத்திலிருந்து விலகி விடுகிறோம்!

50க்கு மேல்..இது வாழ்வின் இறுதிக் கட்டம். வேலையில் ஓய்வு.. வியாதிகளின் ஆரம்பம்..பிள்ளைகள் பெரியவர்களாகி பெற்றோரை அதிகாரம் செய்யும்போது, விட்டு விலகும்போது அவர்கள் மேல் வைத்த பாசமே மனதுக்கு பாரமாகி கடவுளை அடிபணிவது ஒன்றே கடைசி வழியாகிறது.

என்னைப் பொறுத்தவரை இன்றுவரை நடந்த அனைத்துமே மிக சரியாக நடந்ததற்கு அந்த இறையருளே காரணம் என்பேன். அன்பான கணவர், ஆதரவான குழந்தைகள். என் ஆசையோடு அவர்களுக்கு விருப்பமான படிப்பு, அதில் சிறப்பாக இருந்து இன்றிருக்கும் உயர்நிலை, அருமையான மருமகன், மருமகள்கள் பேரன் பேத்திகள்...நிறைவான வாழ்வு.

இனிவரும் நாட்களும் இதே போல் வாழ அந்த இறைவனிடம் வேண்டுகிறேன்.

நம் மத்யமர் குழுவில் இருப்பவர்கள் பலரும் கடமைகளை முடித்து கடைசி இன்னிங்க்ஸில்தான் இருக்கிறோம். நாம் ஆசா

பாசங்களிலிருந்து விலகி நாம் மனம் திறந்து பல விஷயங்களை இங்கு பகிர்வதால் மனம் லேசாகிறது. 

அடுத்தவர் பகிரும் விஷயங்களைப் படிக்கும்போது..இதைவிட நம் நிலை உயர்வுதான் என்றும், கடவுள் இவரது கஷ்டங்களை தீர்க்கட்டும் என்று மனமுருகி வேண்டுவதாலும் நம் துன்பம் குறைகிறது.

நம் உறவுகள், பிள்ளைகள் நம் திறமைகளை அறிந்து எதுவும் சொல்லாமல் இருக்கும்போது, மற்றவர் பாராட்டுவது நமக்கு மனமகிழ்ச்சியைத் தருகிறது.

வாழ்வில் உற்சாகமும் நாமும் ஏதாவது செய்வோம் என்ற உத்வேகமும் கூடும்போது உடல் நோய்கள் கூட பெரிதாகத் தெரிவதில்லை. 

முகமும் முகவரியும் தெரியாததெரியாத நட்புகளின் ஆதரவும் ஆறுதலும் நமக்கு ஒரு டானிக் எனலாம். இந்த இன்னிங்க்ஸி



ல் மனதை லேசாக்கி இயல்புநிலையில் நம் வாழ்வைத் தொடர நிச்சயம் மத்யமர் ஒரு காரணம். 


Thursday 4 March 2021

புத்தாண்டே வருக🌻(31.12.'20)

 

🌺புத்தாண்டே வருக🌻

2020..ஆரம்பித்தபோதே ஆனந்தம்தான். எப்பொழுதும் நவராத்திரியிலிருந்தே நான்  பிஸியாகி விடுவேன்.மார்கழி முழுவதும் விடிகாலை பூஜை, விதவிதமாய் கோலம்.. நேரம் சரியாக இருக்கும்.

ஜனவரி 3 மும்பையில் என் பெண்ணின் மாமனாருக்கு 75வயது நிறைவு விழாவுக்கு சென்றபோது அங்குள்ள மத்யமர் தோழிகளான மோகனா, விஜியை சந்தித்தது இவ்வருடத்தின் முதல் சந்தோஷம்!

பொங்கல் முடிந்ததும் relaxation ற்காக ஹைதராபாதிலுள்ள பெண் வீட்டிற்குச்  சென்று ஒரு மாதம் இருந்துவிட்டு  வருவோம். அதனாலேயே இரண்டு வருடங்களாக மத்யமர் ஆண்டு விழாவிற்கு
வரமுடியவில்லை. இந்த ஆண்டும் அதேபோல் சென்று பல ஆலயங்கள்,  விசாகப்
பட்டினம், ஹோட்டல் சாப்பாடு என்று ஜாலியாக enjoy பண்ணிவிட்டு  வந்தோம்!

