Friday 8 May 2020

#பயணங்கள்_முடிவதில்லை..2..(5.5.2020)

மயக்கும் அழகு! ஸ்விட்சர்லாந்து!

ஆசைக்கு அளவு ஏது? ஆனால் சாதாரண நடுத்தர குடும்பத்தில் நான்கு பேரோடு பிறந்த எனக்கு வெளிநாடுகளுக்குப் போகும் ஆசைக்கு வித்திட்டது அந்த நாளில் ஆனந்த விகடனில் வந்த மணியனின் பயணக் கட்டுரைகள்!

மும்பையிலிருந்து வரும் மாமா குடும்பத்தையும் அவர்கள் பேசும் இந்தியையும் 'ஆ'வென்று திறந்த வாய் மூடாமல் பார்த்த காலம்! இந்தத் தமிழ்நாட்டை நாம் தாண்டுவோமா என்றே நினைத்த நாட்கள்!

அச்சமயம் சிவாஜியும் காஞ்சனாவும் நடித்த சிவந்த மண் படத்திற்கு அதில் வரும்  வெளிநாடுகளை (ஸ்விஸ்)
நாங்கள் பார்த்து ரசிக்க
வேண்டும் என்ற ஆசையில் என் பெற்றோர் அழைத்துச் சென்றார்கள்.

1968ல் World Trade Fair சென்னை யில் நடந்தபோது (இன்றைய அண்ணா நகர்) உலக நாடுகளைப் பற்றி அறிந்து கொள்ள எங்களை அழைத்துச் சென்ற பெற்றோரை நினைத்து நன்றி சொல்கிறேன்.

இவையே என் வெளிநாட்டு ஆசைக்கு வித்திட்ட சம்பவங்கள். பாரிஸ், ஸ்விட்சர்லாந்து, லண்டன் பற்றியெல்லாம் படித்து அவற்றைக் காணும் ஆசை அதிகமாயிற்று.

'நாம் ஒருநாள் அங்கு செல்ல முடியுமா? அந்த இயற்கை அழகில் ஆழ அமிழ்ந்து நம்மை மறக்க முடியுமா? ' என்று யோசித்து, 'நடுத்தர குடும்பத்தினரான நம்மால் அங்கு செல்வது நடக்காத செயல்' என்று கனவு மட்டுமே கண்டு கொண்டிருந்த எனக்கு, என் மகனால் அங்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது.

என் மூத்த மகன் 2002ல் ஜெர்மனியில் M.S முடித்து அங்கு ஸ்டுட்கார்ட்டில் உள்ள உலகப் புகழ் பெற்ற மாக்ஸ் பிளான்க் பல்கலைக் கழகத்தில் (Max Planck institute)ல்  Nanotechnology பிரிவில் Ph.D முடித்து பணியில் அமர்ந்தபோது என் மகன்...அம்மா நீ ஆசைப்பட்ட இடமெல்லாம் பார்க்கலாம். வா...என்றபோது நான் ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில் நடப்பது போல் கனவு கண்டேன்!

2004ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதன்முறை ஜெர்மனி சென்றபோது என்னையே நான் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.
அவனிடம் போனதுமே என்னை பாரிஸும் ஸ்விஸ்ஸும் அழைத்துப் போக வேண்டுமென்றேன். அவன் அவற்றோடு ஜெர்மனியின் சிறப்பான இடங்களுக்கும் அழைத்துச் சென்றான்.

உல்ம்(Ulm)... அங்குள்ள ப்ராடஸ்டன்ட் சர்ச்தான் உலகிலேயே மிகப் பெரியது.  உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த ஊரும் இதுவே.

Black Forest...இதுதான் பிளாக் Forest cake பிறந்த இடமாம். மிக சுவையாக உள்ளது. இங்குள்ள பெரிய அணில்கள் வித்யாசமான அழகு!

