Sunday 28 June 2020

கார்த்திகை தீபப் பெருநாள்🔥..(7.12.'19)


கார்த்திகை தீபப் பெருநாள்🔥
ஆடி மாதம் பிறந்தாலே வரிசையாக பண்டிகைகள்தான். அதிலும் நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை ஆகிய மூன்று பெரிய பண்டிகைகளும் அடுத்தடுத்து வந்து விடும். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மிகவும் உற்சாகமும், மகிழ்ச்சியையும் தருவன இப்பண்டிகைகள்.

கார்த்திகை மாதம் முதல் நாளிலிருந்து மாதம் முடியும் வரை தினமும் மாலையில் விளக்கேற்ற வேண்டும். சிவஜோதியை யோக வழியால் காண முடியாதவர்கள் திருவிளக்கிட்ட தொண்டுகளால் காணலாம் என்பதை உணர்த்துவதே கார்த்திகை தீபம்.

இத்தீப வழிபாடு எல்லா ஜாதியினராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. கலிய நாயனார், கணம்புல்ல நாயனார் ஆகியோர் திருவிளக்குத் தொண்டால் முக்தி பெற்றனர். காஞ்சீபுரத்தில் தீபப் பிரகாசர் விளக்கொளி பெருமாள் என்ற பெயரில் திருமால் ஆலயம் உள்ளது.

அக்னி அருவமாகவும், உருவமாயும் விளங்குவது போல சிவபெருமானும் விளங்குகிறார். ‘நமசிவாய’ மந்திரமே ஒளி மயமானது. ‘சுஷ்கப்பன்’ என்ற சிவபெருமான் நாமமே, சொக்கப்பன் என்றாகி, பனை மரத்து கட்டையாலும், பனை ஓலையாலும் கார்த்திகை தீபத்தன்று ‘சொக்கப்பனை’ கொளுத்தும் வழக்கம் ஆலயங்களில் ஏற்பட்டதாகத் தெரிகிறது. சிவனுடைய ஜோதியை நினைவூட்டவே, எல்லா சிவாலயங்களிலும் இப்பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப் பெறுகிறது.

அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையிலுள்ள ‘தேஜோலிங்கம்’ எனும் மலை உச்சியில் ஒரு பெரிய கொப்பரையில், இருபத்தி நான்கு முழ துணியில் கற்பூரத் தூளைத் தடவி திரியாக்கி, கொப்பரையில் நெய் விட்டு ஊற வைப்பார்கள். மாலையில் சுவாமி புறப்பாடாகி ஆலயம் விட்டு வெளிவந்து மலையை நோக்கி நின்று தீபாராதனை எடுத்ததும் ஜோதி ஏற்றப்படும்.

விளக்கு இருளை விலக்குவது போல் அஞ்ஞான இருளை விலக்குவது ஜோதி. முற்காலத்தில் அகல் என்ற மண் விளக்குகளையே உபயோகிப்பர். அகல், எண்ணெய், திரி, சுடர் நான்கும் சேர்ந்ததே விளக்கு. இவை அறம் பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பொருள்களையும் குறிப்பது. விளக்கேற்றி வழிபட்டால் நம் அறிவாகிய விளக்கு சுடர் விட்டுப் பிரகாசிக்கும்.

கார்த்திகை அன்று அப்பம், பொரி இவற்றை நிவேதனம் செய்கிறோம். அதற்கும் ஒரு காரணம் உண்டு. அப்பத்தில் நீர்ச் சத்துள்ளவரை நெய்யில் மேலும் கீழும் செல்லும். நீர்ப்பகுதி வற்றிவிட்டால் அப்பம் மேலே மிதக்கும். இதைப் போல் ஞானம் பரிபூர்ணமாக ஏற்படும் வரை அகங்காரம் பிடித்த மனம் சலனமடையும். ஞானம் கைகூடி விட்டால் அப்பம் நெய்யில் மிதப்பது போல் ஆன்மா ஞானம் பெற்று சலனமற்று சாந்தியடையும்.

நெல்லிலிருந்து பொரி கிடைக்கிறது. நெல்லை மீண்டும் பூமியில் விளைத்தால், அது மீண்டும் முளைக்கும். நெல்லை வறுத்து பொரியாக்கி விட்டால் மீண்டும் முளைக்காது. அது போல் மனமாகிய நெல்லை ஞானமாகிய பொரியாக்கி விட்டால் மீண்டும் பிறப்பு என்ற பேதமை நிகழாது.

விளக்குகளுக்கு இலுப்பெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு ஏற்றுவதே நல்லது. வெள்ளி, வெண்கலம், பீங்கான் என்று பல விளக்குகளை ஏற்றினாலும், மண் அகல் விளக்குகளில் ஏற்றுவதே மிகவும் நல்லது.

இன்றும் சாஸ்திரத்திற்காக
வென்று இரண்டு அகல்களை கார்த்திகை தீபம் அன்று புதிதாக வாங்கும் வழக்கம் பல வீடுகளிலும் உண்டு. எவர்சில்வர் விளக்கு
களை உபயோகப் படுத்துவது நல்லதல்ல.

கார்த்திகை தீபங்களை ஏற்றும் போது கீழுள்ள சுலோகங்களை சொல்லிக் கொண்டே ஏற்றினால் சர்வ நன்மைகளும் ஏற்படும்.

மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமே சதா

ஸர்வமங்கல மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே

சுபம் பவது கல்யாணி ஆயுராரோக்ய சம்பதாம்
மம துக்க விநாசாய தீபஜ்யோதி நமோஸ்துதே

கீடா பதங்கா மசகாச்ச வ்ருக்ஷா|
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா |
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா|
பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா||

'புழுக்களோ, பக்ஷிகளோ, அல்லது ஒரு கொசுவாகத்தான் இருக்கட்டும், அந்தக் கொசுவோ, நம்மாதிரி உயிரில்லை என்று நினைக்கப்படுகிற வ்ருக்ஷமோ, இன்னும் ஜலத்திலும், பூமியிலும் எத்தனை தினுஸான ஜீவராசிகள் இருக்கின்றனவோ அவற்றில் எதுவானாலும் அதுவோ, மனிதர்களுக்குள்ளேயே பேதம் இல்லாமல் எவரானாலும் எதுவானாலும் இந்த தீப ஒளியைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய ஸகல பாபங்களும் நீங்கி, இன்னொரு ஜன்மா எடுக்காமல் இறைவனுடன் சேரட்டும்' என்று இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம்.

தீபத்தின் ஒளி எப்படி வித்யாஸம் பார்க்காமல்,  மனிதர் முதல் எறும்பு போன்ற ஊர்வன வரை எல்லார் மீதும் வித்யாசமின்றி படுவது போல நம் மனிலிருந்து அன்பு ஒரு தீபமாக, எல்லோரையும் தழுவுவதாகப் பிரகாசிக்க வேண்டும். இப்படிப்பட்ட அகவொளியோடு, புற ஒளியாக தீபத்தை ஏற்றி மேலே சொன்னது போல் ப்ரார்த்திக்க வேண்டும்.

அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்!




பட வசனம்..(7.12.'19)

மாமி..இங்க பாருங்கோ. இன்னியோட இந்த மடிசார் புடவைக்கு Good bye சொல்லிட்டேன்.

மாமா..அச்சச்சோ.நாளையிலருந்து என்ன பண்ணப்போற?

மாமி..சுடிதார், ஸல்வார், ஸராரா உங்களுக்கு ஜீன்ஸ் டீஷர்ட் எல்லாம் வாங்கிண்டு வரப்போறேன். தலையை பாப் பண்ணிண்டு, அப்படியே பார்லர் போய் ஃபேஷியல் மெனிக்யூர் பெடிக்யூர் ஐ ப்ரோஸ்லாம் பண்ணிண்டு வருவேன்.