ஏப்ரல் மாதம் பிள்ளைகள் வீட்டுக்கு லண்டனும் பெர்லினும் சென்றுவர விஸா apply செய்திருந்தோம். அங்கு போக வேண்டிய இடங்களுக்கெல்லாம் லிஸ்ட் போட்டு, அதில் பத்மாவை சந்திக்க Denmark போகும் programmeம் உண்டு...

நாங்கள் குடந்தையில் புண்யக்ஷேத்ரம் என்ற இடத்தில் வீடு கட்டிக் கொண்டிருந்ததால் திருச்சியிலிருந்து இங்கு மார்ச் 18 வந்தோம்...
மார்ச்22முதல் ஊரடங்கு ஆரம்பிக்க...
கொரோனாவால் உலகமே ஸ்தம்பிக்க...
விஸா cancel ஆகி என் ஆசை புஸ்வாணமாயிற்று!

கட்டிட வேலைகளும் நின்றுவிட...
வெளியில் எங்கும் செல்ல முடியாமல்...
இங்கு மாசில்லாத காற்றும், காலடியில் காவேரியும்..
பசுமையான சுற்றுச் சூழலும் எங்களுக்கு புத்துணர்வுதர..
இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை இன்பமயம்தானே!

ஜூன் மாதத்தில் என் கணவரின் சித்தப்பா பிள்ளை கொரோனாவிற்கு பலியாக..சற்றே நிலைகுலைந்து போனோம் நாங்கள். வெளியில் வரவே பயந்த நாட்கள் அவை..
மனிதரைப் பார்த்து மனிதரே பயந்த கொடுமையான நாட்கள்...

ஜூலைக்குப் பின்பே வீட்டு வேலைகள் நடந்து, எங்கள் ஆசைப்படி வீடு கட்டி ஆகஸ்ட்டில் கிரகப்ரவேசம் செய்தோம். சென்னையி
லிருந்து வந்த என் பிள்ளை குடும்பம் இந்த சூழ்நிலையில் மயங்கிப் போனார்கள்!

பங்களா போல வீடு..பக்கத்தில் தோட்டம்..விளையாட நாய்க்குட்டி..மாஸ்க் போட வேண்டாம்..கால்வீசி நடக்கலாம்..காவேரியில் குளிக்கலாம் என்று பேத்திகளுக்கு பரம சந்தோஷம்!

பேத்திகளுக்கு online classes.. என் பிள்ளைக்கும் work from home என்பதால் கடந்த ஆறு மாதங்களாக இங்குதான் இருக்கிறார்கள். என் பெண்ணும் குழந்தைகளுடன் வர ஒரே கொண்டாட்டம்தான்.
பேத்திகளோ இனி ஜூன்மாதம்
பள்ளி திறக்கும்போது
போனால் போறும் என்று ஒரே குஷியில் இருக்கிறார்கள்!

வீட்டு வேலைகள் அதிகம் என்பதால் மத்யமரில் அதிகம் என்னால் எழுத முடியவில்லை. இந்தமுறை 'மத்யமர் மார்கழி வைபவத்'தில் கலந்து கொண்டு  திவ்யதேசங்கள் பற்றி பேசியதும், என் மருமகள் திருப்பாவைக்கு நடனம் ஆடியதும் மறக்க முடியாத சந்தோஷ நேரங்கள்!

கொரோனாவால் பல கஷ்டங்கள் வருத்தங்கள் இருந்தாலும் குடும்ப மக்கள் ஒன்றாக இருக்கும்போது ஒருவரை ஒருவர் இன்னும் அதிகம் புரிந்து கொள்ளவும், நேசிக்கவும் முடியும் என்பது மறுக்க முடியாத நிஜம்.

சென்ற ஆண்டு நாம் நினைத்தே பார்க்காத மாற்றங்களைத் தந்தாலும் அவை நம்மை நம் மனதை சுற்றுப் புறத்தை எப்படி தலைகீழாக மாற்றியது என்பதை நம்மால் மறக்க முடியாது. 

