Monday 18 May 2020

வரமளிக்கும் வர்தினி ஏகாதசி🙏🏼 (18.5.2020)


தேவர்கள், முனிவர்கள், மானிடர்களுக்கு மிகுந்த தொல்லை அளித்து வந்தான் முரன் என்னும் அசுரன். அவனை அழித்து தங்களைக் காக்குமாறு ஈசனை துதித்தனர். அவர் கூறியபடி அனைவரும் விஷ்ணுவை சரணடைந்தனர்.

அவர்களைக் காக்க எண்ணிய மகாவிஷ்ணு, அந்த அசுரனோடு  1000 ஆண்டுகள் கடுமையாகப் போர் செய்து மிகவும் களைப் படைந்தவராய் பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.

அந்த நேரத்தில் முரன் பகவானை கொல்லத் துணிந்த போது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. இவளை அசுரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது.

விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட நாராயணன், அந்த சக்திக்கு “ஏகாதசி” எனப் பெயரிட்டு, 'உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன்' என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார்.

எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து நாராயணனின் அருளும் வரமும் பெற்ற அந்நன்னாளில், நாமும் கண்விழித்து விரதம் இருந்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம்.

ஓர் ஏழை அந்தணர் கால்நடையாக காட்டு வழியில் தீர்த்த யாத்திரை சென்றபோது களைப்பு மேலிட்டதால் ஒரு மரத்தடியில்அமர்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வேடன் ஒருவன் அவரிடம் இருந்த சில பொருட்களையும் துணிகளையும் பறித்துக் கொண்டு அவரை விரட்டினான்.

கடும்வெயிலில் சுடுமணலில் மிகவும் சிரமப்பட்டு அவர் மெதுவாக நடந்து சென்றதைப் பார்த்த வேடனின் மனதில் சிறிதளவு இரக்க உணர்ச்சி தோன்றியது.

தனக்குப் பயன்படாத கிழிந்து போன செருப்பையும் நைந்து போன பழைய குடையையும் அந்தணரிடம் கொடுத்தான். பின் அவன் தன் வழியே செல்லும்போது ஒரு புலி அவனைத்தாக்கிக் கொன்றது.

அப்போது வானுலகிலிருந்து எமதூதர்கள் அந்த வேடனின் உயிரைக் கொண்டு போக வந்தார்கள். அதே சமயம் அங்கு வந்த விஷ்ணு தூதர்கள் எமதூதர்களைத் தடுத்தார்கள்.

'இவன்மகாபாவி! இவனை நரகத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். எங்களைத்
தடுக்காதீர்கள்'' என்றனர் எமதூதர்கள்.

'எமதூதர்களே! இந்த வேடன் வைகாச மாதத்தில் செருப்பு, குடை தானம் செய்திருக்
கிறான். அதனால் அவன் செய்தபாவங்கள் அவனை விட்டு அகன்று விட்டன. எனவே அவனை நாங்கள் வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்கிறோம்' என்று கூறி, அவ் வேடனின் உயிரைக் கொண்டு
சென்றார்கள் விஷ்ணு தூதர்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்தது வைகாச மாதம்.

உலகை ரட்சிக்கும் பகவான் தேவகணங்களுடன் இந்த மகிமை மிகுந்த வைகாசி மாதத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் வருகை தருகிறார். அதுசமயம் நீராடி இறைவனைப்பூஜித்தபடி இருக்க வேண்டும் என்பது ஐதீகம். மேலும் இம்மாதத்தில் செய்கின்ற எல்லாவித
தானங்களுக்கும் அபரிமிதமான பலன்கள் கிடைக்கும் என்பது ஆன்றோர்கூற்று!

பிரம்மதேவனின் ஐந்தாவது தலையைக் கொய்த பாவத்தி
லிருந்து விடுபடவேண்டி சிவபெருமானே வருதினி ஏகாதசி விரதம் இருந்து பாப விமோசனம் பெற்றார் என்கிறது ஏகாதசி புராணம்.

தானங்களில் மிகச்சிறந்தது அன்னதானம். அதைவிடச் சிறந்தது வித்யாதானம். அந்த வித்யாதானப்பலனை அளிக்கக் கூடியது இந்த வருதினி ஏகாதசி விரதம். அன்று செய்யும் சிறிய தானமும் ஆயிரம் மடங்கு பலன்களை அளிக்கும்.

வருதினி ஏகாதசி விரதம் மேற்கொள்பவர்களுக்கு உடல் மற்றும் மன நலம் சிறக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சிநிலை எப்போதும் இருக்கும். தம்பதி
களிடையே அன்பு ஒற்றுமை மேலோங்கும்.

எதிர்பாராத விபத்துக்கள் ஆபத்துக்கள் ஏற்படாமல் காக்கும். தொழில் வியாபாரங்களில் நஷ்டமடைந்தவர்கள் மீண்டும் லாபங்களைப் பெறலாம். மகாவிஷ்ணுவின் அருளால் நினைத்த காரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடைபெறத் தொடங்கும்.
வருதினி ஏகாதசி விரதம்  அத்தனை தான பலன்
களையும் அளிக்க வல்லது.

கத்திரி வெயிலும் வருதினி ஏகாதசியும் சேர்ந்த இன்று செருப்பு, குடை, வஸ்திரம். கைத்தடி, மூக்கு கண்ணாடி போன்ற தானங்கள் செய்வது ஒருவர் இறந்தபோது செய்ய வேண்டிய தானங்களில் ஏதேனும் குறை இருந்தாலும் அதை நிவர்த்தி செய்யும் என்பது நம்பிக்கை.

இன்றைய நிவேதனம்.. பயத்தம் பருப்பு பாயசம்

No comments:

Post a Comment