Thursday 7 May 2020

நரசிம்ம ஜயந்தி..6.5.2020

அந்தர்வேதி ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயம்

உக்ரம் வீரம் மஹா விஷ்ணும், ஜ்வலந்தம் சர்வதோ முகம் நரசிம்மம், பீஷணாம் பத்ரம் ம்ருத்யம் ம்ருத்யம் நமாம் யஹம்

நரசிம்மர் மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரம் ஆகும். பக்தன் பிரகலாதனுக்காக அவதரித்தார் நரசிம்மர். இரண்யகசிபுவை அழித்து பிரகலாதனை ரட்சிக்க தூணில் இருந்து சிங்க முகமும், மனித உடலும் கலந்த மாறுபட்ட வடிவில் ஆக்ரோஷமாக அவதரித்தார். நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்.

நரசிம்மம், மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரம் ஆகும். நான்காவது என்பது தர்மம், அர்த்த, காம நிலைகளைக் கடந்து மோட்சநிலையை அடைவதனைக் குறிக்கும். மோட்சத்தையே சுலபமாகத் தரும் நரசிம்மர், பக்தர்களின் எல்லா வேண்டுதல்களையும் உடனே வழங்கிடுவார்.

ஆந்திராவில் நரசிம்மரின் ஆலயங்கள் அதிகம்.அவர் பக்தர் குறை தீர்க்க லட்சுமி நரசிம்மராகக் காட்சி தந்த தலம் அந்தர்வேதி.

ஆந்திர மாநிலம் கோதாவரி நதி தீரத்தில் கடலும் நதியும் சந்திக்கும் இடத்தில் இருக்கும் தலம்தான் அந்தர்வேதி. மூலவர் லட்சுமி நரசிம்மர். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில்  சோலைகள் நிறைந்த கோணசீமா பகுதியில் உள்ளது. அந்தப் பகுதி ஆந்திர கேரளா எனப்படுகிறது. கிழக்கிலும் தெற்கிலும் கடல்.. மேற்கில் கோதாவரி..வடக்கில் ரக்தகுல்யா நதியும் ஓடுகின்றது.

ஒரு சமயம் நாரதர், நான்முகனிடம் அந்தர்வேதி தோன்றிய கதையை கூறும்படி கேட்டார். வசிட்ட மகரிஷி கோதாவரியின் கிளை நதியை கலக்கச் செய்து அங்கு ஒரு ஆசிரமம் அமைத்து அங்கு யாகம் நடத்தி நீலகண்டேஸ்வரியின் பிரதிமையை நிறுவினார். யாகம் செய்த இடம் மேடை போல் அமைந்ததால் அது அந்தர்வேதி என்றாகியது. வேதிக் என்றால் யாக மேடை என்று அர்த்தம். இரண்டு நதிகளுக்கு நடுவில் அமைந்ததால் அந்தர்.

இரண்யாட்சனின் மகனான ரக்தவிலோசனன் பதினாயிரம் ஆண்டுகள் இந்த வசிட்ட நதிக் கரையில் கடும் தவம் புரிந்து சிவபெருமானிடம் ஒரு பிரமிக்கத்தக்க வரத்தைப் பெற்றான். போரில் தன் உடலில் இருந்து விழும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் எத்தனை மண் துகள்களை நனைக்கிறதோ அத்தனை ரக்த விலோசனர்கள் தோன்றி அவனுடன் இணைய வரம் பெற்றான். இதனால் செருக்குற்ற அவன் முனிவர்கள்,
அந்தணர்கள்,ஈரேழு பதினான்கு லோகங்கங்களை சேர்ந்தவர்
களையும் துன்புறுத்தத் தொடங்கினான். வேள்விகளுக்கு இடையூறு விளைவித்தான்.

வசிஷ்ட முனிவர் இல்லாத சமயம் அவருடைய மைந்தர்களைக் கொன்றான். இதை அறிந்த வசிஷ்டர் ஆசிரமம் திரும்பி, விசனமற்றிருந்த மனைவி அருந்ததியைக் கண்டார். நரசிம்மரைத் தொழுதார்.