குக்கூ க்ளாக் ( Cookoo Clock)...உலகின் மிகப்பெரிய குக்கூ கடிகாரம் இங்குதான் உள்ளது. ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒரு முறை சிறிய அறையிலிருந்து வெளிவந்து கூவும். 'குக்கூ' பறவையின் ஒலியைக் கொண்ட இந்த கடிகாரத்தின் அளவு நம்மை பிரமிக்க வைக்கிறது, அதன் பெண்டுலமே நம் உயரத்துக்கு உள்ளது.

அதனுள் சென்று அது செயல்படும் விதத்தை நாம் காண முடியும். பக்கத்திலுள்ள கடைகளில் அதே போன்ற அமைப்பில் மிகச் சிறிய அளவிலிருந்து விதவிதமான அலங்காரத்துடன் கடிகாரங்கள் விற்கப்படுகின்றன. இக்கடிகாரம் முழுக்க முழுக்க மரத்தால் செய்யப்பட்டுள்ளது. இது ஜெர்மனி ஸ்பெஷலாம்!

ஹைடல் பெர்க் (Heidelberg)...
இந்தக் கோட்டை ஜெர்மனியின் நாகரிகம், பண்பாட்டைப் பறைசாற்றும் மிக முக்கியக் கோட்டைகளில் இதுவும் ஒன்று.அரண்மனையினுள் சாராயம் நிரப்பி வைக்கும்  20 அடி உயரமும், 1,00,000 லிட்டர் கொள்ளளவும் கொண்ட சாராய  பீப்பாய், உலகிலேயே மிகப் பெரியது என்று கூறப்படுகிறது.

பாதேன்பாதேன்... என்ற இடம் விதவிதமான குளியலுக்கு பிரசித்தி பெற்ற இடம்! அத்தனையும் ஸ்பெஷலான, விதவிதமான ரசனையுடன் கூடிய ரோமானிய முறைக் குளியல
றைகள். குளிப்பாட்டி(!) விடவும் மஸாஜ் செய்யவும் தனித் தனி நபர்கள் உண்டு! ஆண்களும், பெண்களும் இணைந்து குளிக்கவும் வசதி உண்டு!

பதினாறு ஸ்டெப்களில் கிட்டத்தட்ட 3 முதல் 4 மணி நேரம் அதாவது மென்னீர் குளியல், வெந்நீர் குளியல், சோப், மஸாஜ், ஷவர், தெர்மல் ஸ்டீம் பாத், வார்ல்பூல் பாத் (whirlpool bath), குளிர் நீர் குளியல் என்று விதவிதமாகக் குளிப்பாட்டி துடைத்து, மாய்ச்சரைஸிங் க்ரீம் தடவி அனுப்புவார்கள்! பல வெளிநாட்டினரும் இங்கு வந்து குளித்து செல்வார்களாம்!!

அடுத்து பாரிஸ் பயணம். பாரீஸ் உலகத்தின் பேரழகையெல்லாம் தன்னுள் வைத்திருக்கும் ஒரு அற்புத நகரம்!

உலகத்தை ஆட்டிப் படைத்த மாவீரன் நெப்போலியன் அரசாண்ட இடம்!

உலகையே தன் புன்னகையால் மயக்கிய மோனாலிசா ஓவியம் உருவானது இங்கேதான்! உலக அதிசயங்களில் ஒன்றான ஈஃபில் டவர் கோபுரம் உள்ள நகரம்...

மனதை மயக்கும் சோப்புகள், மேக்கப் பொருட்கள், வாசனை சென்ட்டுகளின் தாய்நாடே பாரீஸ்தான்! உலகத்திலேயே இரவு நகரம் என்ற சிறப்பு பெற்ற கேளிக்கைகளின் மாபெரும் இருப்பிடம்... எல்லாவற்றையும்விட இங்கிலாந்து இளவரசி டயானா விபத்தில் உயிர் விட்டதும் இங்கேதான்!