மாமா..உனக்கு என்ன ப்ராப்ளம்? ஏதோ க்யூர் பண்ணிண்டு வரேங்கற.எனக்கு பயமா இருக்கேடி!

மாமி..நான் வரப்போ உங்களுக்கு என்னை அடையாளமே தெரியாது.

மாமா..எதுக்காக இதல்லாம்?

மாமி..அடுத்த வாரம் நடக்கப்போற மத்யமர் ஆண்டு விழாக்கு போகத்தான்.

மாமா..ஓஹோ..எனக்கு சமையல்லாம் பண்ணி வச்சுட்டு போயிடு.

மாமி..நீங்களும் வரேள். கிளம்புங்கோ.

மாமா..எங்க?

மாமி..Gents பார்லர் ஒண்ணுல விசாரிச்சேன். உங்களை சின்னப் பையன் மாதிரி மாத்திட்றதா சொல்லிருக்கான்.

மாமா..ஐயோ..என்ன விட்ரு. எனக்கு அதல்லாம் வேண்டாம்.

மாமி..நத்திங் டூயிங். கிளம்புங்கோ. நான் உங்களை பார்லர்ல விட்டுட்டு என் வேலையை முடிச்சுண்டு வரச்சே உங்களை பிக்அப் பண்ணிக்கறேன்.

மாமா..உங்க மத்யமர் மீட்டிங்கு நான் எதுக்கு?

மாமி..என்னன்னா! இப்டி அசடாட்டம் கேக்கறேள். நாம ரெண்டு பேரும் கப்பிள் ராம்ப் வாக் பண்றோம்..
ஜெயிக்கறோம்! க்விக்கா ரெடியாகுங்கோ!

மாமா..ஈஸ்வரா!என்னடா சோதனை இது!



🙏குருவாயூர் ஏகாதசி🙏..(8.12.'19)


🙏குருவாயூர் ஏகாதசி🙏
மோக்ஷதாஏகாதசி எனப்படும் இந்த ஏகாதசி சிறப்பாக குருவாயூர் ஏகாதசி எனப்படும்.

காயத்ரியை விட சிறந்த மந்திரம் இல்லை. தாயினும் உயர்ந்த தெய்வம் வேறில்லை.காசியினும் பெரிய புண்ணியத் தலம் இல்லை.ஏகாதசியை விட சிறந்த பலன் தரும் விரதம் இல்லை.

இந்த நாளில் பலவிதமான பூக்களால் பெருமாளை அர்ச்சித்து, பழங்களை நைவேத்தியம் செய்து வழிபடுவது விசேஷம். துளசியால் பெருமாளை பூஜை செய்பவர்கள், வேண்டும் வரம் அனைத்தும் பெறுவார் என்கிறது புராணம். ஒவ்வொரு ஏகாதசியும் முழுதும் அன்னம் சாப்பிடாமல் உபவாசம் இருக்க வேண்டும்.

மோக்ஷதா ஏகாதசி எனப்படும் இந்நாளில்தான் குருவாயூரப்பன் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இது குருவாயூர் ஏகாதசி என சிறப்பிக்கப்படுகிறது. இந்த ஏகாதசி விழா 41 நாட்கள் மிக சிறப்பாகக் கொண்டா
டப்படும். ஏகாதசி அன்று முழுதும் நடை திறந்திருக்கும்.

கடைசி நாள் பகவானுக்கு ஆண்டுக்கு ஒருமுறையே நடக்கும் 'களபம்' என்கிற சந்தனாபிஷேகம் நடைபெறுகிறது. தினமும் லட்சதீபம் ஏற்றுவதும் யானைகளின் அணிவகுப்பும் நடைபெறும்.

இந்த ஏகாதசிக்கு இன்னும் சில பெருமைகளும் உண்டு. நாராயண பட்டதிரி நாராயணீயத்தை எழுதி முடித்து குருவாயூரப்பன் திருவடிகளில் சமர்ப்பித்தது இந்த நாளில்தான்.

54 ஆண்டுகள் ஐயனை சுமந்த கேசவன் என்ற யானை தன் 72 வயதில்  ஐயனின் சந்நிதி நோக்கி தன் தும்பிக்கையை நீட்டியவாறு  உயிர் துறந்ததும் இந்த ஏகாதசி நாளில்தான்.


அர்ஜுனனுக்கு, பகவான் கிருஷ்ணன் கீதையை உபதேசித்ததும் இந்த ஏகாதசி அன்றே. அதனால் இது கீதா ஜெயந்தி எனக் கூறப்படுகிறது.

இத்தனை மகிமைகள் கொண்ட இந்நாளில் 'ஓம் நமோ பகவதே வாசுதேவாய' என்ற நாமத்தை ஜபித்து அவனருளை பெறுவோம்🙏

இன்றைய நிவேதனம்
கேஸர் நட் திரட்டுப்பால்..
பயத்தம்பருப்பு பாயசம்.




ஐரோப்பாவில் கிறிஸ்துமஸ்☃️🥪🥞🍰🎄🧸 ..(11.12.'19)

ஐரோப்பாவில்  கிறிஸ்துமஸ்☃️🥪🥞🍰🎄🧸

கிறிஸ்துமஸ்  கிறித்தவர்களின்  மிக  முக்கியமான  பெரிய  பண்டிகை.  அந்நாளில்  கேக்  செய்து,  புத்தாடை  அணிந்து,  கேரோல்களைப்  பாடி  சர்ச்சுக்கு  சென்று  ஜீசஸை  வணங்குவர்.  இவ்வளவே  நான்  அறிந்தது.  இந்தியாவில்  கிறிஸ்மஸ்  இப்படித்தான்  கொண்டாடப்பட்டு  நான்  பார்த்திருக்கிறேன்.

ஆனாலும்  முழுக்க  கிறித்தவர்களையே
கொண்ட  ஐரோப்பிய,  அமெரிக்க  நாடுகளில்  இப்பண்டிகை  மிக  கோலாகலமாகக்  கொண்டாடப்படும்  என்று  கேள்விப்  பட்டதுண்டு.

2013ம் ஆண்டு என் மருமகளின் பிரவசத்திற்காக  ஜெர்மனியில்  ஸ்டுட்கார்ட்டில்  இருக்கும் என்  மகன்  வீட்டுக்கு சென்றபோது அதைக்  கண்டு  களிக்க  ஒரு  சந்தர்ப்பம்  கிடைத்தது.

அவ்வருடம் டிசம்பர் 11ம் தேதி சின்ப் பூவாய் என் பேத்தி நதியா பிறந்தாள். அவ்வருட கிறிஸ்துமஸும் ஸ்பெஷலானது!

ஏசு  பிறந்தது  பெத்லகேம்  எனினும்  ஐரோப்பாவில்தான்  கிறிஸ்மஸ்  கொண்டாட்டங்கள்  ஆரம்பித்தனவாம்.  அதிலும்  கிறிஸ்மஸ்  மரம்,  கிறிஸ்துமஸ்   மார்கெட்,  அட்வென்ட்  காலண்டர்,  செயிண்ட்  நிகோலஸ்  தினம்   இவை  எல்லாம்  ஆரம்பிக்கப்
பட்டது  முதன்  முதலாக  ஜெர்மனியில்தானாம். 

இங்கு டிசம்பர் மாத முதலிலிருந்தே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்  ஆரம்பித்து  விடுகின்றன.  எல்லார்  வீட்டு  வாசல்  கதவுகளிலும்  கிறிஸ்துமஸை   வரவேற்கும்  விதமாக  அதை  சம்பந்தப்படுத்திய  கிறிஸ்துமஸ்  தாத்தா,  ரெயிண்டீர்  வண்டிகள்,  பூக்கள்,  வண்ண  மணிகள்  ஆகியவை  தொங்கவிடப்  படுகின்றன.  சன்னலின்  வெளியே  வண்ண  விளக்குகள்,  ஏசுவின்  பிறப்பை  விளக்கும்  பொம்மைகள்  அழகாக   வைக்கப் படுகின்றன.

