Monday 1 June 2020

Sunday topic...முகநூல்_வரமா_சாபமா..(25.5.2020)


முகநூலில் இணைந்தது
முத்தெடுக்கவா..!
அதிலேயே ஆழ அமிழ்ந்து
மூழ்கிப் போகவா..!
முனைப்போடு நம் எழுத்தை
முயன்று பதிவிடவா..!
முகம் காணாமலே நாற்றிசை மக்களுடன் நட்பு கொள்ளவா..!
இது வரமா..சாபமா..!!

உலகின் எவ்விடத்திலும்
பலவாக நடக்கும் செய்திகளை
கலகலப்பாய் பேசலாம்..!
பகலின்றி இரவின்றி எந்நேரமும்
முகநூலில் உலா வரலாம்..!

ஆன்மிகத் தலங்களை அமைதியாக தரிசிக்கலாம்..!
ஆங்காங்கே இருக்கும் அற்புத சுற்றுலா இடங்களை
அணுஅணுவாய் ரசிக்கலாம்..!

பள்ளி கல்லூரி நட்பு மட்டுமே அந்நாளில்..!
முகமறியா பலரும் நட்பாவது இந்நாளில்..!

வீட்டில் இருந்தபடியே பேசலாம்..!
விதவிதமாய்  பலவும் கற்கலாம்..!
தனித்திறமை வளர்த்திடலாம்..!
தான தர்மமும்
செய்திடலாம்..!

எண்ணங்களை ஏற்றமாய் வடித்திடலாம்..!
நண்பர்கள் பல இருந்தால் பெற்றிடலாம் லைக்கும் கமெண்டும்..!

கண்டு மகிழ்ந்த காட்சிகளையும்..
சிரித்து களித்த நகைச்சுவையும்..
மனம் மகிழ் எண்ணங்களையும்..
உள்ளம் கவர் உணர்ச்சிகளையும்..
பகிர்வதில் கிட்டுது பரவசம்..!
ஆஹா..அதுவே நவரசம்..!!

இனம் மதம் கடந்த நட்புண்டு முகநூலில்..!
அளவோடு பழகினால் அத்தனையும் சுகமே..!

போட்டிகளும் உண்டு..!
பரிசுகளும் உண்டு..!
அத்தனையும் ரசித்திட
போதாது நேரம் நமக்கு..!

பயணக் கட்டணம் இல்லாமலே
பல நாடும் சுற்றி வரலாம்..!
வண்ணமிகு பாதையிலே
எண்ணம்போல் சென்றிடலாம்..!

அன்பானோர் அறிவார்ந்தோர் அனைவரும் உண்டு..!
#மத்யமர் போல் தளம் இருந்தால் சலிக்காது
நமக்கென்றும்..!
அதிகாலை எழுந்ததுமே கண்கள் தேடுவது முகநூலை..!

தளங்கள் இங்கே பலவுண்டு..!
அரசியலும் ஆன்மிகமும்.. கைத்திறனும் நகைச்சுவையும்..
சமையலும் இன்னும் பலவும்..
விதவிதமாய் வித்யாசமாய்..!

இவற்றை முறையாய்ப் பயன்படுத்தும் வேகம் வேண்டும்..!
வளர்ச்சிக்கு வித்தாக்கும் விவேகம் வேண்டும்..!

வாகான வாய்ப்பான விஷயங்கள் வரம்தானே..!
இனி காண்போம் சாபங்கள் எவை என்று..!

நல்ல  நட்புக்கு முகவரி ஒன்றே..!
தகாத நட்புக்கோ பெயரே பல உண்டு..!

இனங்கண்டு பழகும் இதயபூர்வ நட்பில் இன்னல் இல்லை..!
இதை மறந்தால் விளைந்திடுமே பல தொல்லை..!

சிக்கல்கள் பலவுண்டு முகநூலில்..!
சிக்கியவர் வாழ்வே பாழான கதையும் உண்டு..!

எதையும் அளவாகப் பேசும் குணம் வேண்டும்..!
தகாத சொல் பேசுவோரை
இனம் கண்டு விலகுதலும் அவசியம் வேண்டும்..!

பெண் பெயரில் ஆணும்
ஆண் வடிவில் பெண்ணுமுண்டு..!
முதியோரா இளையவரா..
அறியவும் வாய்ப்பில்லை..!

எல்லைக்குள் நட்பென்றால்  ஆபத்தில்லை..!
எதையுமே சரியென்று
நம்புவதும் சரியில்லை..!

முகநூலே கதியென்று கிடப்போர்க்கு நோயும் கூடும்..!
முகத்திலும் அகத்திலும்
அயர்வும் கூடும்..!

சொந்தக் கதை சோகக் கதை
சொல்வதிங்கே வேண்டாம்..!
நண்பர்களை நம்பி பின்
நெஞ்சம் கலங்கிட வேண்டாம்..!

நாம் பகிரும் நம்மைப் பற்றிய செய்திகளே..
நமக்கு எதிரியாகும் வாய்ப்பு
அதிகம் உண்டிங்கே..!

நல்லதும் கெட்டதும் கலந்ததே நானில வாழ்க்கை!
'களவும் கற்று மற' என்பது பெரியோர் வாக்கு..!

நல்லனவும் தீயனவும் கலந்து இருப்பது முகநூலில்..!
நம் பிரச்சனைகளுக்கு நாம் தான் காரணம்..!

அன்னத்தைப் போல் நாமும் நல்லன மட்டுமே கற்போம்..!
அல்லன விலக்கி அகம்
அழகுறச் செய்வோம்..!

நல்ல நட்பை இனம் கண்டுகொண்டு..
தவறாக இருப்பவர்களைத் தவிர்த்து..

நேர்படப் பேசி நேசமுடன் இணைந்து..
நல்லதே பேசி நற்செயல்கள்
பல செய்து..

முகநூலை முறையாகப் பயன்படுத்தினால்
அது நமக்கு #வரமே_வரமே_வரமே..!!
அது தரும்
நலமே..நலமே..நலமே..!!


No comments:

Post a Comment