இனிவரும் 2021ம் ஆண்டு நமக்கு ஏற்றங்களைத் தரும் சிறந்த ஆண்டாக இருக்க இறையருளை வேண்டுவோம்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💐💐

வீடியோ..மத்யமர்

 https://www.facebook.com/groups/Madhyamar/permalink/1593423394178802/

திருக்கண்ணங்குடி ஆலயம்

https://www.facebook.com/groups/Madhyamar/permalink/1594180250769783/
திருத்தேவனார்தொகை..திருக்கண்ணபுரம்

https://www.facebook.com/groups/Madhyamar/permalink/1598874070300401/
ஆர்த்தி dance..எல்லே..இளங்கிளியே

https://www.facebook.com/groups/Madhyamar/permalink/1602995546554920/
முப்பத்து மூவர் dance ஆர்த்தி

https://www.facebook.com/groups/Madhyamar/permalink/1603801026474372/
ப்ரியங்கா...ஆண்டாள் சரணம்

https://www.facebook.com/groups/Madhyamar/permalink/1608525482668593/
கூடாரை வெல்லும்..dance

கல்யாணம்_பண்ணிப்_பார்..3

கல்யாணம்_பண்ணிப்_பார்..3

கல்யாணம் பண்ணிப்பார்..2
https://www.facebook.com/groups/Madhyamar/permalink/1620172344837240/
கல்யாணம் பண்ணிப்பார்..1
https://www.facebook.com/groups/Madhyamar/permalink/1619434758244332/

என் மகள்
திருமணம் முடித்ததும் என் மூத்த மகனுக்கு  பெண் பார்க்க ஆரம்பித்தோம். அவன் Nanotechnologyயில் டாக்டர் பட்டம் பெற்று  ஜெர்மனியில் Max Planck instituteல் பணி புரிந்து கொண்டிருந்தான். தான்
ஒரு ரஷ்ய நாட்டுப் பெண்ணைக்  காதலிப்பதாகவும், அவளும் இவனைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாயும் சொன்னான். எனக்கு ஒரே அதிர்ச்சி. 'அதெல்லாம் சரிப்பட்டு வராது' என்று நான் மறுத்தேன். ஆனால், என் கணவரும் மற்ற பிள்ளைகளும் அவனுக்கு முழு சப்போர்ட்.

'நீ அந்தப் பெண்ணைப் பார்த்துப் பேசினால் மாறி விடுவாய். உன்னுடைய குணங்கள், செயல் முறைகள் எல்லாம் அவளிடமும் இருக்கிறது அம்மா! உனக்கு அவளை ரொம்பப் பிடித்துவிடும்' என்று எனக்கு ஐஸ் வைத்தான்!

அதோடு விடாமல் வெப்காமில் அவளைக் காட்டினான். பளிச்சென்று இருந்தாள். இவன் சொல்லிக் கொடுத்தபடி 'ஹலோ அம்மா! செளக்கியமா?' என்று அழகாகத் தமிழில் கேட்டாள்!

மறுத்துச் சொன்ன நானே என் கணவருடன் தாலி, புடவை சகிதம் ஜெர்மனி சென்று அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தோம்.அவளுக்கு ஆங்கிலம் சரளமாகப் பேச வராது. அதனால் என் பிள்ளை மூலம்தான் நாங்கள் இருவரும் பேசிக் கொள்வோம்! இப்பொழுது கற்றுக் கொண்டு நன்றாகப் பேசுகிறாள்.

முதல்முறை என் இரண்டாவது பிள்ளை கல்யாணத்துக்கு வந்தபோது அவள் எங்களிடம் பழகிய விதமும், அவளுடைய பண்பும், அன்பும் நல்ல பெண்தான் மருமகளாக வந்திருக்கிறாள் என்று மகிழ்ந்தேன்!

என் மகனிடம் அவள் காட்டும் பிரியமும், மரியாதையும் அவன் என்ன சொன்னாலும் உடனே செய்யும் பாங்கும், மணமாகி 15 வருடமாகியும் மாறவில்லை.

சென்ற ஆண்டு இங்கு வந்தபோது எங்கள் குலதெய்வ ஆலயத்திற்கு குடந்தை அருகில் உள்ள கிராமத்திற்கு சென்றிருந்தோம். எங்கள்
உறவினர்களுடன் அன்பாகப்
பழகி என் பிள்ளையுடன் சேர்ந்து நமஸ்காரம் செய்து மரியாதையோடு நடந்து கொண்டதைப் பார்த்து அனைவரும் ஆச்சரியமாகி
விட்டனர்.

