Thursday 7 May 2020

பயணங்கள்_முடிவதில்லை..1..(3.5.2020)



ஆம். அழகழகான வித்யாசமான நகரங்களை சுற்றிப் பார்க்கும் பயணங்களுக்கு முடிவு ஏது? மனம் மகிழ கண் விரிய பார்த்து ரசித்த இடங்களைப் பற்றி எழுத மூன்று பதிவு போதாதே!

தமிழ்நாட்டில் வங்கி அதிகாரியான என் அப்பாவுடன் சென்னை, ஈரோடு, வேலூர், கரூர், முசிறி, நாகர் கோவில் என்று சுற்றிப் பார்த்ததோடு ஒவ்வொரு ஆண்டு விடுமுறையிலும் குடந்தை, தஞ்சை, ஊட்டி, திருப்பதி, திருவண்ணாமலை, கன்னியா
குமரி, மேட்டூர், சாத்தனூர் என்று பல ஊர்களுக்கும் அப்பா அழைத்துச் செல்ல கண்டு மகிழ்ந்த நாட்கள் இன்று நினைவில் மட்டுமே!

கண்டு ரசித்த பிரபலமான இடங்கள்..
வணங்கி வரம் வேண்டிய திருக் கோயில்கள் நிறைய்ய... அப்பொழுதெல்லாம் காமிரா இல்லாததால் இன்றுவரை கண்டு ரசித்த காட்சிகள் கண்ணிலும் மனதிலும் மட்டுமே தெரிகிறது!

திருமணத்திற்கு பிறகு தமிழ்நாட்டைத் தாண்டி கணவரோடு பல ஊர் வாசம்..பல இடங்களுக்கு பயணம். உத்திரப் பிரதேசம் (மதுரா ஆக்ரா) மகாராஷ்டிரம் (மும்பை கோலாப்பூர்)  பிள்ளைகளுடன் கர்நாடகா (பெங்களூர்) பஞ்சாப்(சண்டிகர்)பெண்ணோடு  பீகார், ஆந்திரா என்று பல மாநில வாசம்..!

பிள்ளைகள் வெளிநாடு சென்றதும் சிங்கப்பூர், மலேசியா, கம்போடியா, இந்தோனேசியா, தாய்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இத்தாலி, லண்டன் என்று நினைத்தே பார்க்காத பல நாட்டுப் பயணங்கள்! இந்த ஆண்டு ஸ்காட்லாந்து, செக்கஸ்லோ
வாகியா, போலந்து செல்வதாக இருந்த பயணங்கள் கொரோனாவால் ரத்தாகி விட்டன.

சிறு வயது முதலே தனியாகச் சென்று பழக்கமில்லாத நான் 30 வருடங்களுக்கு முன் ஒருமுறை சென்னையிலிருந்து என் குழந்தைகளுடன் தனியாக  தஞ்சை மாவட்டம் பாபநாசத்திற்கு ரயிலில் வந்தேன். அச்சமயம் நாங்கள் இருந்தது பாபநாசத்தில்.
என் கணவருக்கு அம்முறை எங்களுடன் வரமுடியவில்லை. எனக்கு ஒரே டென்ஷன்!

என் கணவர் பலமுறை...கவனமா பார்த்துண்டே வா. கும்ப
கோணத்திற்கு அடுத்தது பாபநாசம். ரயில் 3 நிமிடமே நிற்கும். நான் ஸ்டேஷனுக்கு வருகிறேன். கும்பகோணத்தி
லேயே ரெடியாகி விடு...என்று படித்துப் படித்து 10 முறை சொன்னார்.

குடந்தையில் என் கம்பார்ட்மெண்ட்டே காலி. நானும் அவர் சொன்னபடி  ரெடியாகி குழந்தைகளுடன் பார்த்துக் கொண்டே வர, ரயில் நின்றது. வெளியில் ஒரே கும்மிருட்டு. ஒரு ஆளும் இல்லை. ஸ்டேஷன் பெயரும் தெரியவில்லை. கேட்கவும் ஆளில்லை. என் கணவர் நின்ற இடத்திலிருந்து நிறைய தூரம் தள்ளி ரயில் நின்றதால் அவர் வேகமாக வந்தும் நான் ரயில் கதவருகில் நின்றது தெரியவில்லை. அப்பொழுதெல்
லாம் மொபைலும் கிடையாது. ரயில் கிளம்பி விட்டது.

நான் இறங்காததைப் பார்த்து என் கணவர் பயந்து போய்  அவருடன் வந்த நண்பர்களிடம் சொல்ல அவர்களில் ஒருவர் ஸ்லோவாகச் சென்ற ரயிலில் டக்கென்று ஏறி செயினைப் பிடித்து இழுக்க, அடுத்த இரண்டு நிமிடத்தில் ரயில் நின்றது. நான் கதவருகில் நின்று பார்க்க 2,3 பேர் ஓடி வருவது தெரிந்தது. என் கணவர் குரல் கேட்டது.

ஒரு குலுங்கலுடன் ரயில் நிற்க என் கணவரும் அவர் நண்பர்களும் 'சீக்கிரம் இறங்குங்க' என்று சொல்லி, என் குழந்தைகளை இறக்கி விட்டு சாமான்களையும் வாங்கிக்
கொண்டனர். நானும் அவசரமாக குதித்ததில் காலில் சிராய்ப்பு. பிளாட்பாரத்தை விட்டு ரயில் நகர்ந்து விட்டதால் அந்த இடம் உயரமாகி விட்டது.