அட்வென்ட்  காலண்டர்  என்பது  24  நாட்கள்  கொண்டது. 24  சின்ன ஷூக்களைப்  போன்ற  பைகளை, குழந்தைகளின்  அறையில்  மாட்டி  வைத்து  விடுவர்.   

24 நாட்களுக்கும் இதில்  பெற்றோர்  ஒரு  சஸ்பென்ஸ்  பரிசுப்பொருளை  வைத்து  விடுவர்.  பொருள்  பெரிதாக  இருந்தால்  வெளியில்  வைத்து  விடுவார்களாம்!  இந்த வருடம்  என்  பெரிய பேத்தியின்  பரிசு 
ஒரு  அழகிய மீன்தொட்டி! 

குழந்தைகளுக்குதான்  இது  மிக  சுவாரசியமான விஷயம் . காலை  கண்விழித்தவுடனேயே  அதைப்  பிரித்துப்  பார்ப்பதில்  அவர்க
ளுக்கு  ஏக  சந்தோசம்! 

19ம்  நூற்றாண்டில்  ஆரம்பிக்கப்பட்டதாம்  இந்த  அட்வென்ட்  காலண்டர். அதற்கு  முன்பெல்லாம்  அட்வெண்டிஸ்ட்  டே  என்பதைக்  குறிக்க  வாசல்  கதவில்  சாக்பீஸால்  கோடு  வரைவராம். சிலர்  தினம்  ஒரு    மெழுகுவர்த்தி ஏற்றுவராம்.

1902ம்  ஆண்டு முதன்  முதலாக  அட்வெண்டிஸ்ட்  காலண்டர்கள்  தயாரிக்கப்பட்டு  செய்தித்  தாள்களுடன்  இலவச  இணைப்பாகக்  கொடுக்கப்
பட்டன.  அதன்பின்பு  சிறிய  கதவுகளுடன்  கூடிய  காலண்டர்கள்  உள்ளே  சாக்லேட்டுகளுடன்  தயாரிக்கப்  பட்டன.  ஒவ்வொரு  நாளும்  ஒவ்வொரு  கதவைத்  திறந்து  சாக்கலேட்டுகளை  எடுத்துக்  கொள்ள  வேண்டும்! 

இந்நாளில்  அவற்றுக்குள்  சின்ன  கதைகள்,  பைபிள்  வாசகங்கள்,   இளைஞர்களுக்கான ரொமாண்டிக்  வாசகங்கள்   என்று  வித  விதமாக  இருக்கின்றன!

என்  மருமகள்  வெளிநாட்டுப்  பெண்  என்பதால்  இந்த  எல்லா  விஷயங்களும்  இங்கு  உண்டு!   குழந்தைகளுக்கு,  என்  மகனுக்கு,  எங்களுக்கு என்று  அவரவருக்கு  பிடித்த மாதிரி  வாங்கி  வைத்திருந்தாள்!  எங்களுக்கு  தினம்  விதவிதமான சாக்லேட்!

டிசம்பர் ஆறாம் தேதி  செயின்ட்  நிக்கோலஸ்  தினம். இது  ஜெர்மனியில்  மட்டுமே  ஆரம்பிக்கப்பட்டு  இன்று  உலக முழுதும்  பரவி  விட்டதாம். செயின்ட்  நிகோலஸ்  என்பவர்  மூன்றாம்  நூற்றாண்டில்  பாதிரியாராக  இருந்தவர்.  அவர்  சிறு  வயது  முதலே  ஏழைகளுக்கு  உதவும்  பொருட்டு  அவர்கள்  அறியாமல்  அவர்களின் காலணிக ளுக்குள்  பணத்தை  வைத்து  விடுவது  அவர்  வழக்கம்.  தான்  உதவி  செய்வது  அவர்களுக்கு  தெரியக்  கூடாது  என்ற  பெருந்தன்மையே  அதற்கு  காரணம். அவரே  சாண்டா க்ளாஸின்  முன்னோடி  எனப்படுகிறார்.

அவர்  இறந்த  நாளான  டிசம்பர்  6ம்  தேதி  நிகோலஸ்  தினமாகக்  கொண்டாடப்படுகிறது.  குழந்தைகள்  5ம்  தேதி  இரவே    தம்  காலணிகளை  சுத்தம்  செய்து  வாசலில்  வைத்து  விடுவாராம்.  அன்றிரவு    அருகில்  இருப்போர்  பரிசுப்  பொருள்களை  அதனுள்  வைத்து  விடுவர். 

என்  பேத்திகளின்  ஷூக்களிலும்  பல  சாக்லேட்கள்,  பொம்மைகள்,    ஸ்டிக்கர்கள்,  ஹேர்  பாண்டுகள்  என  பல பொருட்கள்  இருந்தன.  அந்த  சின்ன  மலர்களின்  முகத்தில்  மகிழ்ச்சியைப்  பார்க்கணுமே? அவற்றை  செயின்ட்  நிகோலசின் பரிசுகளாகக்  கருதுகின்றனர்.

ஐரோப்பாவின்  கிறிஸ்துமஸ்  மார்க்கெட்டுகள்  உலகப் புகழ்  பெற்றவை. பதின்மூன்றாம்  நூற்றாண்டில்  ஆரம்பிக்கப்பட்ட  இந்த  மார்க்கெட்டுகள்  இப்பொழுது  பல  நாடுகளிலும்  நடத்தப்  படுகின்றன. 

ஸ்டுட்கார்ட்டில்   நடக்கும்  கிறிஸ்துமஸ்   மார்க்கெட்  மிகப்  பழமையானதும், புகழ்  பெற்றதுமாகும்.   இங்கு  வித்யாசமான  கலைப்  பொருட்கள்,  மர   பொம்மைகள்,  அருகிலுள்ள கிராமங்களில்  உருவாக்கப்படும் கைவினைப்    பொருட்கள்,  பீங்கான்  சாமான்கள் , உணவுப்  பொருட்கள்,  பலவித  மதுவகைகள்,  சாக்லேட்கள்  விற்கும்  நூற்றுக்கும்  மேற்பட்ட  கடைகள்  உள்ளன.  ஒவ்வொரு கடையின்  மேலும்  கிறிஸ்துமஸ்  பற்றிய  உருவபொம்மைகள்  வண்ண   விளக்குகளுடன் மின்னுகின்றன. 

இங்கு  விற்கப்படும்  ஜிஞ்சர்  சாக்லேட்டுகள்  மிகவும்  ஸ்பெ ஷலானவையாம்!  நவம்பர்  கடைசியிலிருந்து   டிசம்பர்  முடியும்வரை இந்த மார்க்கெட்
டுகள்  நடைபெறும்.  இச்சமயம்  இங்கு  விற்பனை  செய்பவர்களுக்கு  நல்ல  வருமானம்  கிடைக்குமாம்!

கிறிஸ்துமஸின் மிக  முக்கிய  விஷயம்  கிருஸ்துமஸ்  மரம்.  இது  பைன்  மற்றும்  ஃபர்   மரங்களின்  கிளைகளை  வெட்டி  உருவாக்கப்
படுகிறது.   16ம்  நூற்றாண்டில்,  ஜெர்மனியில்  உருவானதாம் இந்த வழக்கம். இது  உருவானதற்கு  பல  கதைகள்  கூறப்படுகிறது. 

முன்பெல்லாம்  வீட்டு  வாசல்களில்  கட்டப்பட்டிருந்த   (நாம் பண்டிகை  நாட்களில்  மாவிலை  கட்டுவதுபோல்!)  கிறிஸ்துமஸ்  மரம்  தற்போது  வீட்டினுள்  அலங்கரிக்கப்
படுவதற்கு  ஒரு  கதை! 