அடுத்த மகனுக்கு பெண் தேடும் முன்பு ..நீ யாரையாவது லவ் பண்ணினா சொல்லு..என்றோம். நீயே பார் என்றதும் பார்க்க ஆரம்பித்தோம். இப்பவும் ஆயில்யம் வேண்டாம், மூத்தபிள்ளை வெளிநாட்டுப் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டிருப்பதால் வேண்டாம் என்பவர்கள் இருப்பது வேடிக்கையாக இருந்தது!

இதையெல்லாம் பெரிது படுத்தாமல் நல்ல குடும்பம், படிப்பு, வேலை என்று பெண் வீட்டாரால் பாராட்டப்பட்டு என் பிள்ளைக்கு கிடைத்த மிக அருமையான மாட்டுப்பெண் இவள்! நாங்கள் எதுவும் அவர்களிடம் கேட்க
வில்லை. அவர்கள் விருப்பப்படி செய்த சீருடன் வந்தவள், எங்கள் பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொண்டு ஒன்றி வாழ்பவள்! இசை, நடனம் இவற்றில் ஆர்வம் உள்ளவள். இந்தமுறை திரு அனந்து அவர்களின் மார்கழி வைபவத்தில் மூன்று திருப்பாவைக்கு நடனம் ஆடியுள்ளாள்.

என் கடைசி பிள்ளை சிங்கப்பூரில் வேலையில் இருந்தான். என் மூன்றாம் மருமகள் அயர்லாந்து பெண். பெரிய பிள்ளை வெப்காமில் காட்டி பெண் எப்படி என்றான்! இவனோ சென்னைக்கு வீட்டிற்கே அவளை அழைத்து வந்து அறிமுகப் படுத்தினான்!

அவள் Engineer  மற்றும் Physiotherapist. அவளுக்கு தமிழ்த் தோழிகள் நிறைய உண்டு. இரண்டு முறை இந்தியாவிற்கு வந்தவளுக்கு இந்தியாவோடு ஒரு இந்தியன் மீதும் காதல் வந்து விட்டதாக சொன்னாள்! முதல்முறை வந்தபோதே எங்கள் எல்லோருடனும் மிக சகஜமாக பேசி பழகியதுடன் வற்றல்குழம்பு, உருளை ரோஸ்ட் எல்லாம் ரசித்து சாப்பிட்டாள்! சிங்கப்பூரில் திருமணம் நடந்தது. தற்போது லண்டனில் இருக்கிறார்கள்.

நம் குழந்தைகள் நம்மிடமிருந்து வந்தவர்கள். அதனால் அவர்கள் நம் இஷ்டப்படி நடக்க வேண்டும் என நாம் நினைப்பது தவறு.  ஒவ்வொருவருக்கும் தனியான எண்ணங்கள் ஆசைகள் உண்டு. அவர்கள் வாழ்க்கையை அவர்களே தீர்மானிப்பதில் தவறு என்ன?

எல்லா மனிதர்களிடமும் தனிப்பட்ட சிறப்பான குணங்கள் உண்டு. அதில் ஈர்ப்பு ஏற்படும் போதுதானே இருவருக்குள் காதல் ஏற்படுகிறது. ஒருவருக்
கொருவர் குறை கூறிக் கொள்ளாமல், சந்தோஷமோ, துக்கமோ இருவரும் இணைந்து அதனை அனுபவிப்போம் என்ற எண்ணம் இருந்தாலே காலம் முழுதும் இணைந்து இன்பமாக வாழ முடியும்.

நாமெல்லாம் கணவன்/மனைவி வேறுபட்ட எண்ணங்களோடு இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தோம்/வாழ்கிறோம். இன்றைய இளைய தலைமுறை அப்படி இல்லை.நிறைய யோசித்து முடிவெடுத்து சிறப்பாகவும் வாழ்கிறார்கள். நாம் அந்த நாளைய விஷயங்களைக் கூறி அதன்படி அவர்களை நடக்கச் சொல்வதால் நமக்குள் மனவேற்றுமைதான் வரும்.

வாழ்க்கை வாழ்வது ஒருமுறை. அதை தம் விருப்பத்திற்கு சந்தோஷமாக வாழ ஆசைப்
படுகிறார்கள். இதில் என்ன தவறு? பெரியவர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணங்களே இன்று டைவர்ஸில் முடிகிறதே.

'உனக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை' என்று சுலபமாக சொல்லிவிடலாம். இன்று நமக்கு ஆதரவாகப் பேசும் உறவும் நட்பும் நாளை நமக்கு கஷ்டம் வரும்போது கண்டுகொள்ள மாட்டார்கள்.