லட்சமி நரசிம்மர் கருடன் மேல் தோன்றி அவர் குறை அறிந்து ரக்தவிலோசனைப் போருக்கு அழைத்தார். யுத்தம் மூண்டது. அதில் சக்கராயுதம் கொண்டு பெருமான் அவன் உடலில் பல காயங்களை ஏற்படுத்தினார். அதனால் வந்த ரத்தத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான ரக்தவிலோனார்கள் தோன்றினர். மாயசக்தியை ஏவி, அரக்கர்களின் குருதி பூமியில் படாமல் இருக்கச் செய்யுமாறு பணித்தார். அவளும் பூமி முழுவதும் தன்னுடைய நாக்கைப் பரப்பி விட்டாள்.

பின் சக்கராயுதத்தை விட்டு எல்லா அரக்கர்களையும் அழித்தார். மாயா சக்தி அப்படி நிறுத்திய குருதிப் புனலை பின் கீழே விட அது ரக்தகுலியா என்ற நதியாக ஓடியது. பின் தன் ஆயுதத்தையும் கையையும் சுத்தம் செய்வதற்காக சக்கர தீர்த்தம் என்ற குளத்தை உருவாக்கினார். இன்றும் இதில் நீராடுபவர்கள் எல்லா பாவங்களும் நீங்கப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

வசிட்டரின் விருப்பப்படி அங்கேயே லட்சுமி சமேதராக நரசிம்மர் கோவில் கொண்டார். இங்கு மட்டும் நரசிம்மர் மேற்கு நோக்கி அமர்ந்திருப்பது சிறப்பு. மாய சக்தி குதிரை மேல் வந்ததால் அவள் குர்லகா என்றும் அசுவருத்தாம்
பிகா என்றும் அழைக்கப்
படுகிறாள்.

கலியுகத்தில் இவருடைய உருவம்
புற்றிலிருந்து கேசவதாஸ் என்பவரால் கண்டெடுக்கப்பட்டு கோவிலும் கட்டப்பட்டது. இப்போதைய  கோவில் பதினைந்து அல்லது பதினாறாம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது 108 நரசிம்ம தலங்களுள் 32-ம் தலமாகும்.

இது ஐந்து அடுக்குள்ள விமான கோபுரத்தை உடைய அழகான கோவிலாகும். கோவிலில் நுழையும்போது ஒரு பக்கத்தில் கருடனும் மறு பக்கத்தில் அனுமனையும் காண முடிகிறது. கருவறையின் கூரையில் வட பத்ர சாயி தரிசனம் தருகிறார். இந்த விக்கிரகம் ஒரே கல்லில் ஆனது. கருவறையில் மூலவர் நரசிம்மர், லட்சுமியை மடி மீது அமர்த்தி காட்சி தருகிறார். பின் கருவறையை சுற்றி வந்தால் பிரகாரத்தின் கிழக்கு பக்கம் ராஜலட்சுமி மற்றும் வெங்கடேஸ்வரர்.

வடக்கில் பூதேவி மற்றும் ரங்கநாதஸ்வாமி, மேல் திசையில் சந்தான கோபாலர், கேசவர், தென் திசையில் ஆச்சார்யர்களும் ஆழ்வார்களும் சந்நிதி கொண்டுள்ளனர்.

சதுர்புஜ அனுமனுக்கும் தனி சந்நிதி. மூலவரை தவிர்த்து பிரம்மா,விஷ்ணு, சிவனும் காட்சி தருகிறார்கள். இங்கு வசிட்டருக்கும் ஒரு கோவில் உண்டு. 54 அடி உயரமுள்ள இந்தக் கோவில் பூமிக்கு கீழேயும் அத்தனை அளவு கட்டப்பட்டுள்ள
தாகவும், இதன் அடிப் பகுதியில் ஸ்ரீசக்கரம் அமைந்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.

ஒவ்வொரு வருடத்திலும் வரும் ரததசமியை தொடர்ந்து வரும் 10 நாட்களிலும் சூரிய கதிர்கள் இக்கோயிலின் மூலவர் மீது விழும்.

தன்னை வணங்குபவரின் குறைகளை நீக்கியருளும் லட்சுமி நரசிம்மரை தரிசித்தால் சிறப்பாக வாழலாம்.

ஆலயம் ஆந்திரப் பிரதேசத்தில் ராஜமுந்திரியிலிருந்து 100கி.மீ. தொலைவில் உள்ளது.









No comments:

Post a Comment