Thursday 9 July 2020

மோகினி ஏகாதசி (2.6.2020)


விரதங்கள் எதற்காக இருக்கிறோம்? நம் ஆரோக்யமான வாழ்விற்கு அவ்வப்போது விரதம் இருக்க வேண்டியது அத்யாவசியமானது.

தினமும் தூங்கி எழுவதும், அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஓய்வு எடுப்பதும், நம் வெளி உறுப்புகளுக்கு தரும் ஓய்வாகவே கருதப்படுகிறது.

ஆனால் நாம் சாப்பிட்டதை ஜீனணித்து கழிவுகளை நீக்கி நமக்கு ஆரோக்கியம் தரும் உள் உறுப்புகளுக்கு நாம் ஓய்வே கொடுப்பதில்லை. இதைப்பற்றி நாம் சிந்திப்பதும் இல்லை.

நம் உள் உறுப்புகளுக்கு அவ்வப்போது ஓய்வளிப்பதோடு, அத்துடன் ஆன்மிகத்தையும் கலந்து, நம் மனதையும் சாந்தப்படுத்தும் வழிமுறையை, விரதங்கள் மூலம் நம் முன்னோர்கள் நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள். அத்தகைய விரதங்களில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது ஏகாதசி விரதம்.

வைகாசி மாதத்தில்  வளர்பிறை காலத்தில் வரும் ஏகாதசி   'மோகினி ஏகாதசி' எனப்படுகிறது. விஷ்ணு பகவான் வைகாசி மாத வளர்பிறை ஏகாதசியின்போதுதான் மோகினி அவதாரம் எடுத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. அதனால்தான் இதற்கு `மோகினி ஏகாதசி' என்ற பெயர் வந்தது.

சீதைப் பிராட்டியைப் பிரிந்து வாடிய ராமச்சந்திரமூர்த்தி, தன் துன்பம் தீர்க்கும் வழியைத் தனக்கு உபதேசம் செய்யுமாறு, வசிஷ்ட முனிவரிடம் கேட்டார். பரம்பொருளான ராமரின் திருவுளம் அறிந்துகொண்டார் வசிஷ்டர். இந்த உலகிற்கு மோகினி ஏகாதசியின் சிறப்பை உணர்த்தவே, ராமபிரான் இவ்வாறு கேட்பதை உணர்ந்த வசிஷ்டர், குருவின் ஸ்தானத்தில் இருந்து ராமருக்கு மோகினி ஏகாதசியின் மகிமையை எடுத்துச் சொல்லி ராமபிரானை ஏகாதசி விரதம் அநுஷ்டிக்க உபதேசித்தார்.

கிருஷ்ணாவதாரத்தில், இந்த நிகழ்வினை தர்ம புத்திரருக்கு எடுத்துக்கூறும் பகவான் கிருஷ்ணர், மோகினி ஏகாதசியின் மகிமைகளையும் எடுத்துரைத்தார்.

முன்னொரு காலத்தில், சரஸ்வதி நதிக் கரையில் பத்ராவதி எனும் நகரத்தை `த்யுதிமன்' என்பவன் ஆண்டு வந்தான். அவனுடைய அரசில் தனபாலன் என்ற வணிகன் ஒருவன் இருந்தான். தனபாலன் சிறந்த திருமால் பக்தன். அவனுக்கு ஐந்து மகன்கள் இருந்தனர். அவர்களுள் இளையவனான `திரிஷ்தபுத்தி' மிகவும் கீழ்த்தரமான செய்கைகளைக் கொண்டவன். திருடனாகவும், பெரியவர்களை மதிக்காமல், கடவுள்களை நிந்திப்பவனாகவும் இருந்தான்.

அவனது தீய நடவடிக்கைகளைப் பொறுக்க முடியாத தனபாலன், அவனை வீட்டை விட்டு வெளியேற்றினான். திரிஷ்தபுத்தி ஒரு திருடனாக மாறி
கொள்ளையடிப்பதில் ஈடுபட்டு, காவலர்களால் பிடிபட்டு, பல முறை தண்டிக்கப்பட்டான். கடைசியில் அவன் நாடு கடத்தப்
பட்டான். காட்டில் வாழ்ந்தபோது அவன் நோய்வாய்ப்பட்டு, அன்றாட வாழ்க்கையை வாழவே சிரமப்பட்டான்.