என் பிள்ளைகள் காதலித்த
போதும் நாங்கள் இதையெல்லாம் யோசித்தோம். அவர்களுக்கும் எடுத்துச் சொன்னோம். அவர்கள் உறுதியாக இருந்ததாலேயே திருமணத்திற்கு சம்மதித்தோம். இன்றுவரை அவர்கள் எங்களுடன் பாசமாக இருப்பதுடன், அவர்களும் ஒருவருக்கொருவர் அன்யோன்யமாய் வாழ்வதும் சந்தோஷமாக இருக்கிறது.

இன்று கூட்டுக் குடும்பங்கள் சாத்தியம் இல்லை.
இக்காலத்தில் அவரவர் வாழ்க்கையை தம் இஷ்டப்படி வாழவே அனைவரும் விரும்புகின்றனர். வீட்டுப் பெரியவர்களின் அறிவுரைகளும், வாழ்க்கை அனுபவங்களையும் இந்தத் தலைமுறையினர் கேட்டு நடக்க விரும்புவதில்லை. இன்றும் சில கூட்டுக்குடும்பங்கள் சிறப்பாக வாழ்வது பாராட்டத் தக்கது.

பெரும்பாலான  இளைய தலைமுறையினர் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். இங்கிருக்கும் பெரியவர்களும் வேலை ஓய்வு பெற்றபின் பொறுப்புகளி
லிருந்து விலகி அவரவர் விருப்பப்படி வாழ ஆசைப்படுகிறார்கள். இன்று Senior Citizen Homes அதிகமாயிருப்பதன் காரணம் இதுதான். நாம் சம்பாதிக்கும் காலத்திலேயே நமக்காக என்று பணத்தை சேமித்து வைத்துக் கொள்வது நல்லது. வயது முதிர்ந்தபின் குழந்தைகளை எதிர்பார்த்து இருக்க வேண்டாம்.

நாங்களும் என் இரண்டாவது பிள்ளையுடன் இருந்தோம். பெண், பிள்ளைகளுக்கு குழந்தைகள் பிறந்தபோது அங்கு சென்று தேவையான உதவிகள் செய்தோம். எல்லா கடமைகளும் முடித்த நிலையில் நமக்கென்று பூஜை ஆலயதரிசனம் என்ற ஒரு  வாழ்க்கை தேவை என்று தோன்ற, கடந்த எட்டு வருடங்களாக தனிக்
குடித்தனம்! எங்கள் எண்ணம் புரிந்து என் மகன் எங்களை தனித்து வாழ அனுமதித்தான். என் மருமகள்தான் ரொம்ப வருத்தப் பட்டாள்.

அவ்வப்போது பெண் பிள்ளைகள் இருக்கும் ஊருக்கு சென்று தங்கிவிட்டு வருவோம். இதனால் நமக்கும் குழந்தைகளுக்குமான நெருக்கம் அதிகமாகிறது. முக்கியமாக பேரன் பேத்திகள் நம்மோடு இருந்து மகிழ ஆசைப்படுகிறார்கள். இரண்டு மாதமானால்...எப்ப இங்க வருவாய் தாத்தா...என்று கூப்பிடுகிறார்கள்.

இப்பொழுது நாங்கள் குடந்தையில் இருக்கிறோம். காவிரிக் கரையோரம் அக்ரஹார டைப்பில் தூணும் திண்ணையுமாக தனித்தனி வீடுகள். சுத்தமான காற்று. மாசில்லாத சுகமான வாழ்க்கை! அமைதியான சுற்றுப்புற சூழ்நிலை!

சென்ற ஆகஸ்ட்டில் கிரகப்பிரவேசத்திற்கு வந்த என் மகன் இங்குதான் இருக்கிறான். பேத்திகளுக்கு பள்ளி திறந்தபின் இங்கிருந்து சென்னை போகணுமே என்ற வருத்தம்! நான் onlineல் படித்துக் கொண்டு இங்கேயே இருந்து விடுகிறேன் என்கிறாள் பெரிய பேத்தி!

நம் பிள்ளைகளை அவர்கள் குடும்பம் அவர்கள் பொறுப்பு என்று தள்ளி இருந்து பார்த்து சந்தோஷப்படுவதுடன், அவர்கள் கேட்டால் மட்டுமே தேவையான விஷயங்களைப் பற்றி சொல்வது நமக்கும் மரியாதை..அவர்களுக்கும் மகிழ்ச்சி.

