Wednesday 28 October 2020

நவராத்திரி நினைவுகள்🙏🏼..24.10.'20

பண்டிகைகளில் எனக்கு மிக விருப்பமானது நவராத்திரி. அது பற்றிய நினைவுகள் என்றும் மறக்க முடியாதவை. மத்யமரில் நேரமின்மையால் எழுத முடிவதில்லை. ஆனாலும் நவராத்திரி பற்றி எழுதாமல் இருக்க முடியாததால் இந்த பதிவு!

நவராத்திரி பத்து நாட்களும் விதவிதமாய் உடை அணிந்து அழைத்தவர் வீடுகளுக்குச் செல்வதும், நம் வீட்டுக்கு பலரும் வந்து கொலுவைக் கண்டு களித்துப் பாடுவதும், பேசி மகிழ்வதும், தாம்பூலம் பெற்றுக் கொள்வதும், புதியவர்களை அறிமுகப் படுத்திக் கொள்வதும் அந்த காலத்தில் வெளியில் அதிகம்  செல்லாத பெண்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நல்ல வாய்ப்பு!

என் சிறு வயதில் கொலுவுக்கு அழைப்பவர் வீடுகளுக்குச் சென்று ஸ்ரீ கணநாதாவையும், ராரவேணு கோபாபாலாவையும் பாடிவிட்டு சுண்டல் வாங்கி வந்த நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளது! என்னுடன் என் தம்பி பையுடன் வருவான் சுண்டலைப் போட்டு எடுத்து வர! வீட்டுக்கு வந்ததும் என் அம்மா ஒவ்வொரு சுண்டலையும் பார்த்து அதிலுள்ள குறை நிறைகளை சொல்வார். அந்த பத்து நாட்களும் இரவு சுண்டல் பலகாரம்தான்!

டீன் ஏஜில் கொலுவுக்கு போகவும்,   பாடுவதற்கும் கொஞ்சம் தயக்கம்! நான் பாட்டு கற்றுக் கொண்டவள் என்பதால் பாடாமல் விட
மாட்டார்கள் ! சின்ன பாட்டை செலக்ட் பண்ணி பாடுவேன்.என் பாட்டை நிஜமாகவே ரசிப்பவர்களுக்கு கனராகப் பாட்டு! எந்தரோ மஹானு
பாவையும், ஜகதானந்தகாவையும் பாடச் சொல்லி கேட்டு ரசித்தவர்
களும் உண்டு. அது போன்ற நாளில் மனமே மகிழ்ச்சியில் துள்ளும்!

நவராத்திரியில் சுண்டல் செய்வது நமக்கு புரோட்டின் சத்து சேர வேண்டும் என்பதற்காக என்பார்கள்.தானியங்கள் என்பவை சக்தி. பெண் என்ப
வளே சக்திதானே! எனவே சக்தி எனும் பெண் தெய்வங்களுக்கு தானியங்களைக் கொண்ட சுண்டல், பாயசம் முதலானவை நைவேத்தியமாகப் படைக்கப்
படுகிறது.

தவிர, புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதங்களில் அடைமழை பெய்யும். இதனால் தோல் நோய்,கபம், சுரம் முதலானவை ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த நோய்களைப் போக்கும் சக்தி, தானியங்களுக்கு உண்டு. ஆகவே, நவராத்திரி நாளில் தானிய சுண்டல்கள்  செய்து அம்மனுக்கு நிவேதித்து அனைவருக்கும் வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் நம் முன்னோர்கள்.

கொலு பார்க்க செல்லும்போது கிடைக்கும் அனுபவங்கள் பலப்பல! ஆனால் பலரும் சுண்டல் செய்வதில் சிரத்தை எடுத்துக் கொள்ள மாட்டார்களோ என்று தோன்றும்! சில வீடுகளில் அரை வேக்காட்டில் இருக்கும்! சிலர் வீட்டில் ஓவராக வெந்து வாயில் ஈஷிக் கொள்ளும்! சிலர் காலை
யிலேயே செய்து வைத்து மாலை கொடுக்கும்போது ஊசல் வாசனைஅடிக்கும். இப்பொழு
தெல்லாம் சுண்டலின் மகத்துவம் மறைந்து விதவித பட்சணங்கள்  தரப்படுகிறது!

எனக்கு திருமணமானதும் உ.பி.க்கு மாற்றல். அங்கு மனிதர்களும் புதிது..புரியாத மொழி. நம் மனிதர்களும் இல்லாததால் கொலு வைக்க வழியில்லை.