இப்படி எல்லா காலத்திலும் வரலாற்றின் சுவடுகளில்  பின்னிப்பிணைந்து பழமையும்,
புதுமையும் கலந்த ஒரு வித்தியாசமான நகரம் பாரீஸ்!

பழங்காலத் தெருக்கள்,
வீடுகள், கட்டிடங்கள் அனைத்தும் பழமையின் பெருமையை சொல்லிக் கொண்டே இன்றைய புதுமை மெருகுடன் பளிச்சென்று காட்சி அளிக்கின்றன.

குப்பை, தூசுகள் என்று எதுவுமே இல்லாததனால், அத்தனை
கட்டிடங்களும் கழுவிவிட்டது போல பளிச்சிடுகின்றன. பாரீஸின் அழகை ரசிக்க மாடி பஸ்கள், ரயில்கள், படகுகள் மூன்றிலும் செல்ல வசதி ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள்.

சொல்லப்போனால் பாரீஸ், நூற்றி ஐந்து சதுர கிலோ மீட்டர் அளவுள்ள சிறிய நகரமாம்!. நகரின் இடையே ஓடும் ஸீன் நதியின் கரை ஓரத்தில்தான் அத்தனை முக்கிய கட்டிடங்களும் அமைந்துள்ளன!

முப்பத்திரண்டு பாலங்கள் இந்த நதியில் இருக்கின்றன. அழகிய பாலங்கள் அமைந்த உலகின் ஒரே நதி இதுதான். அவற்றில் பாண்ட் டி ஆர்ட்ஸ், பாண்ட் ராயல், பாண்ட் ஸில்லி இவை வித்தியாசமான தனிச்சிறப்புடைய பாலங்கள்!

இரவு ஸீன் நதியில் படகுப் பயணம் செய்து இநதப் பாலங்களின் கலையழகை இரவு விளக்குகளின் கண்கவர் ஒளியில் ரசித்தபோது 'ஹைய்யோ!...' என்று மனசு குதூகலித்தது.

உலக அதிசயத்தில் ஒன்றான ஈஃபில் டவரை  நேரில் கண்டபோது அதன் பிரம்மாண்
டத்தைக் கண்டு பிரமித்து நின்றுவிட்டேன்!!

அடேயப்பா.. என்ன உயரம்! நிமிர்ந்து பார்த்தால் கழுத்தை வலிக்கிறது. இதில் இரண்டு நிலைகளும். உச்சி வரை செல்ல படிகளும் உண்டு.

பிரஞ்சுப் புரட்சியின் நூற்றாண்
டைக் குறிக்கும் வகையில் 1889-ல் பாரீஸில் 'உலகப் பொருட்காட்சி'
நடந்தபோது 'குஸ்தவே ஈஃபில்'
என்ற கட்டிடக் கலை வல்லுனரால் உருவாக்கப்பட்டது தான் இந்த ஈஃபில் டவராம்!

வெறுமனே முரட்டு இரும்புக் கம்பிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த 'டவர்',
பாரீஸின் மென்மையான அழகிற்கு சரியாக இருக்காது என்று இதைக் கட்ட ஆரம்பிக்கும் போது பல கலை விமர்சகர்களும்,
மக்களும் எதிர்த்தார்களாம். ஆனால் இன்றோ பாரீஸ் என்றாலே ஈஃபில் டவர்
என்னுமளவுக்கு புகழ் பெற்று, உயர்ந்து நிற்கிறது இந்த கோபுரம்!

இதன் உயரம்  மேலேயுள்ள ஆன்ட்டெனாவையும் சேர்த்து 320.75 மீட்டர். இதன் எடையோ 7000 டன்கள். பன்னிரெண்டாயிரம் இரும்புத் தகடுகளையும் அவற்றை இணைக்க ஏழு மில்லியன் ஆணிகளும் பயன் படுத்தப்பட்டு இந்த உலக அதிசயம் உருவாக்கப்பட்டதாம்! அந்த இடத்தை விட்டு எனக்கு நகரவே மனமில்லை!

