Saturday 11 July 2020

அபரா ஏகாதசி..(17.6.2020)


விரதங்களிலே சிறப்பு வாய்ந்து ஏகாதசி விரதம் என்று பெருமாளே கூறுவதாக புராணங்கள் கூறுகின்றன. அதன்படி ஏகாதசி அன்று முழு உபவாசம் இருந்து பால்,பழம்,கிழங்கு மட்டும் சாப்பிடலாம்.மறுநாள் துவாதசி அன்று  துளசி தீர்த்தம் அருந்தியபின் உணவு சாப்பிடலாம். இன்று ,அபரா ஏகாதசி' எனப்படுகிறது.

ஏகாதசி விரதம் பித்ரு சாபத்தை போக்குவதாகவும், இதனால் வைகுண்டத்தை அடையலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த விரதத்தின் மூலம் விஷ்ணுவின் அருள் கிடைப்பதோடு வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது ஐதீகம்.

அபரா ஏகாதசிக்கான கதையைக் காண்போம். அம்பரிஷன் என்னும் மன்னன் விஷ்ணுவின் மீது அதீத பக்தி உள்ளவன். ஒரு வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணுவின் அருளைப் பெற்றான்.

ஒருமுறை மன்னன் ஏகாதசி விரதம் இருந்து அதை முடிக்கும் வேளையில் துர்வாச முனிவர் அங்கு வந்தார். மன்னன் அவரை வரவேற்று உணவு உண்ண வரும்படி அழைத்தார். முனிவர் ஆற்றில் நீராடி விட்டு வருவதாக கூறிச் சென்றார்.

வெகு நேரமாகியும் முனிவர் வரவில்லை. விரதம் முடிவதற்குள் மன்னன் சாப்பிடவில்லை என்றால் விரத பங்கம் ஏற்பட்டுவிடும் என்பதால் துளசி தீர்த்தத்தை அருந்தி உபவாசத்தை முடித்துக்கொண்டார்.

பசியுடன் வந்த துர்வாசர் தன்னை விட்டு விரதத்தை முடித்த மன்னர் மேல் கடும் கோபம் கொண்டார். தனது சிகையில் இருந்து ஒரு முடியை பிடுங்கி அதை அம்பரிஷனை கொல்வதற்கு ஏவ, அது பூதமாக மாறி மன்னனை துரத்தியது.

மன்னன் விஷ்ணுவை பிரார்த்தனை செய்தான். உடனே விஷ்ணுவின் சக்கராயுதம் துர்வாசரை துரத்தியது.

இதனால் துர்வாசர் மும்மூர்த்திகளிடம் முறையிட, அவர்களோ 'நாங்கள் எதுவும் செய்ய முடியாது.
நீ அம்பரிஷனிடமே போய் மன்னிப்பு கேள்' என்று கூறினர். முடிவில் துர்வாசர் மன்னனிடமே சென்று மன்னிப்பு கேட்டார்.

மன்னனும் சக்கரத்தாழ்வாரை பூஜித்து துர்வாச முனிவரை காப்பாற்றினான். துர்வாசர் மன்னனுக்கு நன்றி கூறி ஆசி வழங்கினார். இதுவே அபரா ஏகாதசிக்கான கதை.

ஸ்ரீ கிருஷ்ணர் அர்ச்சுனனிடம், 'ஆனி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை அபரா ஏகாதசி என்று அழைப்பர். இந்த ஏகாதசி விரதம் அனைத்து பாவங்களையும் அழிப்பதுடன், அளவில்லா (அபரா) செல்வத்தையும் வழங்கக் கூடியது.  இவ்விரதத்தை கடைப்பிடிப்பவர் மக்களிடத்தில் பேரும், புகழும் பெறுவர்.

'மேலும் பிரம்ம ஹத்தி தோஷம், பைசாசப் பிறவி, பிறரை நிந்திப்பது, குரு நிந்தனை, பொய் சாட்சி, பொய் பேசுதல், போலி சாஸ்திரங்களை உருவாக்குதல், ஜோதிட சாஸ்திரம் மூலம் பிறரை ஏமாற்றுதல், போலி வைத்தியனாக தொழில் செய்து மக்களை ஏமாற்றுதல் போன்ற பாப கர்மங்களினால் விளையும் பாபங்களும் இந்த ஏகாதசி விரதத்தின் மகிமையால் நீங்கப் பெறுகிறது.

'மூன்று புஷ்கரங்களிலும் நீராடுதல், கார்த்திகை மாதத்தில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல், கங்கை நதி தீரத்தில் பித்ருக்களுக்கு பிண்டதானம் செய்தல் இவற்றால் கிடைக்கப் பெறும் புண்ணியத்தை, அபரா ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக அனுஷ்டிப்பதன் மூலம் ஒருவர் பெறலாம்.

'கஜ தானம், அஸ்வம் தானம், யக்ஞத்தில் ஸ்வர்ண தானம் இவற்றால் கிட்டும் புண்ணியபலனுக்கு இணையான புண்ணிய பலனை அபரா ஏகாதசி விரதத்தின் மூலம் பெறலாம்.

அபரா என்றால் அபாரமான அதாவது அபரிமிதம் என்று அர்த்தம். எவர் ஒருவர் இவ்விரதத்தை விதிப்பூர்வமாக அனுஷ்டிக்கிறாரோ, அவர்  மஹாவிஷ்ணுவின் அபரிமித கருணைக்கு பாத்திரமாவதுடன்,பக்தி மற்றும் சிரத்தையில் வளர்ச்சியையும் காண்பர்' என்றுரைத்தார்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் திருவாயால் அருளப்பட்ட இந்த அபரா ஏகாதசியை அநுஷ்டித்து நாமும் நற்பலன்களைப் பெற்று வைகுண்ட பதியின் பாதங்களைச் சரணடைவோம்🙏🏼

இன்றைய நிவேதனம்..திரட்டுப்பால், பயத்தம்பருப்பு பாயசம்




No comments:

Post a Comment