ஒவ்வொரு நாளையும் நரகமாகக் கழித்துக் கொண்டிருந்தவன், ஒருநாள் காட்டில் கௌண்டின்ய முனிவரின் குடிலைக் கண்டான். முனிவர் கங்கையில் நீராடிவிட்டு குடிலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவருடைய ஈர ஆடையிலிருந்து சிதறிய நீர்த்துளிகள் சில திரிஷ்தபுத்தியின் மேல் விழுந்தன.

உடனே, அவன் மனதில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. அவன், தான் செய்த தவறுகள் அனைத்துக்கும் பிராயச்சித்தம் தேட நினைத்து முனிவர் காலடியில் விழுந்தான்.

திரிஷ்தபுத்தியின் கதையைக் கேட்ட முனிவர், `பாவங்கள் செய்யப் பல வழிகள் இருப்பதுபோல, அவற்றிலிருந்து விடுதலை பெறவும் பல வழிகள் இருக்கின்றன. அவற்றுள் தலைசிறந்தது மோகினி ஏகாதசி விரதம். அன்றைய நாளில் விரதமிருந்து மனம், மொழி, மெய் ஆகியவற்றால் பெருமாளை வழிபாடு செய்தால் உனக்கு, உன் பாவங்களில் இருந்து விடுதலை கிடைக்கும்' என்றார்.

திரிஷ்தபுத்தியும் தன் உயிர் பிரியும் நாள்வரை, ஒவ்வொரு வருடமும் மோகினி ஏகாதசி நாளில் முனிவர் சொன்ன வண்ணமே விரதம் இருந்தான். இறுதியில் ஆயுள் முடியும்போது பாவங்கள் அனைத்தும் நீங்கி கருட வாகனமேறி, வைகுண்ட பதம் அடைந்தான். மோகினி ஏகாதசியின் பெருமையை உணர்த்தும் இந்தக் கதை  ஏகாதசி மகாத்மியத்தில் உள்ளது.

பொதுவாகவே, ஏகாதசி விரதம் பல புண்ணிய பலன்களை அருள வல்லது. பாவங்கள் போக்கி, நல்லருள் தருவது. அதிலும் மோகினி ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பகவான் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து, தேவர்களுக்கு அமிர்தம் வழங்கியதுபோல், இந்த விரதத்தை மேற்கொள்ளும் அனைவருக்கும் இறைவன் நன்மையை வாரிவழங்குவார் என்பது ஐதிகம்.

கருத்துவேறுபாடு  காரணமாகப் பிரிந்து வாழும் கணவன், மனைவி இந்த விரதத்தை  அனுஷ்டித்தால், கருத்துவேறுபாடு நீங்கி, சேர்ந்து வாழ்வார்கள் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.

இந்நாளில் காலை முதல் மாலை வரை விரதம் இருந்து, அன்றைய நாள் முழுவதும் பெருமாளுக்குரிய மந்திரங்கள்,  விஷ்ணு புராணம், விஷ்ணு சகஸ்கர நாமம் போன்றவற்றை பாராயணம் செய்வது நல்லது. மாலை பெருமாள் கோயிலுக்கு சென்று  வழிபட்ட பின்பு வீட்டிற்கு திரும்பி பால், பழம் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

 இந்த மோகினி ஏகாதசியில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுபவர்கள் நீண்ட நாட்களாக வாட்டி வதைக்கும்  நோய்களிலிருந்து விடுபடுவார்கள். உடல் சோர்வு நீங்கும்.

இவ்விரதம் இருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகப்படியான உதிரப் போக்கு ஏற்படும் நிலை தீரும். உடலில் ரத்த சோகை ஏற்பட்டு இருப்பவர்
களுக்கு அக்குறைபாடு நீங்கும். பெருமாளின் அருளால் சிறப்பான வெற்றிகளை பெறும்.

கருத்துவேறுபாடு  காரணமாகப் பிரிந்து வாழும் கணவன், மனைவி இந்த விரதத்தை  அனுஷ்டித்தால், கருத்துவேறுபாடு நீங்கி, சேர்ந்து வாழ்வார்கள் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.

இந்த நாளில் விரதமிருந்து, துளசித் தீர்த்தம் மட்டுமே அருந்தி எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்து, நாளை துவாதசி திதியன்று பாரணை செய்து விரதம் முடிக்க வேண்டும். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதும் செய்துவர, பிறவிப் பிணி நீங்கி இறைவனின் திருவடிகளைச் சேரலாம் என்பது நம்பிக்கை.




No comments:

Post a Comment