கல்யாணம்_பண்ணிப்_பார்_2 (26.1.'21)

கல்யாணம்_பண்ணிப்_பார்_2

எனக்கு ஒரு பெண்..மூன்று பிள்ளைகள். பெண் டாக்டர். அவள் பத்தாம் வகுப்பு முடித்ததும்  என் கணவருக்கு கோலாப்பூர் மாற்றலாகிவிட அங்கு +2 முடித்து  மும்பையில் Grant Medical Collegeல் MBBS படித்தாள். நாங்களும் மும்பை சென்று விட்டோம். அவளுக்கு திருமணத்திற்கு பார்க்கலாம் என நாங்கள் யோசித்தபோது தனக்கு டாக்டர் பையன்தான் சரிவரும் என்றாள். நாங்கள் பார்த்தவரை இன்ஜினியர் வரன்களே அதிகம் வந்தது. Matrimonialலும்  டாக்டர்கள் அதிகம் இல்லை.


இரண்டாம் வருடம் படித்தபோது, தான் ஒரு சீனியர் பையனை விரும்புவதாக சொன்னாள். நாங்கள் இப்படித்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் கட்டாயப்படுத்தவில்லை. என் கணவர்...குழந்தைகளுக்கு படிப்பைக் கொடுத்திருக்

கிறோம். அவர்கள் சரியான முடிவுதான் எடுப்பார்கள்...

என்பார். 


பையனைப் பார்க்க வேண்டும் என்றபோது அவளே அழைத்து வந்து அறிமுகப் படுத்தினாள். மராட்டிய பையன். பார்க்க நன்றாக இருந்ததோடு மிக அமைதியாக மரியாதையாகப் பேசினான். அவர்கள் குடும்பம் பற்றி சொன்னதுடன் என் பெண்ணை திருமணம் செய்து கொள்ள அவர்கள் வீட்டார் ஒப்புக் கொள்வார்கள் என்றான். எங்களுக்கெல்லாம் ஹிந்தி தெரிந்ததால் அவனுடன் பேச முடிந்தது. 


அவனுக்கு இவள் தமிழ்ப் பெண் என்பதோடு இவளின் நீண்ட தலைமுடி, பளிச்சென்ற பேச்சு, உயரம் (இருவரும் ஒரே உயரம்)எல்லாம் பிடித்துப் போய்தான் இவளை propose செய்தானாம்!


எனக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது. முதலில் மொழிபிரச்னை. (இப்போது மராட்டியில் கவிதை எழுதும்வரை தேறிவிட்டாள்!) பின் அவர்கள் பழக்க வழக்கங்கள் வித்யாசமானது. இவளுக்கு சரிவருமா என்று நான் (என் கணவருக்கு பெண் மேல் அதீத நம்பிக்கை. அவர் கவலைப்படவில்லை!) பயப்பட, அவளோ...நீங்கள் பார்த்த பையனுடன் சிறிது நேரமே பேசி முடிவு செய்து கல்யாணம் பண்ணிக் கொண்டால் பின்னால் பிரச்னைகள் வராதா? என்னை விரும்பும் ஒருவனோடு என்னால் அட்ஜஸ்ட் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ முடியும்..என்றாள்.


அன்று மாலையே அவன் பெற்றோர் எங்களுடன் பேசி தம் வீட்டுக்கு வரச்சொல்லி அழைத்தார்கள். அவர்களுக்கு இரண்டு பெண்கள், இரண்டு பிள்ளைகள். பெண்களுக்கு திருமணமாகி விட்டது. இவன் மூன்றாவது பிள்ளை.

எங்களுக்குள் பரஸ்பரம் பிடித்துவிட இருவரும் சம்பந்தி ஆகிவிடலாமென முடிவு செய்தோம்! 


என் பெண், மாப்பிள்ளையிடம்

...நீங்கள் இருவரும் இணைந்து வாழ முடியுமா? பின்னால் ஏதாவது பிரச்னை வந்தால் எங்களிடம் வரக்கூடாது. அந்த நம்பிக்கை இருந்தால் மட்டுமே நாங்கள் திருமணம் செய்து வைப்போம்...என்றோம். அவர்களும் கண்களில் காதலுடன் ஒப்புக் கொண்டார்கள்!