கிறிஸ்துமஸ்  தினத்திற்கு  முதல்  நாள்  ஒரு  வேட்டைக்காரர்   தம் குடும்பத்தோடு  குளிர்  காய்ந்து  கொண்டிருந்தபோது,  ஒரு  ஏழைச் சிறுவன்  வந்து  தங்க  இடம்  கேட்டான். அவரின்  பிள்ளைகள்  தங்கள்  அறையை  விட்டுக்   கொடுக்க, மறுநாள்  அவர்கள்  எழுந்தபோது  வீடே  தேவதை
களின்  வரவால்  ஒளி   மயமாகத்  திகழ்ந்தது.  அந்தப்  பையன்  ஜீஸஸாக  மாறி  அருள்  செய்ததுடன்,  அவர்கள்  தோட்டத்திலிருந்த  ஃபர்   மரக்கிளையை ஒடித்து   அவர்களிடம் கொடுக்க,  அது  முதல்  ஏசுவை  வரவேற்கும்  முகமாக  கிறிஸ்துமஸ்  மரம்  அனைவர்  வீடுகளிலும்  அலங்கரித்து  வைக்கப்பட்டது.

எங்கள்   வீட்டிலும்   கிறிஸ்துமஸ்  மரம்  என்  பேத்திகளின்   கைவண்ண அலங்காரங்களில்,  வண்ண  விளக்கொளியில்  ஜொலித்தது.  என்  மருமகள்  எல்லாருக்கும்  பரிசுப்  பொருள்களைப்  பார்த்துப்  பார்த்து  வாங்கியிருந்தாள்! கேக், பிஸ்கட்டுகள் செய்தாள்.
கிறிஸ்துமஸுக்கு முதல்  நாள்  அவற்றை  அதன்  கீழ்  வைத்து,  இரவு  அனைவரும்  எடுத்துக்   கொள்ள வேண்டுமாம் !

எல்லா வீடுகளிலும் வித விதமாக  கேக்,  குக்கீஸ்  என்று  செய்கிறார்கள்! சர்ச்சுகளில் ஸ்பெஷல் பிரேயர்கள் உண்டாம். சில வீடுகளில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளை அழகிய பொம்மைகளால் உருவகப் படுத்தி வீட்டு வாசலில் நம் கொலுபோல் வைக்கிறார்கள்!

தீபாவளியையும்,  பொங்கலையும்  கொண்டாடிய  நாங்கள்  இந்த  வருடம்  வித்யாசமாக  கிறிஸ்துமஸ் கொண்டாட்
டத்தையும் கண்டு களித்த
தோடு குட்டிப் பேத்தியுடன் மூன்று மாதங்கள் இருந்துவிட்டு வந்தோம்! 

இன்று அவள் பிறந்தநாளுக்கு உங்கள் வாழ்த்துக்களையும் சொல்லுங்களேன்.








மார்கழி மாதம் வந்தாச்சு!..(14.12.'19).POTW.


மார்கழி  ஆரம்பிக்கப்  போவதை  நினைக்கும்போதே  உடலும், மனமும் சிலுசிலுக்கிறது. மார்கழி  மாதப்  பனியும்,  குளிரும்,  விடிகாலையில்  கண்  விழிக்கும்போதே  எம்.எல். வசந்தகுமாரியின் குரலில் திருப்பாவை,  திருவெம்பாவைப்  பாடல்களும் ,  எல்.ஆர்.ஈஸ்வரியின்  குரலில்  ஒலிக்கும்  மாரியம்மா,  காளியம்மா  பாடல்களும், காலையில்  எழுந்து  பக்கத்து  வீட்டை விடப்  பெரியதாகப்  போடும்  கோலமும் ,  அதை  அன்று  முழுதும்  நின்று  ரசிப்பதும்  இன்றைய   இளம்  பெண்களும்,  குழந்தைகளும்  அறியாத, அனுபவிக்காத ஒன்று. 

மார்கழி  பிறப்பதை  நினைக்கும்போதே  அந்த  நாட்களின்  ஞாபகம்  வந்து  நெஞ்சில்  இனிக்கிறது.  இன்று  நாம்  வாழும்  ஃ பிளாட்டுகளில் வாசலும்  இல்லை: கோலமும்  இல்லை:  அதை ரசிப்பவரும்  இல்லை!

என்   சின்ன வயதில் நான்கு
மணிக்கெல்லாம்  என் அம்மா ‘எழுந்திரு.  மார்கழி மாதம்   விடிகாலையில் எழ  வேண்டும்.  வாசல்  எல்லாம்  தெளித்தாச்சு.  கோலம்  போடு’  என்பார்.  இதமான மார்கழிக் குளிரில் கண்கள்  இன்னும்  தூங்க  விரும்பினாலும்  கோல  ஆசை  தூக்கத்தை  விரட்டி  விடும்.

கோலத்தை  போட்டு  முடித்து குளித்து,  பக்கத்திலிருந்த  கோவிலுக்கு  சென்று  பஜனையில்  பாடிவிட்டு,  சுடச்சுட  பொங்கலைப்  பெற்றுக்கொண்டு  வந்து  வீட்டில்  அதை  ருசித்து  சாப்பிடும்  அனுபவம் ….இன்றும்  மனம்  அந்த  நாளுக்காக  ஏங்குகிறது!   அறியாத  வயதில்  அன்று  செய்த  அந்தப்  புண்ணியம்தான்  இன்று  அன்பான  கணவரையும்,  அருமையான  குழந்தைகளையும்  கிடைக்கச்  செய்தது  போலும்!

எட்டு  வயது முதல்  எந்தக்  கோலம்  பார்த்தாலும்  அதை  அப்படியே  மனதில்  வைத்து  மறுநாள்  வாசலில்  போடுவேன். விதவிதமாகக்  கோலம்  போடும்  என்  அம்மாவிடம் இருந்த அச்சு  மாதிரி  சிறிதும்  வளையாமல்,  கோணல்  இல்லாமல்  புள்ளி  வைக்கும்  திறமையும்,  அளவெடுத்தாற்போல்  கோலம்  போடும்  அழகும்  என்னிடம்  கொஞ்சம்  குறைவுதான். 

ஆனாலும்  புள்ளிக்கோலம்,  வளைவுக்  கோலம்,  நேர்கோட்டுக்  கோலம், ரங்கோலி என்று  எனக்குத்  தெரிந்த  கோலங்களைப்   போட்ட நோட்டுகள்  ஏழெட்டு  இன்னமும்  என்னிடம்  உள்ளன. அத்துடன் வகைவகையாய் கோலப் புத்தகங்கள். இப்பொழுது கையில் மொபைலில் பார்த்தே கோலம் போடும் வசதி!

திருமணம் ஆனதுமே உத்திரபிரதேசத்திற்கு மாற்றலாகி விட்டதால் அங்கு கோலம் போட வாய்ப்பில்லை. என் முதல் பிரசவத்திற்கு  என் அம்மா வீட்டிற்கு  நாகர்கோவிலுக்கு வந்தபோது, மார்கழி மாதம் என் மகன் பிறந்த அன்றுவரை வாசல் நிறைத்து கோலம் போட்டி
ருந்தேன்.

திரும்ப தமிழ்நாட்டிற்கு மாற்றிவந்தபோது அதிர்ஷ்ட  வசமாக  நாங்கள்  குடியிருந்த  வீட்டு  வாசல்கள்  கோலம்  போட   ஏற்றதாக  இருந்ததால்,  நானும்,  என்  மகளும்  சேர்ந்து  அமர்க்களமாகக்  கோலம்  போடுவோம். என்  கணவருக்கு,  பிள்ளைகளுக்கு  ரொம்ப  பிடித்த  கோலங்கள்  கூட  உண்டு!  தினமும்  போட   வேண்டிய  கோலங்களை  என்  பிள்ளைகள்தான்  தேர்ந்தெடுத்துக்  கொடுப்பார்கள்! 

தினமலர்  பத்திரிகையின் கோலப்போட்டி மற்றும் பல போட்டிகளில் பங்கேற்று   பரிசுகளைப்  பெற்றுள்ளேன்! பல வார, மாத  இதழ்களில் என் கோலம் பிரசுரமாகி உள்ளது.

