Monday 21 June 2021

அன்புள்ள அப்பா 🙏🏼

 




அப்பா என்றதும் மனதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேது? அப்பா-மகள் உறவு சற்று ஆழமானது... வித்யாச
மான பாசம் கொண்டது!  இந்த வார்த்தையை சொல்லும்
போதே மனம் சிலிர்க்
கிறது..கண்கள் குளமாகிறது..!

முதல் குழந்தை பெண்தான் வேண்டும் என்று என் அப்பா ஆசைப்பட்டு பிறந்தவளாம் நான் என்று என் அம்மா சொல்வார். எனக்கு கீழே மூன்று தம்பிகள் இருந்தாலும் என் மீது ஒரு தனி பாசம் என் அப்பாவுக்கு என்பதை நான் பலமுறை உணர்ந்ததுண்டு.

என் இரண்டு வயதிலிருந்தே மாலையில்  அலுவலகத்தி
லிருந்து அப்பா எப்பொழுது வருவார் என்று வாசலிலேயே காத்திருப்பேனாம். அப்பாவும் பிஸ்கட் சாக்லேட் என்று ஏதாவது வாங்கி வருவாராம். அப்பா வந்ததும் அன்று நடந்ததெல்லாம் அவரிடம் சொல்லிவிட்டே அவரை உடை மாற்ற விடுவேனாம்! நான்கு வயது வரை வெளியில் சென்றால் அப்பாவை என்னைத் தூக்கி வரச் சொல்லி அடம் செய்வேனாம்!

நான் படிக்கும் நாட்களில் எனக்கு கணக்கில் சந்தேகம் வந்தால்(எனக்கு கணக்கு வராத பாடம்!) பொறுமையாக சொல்லித் தருவார். எனக்கு கல்லூரி சென்று படிக்க ஆசை இருந்தும் அப்பாவிற்கு இஷ்டமில்லாததால் அனுப்ப வில்லை. நானும் அதைப் பொருட்படுத்தவில்லை.

எனக்கு பத்தொன்பது வயதில் திருமணம் முடிப்பதில் அப்பா உறுதியாக இருந்தார். நான் திருச்சியிலும் என் பெற்றோர் முசிறியிலும் இருந்ததால் அடிக்கடி பெற்றோரைப் பார்க்கலாம் என்ற ஆசையில் இருந்தேன்.ஆனால் சில மாதங்களிலேயே உத்திர பிரதேசத்தில் மதுராவுக்கு மாறிப் போன போது ரயில் நிலையத்தில் என் அப்பா கண்கள் கலங்க நின்றது இன்னும் என் மனதில் நிற்கிறது. இனி நினைத்தால் பெண்ணை பார்க்க முடியாதே என்று அம்மாவிடம் சொல்லி வருத்தப் பட்டாராம்.

என் அப்பா கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்ளா விட்டாலும் எல்லா பாட்டுகளும் பாடுவார். ராகம் தாளம் எல்லாம் தெரியும். ராக ஆலாபனை செய்து என்னைப் பாடச் சொல்லி கேட்பார். நான் பாடகியாக வேண்டும் என்ற ஆசை என் அப்பாவுக்கு உண்டு. அதை என்னால் நிறைவேற்ற முடியவில்லை.

சிறு வயதில் அவர் என் கைபிடித்து பள்ளி அழைத்துச் சென்றது, எனக்கு சைக்கிள் ஓட்ட சொல்லிக் கொடுத்தது, நான் படிப்பில் சிறப்புப் பெற்றபோது பெருமிதப் பட்டது, என்னைப் பாடச் சொல்லி ரசித்தது, எனக்கு குழந்தைகள் பிறந்தபோது ஒரு தாத்தாவாக சந்தோஷப் பட்டது, அவர்களின் படிப்பு,திருமணம் இவற்றை பாசத்தோடு ரசித்து அனுபவித்து பாராட்டி வாழ்த்தியது, கொள்ளுப் பேரன் பேத்திகளுடனும் விளையாடி மகிழ்ந்தது, என் சஷ்டி அப்த பூர்த்திக்கு வந்து வாழ்த்தியது... என்று அவரின் பாசத்துக்கு சான்றாக எத்தனை விஷயங்கள்!