ஈஃபில் டவரையும் சேர்த்து பாரீஸின் அழகை ரசிக்க  210 மீட்டர் உயரமுள்ள Montparnasse Tower க்கு செல்ல வேண்டும்! 1973ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நவீன கட்டிடம்,  மொத்தம் 59 மாடிகள் கொண்டது. இதன் உச்சியை அடைய லிஃப்டில் ஆகும் நேரம் என்ன தெரியுமா? வெறும் 38 நொடிகள்! கண்மூடித் திறப்பதற்குள் 59ம் மாடி வந்து விட்டது! என்ன வேகம்!

மேல் மாடியில் நிற்க முடியாமல் காற்று தள்ளுகின்றது. மேலிருந்து பார்க்கும்போது ஈஃபில் டவரும், மற்ற இடங்களும் அழகாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது நமக்குப் புரிகிறது. பாரீஸ் நகரமும், ஸீன் நதியும் மனதைக் கொள்ளை கொள்கின்றன!

இங்குள்ள மியூசியங்கள் பழமையை எடுத்துக் காட்டும் பிரெஞ்சுப் புரட்சி, ஐரோப்பிய நாடுகளின் பண்பாடு,
கலாச்சாரம், நெப்போலியன் ஆட்சி பற்றிய குறிப்புகள் என்று நம்மை பதினேழாம் நூற்றாண்டுக்கே அழைத்துச் செல்கின்றன. இதில் மிக அவசியம் காண வேண்டியது லூவ்ரே மியூசியம்.

இது உலகின் மிகப்பெரிய மியூசியங்களில் ஒன்று. இதில்தான் மோனாலிஸாவின் ஒரிஜினல் ஓவியம் உள்ளது.

ஸேகர் கோயர், நாத்ரடாம் இரண்டும் வரலாற்றுப் புகழ் பெற்ற கிறித்தவப் பேராலயங்கள். ஸேகர் கோயர் சர்ச், மெளண்ட் மாட்ரே என்ற சிறிய குன்றின் மீது, வெண்ணிறக் கற்களால் ரோமானியக் கலையழகுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயத்துள் நடுநாயகமாக அன்னை மேரி கைகளில் ஏசுவைத் தாங்கி நிற்கும் காட்சி அற்புதமாக உள்ளது.

சுற்றிலும் பல வண்ணக் கண்ணாடிகளில் அமைக்கப்
பட்டுள்ள ஏசு காவிய ஓவியங்கள் கண்ணைப் பறிக்கின்றன. இந்த ஆலயத்திலுள்ள மணி 19 டன் எடை கொண்டது. உலகின் மிக கனமான மணிகளுள் இதுவும் ஒன்று.

எழுநூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த தேவாலயம். பாரீஸில் நடுநாயகமாய் நின்று 'தி லேடி ஆஃப் பாரிஸ்' என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது.  நெப்போலிய பிரான்ஸ் நாட்டு சக்கரவர்த்தியாக இங்குதான் முடிசூட்டிக் கொண்டார். பிரான்சின் வீராங்கனையான ஜோன் ஆஃப் ஆர்க்கின் உருவம் தெற்கு கோபுரத்தில் அமைக்கப்பட்டி
ருக்கிறது. இந்த சர்ச்சில் விடாமல் பைபிள் ஓதப்படுகிறது. பழமை மெருகும், புதுமைப் பொலிவும் கொண்டு விளங்கும் இவை பாரீஸின் பெருமைக்கு மேலும் பெருமை சேர்க்கின்றன.

