Thursday 25 February 2021

என் பேத்தி சொல்லும் ஸ்லோகம்

 என் பேத்தி ப்ரியங்கா மிக  அழகாக சுலோகங்களை சொல்வாள். தாம்பரம் சங்கரா க்ளோபல் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். இப்பொழுது online classes என்பதால் தினமும் அவள் டீச்சரோடு சேர்ந்து சுலோகம் சொல்வாள். நான் அவளை வீடியோ எடுக்கிறேன் என்றவுடன் டிரஸ் பண்ணிக் கொண்டு சுவாமி முன்பு அமர்ந்து சொன்னாள். சில வார்த்தைகள் மழலையாகவே இருக்கும்! 


அவள் 'ஸ்ருதி ஸ்மிருதி 

புராணானாம் ஆலயம் கருணாலயம்

நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்'

என்ற ஸ்லோகத்தை 'சங்கரம் குளோப சங்கரம்' என்பாள். நான் ..அது குளோப சங்கரம் இல்லை.லோக சங்கரம்னு சொல்லணும்..என்றபோது

 ..எங்க ஸ்கூல் பேரு சங்கரா க்ளோபல் ஸ்கூல்தான. அதைப் பத்திதான் இந்த ஸ்லோகம்..

என்றபோது எனக்கு சிரிப்பு வந்தது! ஆனால் அவளுடைய அந்த நம்பிக்கை, பள்ளியின் மேலிருந்த மதிப்பு என்னைக் கவர்ந்தது. ஒருவிதத்தில் லோகம், குளோப் இரண்டுமே உலகத்தைக் குறிப்பதுதானே! 


மத்யமர் அனந்த நாராயணனின் மார்கழி வைபவத்தில் ப்ரியங்காவுக்கு...ஆண்டாள் ரங்கமன்னார் திருவடிகளே சரணம்...சொல்ல வாய்ப்பு கிடைத்தது.


இந்த மார்கழியில் நான் கோலம் போடவில்லை. பேத்தியோ தினமும்..நாம என்னிக்கு கோலம் போட்றது..என்று நச்சரித்து விட்டாள். மார்கழி ஆரம்ப முதலே மழை இங்கு விடாமல் பெய்ததால் நேற்று வீட்டுக்குள்ளேயே கோலம் போட்டேன். அவளும் கூடவே கலர் போட்டு அழகாக்க ஐடியாவெல்லாம் தருவாள்! 


Drawing, painting எல்லாவற்றிலும் ஆர்வம் உண்டு. தன்னையே கதாபாத்திரமாக்கி அவள் பார்பி பொம்மைகளுடன் பேசி விளையாடுவது காணக் கண்கொள்ளா காட்சி!


கலரெல்லாம் போய் தூக்கிப் போடும் நிலையிலிருந்த யானைக்கு மிக அழகாக வண்ணம் தீட்டினாள். இப்பொழுது யானை புதுயானை ஆகிவிட்டது!


சமைக்கும்போதும் கூட வந்து ..நான் சப்பாத்தி பண்றேன். நான் தோசை வார்க்கிறேன் பாட்டி.. என்று எல்லாம் செய்வாள். அவள் செய்தவைகளை ரசித்து ருசித்து சாப்பிடுபவர் அவள் தாத்தா!


இன்றைய மெனு என் மருமகள் ஆர்த்தி கைவண்ணத்தில் Paneer Kofta Curryயுடன் சப்பாத்தி. அவள் ப்ரெட், கேக், பிஸ்கட் எல்லாம் மிக அருமையாக செய்வாள். அவள் செய்த பட்டர், சாக்லேட் குக்கீஸ்.

#ராதாபாலு

Tuesday 23 February 2021

விட_முடியாத_பழக்கம்

 #Sunday_topic

#விட_முடியாத_பழக்கம்

எதைச் சொல்ல..எதை விட! காலை எழுவது முதல் இரவு வரை ஒவ்வொரு காரியத்திலும் எதையும்...இன்னிக்கு இப்படி வேண்டாம். மாற்றிச் செய்யலாம்...என்று செய்ய முடியவில்லையே! இதன் காரணமாக என் அம்மாவைத்தான் சொல்வேன். 