ஏதோ விபத்தோ என்று பயந்து ரயில்வே அலுவலர் ஓடிவர அவருக்கு தெரிந்தவரான  என் கணவரின் நண்பர் விஷயத்தை விளக்கினார். அந்த நாளில் அந்த ஸ்டேஷன் பெயர் எழுதிய போர்டின்மேல்  ஜீரோ வாட் பல்பு போல் ஒன்று இருந்ததால் எனக்கு ஸ்டேஷன் பெயர் தெரியவில்லை. இப்பொழுது எப்படி இருக்கோ தெரியவில்லை!

என் கணவரின் நண்பர் என்னைப் பார்க்கும் போதெல்லாம்...ரயில் நிக்கும்போது இறங்காம  செயினைப் பிடித்து இழுத்து இறங்கின VIPயாச்சே நீங்க...என்று கேலி செய்வார்! அதன்பின் பல இடங்களுக்கும் தனியாகச் செல்ல பழகிக் கொண்டாலும் இந்த சம்பவம் இன்றுவரை மறக்கவில்லை.

இது போன்ற பயணங்களில் நிகழும் சில சம்பவங்கள் மறக்க முடியாததாகவும்  நகைச்சுவை
யாகவும் படிப்பினை தருவதாகவும் அமைவதுண்டு!

மராட்டிய மாநிலத்தில்  உள்ள அருமையான, சிறிய, இயற்கை அழகுகள் கொட்டிக் கிடக்கும் அற்புதமான சொர்க்கம்தான் பூனாவுக்கு அருகிலுள்ள மகாபலேஷ்வர். நாங்கள்
அங்கு சென்றபோது நடந்த சம்பவம்!

அங்குள்ள ஒவ்வொரு இடமும் மனதை மயக்கும் அழகு. அதில் ஒன்றான ‘வில்சன் பாயிண்ட்’ மிக உயரமானது. நாங்கள் சென்ற சமயம் மழையாக இருந்தாலும் ஆவல் மிகுதியில் பேசிக் கொண்டே ஏறினோம். எதிரில் ஒரு இளம் ஜோடி மிகவும் நெருக்கமாக தம்மை மறந்த நிலையில் கீழே இறங்கி வந்தனர்.

என் டீன் ஏஜ் மகன்களும், மகளும் அவர்களைப் பார்த்து தமிழில் ஜோக்கடிக்க, நாங்களும் சிரித்தபடியே ஏறினோம். அங்குள்ளோருக்கு தமிழ் தெரியாது என்பதால் நாங்கள் தைரியமாக தமிழில் எதுவும் பேசுவதுண்டு! நாங்கள் மேலே சென்று சுற்றிப் பார்த்தவாறு, ‘இந்த பாயிண்ட் இருப்பவற்
றிலேயே நல்ல உயரம்’ என்று பேசிக் கொண்டிருக்க, அந்த ஜோடி மேலே வந்தனர்.

அந்த இளைஞன் பட்டென்று, ‘இங்கு யாருமே இல்லாததாலதான் நாங்க பாதியிலேயே திரும்பிட்டோம். இப்ப நீங்க வந்த தைரியத்துல வந்தோம்’ என்றான். அவன் சுத்தமாக தமிழ் பேசியதைக் கேட்ட எங்கள் முகத்தில் ‘டன்’ கணக்கில் அசடு வழிந்தது! அது முதல் யாராயிருந்தாலும் நம்மொழி தெரியாது என நினைத்து எதையும் பேசக்கூடாது என்பதை புரிந்து கொண்டோம். இது போன்ற அனுபவங்கள் நிறைய!

இந்தியாவில் எனக்கு மிகப் பிடித்த இடங்கள்  மகாபலேஷ்வர், பஞ்ச்மரி, குலு,மனாலி, காங்டாக், டார்ஜிலிங், ஊட்டி, ஏற்காடு, சிம்லா கொடைக்கானல் போன்ற குளிர் வாசத்தலங்கள்.







அமிர்தசரஸ், குருக்ஷேத்திரம், வாரணாசி, கயா, அலகாபாத், புவனேஸ்வர், பூரிஜகன்னாத், கோனாரக், மதுரா, பிருந்தாவனம், கல்கத்தா, புஷ்கர், உடுப்பி, தர்மஸ்தலா, கோலாப்பூர், அஷ்டவிநாயகத்தலங்கள்  போன்ற புண்யஸ்தல தரிசனங்கள். சமீபத்தில் சென்று வந்த சார்தாம் யாத்ரா எதிர்பாராமல் கிடைத்த மறக்க முடியாத புனிதப் பயணம். அற்புதமான தரிசனம். அந்த இடங்கள் பற்றிய பதிவுகளை மத்யமரில் முன்பே எழுதியுள்
ளேன்.

மற்ற இடங்கள் பற்றியும் நாங்கள் பெற்ற அனுபவங்களும் அடுத்த பதிவில்..!

திருச்சி ஐயப்பன் கோவில்



புவனேஸ்வர் லிங்கராஜ் கோயில்

அஜந்தா

பொற்கோயில்

கோனார்க் சூர






No comments:

Post a Comment