Tuesday 4 August 2020

காமிகா ஏகாதசி..16.7.2020

பகவான் விஷ்ணுவை வழிபட உகந்த தினங்களில் ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஓர் ஆண்டில் வரும் 24 ஏகாதசி திதிகள் ஒவ்வொன்றும் தனித்தனி சிறப்புகளைக் கொண்டவை. ஒவ்வொன்றையும் அனுசரிக்க, தனிப்பட்ட பலன்கள் கிட்டும்.

ஏகாதசி மஹாத்மியம் என்னும் நூலில் ஆடிமாத தேய்பிறையில் வரும் காமிகா ஏகாதசி பல புண்ணிய பலன்களைத் தரும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்விரதத்தை அனுசரிப்பவர்கள், வாஜ்பேய யாகம் செய்த பலனைப் பெறுவார்கள். முன்னொரு காலத்தில் செல்வந்தர் ஒருவர் மிகுந்த செல்வச் செழிப்போடு வாழ்ந்த போதும் அவருக்கு, கோபம் மட்டும் குறையவில்லை. ஒருமுறை, தன் அண்டை வீட்டு வேதியரோடு சண்டை ஏற்பட்டு அந்த வேதியரைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த செல்வந்தர் தன் மன நிம்மதியை இழந்தார். செல்வங்கள் எல்லாம் அவரிடமிருந்து விலகிச் சென்றது. தனக்கு நல்வழிகாட்டுமாறு முனிவர் ஒருவரை சரணடைந்த போது அம்முனிவர் காமிகா ஏகாதசி விரதத்தின் சிறப்புகளை எடுத்துச் சொல்லி அதை மேற்கொள்ளுமாறு உபதேசித்தார். செல்வந்தர், முறையாக பக்தியோடு காமிகா ஏகாதசி விரதத்தை மேற்கொண்டு, துளசி இலைகளால் திருமாலைப் பூஜித்து வழிபட்டார். அன்றைய இரவு அவரின் கனவில் தோன்றிய பெருமாள் 'எந்தப் பாவத்தையும் போக்கும் காமிகா ஏகாதசி விரதத்தை மேற்கொண்டதால் உன்னைப் பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. ஒருவன் அறிந்தே ஒரு பாவத்தைச் செய்து பின்பு அதிலிருந்து தப்ப காமிகா ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள முயன்றால் அது அவனுக்குப் பலிக்காது. நீ அறியாமல் செய்து விரதமிருந்ததால் உன் பாவம் விலகியது'என்று சொல்லி அவனுக்கு அருள் செய்தார். மறுநாள் முதல் மன அமைதியும், உடல் ஆரோக்கியமும் திரும்பப் பெற்ற அந்த செல்வந்தர், பகவான் விஷ்ணுவுக்கு நன்றி சொல்லித் துதித்தார். அவரின் எஞ்சிய வாழ்க்கை முழுவதும் எளிமையும், பக்தியும் கொண்டு வாழ்ந்தார். இந்தக் கதையை நாரதர் உபதேசித்ததாக ஏகாதசி மஹாத்மியம் தெரிவிக்கிறது. இன்று காமிகா ஏகாதசி. இன்று விரதத்துடன் உபவாசம் இருப்பதால் வாஜ்பேய யாகம் செய்த பலனுடன், தன் திருக்கரங்களில் சங்கு சக்கரம் ஏந்திய பெருமாள் திருவுருவத்தை வழிபட்டு வணங்க, கங்கையில் நீராடி, காசி, நைமிசாரண்யம், புஷ்கர் ஆகிய புண்ணியத் தலங்களில் தங்கும் பலன்களைப் பெறுவர். காமிகா ஏகாதசியைத் தொடர்ந்து கடைப்பிடிப்பவர்களை, தாமரை இலைத் தண்ணீர் போல், பாவம் ஒருபோதும் அவர்களைத் தீண்டுவதில்லை. இந்நாளில் துளசி இலைகொண்டு பகவான் விஷ்ணுவை வழிபட உடல் தூய்மையும் மனத்தூய்மையும் வந்து வாய்க்கும். பக்தி இலக்கியங்கள் அனைத்தையும் படிப்பதால் கிட்டும் புண்ணியத்தைவிடவும் பலமடங்கு புண்ணியத்தை வழங்கவல்லது. அதிகாலையில் எழுந்து நீராடி திருமாலை வணங்கி நாராயண நாமத்தை ஜபித்துவருவது மேலும் சிறப்புவாய்ந்தது. இயன்றவர்கள் வெறும் துளசித் தீர்த்தம் மட்டுமே அருந்தி விரதம் இருக்கலாம். மறுநாள் துவாதசி திதி அன்று பாரணை நேரத்தில் இறைவனை வணங்கி விரதத்தை முடித்துக்கொள்ளலாம். ஓம் நமோ நாராயணா🙏🏼




No comments:

Post a Comment