இன்றும்  எங்கள் ஃபிளாட்டில் மார்கழி  முழுவதும் விதவிதமாய்க் கோலம் போடுவேன்! அக்கால புள்ளி, நேர்க் கோட்டுக் கோலங்களிலிருந்து மாறி சில ஆண்டுகளாக வித்யாசமான வண்ணக் கோலங்கள் என் கைவண்ணம்! சென்ற ஆண்டு ஒவ்வொரு நாளும் மார்கழியின் நாயகன் என் மனம் கவர்   மாதவனின் ரூபங்களைக் கோலமாக  வரைந்தது  எனக்கு மறக்க முடியாத அனுபவம்.

கோலம்  போடுவது  ஒரு  கலை மட்டும்  அல்ல.  நம்  உடலுக்கும்,  .கைகளுக்கும்,  இடுப்புக்கும்,  கண்ணுக்கும்,  மூளைக்கும் சிறந்த  உடற்பயிற்சியும்  கூட. மார்கழி  மாத  விடிகாலைகளில்  காற்றில் ஓசோன் நிறைந்திருப்பதை  அந்நாளிலேயே  அறிந்த  நம்  முன்னோர்  இப்படி  கோலம்,  பஜனை,  கோவிலுக்கு  செல்வது  என்ற  பழக்கங்களை  உண்டாக்கியுள்ளனர். கோலம்  என்பதற்கு   அழகு என்று  பொருள். கற்பனை  வளத்தை  அதிகரிக்க  கோலம்  போடுவது  உதவும்.

கோலம்  உருவானதற்கான  சில  சான்றுகளைப்  பார்ப்போம். வேத  காலத்தில் அங்குரார்ப்
பணத்தின்போது முளைப்பாலிகை  பால்,  பால்குடம் ,  விளக்கு  இவற்றை  வைக்க  தனித்தனி    கட்டங்கள்  வரைந்து  அரிசிமாவு,  மஞ்சள்பொடி நிரப்புவர்.
அதுவேகாலப்  போக்கில்  கட்டக் கோலங்களாகி விட்டன.  அக்கினி  வளர்க்க  ஒன்பது குழிகள்
தோண்டிக் குண்டம்
அமைப்பர்.அவற்றை இணைக்க கோடு  இட்டதே  புள்ளிக்  கோலமானது. தமிழ்  மக்கள்  பழங்காலத்தில்  மணல்  ஓவியம்  வரைந்ததாக  பழைய  நூல்களில் காணப்படுகிறது.
வெண்மையும்,  சிவப்பும்  இணைந்த  கோலம்  சிவா-சக்தி  ஐக்கியமாகக்  கூறப்படுகிறது.

வடநாடுகளில்  போடப்படும்  ரங்கோலி பற்றிய   சுவையான கதை  இது.  ஹோலி  என்ற   முனிவரின் மனைவி  அவள் கணவர்  இறந்ததால்  அவர்  உருவத்தை  பல  வண்ணப்  பொடிகளால்  வரைந்து  அதன்  மீது  48  நாட்கள்  படுத்து  தன்   உயிரை  விடுகிறாள்.அவள்  நினைவாக  பல  வண்ணங்களில்  போட்ட  கோலம்  ரங்கோலி  ஆயிற்று.

கடவுளுக்கு  முன்பாக  தினமும்  கோலமிடுதல்  வேண்டும்.  நவக்கிரக  கோலங்கள்  போட்டால்  அவற்றினால்  வரும்  தீங்குகள்  விலகும்.  ஸ்ரீசக்ரம்,  ஹிருதய  கமலம்  கோலங்களை  செவ்வாய்,  வெள்ளி  கிழமைகளில்  போடுவதால்  செல்வம்   கிட்டும்.  சங்கு,  சக்கரக்  கோலங்களை  சனிக்கிழமைகளில்  போடுவது  நல்லது. வீடு  வளம் பெறும்.

வாசலில் சூர்யோதயத்திற்கு  முன்பு  கோலமிடல்  வேண்டும்.  இழையை  இடப்புறமாக   இழுக்கக் கூடாது.கோலத்தைக்  காலால்  அழிக்கக்  கூடாது.  வாயிற்  படிகளில்  குறுக்குக்  கோடுகள்  போடக்  கூடாது.  நேர்கோடுகளே  போட வேண்டும். இரட்டை  இழைக்  கோலமே போட வேண்டும்.

விசேஷ நாட்களில்  அரிசியை  அரைத்த  மாவினால்  இழைக்  கோலம்  போடுவது  நல்லது. கண்டிப்பாக  சுற்றிலும்  காவியிடுவதும்  அவசியம். குழந்தை  பிறந்தாலும்,  பெண்கள்  பருவம்  அடைந்தாலும்  அந்த  மகிழ்ச்சியை  தெரிவிக்க இரவானாலும்  கோலமிட  வேண்டும். அமாவாசை 
மற்றும்  முன்னோர்  காரியங்கள்  செய்யும்  தினங்களில்  மட்டுமே  வாசலில்  கோலம்  போடக்  கூடாது.

கிராமங்களில் இன்றும் மார்கழியில் பிரம்மாண்ட கோலங்கள் வண்ணத்துடன் நடுவில் பரங்கிப்பூவும் விளக்குகளும் அணி செய்ய மிக அழகாகப் போடப்படுகின்றன. நகரங்களிலோ இன்று ஸ்டிக்கர்  கோலங்களே பல  வீடுகளுக்கு முன் காட்சி அளிக்கின்றன.
தினமும்  கோலம்  போட   முடியாவிடினும்  விசேஷ   நாட்கள்  மற்றும்  பண்டிகை  நாட்களிலாவது  அழகிய  கோலங்களை  இட்டு   கோலக்கலை  அழியாமல்  காப்பாற்ற  முயற்சிப்போம்.

சென்ற ஆண்டு நான் போட்ட கோலங்களில் சில கீழே...






மார்கழி சிறப்பு🙏🏼..(17.12.2019)


தேவர்கள் விடியற்காலையில் பூமிக்கு வரும் மாதமாகக் கொண்டாடப்படும் இந்த மார்கழியில் அவர்களை வரவேற்கக் கோலமும், அவர்களைப் போற்றிப் பாடித் துதித்து பூஜைகள் செய்வதும் சிறப்பாகும். நாமும் திருப்பாவை, திருவெம்பா
வையைப் பாடி அவனடி போற்றி அவனருள் பெறுவோம்🙏

திருப்பாவை..1
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்🙏

திருவெம்பாவை..1
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியையாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய் வீதிவாய்க்
கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டும் இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்🙏

இன்றைய என் கோலத்தில் திருக்கோலம் கொண்டவர்..விக்ன
விநாயகர்
நிவேதனம்..வெண் பொங்கல்..தேங்காய் சட்னி





மார்கழியின் சிறப்பு🙏..(18.12.2019)

மார்கழியின் சிறப்பு🙏

'மாதங்களில் நான் மார்கழி மாதம்' (மாஸானாம் மார்கஸு ஹோஸ்மி)என்று ஸ்ரீகிருஷ்ணபகவான் கீதையில் கூறுகிறார். ஆதி காலத்திலிருந்தே இம்மாதம் கடவுளை வழிபடுவதற்கு சிறந்த மாதமாக உள்ளது. இறைவனை வழிபட மட்டுமே இம்மாதம் ஒதுக்கப் பட்டிருப்பதாலே மங்கல நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை.

#திருப்பாவை
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ!  பாற் கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி,
நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி,
மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்,
செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம்,
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து  ஏலோர் எம்பாவாய்.

