Wednesday 10 June 2020

மார்கழி சிறப்பு🙏🏻..(12.1.2020)

மார்கழி சிறப்பு🙏🏻
கண்ணனைப் பிடித்த எல்லோருக்கும் ஆண்டாளையும் பிடிக்கும். கண்ணனையே கணவராக எண்ணிப் பாடிய ஆண்டாளின் பாடல்கள் வெறும் அலங்காரக் காவியம் இல்லை. அது ஜீவனை உருக்கும் பக்திப்பிரவாகம். கண்ணனையே மணாளனாக அடையவேண்டும் என்பதற்காக மார்கழி மாதம் பாவை நோன்பு கடைப்பிடிக்கும் ஆண்டாள், தினமும் அதிகாலையில் துயிலெழுந்து, தனது சக தோழியரையும் அழைத்துக்கொண்டு நீராடி, கண்ணனின் புகழ் பாடிப் பரவசம் கொள்கிறாள்.

'நெய்யும், பாலும் உண்ணமாட்டோம்; கண்களுக்கு மையிட்டு அழகு செய்யமாட்டோம்; செய்யத் தகாத செயல்களைச் செய்யமாட்டோம்; தீங்கு விளைவிக்கும் சொற்களைப் பேசமாட்டோம்' என்றெல்லாம் நியமங்களை அனுஷ்டிக்கும் ஆண்டாள், அத்தகைய நியமங்களை நாமும் கடைப்பிடிக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறாள்.

இப்படி தன்னை வருத்திக்கொண்டு அந்த கோவிந்தனை அடைய பூஜிக்கிறாள். பக்தர்களை ரட்சிக்கும் அந்த பரந்தாமன், தீந்தமிழால் தன்னை பூஜிக்கும் கோதைப்பிராட்டியை கைவிடுவானா? மேலும் மேலும் பாக்களை வடிக்க அவளுக்கு அருள் செய்கிறான். 26 நாட்கள் கடுமையான விரதம் இருந்த ஆண்டாள், கண்ணனின் திருவுளப்படி மார்கழி மாதத்தின் இருபத்து ஏழாவது நாளில் அவனுடன் ஒன்றரக் கலக்கிறாள்.

கோவிந்தனால் அளிக்கப்பட்ட சூடகம், தோள்வளை, தோடு, செவியில் அணியும் கொப்பு, கால் தண்டை உள்ளிட்ட பலவகை அணிகலன்களை அணிந்து, புத்தாடை புனைந்து, அலங்கரித்துக்கொண்டு அரங்கனை எண்ணி அகமகிழ்கிறாள். மேலும் அக்காரவடிசல் எனும் நெய் ஒழுகும் சர்க்கரைப் பொங்கலை கண்ணனுக்கு அமுதாக படைத்து தானும் உண்டு 26 நாள் கடுமையான நோன்பை ஆண்டாள் முடித்தாள்.

இந்தப் பாடலைக்கேட்ட கோவிந்தன் உடனே மயங்கி ஆண்டாளை திருவரங்கத்தில் மணந்துகொள்வதாக வாக்களித்தான். எத்தனை மகத்தான பொன்னாள் இந்த கூடாரவல்லி நாள். மானுடப்பெண்ணாக தோன்றி மாதவனையே மணாளனாக பெற்றநாள்!

கூடாரை என்றால் வெறுப்பவர், விலகிச் சென்றவர், கருத்து வேறுபாடு கொண்டவர் என்றெல்லாம் பொருள் சொல்லலாம். உங்களுக்கு எதிராக இருக்கும் எல்லோரையும் விரும்பச் செய்யும் ஆற்றல் கொண்டது இந்த கூடாரவல்லி தினம்.

நாமும் அந்த சூடிக்கொடுத்த சுடர்க் கொடியை பின்பற்றி அந்த கார்முகில் வண்ணனை கள்ளக் கண்ணனை வணங்கி அவனருள் பெற அவனடி  நாடுவோம்🙏🏻

திருப்பாவை..27
கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

திருப்பள்ளியெழுச்சி..7
அது பழச்சுவையென அமுதென
அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார்
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும்
மதுவளர்பொழில் திருவுத்தரகோசமங்கை உள்ளாய்
திருப்பெருந்துறை மன்னா!
எது எமைப்பணி கொளும் ஆறு அது கேட்போம்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

இன்றையகோலம்
கைவிளக்கு ஏந்திய காரிகை
நிவேதனம்
அக்கார வடிசல்





No comments:

Post a Comment