தமிழ்நாட்டுக்கு மாற்றலானதும் என் குழந்தைகள் ஆசைப்பட, எங்கள் வீட்டு ஷோகேஸ் பொம்மைகள், அவர்கள் அட்டையிலும் பேப்பரிலும் செய்த பொம்மைகளை வைத்து சின்ன கொலு வைக்க ஆரம்பித்தோம். அதில் முத்தாலாரத்தி, ரங்கோலி, நவதானியக்கோலம் என்று தட்டுகளில் போட்டு வைப்பேன். தினம் விதவிதமாய் சுண்டலும் உண்டு. அந்த simple கொலுவிற்கு என் பெண் பிள்ளைகள் அவர்கள் நண்பர்கள், வகுப்பு ஆசிரியை
களைக் கூப்பிட, அவர்களும் வந்து என் குழந்தைகளின் ஆர்வத்தைப் பாராட்டி,நான் தரும் தாம்பூலத்
தையும் சுண்டலையும் பெற்றுச் செல்வார்கள்!

ஒருமுறை சரஸ்வதி பூஜை அன்று நிறைய பேரை கூப்பிட்டிருந்தேன். நிறைய சுண்டல், பாயசம் செய்து வைத்திருந்தேன். மாலை 4 மணி முதல் மழை ஆரம்பித்து விட்டது. அத்தனை சுண்டலையும் பக்கத்தில் இருந்தவர்களுக்கும், மழையில் எங்கள் வீட்டருகில் ஒதுங்கியவர்களுக்கும் கொடுத்தேன். அப்பொழுது தோன்றிய எண்ணம்தான் மங்கையர்மலரில் வெளியான என் 'வீடு தேடி வந்த சக்தி' கதைக்கான கரு...
https://www.facebook.com/groups/Madhyamar/permalink/949904075197407/

நாங்கள் மும்பையில் இருந்தபோது என் தோழி ஒருவர் அவர்கள் வீட்டில் இருந்த மரப்பாச்சி பொம்மைகளைக் கொடுத்து என்னை கொலுவில் வைத்துக் கொள்ள சொல்ல, அது முதல் பொம்மைகள், படி என்று வாங்கி இப்போது நிறைய பொம்மைகளுடன் பெரிதாகி விட்டது எங்கள் கொலு!

வெளிநாட்டு பொம்மைகள், என் கையால் செய்த Art from waste பொம்மைகள், நானே உருவாக்கும் தெய்வ உருவங்கள் என்று எங்கள் வீட்டு ஹால் முழுதும் ஆக்ரமித்துக் கொள்ளும் எங்கள் வீட்டு கொலு! இதை வைத்து மத்யமரில் நான் எழுதிய கட்டுரையின் லிங்க் இது..
https://www.facebook.com/groups/Madhyamar/permalink/957240644463750/

நவராத்திரியின் தத்துவம் ஒவ்வொரு பெண்ணும் சக்தியின் வடிவம் என்பதை உணர்த்துவதே!நாங்கள் மும்பையில் இருந்தபோது என் வீட்டு எதிரில் ஒரு மராட்டிய பெண் இருந்தார். அவரை கொலுவுக்கு மஞ்சள் குங்குமம் பெற்றுக் கொள்ள அழைத்தேன். மாலை வந்தவர் எங்கள் கொலுவை ரசித்துவிட்டு  சற்று நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு கிளம்பியபோது மஞ்சள் குங்குமம் கொடுத்தேன். அதனை எடுத்துக் கொள்ளாமல் மற்றவற்றை மட்டும் எடுத்துக் கொண்டார். தன் கணவர் இறந்து விட்டதால்  மஞ்சள் குங்குமம் பூ எடுத்துக் கொள்வதில்லை என்றார். எனக்கு சட்டென்று மனம் துணுக்குற்றது. நான் அதுவரை சுமங்கலிகளை மட்டுமே அழைத்து தாம்பூலம் தருவேன். விதவைகள் வந்தாலும் பழம் மட்டுமே கொடுப்பது வழக்கம்.

இதை என் கணவரிடம் மனம் வருந்திச் சொன்னபோது..இதில் எந்தத் தவறுமில்லை. எல்லா பெண்களும் சக்தி ரூபம்தான். மஞ்சள் குங்குமம் தவிர மற்றவைகளை அவர்களும் உபயோகிப்பார்களே.  இதுவும் அம்மனின் சங்கல்பம் என்று எண்ணிக் கொள். இனி இதுபோல் வித்யாசம் பார்க்காமல் எல்லா பெண்களுக்கும் கொடு..என்றார். எனக்கும் அது சரியெனத் தோன்ற, அது முதல் நான் எல்லாரையும் அழைத்து தாம்பூலம் தருவதை வழக்கமாக்கிக் கொண்டேன்.

