Saturday 5 June 2021

எனக்கு பிடித்த திரைப்படம்

 


எனக்கு பிடித்த திரைப்படம்


DDLJ...தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே (ஹிந்தி)


1995 ஆம் ஆண்டு ஆதித்யா சோப்ரா என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் உருவான தில்வாலே துல்ஹனியா லேஜாயங்கே  ஷாருக்கானும் கஜோலும் நடித்த இந்தி திரைப்படம்.  ஷாருக்கான், ராஜ்  என்ற கேரக்டரிலும் கஜோல், சிம்ரன் என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். அவர்கள் மட்டுமே பிரதானமாக நடித்த காதலை மையமாக வைத்து எடுத்த படம். அவர்கள் அதில் நடித்த மாதிரியே தெரியாது..அந்தக் கதாபாத்திரங்களாகவே மாறி விட்டது போலத் தோன்றும்!


படமும் பாடல்களும் மிகப் பிரபலமாயிற்று. வட நாடுகளில் மட்டுமன்றி இந்தி தெரியாத மாநிலங்களிலும் வசூலை அள்ளிய படம். 

திரைப்படம் வெளியாகி 21 வருடங்கள் மும்பையில் உள்ள மராத்தா மந்திர் என்ற திரையரங்கில் ஓடியது. 


குடும்பப் பாங்கான காதல் கதை. இதன் பாடல்கள் இந்தி தெரியாதவர்களையும் தாளம் போட வைத்து ரசிக்க வைக்கும். ஆதித்யா சோப்ரா இயக்குநராக அறிமுகமான இப்படம் வெறும் 4 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டு 102.50 கோடி ரூபாயை வசூலித்தது.இந்தத் திரைப்படம் இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது. 


இந்தப் படத்துக்குப் பிறகு ஷாரூக் கான் - கஜோல் இணை, பாலிவுட்டின் பிரபலமான திரை ஜோடிகளில் ஒன்றாக மாறியது. இருவரும் சேர்ந்து பல படங்களில் நடித்தனர்.


‘டிடிஎல்ஜே’ (DDLJ) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தத் திரைப்படத்தில்

ஆண் பெண் என இரண்டு என்.ஆர்.ஐ இந்தியர்கள்.. ஒருவர் ஐரோப்பிய வாழ்க்கை முறையை விரும்பும் அல்ட்ரா மாடர்ன் இளைஞர், அந்தப் பெண்ணோ தாம் விரும்பும் ஒருவரை இந்திய கலாச்சாரத்தோடு இணைந்தவரை திருமணம் செய்து கொள்ளவிரும்புகிறார், 


இரன்டு பேரும் ஒரு பெரிய ரயில் பயணத்தில் தனியாக பயணிக்கும் கட்டாயம். அதன் பின் என்ன ஆகிறது என்பது கதை. தம்மையறியாமலே இருவரும் காதலித்து கடைசியில் இருவரும் இணையும் வரை நடக்கும் சுவையான சம்பவங்களே திரைக்கதை!


இந்தப் படத்தை பார்த்தபோது உண்மையிலேயே இருவரின் நடிப்பும் மனதைத் தொட்டது. தமக்குள் காதல் இருப்பதை அறியாமலே இருவரும் பேசிக் கொள்வதும் கோபித்துக் கொள்வதும் ஒரு இயல்பான இருவருக்கிடையில் இருக்கும் குணத்தையே காட்டும். 


இந்தப் படத்தை தியேட்டரில் பார்த்ததோடு வீட்டிலும் பலமுறை போட்டுப் பார்த்திருக்கிறோம். கஜோலின் அழகு குறைவாக இருந்தாலும் அவர் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். டீன்ஏஜில் இருந்த என் பெண் பிள்ளைகள் நான்கைந்து முறை தியேட்டருக்கு சென்று அந்தப் படத்தைப் பார்த்தார்கள்!


அந்தப் படத்தில் ஐரோப்பாவின் அழகிய இடங்களும் ரயில் பயணங்களும் மிக அருமையாகப் படமாக்கப் பட்டிருக்கும். நான் பத்து வருடம் கழித்து ஐரோப்பா சென்றபோது கஜோலும் ஷாருக்கும் இறங்கிய அந்த ஸ்டேஷனை என் பிள்ளை அழைத்துச் சென்று காட்டினான். அவ்வளவு தூரம் என்னைக் கவர்ந்த படம் அது!


No comments:

Post a Comment