நான் அப்பாவைப் பார்க்க போகிறேன் என்றால் என் தம்பியிடம் 'ரயில் எப்ப வரும்? ஸ்டேஷனுக்கு போகலியா?' என்று பத்து முறை கேட்பார் என்று என் தம்பி பரிகசிப்பான்!
நான் சென்றாலே அவருக்கு ஒரு சந்தோஷம். பழைய கதையெல்லாம் சொல்லுவார். 'இன்னும் பத்து நாள் இருந்துட்டு போ' என்பார். 'உன் மாப்பிள்ளைக்கு சமைத்து போடணுமே' என்றால் அவரையும் அழைத்து வந்து விடு என்பார்! இருவருமே வங்கியில் பணி புரிந்ததால் என் கணவருடன் அலுக்காமல் வங்கி விஷயங்களைப் பற்றிப் பேசுவார்!

அவருக்கு பிடித்த சமையலை செய்து போடுவேன். மோர்க்களி, புளிப்பொங்கல், அரிசி நொய் உப்மா, மெதுவடை எல்லாம் என் அப்பாவுக்கு பிடித்தவை. மாம்பழ சீசனில் என் கணவர் எல்லா வகை மாம்பழமும் வாங்குவார். தினமும் மாம்பழம் சாப்பிட்டு விட்டு சர்க்கரை ஏறிவிட்டதா என்று டெஸ்ட் பண்ணுவார்!

நான் 2013 டிசம்பரில் ஜெர்மனிக்கு என் பிள்ளை வீட்டுக்கு என் மருமகள் பிரசவத்திற்காக சென்றிருந்தபோது என் அப்பாவுக்கு மூச்சு விட முடியாமல் வெண்டிலேட்டரில் இருப்பதாக ராஜமுந்திரியில் இருந்த என் தம்பி சொன்ன
போது எனக்கு என்ன செய்வ
தென்று தெரியவில்லை. ஏதாவது ஆகிவிட்டால் அப்பாவைப் பார்க்கக்கூட முடியாதே என்று கடவுளிடம் எதுவும் ஆகாமல் இருக்க
வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். நல்ல வேளையாக இரண்டு நாளில் சரியாகி வீடு வந்து விட்டார் என்றபோதுதான் நிம்மதி
யாயிற்று.

திரும்பி பிப்ரவரியில் வந்ததும் மறுநாளே கிளம்பி தம்பி வீட்டுக்கு ராஜமுந்திரி
சென்றோம். அப்பா சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்தார். ..என்னப்பா இப்படி வெண்டிலேட்டர்க்
கல்லாம் போய் பயமுறுத்
திட்டியே...என்றபோது,..அதைவிடு.அது முடிஞ்ச கதை. நீ லண்டன்லாம் பார்த்தியா? லண்டன் ரொம்ப அழகான நகரமாமே? ராணியைப் பார்த்தியா?...என்றெல்லாம் ஆர்வமாகக் கேட்டார்.

..ஏப்ரலில் திருச்சி வந்துவிடு. டிக்கெட் வாங்குகிறேன்..
என்றபோது..கண்டிப்பா வரேன். தாத்தாச்சாரி கடை மாம்பழம் சாப்பிடணும்..
என்றவருக்கு மார்ச் மாதம் மீண்டும் மூச்சு விட முடியாமல் கஷ்டப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாக தம்பி சொன்னதும் மறுநாளே கிளம்பிச் சென்றோம்.

22 நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்தவர் உடல்நிலை மோசமாகி ICUவில் இருந்தபோது அசைவே இல்லை. ஏப்ரல் 5ம்தேதி காலை எங்கள் திருமண
நாளானதால் நானும் என் கணவரும் கோயிலுக்கு சென்று விட்டு அப்பாவைப் பார்த்து வர ஆஸ்பத்திரி போனபோது டாக்டர்..நிலைமை மோசமாகி விட்டது..என்று சொன்னார். எனக்கு அழுகை வந்துவிட்டது.