சென்ற ஆண்டு எங்கள் வீட்டு கொலுவுக்கு குமுதம் சிநேகிதி திருச்சி ரோட்டரி மகளிர் கிளப் நடத்திய கொலு போட்டியில் பரிசு கிடைத்தது. இரண்டு ஆண்டு
களுக்கு முன்பு மங்கையர் மலரில்  சிறந்த கொலுவுக்கான பரிசு கிடைத்தது.

சென்ற ஆண்டு மத்யமர் நண்பர்களுடன் நவராத்திரி  மறக்க முடியாதது. மத்யமர்கள்
மோகன், ரேவதிமோகன் கிருஷ்ணமோகன், விஜயலக்ஷ்மி
கிருஷ்ணமோகன், ஜெயந்தி ஆகியோருடன் என் பேத்தியின் நடனம், எங்களின் பாட்டு, பின் வயிற்றுக்கு உணவு என்று செம ஜாலியாக இருந்ததை மறக்க முடியவில்லை.
https://www.facebook.com/groups/Madhyamar/permalink/1201906919997120/

நாங்கள் தற்சமயம் குடந்தையில் புண்யக்ஷேத்ரம் என்ற இடத்தில் வீடு கட்டிக் கொண்டு வந்துவிட்டோம். இந்த ஆண்டு எங்கள் வீட்டில் பண்டிகைகள் இல்லாததால் கொலு வைக்கவில்லை.  என் வீட்டில் இங்கிருக்கும் சுவாசினிகளை அழைத்து லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்து தாம்பூலம் பிரசாதம் கொடுத்தேன்.
இங்கு வேலை செய்யும் பெண்களுக்கு தாம்பூலத்துடன் புடவை வைத்துக் கொடுத்தேன்.  கொலு, கொண்டாட்டம்  இல்லாத குறையை இவற்றால் போக்கிக் கொண்டேன்.

தற்சமயம் என் பிள்ளை குடும்பம் எங்களுடன் இருப்பதால் வேலை அதிகம். மத்யமரில் அதிகம் பங்குபெற நேரமில்லை. கொலு இல்லாததால் 'Zoலு' வில் பங்கு கொள்ள முடியவில்லை! சென்ற ஆண்டு திருச்சி local tvல் ஒளிபரப்பான எங்கள் கொலு வீடியோவை இணைத்துள்ளேன்.
https://youtu.be/gxhAI7OWmUw

அடுத்த ஆண்டு கொரோனா காணாமல் போய் நாம் மீண்டும் முன்பு போல் ஒன்றிணைந்து சந்தோஷமாக பண்டிகை கொண்டாட்டங்களைக் கொண்டாட இறையருளை வேண்டுவோம்🙏🏼

Friday 16 October 2020

கொண்டாட்டம்..சந்தோஷம்..12.9.'20💃❤️

 கொண்டாட்டம்..சந்தோஷம்💃❤️


வாழ்க்கையில் வசந்தங்கள் அவ்வப்போது வரும்போது அவற்றை அந்த நேரங்களில் முழுவதும் அனுபவித்து விடுவது என் வழக்கம். சமீபத்தைய சந்தோஷம் புது வீடு! 


குடந்தையிலுள்ள 'புண்ய க்ஷேத்திரம்' என்ற இடத்தில் எங்கள் மனதுக்குப் பிடித்த மாதிரி கட்டிய என் கனவு வீட்டின் கிரஹப்ரவேசம் ஆகஸ்ட் 21ல் நடைபெற்றது. அதன்பின் வீட்டை சரிப்படுத்துவதில் மிகவும் பிஸி!


அத்துடன் விழாவுக்கு வந்திருந்த என் பெண், பிள்ளை, பேரன் பேத்திகளுடன் நாள் முழுதும் கொண்டாட்டம்! இதில் சில நாட்களாக மத்யமர் பதிவுகளைப் படித்து கமெண்ட நேரமே இல்லை.


செப்டம்பர் 7என் பேத்தி பிரியங்காவின் பிறந்தநாள். புதுவீட்டில் கொண்டாடிய முதல் விழா! கேக், கிஃப்ட் என்று உற்சாகம் களை கட்டியது. 


விழா என்றாலே அங்கு சங்கீதம், நாட்டியம் உண்டே! என் பெண்ணும் மருமகளும் இணைந்து ஆடிய நடனம் விழாவுக்கு மேலும் மெருகேற்றியது. 


'ராதே ராதே ராதே' என்ற பாடலுக்கு என் பெண் கிரிஜாவும் மாற்றுப்பெண் ஆர்த்தியும் ஆடிய நடனத்தை நீங்களும் ரசிக்கலாமே!