Monday 1 June 2020

ஆன்மிகம் வசந்த பஞ்சமி..(29.1.2020)


இன்று வசந்த பஞ்சமி
நாம் வணங்கும் மூன்று தேவியரில் முக்கியமான தெய்வம் சரஸ்வதி தேவி. அவள் யாகத்தைக் காக்கும் தேவதையாகவும், யாகத்தை நடத்துபவர்களுக்கு அறிவு, ஞானம், தேஜஸ், வீரம், வெற்றி ஆகியவற்றைத் தரும் தேவதையாகவும் புகழப்
படுகிறாள்.  அவள் பூமியில் நதிகளாக ஓடுகிறாள் என்று வேதங்கள் கூறுகின்றன.

சரஸ்வதி தேவியானவள் ஆதிபராசக்தியின் அம்சம். ஒளி மிகுந்தவள். கல்விக்கு அதிபதி எல்லா கலைகளுக்கும் தலைவி! அவள் பிரம்ம ஞானத்தைத் தருபவள்.

பிரம்மா தன் மனைவி சரஸ்வதியுடன் வசிக்கும் இடம் சத்ய லோகமாகும். அங்கு அழகான வெண்தாமரைப் பீடத்தின் நடுவில் வீற்றிருக்
கிறாள். உலகிலுள்ள 64 கலைகள், திறமைகள், மனோசக்திகள் உடலுருவம் தாங்கிக் கொண்டு அசுரர், நரகர், கருடர், யக்ஷர், கிம்புருடர் போன்ற பலருடன் இச்சபையில் உள்ளனர். கணபதி, சுப்ரமண்யர் போன்றோரும் இச்சபையில் வீற்றிருக்கின்றனர். அப்ஸரஸ்கள் நிறைந்த இந்த சபை, எல்லா சபைகளையும் விட உயர்ந்ததாக விளங்குகிறது. அங்கு ரிஷிகளும், ரிஷி பத்தினிகளும் உள்ளனர். நான்கு வேதங்களின் அதிபதிகள் மற்றும் அ முதல் க்ஷ வரையிலான 51 அக்ஷர தேவதைகளும் வீற்றிருக்கின்றனர். வீணாகானம் அவையை நிரப்பிக் கொண்டி
ருக்கிறது.

அந்த அம்பிகையின் அவதார நாளாகக் கொண்டாடப்படுவது வசந்த பஞ்சமி. பிரம்மன் அம்பிகையை வாக்வாதினி, வாகீசுவரி, வாக்தேவி, சாரதா, பாரதி, பிராமி, வீணாவாதினி, வாணி, சரஸ்வதி தேவி என்றெல்லாம் போற்றித் துதித்தார். இவ்வாறு ஸ்ரீசரஸ்வதி அவதரித்த தினமே வசந்த பஞ்சமி. அந்த நாள் தை மாதத்தில் வரும் வசந்த பஞ்சமியாகும். இன்று இத்திருநாள் கொண்டாடப்
படுகிறது. .

நீல சரஸ்வதி, உக்ரதாரா, சகவதாரா, நீலதாரா என்பவை சரஸ்வதியின் அம்சங்கள். சப்தமாதா வரிசையில் ஆறாவதாகவும் வீற்றிருக்கிறாள். வாக்குக்கு அதிபதியான சரஸ்வதி, நம் உடலில் வெவ்வேறு பெயர்
களுடன் வியாபித்திருக்கிறாள் என்று சாக்த தந்திர நூல்கள் கூறுகின்றன.

ஸ்ரீசரஸ்வதி தேவிக்கு வசந்த பஞ்சமி தினத்தில் பூஜைகள் செய்து வழிபாடு செய்வதால், ஞான சித்தியாகும்.

அக்ஷராப்பியாசத்திற்கும் கல்வி சம்பந்தமான புதிய முயற்சிகள் துவங்கவும் ஏற்ற தினம் இது.

ஸ்ரீகிருஷ்ணர், சாந்தீபனி முனிவரிடம் குருகுல வாசம் துவங்கிய நாளும் இன்று தான். வட மாநிலங்களில் பங்குனி மாதத்தில் வசந்த பஞ்சமி, வசந்த ருதுவின் ஆரம்ப தினமாகக் கொண்டாடபடுகிறது. மேற்கு வங்கத்தில் இந்த வசந்த பஞ்சமி நாள் அன்றுதான் வித்யாரம்பம் செய்கிறார்கள்.

ஆந்திர மாநிலம் அடிலாபாத் மாவட்டம், பாஸர் என்ற இடத்திலுள்ள புகழ்பெற்ற சரஸ்வதி கோயில் வேத வியாசர் கட்டியதாக வரலாறு கூறுகிறது.

கூத்தனூர் சரஸ்வதி கோயில் புராண சிறப்பு பெற்றது.

தற்போது சென்னைக்கருகில் பெரியபாளையத்திலிருந்து ஒரு கி.மீ.தொலைவில் உள்ள அரியப்பாக்கத்தில் சரஸ்வதி தேவிக்காக அழகியத் திருக்கோயில் கட்டப்பட்டுள்ளது.

வசந்த பஞ்சமி தினத்தில் அன்னை சரஸ்வதியை வழிபடுவதால் கலைகளில் முன்னேற்றம் பெறுவதோடு நமது உள்ளங்களில் அஞ்ஞானம் நீங்கி, ஞான ஒளி பெருகி, வாழ்வில் வசந்தம் வீசிட  அவளை வணங்குவோம்🙏


No comments:

Post a Comment