அவர்களிடம் திருமணம் எப்படி செய்வது சீரெல்லாம் என்ன செய்வது எனக்கேட்டபோது,

எங்களுக்கு எதுவும் வேண்டாம். நீங்கள உங்கள் முறைப்படி செய்வதுபோல் நாங்களும் எங்கள் முறையில் திருமணம் செய்ய விரும்புகிறோம் என்றனர். எங்களுக்கும் சந்தோஷமாக இருந்தது. 


என் பெண் படிப்பு முடித்ததும்  திருமணம் நடந்தது.  நாங்கள் எங்கள் ஆசைப்படி பெண் மாப்பிள்ளைக்கு டிரஸ், நகை, வெள்ளி சாமான்கள் பரிசாகக் கொடுத்தோம். அவர்களும் என் பெண்ணுக்கு  அவர்கள் முறைப்படி கருகமணி தாலி, தங்க செயின், வளையல் என செய்தனர். எந்த மனக்கசப்புகளும், விதண்டாவாதங்களும் இன்றி மிக விமரிசையாக திருமணம் நடந்தது. 


அதன்பின் சில மாதங்களில் என் பெண் அவர்கள் வீட்டு பழக்க வழக்கங்கள் சமையல் முறைகளை மிக நன்றாகப் புரிந்து கொண்டு செய்வதாக அவள் மாமியார் பாராட்டினார். மாமியார் மாமனார் மிகவும் நல்லவர்கள். எந்த விஷயமும் இவளுடன் ஆலோசித்தே செய்வார்கள். இன்றோடு அவளுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் முடிந்து விட்டது. 


ஒரு பேரன் 9ம் வகுப்பும், பேத்தி நான்காம் வகுப்பும் படிக்கிறார்கள். இன்றுவரை இருவரும் அதே காதலுடனும், பாசத்துடனும் பெரியவர்களிடம் மரியாதையோடும் நடந்து கொள்வதைப் பார்க்கும்போது என் மகள் ஒரு சிறந்த  கணவரைத் தேர்ந்தெடுத்து நல்ல குடும்பத்தில் சிறப்பாக வாழ்வது பெருமையாக உணர்கிறேன். 


பிள்ளைகளின் திருமணப் பதிவு பின்னால்!!


இன்று திருமணநாள் கொண்டாடும் என் மகள் கிரிஜா மாப்பிள்ளை விஜய்யை  நீங்களும் வாழ்த்துங்களேன்🙏


கல்யாணம்_பண்ணிப்பார்(1)

கல்யாணம்_பண்ணிப்பார் 

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக அந்த காலத்தில் சொல்வார்கள். அதன் பொருள் முகமறியாத ஆணும் பெண்ணும் பெரியோர் நிச்சயித்தபடி அவர்களின் ஆசியுடன் மணம் புரிந்து கொண்டு, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் அது சொர்க்கம்தான்!


அதன்பின் வந்த காலங்களில்..40, 45 வருடங்களுக்கு முன்பு..என் திருமணம் நடந்த சமயம் வரதட்சிணை முக்கியமாக இருந்ததால் திருமணங்கள் ரொக்கத்தில் முடிவாகின! 


அரசுவேலை மாப்பிள்ளைக்கு இவ்வளவு..பிஸினஸ் செய்பவருக்கு இவ்வளவு..வங்கி அதிகாரிக்கு இத்தனை என்று பணம்தான் அங்கு பிரதானமாக இருந்தது, மனித மனங்களை விட!


அப்பொழுதெல்லாம் பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அதனால் பிள்ளை வீட்டார் ஏதோ ஆகாயத்திலிருந்து குதித்த மாதிரி பேசுவார்கள்! இன்றோ அந்த நிலை தலைகீழாகி பெண்கள் தம் விருப்பத்தின்படி திருமணம் செய்ய விரும்புகிறார்கள்! அவர்களும் சம்பாதிப்பதால் ஆண்களிடம் வதுதட்சணை கேட்பதில்லை!


இவை இரண்டிலுமே கெட்ட பெயர் பெறுவது Revathi Balaji   சொல்வது போல பிள்ளை,  பெண்களின் அம்மாக்கள் மட்டுமே! அப்பாக்களாகிய ஆண்கள் இந்தக் கொடுக்கல் வாங்கலில் involve ஆகாமல் ஓரங்கட்டப்பட்டு கைகட்டி வாய் பொத்தி ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்!!