என்னைத் தாலாட்டி சீராட்டி பாராட்டி வளர்த்து திருமணத்தின்போது கண்கலங்கிய அப்பா இப்படி கண் திறக்காமல் இருக்கிறாரே என்ற வருத்தத்தில் அவரைத் தொட்டு அப்பா..அப்பா என்று கூப்பிட்டதும் சடாரென்று திரும்பி சில நிமிடம் என்னைப் பார்த்தவர் அப்படியே கண்ணை மூடிக் கொண்டார்.

அன்று மதியம் மறைந்து
விட்டார் என்ற செய்தி வந்தபோது கதறி விட்டேன். அவருடன் இருந்து அவருக்கு பணிவிடை செய்தது என்னால் மறக்க முடியாத நாட்கள். இறப்பதற்கு இரண்டு நாள் முன்புவரை என்னுடன் பழங்கதையெல்லாம் பேசியவர் போய்விடுவார் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. இன்று அப்பா என்னுடன் இல்லை என்றாலும் அவரின் ஆசிகள் என்னை இன்றும் சிறப்பாக  வாழவைப்பதை உணர்கிறேன்.

அப்பா ஒரு சம்பவம் அல்ல...ஒரு சரித்திரம்!
அப்பாவின் அன்பு சிறுதுளி அல்ல..பெரும் சமுத்திரம்!

அப்பா..உங்கள் அன்பு
கடல் போன்றது..
வெளியே தெரியாது
ஆனால் ஆழம் அதிகம்.

அப்பா..உங்களுக்கும்,
 கடவுளுக்கும்
சின்ன வேறுபாடு தான்
கண்ணுக்கு தெரியாதவர்
கடவுள். எனக்கு கடவுளாய் இருந்தவர் நீங்கள்!

உங்கள் தோள்கள் எனக்கு ஒரு காலத்தில் விலை மதிப்பற்ற சிம்மாசனம்..உங்கள் மடி விலை உயர்ந்த பட்டு மெத்தை!

அப்பா..உங்கள் அன்பை மிஞ்சும் அளவு வேறு எந்த
அன்பும் இந்த உலகில்
இல்லை!

அப்பா..உங்களை வணங்குகிறேன்🙏🏼
என்றும் உங்கள் ஆசியை வேண்டுகிறேன்🙏🏼
என்றும் எனக்கு துணையாக இருக்க இறைஞ்சுகிறேன்🙏🏼

Saturday 5 June 2021

எனக்கு பிடித்த திரைப்படம்

 


எனக்கு பிடித்த திரைப்படம்


DDLJ...தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே (ஹிந்தி)


1995 ஆம் ஆண்டு ஆதித்யா சோப்ரா என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் உருவான தில்வாலே துல்ஹனியா லேஜாயங்கே  ஷாருக்கானும் கஜோலும் நடித்த இந்தி திரைப்படம்.  ஷாருக்கான், ராஜ்  என்ற கேரக்டரிலும் கஜோல், சிம்ரன் என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். அவர்கள் மட்டுமே பிரதானமாக நடித்த காதலை மையமாக வைத்து எடுத்த படம். அவர்கள் அதில் நடித்த மாதிரியே தெரியாது..அந்தக் கதாபாத்திரங்களாகவே மாறி விட்டது போலத் தோன்றும்!


படமும் பாடல்களும் மிகப் பிரபலமாயிற்று. வட நாடுகளில் மட்டுமன்றி இந்தி தெரியாத மாநிலங்களிலும் வசூலை அள்ளிய படம். 

திரைப்படம் வெளியாகி 21 வருடங்கள் மும்பையில் உள்ள மராத்தா மந்திர் என்ற திரையரங்கில் ஓடியது. 