#திருவெம்பாவை
பாசம் பரஞ்சோதிக் கென்பாய்| இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே|
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்|
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடமீதோ| விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்|

#இன்றையகோலம்..
முத்தமிழ்த்தலைவன் முருகன்🙏
#இன்றையநிவேதனம்
கல்யாணப் பொங்கல்..தக்காளி தொக்கு






Thursday 18 June 2020

மார்கழியின் சிறப்பு🙏..(19.12.'19)

மார்கழியின் சிறப்பு🙏
மனிதர்களின் ஒரு ஆண்டு தேவர்களின் ஒருநாள்.அதன்படி தை முதல் ஆறுமாதம் அவர்களுக்கு காலை நேரம். மார்கழியில் பிரம்ம முகூர்த்தத்தில் நாம் செய்யும்வழிபாடு மிகச் சிறந்தது.

இந்நாளில் செய்யப்படும் பாவை நோன்பு தமிழ்நாட்டில் நோற்கப்படும் நோன்புகளில் முதன்மையானது.இந்த நோன்பு பெண்களாலேயே நோற்கப்
பட்டுள்ளது.

நல்ல மழை பெய்து நாடு சிறக்கவும், நல்ல கணவரை அடையவும், மணமானவர்களின் கணவர்களுக்கு நீண்ட ஆயுள் வேண்டுவதும் இந்நோன்பின் முக்யத்துவமாகும்.மார்கழியில் நோற்றதால் மார்கழி நோன்பு என்றும், கன்னிப்பெண்களால் நோற்கப்படுவதால் பாவை நோன்பு என்றும் கூறப்படுகின்றது.

#திருப்பாவை
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்து  ஏலோர் எம்பாவாய்|

#திருவெம்பாவை
முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்
அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்|
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்|
புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே
எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே|
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்|

#இன்றையகோலம்..
கார்மேக வண்ணன் கண்ணன்🙏
#இன்றையநிவேதனம்..
ரவா பொங்கல்..சிதம்பரம் கொத்ஸு







சபாஷ் மத்யமர் கோலப்போட்டி Entry..1..(20.12.2020)

சபாஷ் மத்யமர் கோலப்போட்டி
Entry..1
Sanskar Bharti Rangoli






சபாஷ் மத்யமர் கோலப்போட்டி Entry..2..(22.12.2019)

சபாஷ் மத்யமர் கோலப்போட்டி
Entry..2
Kerala Mural art Rangoli

ஏகாதசி ஸ்பெஷல்🙏
பீதாம்பரம் கரவிராஜித சங்கசக்ர கௌமோதக ஸரஸிஜம் கருணா சமுத்ரம்
ராதா ஸஹாயம் அதி சுந்தர மந்தஹாஸம் வாதாலயேசம் அனிஸம் ஹ்ருதி பாவயாமி.’’




சபாஷ் மத்யமர் கோலப்போட்டி
Entry..3






Saturday 13 June 2020

மனம் மகிழ் மார்கழி!..(30.12.'19)

திருப்பாவை..14
உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்|

திருவெம்பாவை..14
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்|

#இன்றையகோலம்
ரங்கோலியில் மயில்
#நிவேதனம்
தினை ஸ்பைசி பொங்கல்..நிலக்கடலை சட்னி






கோலப் போட்டி..🌸☀️⭐..(31.12.2019)

கோலப் போட்டி..🌸☀️⭐
கோலம் போடும்போது எனக்கு தினமும் நினைவில் வருபவர் என் அம்மா. எட்டு வயதிலிருந்து எனக்கு கோலம் போட சொல்லிக் கொடுத்தவர். அச்செடுத்தாற் போல் கோலம் போடுவது என் அம்மாவுக்கு கைவந்த கலை. காலை நான்கு மணிக்கு தானும் எழுந்து என்னையும் எழுப்பி வாசல் தெளித்து கோலத்தை தேர்வு செய்து கொடுத்து போடச் சொல்வார்.

எல்லாம் அந்தக்கால கோலங்கள்..பாகற்காய்,அவரைக்காய், கிருஷ்ணன் தொட்டில்,சீப்பு, ராட்டினம், பிச்சோடா, சந்தனக் கிண்ணம், புஷ்பகவிமானம் நாரத்தைசுருளை என்று! அந்நாளைய பெண்களுக்கு இவை தெரிந்திருக்கும்! தன் சிறு வயதில் குடந்தை பக்தபுரித் தெருவில் தன் தங்கைகளுடன் சாலையை நிறைத்து கோலம் போட்ட கதைகளை அம்மா சொன்னால் கேட்க அலுக்காது!

என் அம்மாவுக்கு கலர்க் கோலங்கள் பிடிக்காது. யானை, பூனை,ஜோக்கர் இதெல்லாம் போட்டால் கமெண்டே வராது! புள்ளிகளைக் கோணாமல் வைக்க வேண்டும்... சரியில்லையென்றால் கலைத்து விட்டு சரியாக வைக்கச் சொல்வார்.
நேர்கோட்டுக் கோலங்களை சுலபமாகப் போடும் எனக்கு சிக்கு கோலங்கள் வரவே வராது. நேர்கோட்டுக் கோலங்கள் இரண்டு இழையில் போட வேண்டும்.சிக்குக் கோலம் ஒரு இழையில் போடலாம். இப்படியெல்லாம் விதிகள் உண்டு!

ஒன்று முதல் 25வரை தான் புள்ளி வைத்துக் கொடுத்து சிக்கு கோலம்  போடச் சொல்லி விட்டு உள்ளே வேலை செய்யப் போய் விடுவார். எனக்கோ நாலு இழை போடுவதற்குள் கோலம் நிஜமாகவே சிக்கிக் கொண்டு, புள்ளியை அழித்து வைத்து என்று அந்த இடமே கேவலமாகி விடும். பயந்து கொண்டே அம்மாவைக் கூப்பிடுவேன். 'இப்படி சுலபமாகப் போட வேண்டும்' என்று சொல்லிக் கொண்டே நிமிஷமாக அந்தக் கோலத்தை முடித்து விடுவார். இப்பவும் சிக்குக் கோலம் மட்டும் என் கைக்குள் சிக்காமலே இருக்கிறது!

புள்ளி வைக்காமல் போடும் கோலங்களில் என் அம்மா மாதிரி நானும் என்று பெருமையாக சொல்லிக் கொள்வேன். இப்பொழுதெல்லாம் தினுசு தினுசாகக் கோலங்கள் போடும் முறைகள் இணையதளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் கோலம் போடுபவரும் இல்லை..வீடுகளில் போட இடமும் இல்லை! 'கோலம் போடுவதால் டென்ஷன் குறைந்து புத்துணர்ச்சி பெறலாம்' என்று சமீபத்தில் படித்தேன்.

மத்யமரில் கோலப்போட்டி அறிவித்தபோது 'எனக்கு கோலமெல்லாம் போட வராதே' என்று யோசித்தவர்கள் கூட இறுதி நாளுக்கு முன்பாக 'நாங்களும் போடுகிறோம்' என்று அழகான கோலங்களைப் போட்டு கலக்கி விட்டார்கள்! அழகான வளைக்கரங்கள்தான் அழகான கோலங்களைப் போட முடியும் என்பதை போட்டியாக வைத்து கோலத் திறமைகளை வெளிக் கொணர்ந்து பெண்களைப் பெருமைப் படுத்திய சிறப்புக் கோலம் மத்யமர்க்கேயான தனிப்பெருமைக்கோலம்!

