Tuesday 9 June 2020

கோலப் போட்டி..🌸☀️⭐(30.12.2019)


கோலம் போடும்போது எனக்கு தினமும் நினைவில் வருபவர் என் அம்மா. எட்டு வயதிலிருந்து எனக்கு கோலம் போட சொல்லிக் கொடுத்தவர். அச்செடுத்தாற் போல் கோலம் போடுவது என் அம்மாவுக்கு கைவந்த கலை. காலை நான்கு மணிக்கு தானும் எழுந்து என்னையும் எழுப்பி வாசல் தெளித்து கோலத்தை தேர்வு செய்து கொடுத்து போடச் சொல்வார்.

எல்லாம் அந்தக்கால கோலங்கள்..பாகற்காய்,அவரைக்காய், கிருஷ்ணன் தொட்டில்,சீப்பு, ராட்டினம், பிச்சோடா, சந்தனக் கிண்ணம், புஷ்பகவிமானம் நாரத்தைசுருளை என்று! அந்நாளைய பெண்களுக்கு இவை தெரிந்திருக்கும்! தன் சிறு வயதில் குடந்தை பக்தபுரித் தெருவில் தன் தங்கைகளுடன் சாலையை நிறைத்து கோலம் போட்ட கதைகளை அம்மா சொன்னால் கேட்க அலுக்காது!

என் அம்மாவுக்கு கலர்க் கோலங்கள் பிடிக்காது. யானை, பூனை,ஜோக்கர் இதெல்லாம் போட்டால் கமெண்டே வராது! புள்ளிகளைக் கோணாமல் வைக்க வேண்டும்... சரியில்லையென்றால் கலைத்து விட்டு சரியாக வைக்கச் சொல்வார்.
நேர்கோட்டுக் கோலங்களை சுலபமாகப் போடும் எனக்கு சிக்கு கோலங்கள் வரவே வராது. நேர்கோட்டுக் கோலங்கள் இரண்டு இழையில் போட வேண்டும்.சிக்குக் கோலம் ஒரு இழையில் போடலாம். இப்படியெல்லாம் விதிகள் உண்டு!

ஒன்று முதல் 25வரை தான் புள்ளி வைத்துக் கொடுத்து சிக்கு கோலம்  போடச் சொல்லி விட்டு உள்ளே வேலை செய்யப் போய் விடுவார். எனக்கோ நாலு இழை போடுவதற்குள் கோலம் நிஜமாகவே சிக்கிக் கொண்டு, புள்ளியை அழித்து வைத்து என்று அந்த இடமே கேவலமாகி விடும். பயந்து கொண்டே அம்மாவைக் கூப்பிடுவேன். 'இப்படி சுலபமாகப் போட வேண்டும்' என்று சொல்லிக் கொண்டே நிமிஷமாக அந்தக் கோலத்தை முடித்து விடுவார். இப்பவும் சிக்குக் கோலம் மட்டும் என் கைக்குள் சிக்காமலே இருக்கிறது!

புள்ளி வைக்காமல் போடும் கோலங்களில் என் அம்மா மாதிரி நானும் என்று பெருமையாக சொல்லிக் கொள்வேன். இப்பொழுதெல்லாம் தினுசு தினுசாகக் கோலங்கள் போடும் முறைகள் இணையதளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் கோலம் போடுபவரும் இல்லை..வீடுகளில் போட இடமும் இல்லை! 'கோலம் போடுவதால் டென்ஷன் குறைந்து புத்துணர்ச்சி பெறலாம்' என்று சமீபத்தில் படித்தேன்.

மத்யமரில் கோலப்போட்டி அறிவித்தபோது 'எனக்கு கோலமெல்லாம் போட வராதே' என்று யோசித்தவர்கள் கூட இறுதி நாளுக்கு முன்பாக 'நாங்களும் போடுகிறோம்' என்று அழகான கோலங்களைப் போட்டு கலக்கி விட்டார்கள்! அழகான வளைக்கரங்கள்தான் அழகான கோலங்களைப் போட முடியும் என்பதை போட்டியாக வைத்து கோலத் திறமைகளை வெளிக் கொணர்ந்து பெண்களைப் பெருமைப் படுத்திய சிறப்புக் கோலம் மத்யமர்க்கேயான தனிப்பெருமைக்கோலம்!

அன்புக்கோலம், ஆனந்தக்கோலம், உன்னதக்கோலம், அழுகைக் கோலம், ஆக்ரோஷக்கோலம்,  இளமைக்கோலம், முதியகோலம்...இப்படி எத்தனைக் கோலங்கள் மனிதருள். கோலப் போட்டிக்கென இந்த பத்து நாட்களில் எங்களை ஆனந்தக் கோலத்தில் அற்புதக் கோலங்களை படைக்க வைத்த மத்யமர் அட்மின் மற்றும் மாடரேட்டர்களுக்கு நன்றி..நன்
றி🙏

கோலம் மட்டுமன்றி  வாழ்க்கையை வாழ வேண்டிய சிறப்பான முறைகளை எனக்கு எடுத்துக் கூறி இன்று நான் ஒரு நல்ல மனைவியாகவும், சிறப்பான தாயாகவும்,  மனிதாபிமானமுள்ள மனுஷியாகவும் வாழ வழிகாட்டிய என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த இன்றைய கோலத்தை சமர்ப்பணம் செய்கிறேன்🙏

மத்யமர் அட்மின்கள் மாடரேட்டர்கள் மற்றும் மத்யம நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💐







No comments:

Post a Comment