காலை 5 மணிக்கு எழ வேண்டும்..வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலம் போட வேண்டும்..குளித்து சுவாமிக்கு ஸ்லோகம் சொல்ல வேண்டும்..பிறகுதான் மற்ற வேலைகள் என்று என் அம்மா சொல்லிக் கொடுத்த விஷயங்கள் இன்னமும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

காலை எழ சற்று நேரமாகிவிட்டால்..என்ன இன்னும் தூக்கம். மணியாச்சு..என்று என் அம்மாவின் குரல் ஒலிக்கும்! என் அம்மாவுக்கு எல்லா காரியங்களையும் perfectஆக செய்ய வேண்டும். 

துவைக்கும் கல்லில் (என் வீட்டில் துவைக்கும் கல் உண்டு) பளிச்சென்று துவைத்து  சுருக்கமில்லாமல் உலர்த்தி துணிகளை காய்ந்து எடுத்ததும் அழகாக மடித்து வைப்பதில் இருக்கும் நேர்த்தி மிஷினில் துவைப்பதில் மிஸ்ஸிங்!

காய்கறிகளை நறுக்குவதில் என் வழி தனிவழி. எனக்கு கத்தியில் நறுக்க வராது. அரிவாள்மணையில் ஐந்து நிமிஷத்தில் நறுக்கி விடுவேன்!

கிரைண்டர் மிக்ஸி இருந்தாலும் நான் அரைப்பது அம்மி கல்லுரலில்தான். என் கணவர் பலமுறை..ஏன் இப்படி கஷ்டப் படுகிறாய்? கிரைண்டரில் அரையேன்..என்பார். எனக்கு கதாகாலட்சேபமோ கச்சேரியோ கேட்டுக் கொண்டு அரைப்பது சுகமான அனுபவம்! உடலுக்கு எக்ஸர்சைஸும் ஆச்சே! விருந்தினர் வருகையின்போது மட்டுமே மிக்ஸி கிரைண்டர்!

நான் அழகாக அலங்காரம் செய்து கொள்வதில் ஆர்வமுள்ளவள் என்பதால் புடவை, நகைகள் அதுவும் imitation நகைகள் வாங்கும் ஆர்வத்தை விட முடியவில்லை!

எந்த வேலையையும் சிறப்பாக செய்ய விரும்புபவள் நான். அது கோலமோ சமையலோ வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதோ..அதை உடனிருப்பவர்கள் என் கணவர் உட்பட சற்று சரியில்லாமலோ மாற்றியோ செய்து விட்டால் சட்டென்று கோபமாகப் பேசி விடுவேன். 

என் கணவர் எனக்கு நேர்எதிர். யாரிடமும் கோபமே கொள்ளாத குணசீலர்! நான் என்ன தப்பு செய்தாலும் மிகவும் மென்மையாக எடுத்துச் சொல்வார். நான் கோபிக்கும்போது..சொல்வதை கோபிக்காமல் சொல்லேன்..என்கிறபோது எனக்கே அவரைப் பார்க்கப் பாவமாக இருக்கும்! அந்த குணத்தை சிறிது சிறிதாக மாற்றிக் கொண்டிருக்கிறேன்.

எந்த சாமானை எடுத்தாலும் அதே இடத்தில் திரும்ப வைக்கும் குணம் என்னிடம் கிடையாது! அடுத்த முறை அந்தப் பொருளைத் தேடும்போது என் கணவரிடமே..கொஞ்சம் தேடிக் கொடுங்கோளேன்..என்றால், தேடிக் கொண்டு வந்து தந்துவிட்டு..எடுத்ததை அதே இடத்தில் வைக்கும் குணம் எப்ப உனக்கு வருமோ?..என்பார்! நானும் வேடிக்கையாக..அடுத்த ஜன்மத்தில்..என்பேன்! 

இப்பொழுதெல்லாம் ஞாபகமாக எடுத்ததை அதே இடத்தில் வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்! வேறு எங்காவது வைத்தாலும் அந்த இடத்தை என் கணவரிடம் சொல்லி நினைவு வைத்துக் கொண்டு, நான் தேடும்போது சொல்லச் சொல்வேன்! எப்படி என் idea😉

மத்யமரில் உறுப்பினரான பிறகு லைக் வருதோ, கமெண்ட் வருதோ sunday special பதிவை போடுவது ஒரு #விட_முடியாத_பழக்கம் ஆயிடுத்து!!😄