அன்புக்கோலம், ஆனந்தக்கோலம், உன்னதக்கோலம், அழுகைக் கோலம், ஆக்ரோஷக்கோலம்,  இளமைக்கோலம், முதியகோலம்...இப்படி எத்தனைக் கோலங்கள் மனிதருள். கோலப் போட்டிக்கென இந்த பத்து நாட்களில் எங்களை ஆனந்தக் கோலத்தில் அற்புதக் கோலங்களை படைக்க வைத்த மத்யமர் அட்மின் மற்றும் மாடரேட்டர்களுக்கு நன்றி..நன்
றி🙏

கோலம் மட்டுமன்றி  வாழ்க்கையை வாழ வேண்டிய சிறப்பான முறைகளை எனக்கு எடுத்துக் கூறி இன்று நான் ஒரு நல்ல மனைவியாகவும், சிறப்பான தாயாகவும்,  மனிதாபிமானமுள்ள மனுஷியாகவும் வாழ வழிகாட்டிய என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த இன்றைய கோலத்தை சமர்ப்பணம் செய்கிறேன்🙏

மத்யமர் அட்மின்கள் மாடரேட்டர்கள் மற்றும் மத்யம நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💐







புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐..(1.12020)

அன்பை விதைத்து..
ஆற்றலைப் பெருக்கி..
‌இனிமையாய்ப் பேசி..
ஈவதைக் கைகொண்டு..
உலகம் செழித்து..
ஊக்கம் பெருக்கி..
எடுத்துக்காட்டாய் இருந்து..
ஏற்றம் பெறுவோம்!
ஐம்பொறி அடக்கி..
ஒற்றுமை பழகி..
ஓதுதல் பெருக்கி..
ஔவியம் தவிர்த்து..
மழலையாய் மலரும் இந்த புத்தாண்டு 2020ல்..
மங்களங்கள் பெருகி..
மகோன்னதமாய் வாழ..
நல்லன பெருக்கி..
அல்லன நீக்கி..
மனித நேயம் மலர்ந்து..
வன்மங்கள் நீங்கிட..
சுகங்கள் பெருகி..
வெற்றிகள் குவிந்திட..
இறையருள் வேண்டி..
இருகரம் குவித்து..
வேண்டுவோம் இந்த
இனிய புத்தாண்டில்!

திருப்பாவை..20..(5.1.2020)



மார்கழி சிறப்பு🙏
கோலம்  என்பதற்கு   அழகு என்று  பொருள். கற்பனை  வளத்தை  அதிகரிக்க  கோலம்  போடுவது  உதவும். வாசலில் சூர்யோத
யத்திற்கு  முன்பு  கோலமிடல்  வேண்டும்.  இழையை  இடப்புறமாக   இழுக்கக் கூடாது.கோலத்தைக்  காலால்  அழிக்கக்  கூடாது.  வாயிற்  படிகளில்  குறுக்குக்  கோடுகள்  போடக்  கூடாது.  நேர்கோடுகளே  போட வேண்டும். இரட்டை  இழைக்  கோலமே போட வேண்டும்.

விசேஷ நாட்களில்  அரிசியை  அரைத்த  மாவினால்  இழைக்  கோலம்  போடுவது  நல்லது. கண்டிப்பாக  சுற்றிலும்  காவியிடுவதும்  அவசியம். குழந்தை  பிறந்தாலும்,  பெண்கள்  பருவம்  அடைந்தாலும்  அந்த  மகிழ்ச்சியை  தெரிவிக்க இரவானாலும்  கோலமிட  வேண்டும். அமாவாசை 
மற்றும்  முன்னோர்  காரியங்கள்  செய்யும்  தினங்களில்  மட்டுமே  வாசலில்  கோலம்  போடக்  கூடாது.

நகரங்களிலோ இன்று ஸ்டிக்கர்  கோலங்களே பல  வீடுகளுக்கு முன் காட்சி அளிக்கின்றன.
தினமும்  கோலம்  போட   முடியாவிடினும்  விசேஷ   நாட்கள்  மற்றும்  பண்டிகை  நாட்களிலாவது  அழகிய  கோலங்களை  இட்டு   கோலக்கலை  அழியாமல்  காப்பாற்ற  முயற்சிப்போம்.

இன்றைய பாசுரங்களும்..கோலமும்🙏
திருப்பாவை..20
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.

திருவெம்பாவை..20
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.

வைகுண்ட ஏகாதசி🙏🙏..(6.1.2020)


மார்கழி சிறப்பு🙏
வைகுண்ட ஏகாதசி🙏🙏
தாயை விட உயர்ந்த தெய்வமில்லை; காசியை மிஞ்சிய புண்ணிய தீர்த்தம் இல்லை; காயத்ரி மந்திரத்தை விட உயர்ந்த மந்திரம் இல்லை; அது போல் ஏகாதசி விரதத்தை விட சிறந்த விரதமும் இல்லை. அந்த அளவுக்கு மற்ற விரதங்களைக் காட்டிலும் ஏகாதசி விரதம் உயர்ந்ததாகும். அதிலும் மார்கழி மாதத்தில் சுக்லபக்ஷ திதியில் வரும் வைகுண்ட ஏகாதசி விரதம் தான் மிக உயர்ந்த விரதம்.

வைகுண்ட ஏகாதசி விரதம் பக்தியிலும், புண்ணியத்திலும் சிறந்த ஒன்றாக விளங்குகிறது. மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து தன்னை வழிபடும் அனைவருக்கும் தான் வைகுண்ட பதவி அளித்து ஆட்கோள்வதாக பகவான் மஹாவிஷ்ணு அருளியிருக்கிறார். அதனால் தான் பகவத் கீதையிலும் கிருஷ்ணபரமாத்மா..மாதங்களில் நான் மார்கழியாக இருப்பேன்.. என்று கூறியிருக்கிறார். இதனாலேயே மார்கழி மாத ஏகாதசி விரதம் மகிமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தேவர்களையும், முனிவர்களையும் முரன் என்ற அரக்கன் மிகவும் துன்புறுத்திவந்தான்.தேவர்களையும் முனிவர்களையும் காப்பதாகக் கூறிய மகாவிஷ்ணு அசுரன் முரனோடு போர் புரியத் தொடங்கினார். இருவருக்கும்
இடையே நடைபெற்ற கடுமையான போர் 1000 ஆண்டுகள் நீடித்தது. இதனால், மிகவும் களைப்படைந்த மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.

அந்த நேரத்தை தனக்குசாதகமாகப் பயணன்படுத்திக் கொள்ள நினைத்த அசுரன் முரன் மகாவிஷ்ணுவை கொல்லத் துணிந்தான். அப்போது  அவரிடமிருந்த சக்தியானது ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. அந்த பெண்ணை அசுரன் முரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது.

நித்திரையில் இருந்து விழித்
தெழுந்து நடந்ததைக் கண்ட மகாவிஷ்ணு, அந்த சக்திக்கு 'ஏகாதசி' எனப் பெயரிட்டு,  'உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன்' என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார்.

ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து மகாவிஷ்ணுவின் அருளும் வரமும் பெற்றதால்  அந்நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப் பெற்று நலமாக வாழ்வோம் என்பது ஐதீகம்.

வைகுண்ட வாசல் பிறந்த கதை..
படைப்பு கடவுளான பிரம்மாவின் படைப்பு காலம் முடிந்து, ஊழிக்காலம் தொடங்கியதும் எல்லா உயிர்களும் இறைவனிடம் ஒடுங்கி ஊழிக்காலம் தொடங்கியதும் மகாவிஷ்ணுவின் தொப்புள் கொடியில் இருந்த தாமரையில் பிரம்மா அடங்கினார். பிரம்மனின் அடுத்த பகல் தொடங்கியதும், தாமரை இலை தண்ணீரை பிரம்மன் மேல் தெளிக்க, அதில் சில துளிகள் அவர் காதுகளில் சென்றன.

விழித்த பிரம்மா முதல் வேலையாக பிராண வாயுவைத் தூண்டியபோது அவரின் இரு காதுகளிலிருந்து அசுத்தத்துடன் அந்த தண்ணீர் வெளியே வர ஒன்று மிருதுவானதாகவும், மற்றொன்று கடினமானதாகவும் மது, கைடபர் அரக்கர்களாக உருவெடுத்தன. அவர்கள் பிரம்மனிடம் ஒலி வடிவில் இருந்த வேதங்களைத்  திருடிச் சென்றபோது ஹயக்ரீவராக அவதரித்த பெருமாள் வேதங்களைத் திரும்ப கொண்டு வந்தார்.