சிறியோர் முதல் முதியோர் வரை குட்டைப் பாவாடை, டீஷர்ட் காஸ்ட்யூமில் சென்று கொண்டிருக்க, அகன்ற சரிகையுள்ள பட்டுப் புடவையை அணிந்து பாரீஸை சுற்றிய என்னை அத்தனை பேரும் கண்கள் விரியப் பார்த்தார்கள்! சின்னக் குழந்தைகளும் சிரித்தபடி என்னையும், புடவையையும்
தொட்டுப் பார்த்தது வேடிக்கையாக இருந்தது! (16 வருடங்களுக்கு முன்பு புடவை அதிசயமான உடை அவர்களுக்கு!)

இரவு ஸீன் நதியில் இரவில் படகுப் பயணம் செய்வது மிக உற்சாகமான அனுபவம்! அவர்கள் தரும் டெலிபோன் ரிசீவர் போன்ற ஒரு கருவி அனைவருக்கும் தரப்படுகிறது. அதில் நமக்குத் தேவையான மொழியை
'ஆன்' செய்தால் நாம் செல்லும் இடம், பக்கத்திலுள்ள கட்டிடங்கள் பற்றிய வரலாறு, பாலங்களைப் பற்றிய குறிப்புகள் அத்தனையும் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்த விஸிட் சுவிஸ்...என் மனம் ஆனந்தக் கூத்தாடியது!ஸ்டுட்கார்ட்டிலிருந்து ஸ்விட்சர்லாந்தின் மிக முக்கிய நகரமான ஜூரிச்சிற்கு காரில் சென்றோம். வெள்ளிப் பனிமலையாய் தோன்றிய ஆல்ப்ஸ் மலைத் தொடர்களை காரை அங்கங்கு நிறுத்தி ரசித்தபடியே சென்றோம். அழகான சாலைகளும், நெரிசலில்லாத போக்கு வரத்தும், அங்கங்கு வைக்கப் பட்டிருக்கும் வழிகாட்டிகளும், சிரமமில்லாத சாலைப் பயணத்துக்கு துணை செய்கின்றன. சாலை விதிகளை மீறக்கூடாது என்று எச்சரிக்க அங்கங்கு காமிராக்கள் உள்ளன.

ஸ்விட்சர்லாந்து நாட்டில் ஏரிகளுக்கும், அருவிகளுக்கும் பஞ்சமே இல்லை. எங்கு பார்த்தாலும் தண்ணீர்தான்.
சுவிஸ்ஸின் மிகப்பெரிய,
அகலமான ரீன் அருவி, 'ஹோ'வென்ற சத்தத்துடன்,
பயங்கர வேகத்துடன் வந்து
விழுவது கண்கொள்ளாக் காட்சி. அருவியை மிக அருகில் சென்று ரசிக்க பாதுகாப்பாக வழி செய்திருக்கிறார்கள். எந்த அருவியிலும் யாரும் குளிப்பதற்கு  அனுமதிப்பதில்லை. அதனா
லேயே அருவியில் வந்து ஆறாக ஓடும் நீர் படுசுத்தமாக,
பளிங்குபோல் உள்ளது.

மறுநாள் ஐரோப்பாவின் மிக உயரமான ஜுங்க்ப்ராஜோக் (Jungfrajoch) சிகரத்திற்கு சென்றோம்.ஆஹா...என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!
நாங்கள் கேபிள் கார் மூலம் மலை உச்சிக்குச் சென்றோம். அப்பா! என்ன அற்புதமான மனதை மயக்கும் அழகு. கண்கள் இமைக்க மறந்து அந்த இயற்கை அழகை ரசித்தேன்!

எங்கு பார்த்தாலும் வெள்ளை வெளேரென்ற பனி மேடு, பள்ளம் தெரியாத பளிங்குப் பாதை. 'கிளேசியர்' எனப்படும் ஐஸ் பாறைகள். அந்நாட்டு மக்கள் அந்த ஐஸில் பனிச்சறுக்கு விளையாட்டு விளையாடு
கிறார்கள். சிறுவர் முதல் முதியோர் வரை இரு கைகளில் கழிகளுடன் டிரெக்கிங் செல்கிறார்கள்! கேபிள் காரில் செல்லும்போது கீழே பார்த்தால் கதி கலங்குகிறது. வித்தியாசமான அனுபவம்.

...ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில்
அழகிய ரைன் நதி ஓரத்தில்
மாலைப் பொழுதின் சாரத்தில்
மயங்கித் திரிவோம் பறவைகள் போல்...என்று பாடியபடியே என் கணவரைப் பார்த்தேன். அவரோ இயற்கை அழகில் சொக்கிப் போயிருந்தார்!!

அங்கிருந்து வரும் வழியில் மிகப் பெரிய அழகிய ட்ரம்மல்பேக் ( Trummelbech ) நீர்வீழ்ச்சியைப் பார்த்து ரசித்தோம். அந்த நீர்வீழ்ச்சியை பல இடங்களில்  அதன் ஒவ்வொரு அழகையும் ரசிக்கும்படி அமைத்துள்
ளார்கள்.

அங்கிருந்து ஜூரிச்சிற்கு ஸஸ்டேன் பாஸ் (Susten Pass) வழியாக சென்று விடலாம் என்றான் என் பிள்ளை.
மலைப்பாதை ஒற்றையடிப் பாதை போல இருந்தது. பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. சுற்றிலும் பளபளவென்று ஒரு வெள்ளிமலையில் செல்வது போல இருந்தது. அதன் அழகை ரசித்துக் கொண்டே வந்த நாங்கள்  வழியில் இறங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டோம். குளிர் நடுக்கி விட்டது.

மாலை ஐந்து மணிக்கு மேல் பனிப் பொழிவினால் பாதை பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் சீக்கிரமே பாதை மூடப்பட்டு விடும். நாங்கள் சீக்கிரமே கிளம்பியும் அன்று அதிக பனிப்பொழிவினால்  சீக்கிரம் பாதை மூடப்பட்டு விட்டது.

சுற்றிலும் காடு மாதிரி  மரங்கள். அத்தனையிலும் பனி உறைந்து இருந்தது.தெருவில் ஈ காக்கை
யைக்  காணோம்! சற்று
தொலைவில் ஒரு ஹோட்டல்
தென்பட,  அங்கு நின்றிருந்த கார்கள் பாதிக்குமேல் பனி மூடியிருந்தது.

அங்கு கேட்டபோது ஹோட்டலில் தங்க இடம் இல்லை என்று சொல்லிவிட எங்களுக்கு என்ன  செய்வதென்றே தெரிய
வில்லை.நேரம்  ஆக ஆக இருள் கவிந்து ,ஸ்னோவினால் எங்கள் காரின் சக்கரம் மறைய ஆரம்பித்து விட்டது. என் கணவரும், நானும் 'இனி என்ன செய்வது? திரும்ப வந்த   வழியிலேயே சென்று விடுவோம்' என்றோம்.

மலைப்பாதை. வேறுபோக்கு
வரத்து  இல்லாததால்
வழி பூராவும் ஒரே பனி படர்ந்து வழியே தெரியவில்லை.என் மகனோ அந்த நேரத்திலும்  கூலாக 'கவலைப் படாதம்மா.வழி மறைந்து விட்டால் காரில் ஹீட்டரை போட்டு விட்டு தூங்கலாம்.காலை  கிளம்பி செல்லலாம்'என்றான்!

ஆள் அரவமில்லாத அந்தகாரத்தில் அதுவரை ரசித்த பனி அச்சுறுத்தும் அரக்கன் போல தெரிந்தது! நானோ எனக்கு தெரிந்த ஸ்லோகங்களை சொல்லிக் கொண்டே வந்தேன்.

ஒருவழியாக கீழே வந்து வேறு வழியில் ஜூரிச் சென்றோம். கிட்டத்தட்ட 2 மணி நேரம் தாமதம். ஆனாலும் நல்லபடியாக வந்து சேர்ந்ததற்கு இறைவனுக்கு நன்றி சொன்னேன். அதன்பின் பலமுறை நான் ஜெர்மனி சென்றாலும்  அந்த மகிழ்ச்சியும்,திகிலும் கலந்த அனுபவம் இன்றும் மறக்க முடியாத நினைவுதான்!