என் திருமணம் வரதட்சணை உச்சத்தில் இருந்த காலத்தில் நடந்த திருமணம். சிலர் தம் பிள்ளை ஜாதகத்துடன் வரதட்சணை நகை (வைரத்தோடு, வைர மூக்குத்தியுடன்)

 சீர் சாமான்கள் லிஸ்ட்டும் எழுதி அனுப்புவார்கள்! இதெல்லாம் பார்த்து எனக்கு வெறுத்து விட்டது. 


வரதட்சணை கேட்காத பையனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்றேன் நான்! ஹ்ம்ம்..நடக்குமா அப்படி? அடுத்தவர் பணத்தில் அப்படி என்ன ஆசையோ? என் புக்ககத்தார் என் அப்பாவிடம

..உங்களுக்கு ஒரே பெண்தானே? அதனால் ஒரு கை🖐️ கொடுத்து

டுங்கோ..என்று கேட்டனர்!😃


அந்நாளில் என் அப்பாவின் சம்பளமே மூன்று இலக்கம்தான்! நான் ஒரே பெண். எனக்கு கீழே மூன்று தம்பிகள் படித்துக் கொண்டிருந்தார்கள். அந்நாளில் பெண்ணின் திருமணம் ஒரு கட்டாயக் கடமை என்பதால் என் அப்பா ஏதோ கடனெல்லாம் வாங்கி தன் கடமையை நிறைவேற்றினார்!! 


இந்தக் கால திருமணங்கள் சொர்க்கத்திலும் ரொக்கத்திலும் இல்லாமல் இருவரின் எண்ணங்களிலும்தான் நிச்சயிக்கப் படுகின்றன! 


கல்யாணம் பண்ணிக்(கொண்டு) பார்த்தாச்சு! இனி கல்யாணம் பண்ணிப் பார்த்த பதிவு தொடரும்😊


Wednesday 3 March 2021

அன்பே_எங்கள்_உலக_தத்துவம்19.2.'21) 320 Articles



அன்பே_எங்கள்_உலக_தத்துவம்

அன்புக்கு உண்டோ அடைக்கும்தாழ்..

அனுபவிப்பவரே அறிவர் அன்பின் மகிழ்ச்சியை..

மௌனவார்த்தைகளும்

கோபமும் கூட அன்பின் வெளிப்பாடுகளே..


கிடைத்த அன்பை நிலைக்க வைப்பதே சுகம்..

நமக்கு பிடித்தவரிடம் கெஞ்ச வைப்பது அன்பு..

நம்மைப் பிடித்தவரைக் கொஞ்ச வைப்பதும் அன்பே..


அழகைவிட அன்பைத் தரும் உள்ளமே அழகானது..

அறிவாளிகளை விட அன்பானவரையே நம் மனம் விரும்புகிறது..

அன்புக்கு ஏங்குபவரே நாம் அன்பு செலுத்த ஏற்றவர்..


அன்பும் அக்கறையும் இணைந்ததே இனிய வாழ்வு..

பிடித்தவரிடம் அன்பு செய்வதை விட பிடிக்காதவரையும் தன்வயப் படுத்துவதே பேரன்பு..

வாழ்க்கையின் பக்கங்களை அழகாக்கும் எழுதுகோல் அன்பு..


தாயிடம் மட்டுமே கிடைப்பது தூய அன்பு..

நெஞ்சிலும் தோளிலும் சுமப்பது தந்தையன்பு..

காதலும் காமமும் கலந்தது

துணையின் அன்பு..

பாசமும் பரிவும் பிணைந்தது

பிள்ளைகள் அன்பு..


முகங்களும் முகவரியும் அறியாத

#மத்யமர்_நட்புக்களின் மாறாத மட்டிலா அன்பு..!

அன்புடன் பேசுவோம்..!

அவரவர் இடத்திலி

ருந்தே..!

அது நம் நட்பை பலப்படுத்தும்..!

நம்மை ஒன்றுபடுத்தும்..!

அன்பை விதைப்போம் - அதில்

மகிழ்ச்சி எனும் பூக்களை அறுவடை செய்வோம்..!

இன்பம்  கூட்டி 

இனிய ராகம் மீட்டி

இணைந்து வாழ்வோம்

இதயம் கலந்த அன்பினிலே!