Tuesday 23 March 2021

மறதி..வரமா சாபமா?

 #Sunday_special

மறதி..வரமா சாபமா?

இந்த வார மத்யமர் பதிவுக்கான தலைப்பு என்ன?? ஹி..ஹி..மறந்தே போச்சே! எத்தனையோ யோசித்தும் நினைவு வராமல் போக, சங்கர்சாரின் பதிவைத் தேடி எடுத்து பார்த்தால் அவரே பதிவு போட மறந்து மறுநாள் போட்ட தலைப்பு..மறதி!

மறதிக்கும் எனக்கும் ரொம்...ப உறவாச்சே! ஐந்து நிமிஷத்துக்கு முன்பு வைத்தது கூட அடுத்த நிமிஷம் மறந்து விடும் மறதிசிகாமணியாச்சே நான்😄 

கேஸில் பாலை வைத்துவிட்டு அடுத்த வேலைக்குப் போய் மறந்துபோய், திரும்ப வந்து தீய்ந்த பாத்திரத்தை கைவலிக்க தேய்த்த கதை நிறைய!  சிலசமயம் நினைவு வந்து ஓடிவர, மேடை முழுதும் பாலாறாக ஓடிக் கொண்டிருக்கும்! 

இப்பொழுதெல்லாம் பாலை இன்டக்ஷன் ஸ்டவ்வில் நேரம் set செய்து விடுவதால் பால் பொங்குவதில்லை! இப்பவும் அப்பப்ப காஃபிக்கு பாலை வைத்து விட்டு அது பொங்கி வழிவது சர்வசாதாரணம்!!

ஒருநாள் ஈயச் சொம்பில் ரசத்தை வைத்ததை மறந்து வேறுவேலையாகப் போய்விட்டேன். கொஞ்ச நேரத்தில் ஏதோ நாற்றம் வர ஈயச்சொம்பு பாவமாக 'என்னைக் காப்பாத்து' என்று உருகி அழுது கொண்டிருந்தது!

என்ன செய்வது..அதற்கு ஆயுள் அவ்வளவுதான்!

பலமுறை வெளியில் போகும்போது வாட்ச், பர்ஸ், மொபைல் என்று எதையாவது மறந்துவிட்டு கொஞ்சதூரம் போனதும் ஞாபகம் வர, என் கணவர் பாவம்..காரைத் திருப்பிக் கொண்டு வந்து வீட்டைத் திறந்து எடுத்துப் போவோம்!

நேரில் பார்த்துப் பழகிய நண்பர்களைக் கூட வெகுநாள் கழித்துப் பார்க்கும்போது யாரென்று யோசிக்க, அவர்களே 'என்னை தெரியலயா? நான்தான்..' என்று அவர்களே சொன்னபின்பே நினைவு வரும்!

சிலநாள் முன்பு என்னை வந்து விசாரித்த ஒருவரைப் பார்த்து நான் திருதிருவென விழிக்க, அந்தப் பெண்ணோ 'நீங்க ரெண்டு வருஷம் முன்னால எங்காத்துக்கு வந்தேளே' என்றதும் என் நினைவைக் கிண்டிக் கிளறி யாரென்று புரிந்து கொண்டு பேரைச் சொல்லவும்..பாவம் அவர் வெறுத்து விட்டார்! இதுபோல் நிறைய்....ய மறதிகள்!

என் தோழி ஒருத்தி கேஸில் ஒரு தவலையில் வெந்நீருக்கு தண்ணீரை வைத்துவிட்டு ஆஃபீஸுக்கு போய் விட்டாள். மாலை திரும்பி வந்து பார்த்தபோது பாத்திரம் தீய்ந்து கேஸும் தீர்ந்து நாறிக் கொண்டிருந்ததாம்! இதெல்லாம் மறதி சாபமான சம்பவங்கள்!

என் கணவருக்கு ஞாபகசக்தி நிறைய்..ய! அதனால் இப்போதெல்லாம் எந்த சாமானை எங்கு வைக்கிறேன் என்று அவர் காதில் போட்டு விடுவேன்! நான் கேட்கும்போது சரியாக சொல்லிவிடுவார்! 'தாயே..என்னை மட்டும் மறந்துடாதம்மா!' என்று கைகூப்பிக் கெஞ்சும்போது நானே சிரித்து விடுவேன்!

முகநூலும், கூகுளும் நாம் அவற்றில் அக்கவுண்ட் ஆரம்பித்த அன்றுமுதல் நடந்த நிகழ்வுகளை நாள் தப்பாமல் நமக்கு சொல்லிவிடுவ

தாலேயே நாம் எதை மறந்தாலும் அவற்றிலிருந்து குறிப்புகளை எடுக்க முடிவது நமக்கு வரமே!

சில இழப்புகளிலிருந்து நம்மைத் தேற்றி வெளிக் கொண்டுவர மறதி அவசியமே. மறக்க வேண்டிய விஷயங்களை மனதில் போட்டுக் குழப்பி நாம் அதிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும்போது அதை சிறிது சிறிதாக மறப்பதே நல்லது. 

நாம் வஞ்சிக்கப் பட்டாலோ, ஏமாற்றப் பட்டாலோ அந்த நினைவுகளிலிருந்து மாறி இயல்பு வாழ்க்கைக்கு வர மறதி அவசியமே!



மறதி, நம்மை கடந்த காலத்தில் இருந்து எதிர்காலத்தை நோக்கி முன்னேற உதவுகிறது. நடந்தவற்றையே நினைவில் கொண்டால்,  நிகழ்காலம் வீணாகிவிடும். இதனால் நமக்கு மறதியும் ஒரு வரம்தான். 


No comments:

Post a Comment