லூசர்ன் (Luzern)...இது ஸ்விஸ்ஸின் பழமையும், பாரம்பரி
யமும், இன்றைய நாகரிகமும் கலந்த மிக அழகிய நகரம். இங்குள்ள மிகப் பெரிய ஏரியும், அதில் அமைந்துள்ள வாட்டர் டவர் மற்றும் சேப்பல் பிரிட்ஜ் (Chappell Bridge) பிரிட்ஜ் ஆகியவை ஐரோப்பிய புகழ் பெற்ற பழங்காலச் சின்னங்கள். இந்தப் பாலம் முழுதும் மரத்தால் செய்யப்பட்டது. இங்கு 17ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட வண்ண ஓவியங்கள் இப்பாலத்தின் மேல் பகுதியில் இன்றும் புது மெருகழியாமல் காணப்படுகின்றன. இந்த ஏரியில் அன்னப் பறவைகள் காணப்படுகின்றன.

இந்நகருக்கு மேலும் சிறப்பு சேர்ப்பது 1792ல் உருவாக்கப்பட்ட
'தி டையிங் லயன் மோனுமென்ட்'
 (Dying Lion Monument) .
ஃப்ரென்ச் முடியாட்சியைக் காப்பாற்றப் போராடி படுகொலையான ஸ்விஸ் வீரர்களின் நினைவாக தோர் வால்ட்சன் என்ற சிற்பியால் பல மில்லியன் ஆண்டுகட்கு முந்தைய கடல் மணலால் உருவாக்கப்
பட்டது.

ஸ்விஸ்ஸில் மிகப் பிரபலமான ஸ்விஸ் வாட்சுகளும், நாவில் கரையும் விதவிதமான சாக்லேட்டுகளும் வாங்க, லூசர்ன் சிறந்த இடமாக உள்ளது. ஒன்றா, இரண்டா? பல நூறு வெரைட்டிகளில் உள்ள சாக்லேட்களை பொறுக்கி வாங்குவதே பெரிய சாதனைதான்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசி. லூசர்ன் தவிர ஜெனிவா,
ஜூரிச், இன்டர் லேகன்,
இங்கல்பர்க் என்று ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு அழகு!

நான் எங்கு சென்றாலும் அங்குள்ள ஆலயங்களை தரிசித்து விடுவேன். அங்குள்ள சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சென்றோம். அழகான கோயில்..சிறப்பாக பராமரிக்கிறார்கள். ஆலய கர்ப்பக் கிரகத்தில் முருகவேளின் அம்சமான வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஆகம விதிப்படி மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. வேலுக்குப் பின்னால் ஸ்ரீ சிவ சுப்பிரமணிய சுவாமி, வள்ளி - தேவயானையுடன் ஐம்பொன்னாலான சிலையாக அழகுறக் காட்சியளிக்கிறார்.

பனி மூடிய மலைகள், வெள்ளை வெளேரென்று சில்லிடும் பனித்தூவல், உடலை உறைய வைக்கும் குளிர், பச்சை பசேல் புல் வெளிகள், ஆழமான திகிலூட்டும் பள்ளத்தாக்குகள், ஏரிகள், ஹோவென்று கொட்டும் அருவிகள் என்று அத்தனை அழகையும் தன்னுள் கொண்டு, உலகச் சுற்றுலா தலங்களில் முதலாவதாக விளங்கும் ஸ்விட்சர்லாந்த் உண்மையில் சொர்க்கம்தான்!













அடுத்த பதிவில் கம்போடியா, பாலி, ரோம், லண்டன் பற்றிய விபரங்கள்...!!

No comments:

Post a Comment