குடும்பப் பாங்கான காதல் கதை. இதன் பாடல்கள் இந்தி தெரியாதவர்களையும் தாளம் போட வைத்து ரசிக்க வைக்கும். ஆதித்யா சோப்ரா இயக்குநராக அறிமுகமான இப்படம் வெறும் 4 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டு 102.50 கோடி ரூபாயை வசூலித்தது.இந்தத் திரைப்படம் இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது. 


இந்தப் படத்துக்குப் பிறகு ஷாரூக் கான் - கஜோல் இணை, பாலிவுட்டின் பிரபலமான திரை ஜோடிகளில் ஒன்றாக மாறியது. இருவரும் சேர்ந்து பல படங்களில் நடித்தனர்.


‘டிடிஎல்ஜே’ (DDLJ) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தத் திரைப்படத்தில்

ஆண் பெண் என இரண்டு என்.ஆர்.ஐ இந்தியர்கள்.. ஒருவர் ஐரோப்பிய வாழ்க்கை முறையை விரும்பும் அல்ட்ரா மாடர்ன் இளைஞர், அந்தப் பெண்ணோ தாம் விரும்பும் ஒருவரை இந்திய கலாச்சாரத்தோடு இணைந்தவரை திருமணம் செய்து கொள்ளவிரும்புகிறார், 


இரன்டு பேரும் ஒரு பெரிய ரயில் பயணத்தில் தனியாக பயணிக்கும் கட்டாயம். அதன் பின் என்ன ஆகிறது என்பது கதை. தம்மையறியாமலே இருவரும் காதலித்து கடைசியில் இருவரும் இணையும் வரை நடக்கும் சுவையான சம்பவங்களே திரைக்கதை!


இந்தப் படத்தை பார்த்தபோது உண்மையிலேயே இருவரின் நடிப்பும் மனதைத் தொட்டது. தமக்குள் காதல் இருப்பதை அறியாமலே இருவரும் பேசிக் கொள்வதும் கோபித்துக் கொள்வதும் ஒரு இயல்பான இருவருக்கிடையில் இருக்கும் குணத்தையே காட்டும். 


இந்தப் படத்தை தியேட்டரில் பார்த்ததோடு வீட்டிலும் பலமுறை போட்டுப் பார்த்திருக்கிறோம். கஜோலின் அழகு குறைவாக இருந்தாலும் அவர் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். டீன்ஏஜில் இருந்த என் பெண் பிள்ளைகள் நான்கைந்து முறை தியேட்டருக்கு சென்று அந்தப் படத்தைப் பார்த்தார்கள்!


அந்தப் படத்தில் ஐரோப்பாவின் அழகிய இடங்களும் ரயில் பயணங்களும் மிக அருமையாகப் படமாக்கப் பட்டிருக்கும். நான் பத்து வருடம் கழித்து ஐரோப்பா சென்றபோது கஜோலும் ஷாருக்கும் இறங்கிய அந்த ஸ்டேஷனை என் பிள்ளை அழைத்துச் சென்று காட்டினான். அவ்வளவு தூரம் என்னைக் கவர்ந்த படம் அது!


Friday 4 June 2021

எனக்கு பிடித்த ஃபோட்டோ..

 




நம் குழந்தைகள் பிறக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை விட நம் பேரன் பேத்திகள் பிறந்ததும் அவர்களைத் தூக்கிக் கொஞ்சும் மகிழ்ச்சிக்கு ஈடிணை கிடையாது. 


என் பெண் வயிற்றுப் பேரன் மும்பையில் பிறந்தபோது அவனை முதலில் தூக்கியவள் நான்தான்! அந்த மகிழ்ச்சிக்கு ஈடிணையேது? இன்றும் பாட்டி பாடாடி என்று சுற்றி வருவான். நான் செய்யும் ரசம், மைசூர்பாகு அவனுக்கு மிகவும் பிடிக்கும்.


அவன் பிறந்த நான்கு நாளில் எடுத்த புகைப்படமும், இன்று பதினைந்து வயதில் அவனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் எனக்கு மிகப் பிடித்தவை!


ராதாபாலு