பின்னர் உலகில் உள்ள உயிர்களை துன்புறுத்த துவங்கினர். தேவர்கள், முனிவர்கள் என அனைத்து உயிரினங்களும் விஷ்ணுவிடம் முறையிட, அவர்களை அடக்க
மது, கைடபருடன் போரிட்ட பெருமாளிடம் அவர்கள்  சரணடைந்தனர். 'எங்களுக்கு
நீங்கள் தான் கருணை காட்ட வேண்டும், நாங்கள் உங்கள் அருகிலேயே இருக்கும் வழியை காட்டுங்கள்' என கேட்டுக் கொண்டனர்.

அவ்வாறே அவர்களுக்கு அருளிய பெருமாளிடம் 'எங்களைப் போல அனைவரும் இந்த புண்ணியம் பெற வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டனர். அத்துடன்
'வைகுண்ட ஏகாதசி திருநாளில் வடக்கு வாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில்
தாங்கள் வெளியே வரும் போது, தரிசிப்பவர்களுக்கும், அவர்கள் செய்த பாவத்தை எண்ணி வருந்தி அதை திருத்திக் கொள்பவர்
களுக்கு முக்தி அளிக்க வேண்டும்' என அவர்கள் கேட்டுக் கொண்டதன் காரணமாகத் தான் வைகுண்ட வாசல் உருவானது.  மது கைடபர் ஆகியோரை அடக்கியதால் மதுசூதன் என்ற பெயர் பெருமாளுக்கு வந்தது.

மகாபாரதத்தில் குருக்ஷேத்ரப் போரின் துவக்கத்தில் கிருஷ்ணன்அர்ச்சுனனுக்கு இந்த நாளில்தான் பகவத் கீதை
விளக்கங்களை நிகழ்த்தியதாகக் கருதப்படுகிறது.

தமிழ்நாட்டில் அமைந்துள்ள வைணவத்தலங்களில் வைகுண்ட ஏகாதசித் திருநாள் மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முதன்மையாகக் கருதப்படு
கின்ற ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்கநாத ஸ்வாமி  கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 21 நாட்கள் பகல்பத்து, இராப்பத்து என்று இரு பகுதிகளாகக் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொருநாளும் பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் வெவ்வேறு வாகனங்களில் உலா வருவது கண்கொள்ளாக் காட்சி.

வைகுண்ட ஏகாதசியன்று இரத்தினங்களால் வேய்ந்த ரத்னாங்கி என அழைக்கப்படும் உடையில் கருவறையிலிருந்து வெளிவந்து ஆயிரங்கால் மண்டபத்தில் வீற்றிருக்க வடக்கு வாயில் எனப்படும் பரமபத வாசல் (சொர்க்க வாசல்) வழியே உலா வருவதைக் காண பெருந்திரளான பக்தர் கூட்டம் கூடும். இந்த வாயில் இந்த ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும்.

ஆந்திர மாநிலத்தின்
திருப்பதி மலைமீதுள்ள திருமலையிலும் இத்தகைய விழா கொண்டாடப்
படுகிறது. இங்குள்ள சிறப்பு வாயில் வைகுண்ட துவாரம் என அழைக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி நாளில் மட்டுமே திறக்கப்படும் இவ்வாயில் வழியே சென்று வழிபடுவோர் வீடுபேறு பெறுவர் என நம்பப்படுகிறது.

குறிப்பிட்ட நாளில் நம் நன்மைக்காக இஷ்ட தெய்வத்
தைக் குறித்து உணவு
உண்ணாமல் நோன்பாக
இருப்பதை விரதம் என்பர். இதில், ஏகாதசி விரதத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனாகிய திருமாலே, இந்த விரதத்தினை மேற்கொள்கிறார் என்பார்கள். எனவே, இதன் மகிமையை அளவிட கருவியே இல்லை.

அனைத்தையும் கடந்தவர் கடவுள். நமக்குத் தான் விரதம், ஆச்சார அனுஷ்டானங்கள் எல்லாம். கடவுளுக்கு ஏது என நமக்குத் தோன்றலாம். சத்தியத்தைக் காக்க மகாவிஷ்ணுவே திரேதாயுகத்தில் ராமனாகப் பிறந்து சாதாரண மனிதனைப் போல பலவிதமான துன்பங்களை அனுபவித்து, தர்மத்தை மீறாமல் வாழ்ந்து காட்டினார். அப்பரம்பொருளே துவாபரயுகத்தில் கிருஷ்ணராக அவதரித்து தர்மத்தை நிலைநிறுத்தி உதாரண புருஷராகத் திகழ்ந்தார். அதேபோல, பரம்பொருளான விஷ்ணுவே, ஏகாதசியின் சிறப்பினை உணர்த்தும் வகையில், அவரே விரதம் இருந்து அருள் செய்கிறார்.

இந்த வைகுண்ட ஏகாதசி விரதம் ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் அனைவருமே கடைபிடிக்க வேண்டிய உயர்ந்த விரதமாகும். ஏகாதசி விரதம் இருப்போர், தசமி அன்று பகல் வேளையில் மட்டும் உண்டுவிட்டு, இரவில் பழங்களை மட்டும் உண்ண வேண்டும். ஏகாதசியன்று முழுமையாக உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். இரவில் கண்விழித்து பெருமாளின் பெருமையைப் பேசுவதும், விஷ்ணு சகஸ்ர நாமம், ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக பொழுது போக்க வேண்டும்.

மறுநாள் துவாதசி அன்று காலையில் 21 வகை கறி சமைத்து உண்ண வேண்டும். இதில் அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக் காய் அவசியம் இடம்பெற வேண்டும். துவாதசியில் அதிகாலையில் சாப்பிட்ட பிறகு, அன்று பகலிலும் உறங்கக்கூடாது. ஏகாதசி விரதத்தின் போது எக்காரணம் கொண்டும் துளசி பறிக்கக் கூடாது. பூஜைக் கான துளசியை முதல்நாளே பறித்து விடவேண்டும்.

ஏகாதசி நாளில் தாய், தந்தையருக்கு
சிரார்த்தம் முதலிய பிதுர்கடன் இருந்தால், அதை நிறுத்திவைத்து ஏகாதசிக்கு மறுநாளான துவாதசியன்றே செய்ய வேண்டும் என்று விரதசாஸ்திரம் கூறுகிறது. தீட்டிலும் ஏகாதசி விரதம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பது சாஸ்திரவிதி.

ஏகாதசி விரத மகிமை...
பரமேஸ்வரனிடம் ஒருமுறை பார்வதிதேவி, மிகச்சிறந்த விரதம் எது எனக்கேட்டபோது ஈசன்... விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதமே. பாவங்களைப் போக்கும் விரதம் இது.இதை அனுஷ்டிப்
பவர்கள் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார்கள். முப்பத்துமுக்கோடி தேவர்களும் இவ்விரதத்தை அனுசரித்து பாற்கடல் வாசனின் அருளைப் பெறுவதால் இவ்விரதத்திற்கு
வைகுண்ட முக்கோடி ஏகாதசி என்ற சிறப்புப் பெயருண்டு. யார் ஒருவர் ஏகாதசி நாளில் உணவு இல்லாமல் உபவாசம் இருக்கிறாரோ,
அவர் எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுதலை பெற்று மேலான கதியை அடைகிறார்... என்றார். 

ஏகாதசி விரதமிருப்பவர்கள் சகல சௌபாக்கியங்
களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல்நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.






இன்றைய பாசுரங்கள்....(6.1.2020)

இன்றைய பாசுரங்கள்..
திருப்பாவை..21
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

திருப்பள்ளியெழுச்சி..1
போற்றியென் வாழ்முதலாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடையாய் எனையுடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

#இன்றையகோலம்..
வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்
#நிவேதனம்..
பயத்தம்பருப்பு பாயசம்