Monday 14 December 2020

ஆன்மிக தரிசனம்..2

 ஆன்மிக தரிசனம்..2..(11.12.2020)

அயல்நாட்டு ஆலயங்கள்
என் பிள்ளைகள் வெளி
நாட்டில் இருப்பதால் நான் அந்த நாட்டுக்கு செல்வதுடன் அருகில் இருக்கும் வேறு நாடுகளுக்கும் சென்று வருவேன். போகும்போதே அங்கு என்ன கோவில் இருக்கிறது என்று நெட்டில் பார்த்து விபரங்களுடன் செல்வேன்.

பெரிய பிள்ளை ஜெர்மனியில் இருப்பதால் அங்கிருந்து ஸ்விட்சர்லாந்து சென்றோம். அங்கு ஜுரிச் சிவசுப்ரமணிய சுவாமி ஆலயம் சென்று வந்தோம். நதிக்கரையில் அமைந்துள்ள அழகான அற்புத ஆலயம்.

சின்ன பிள்ளைக்கு சிங்கப்பூரில் வேலை. அங்கு ஏழெட்டு முறை சென்றிருக்கிறேன். 

அங்குள்ள பல ஆலயங்கள் தரிசனம் செய்திருக்கிறோம். கோவில்களின் அழகும் சுத்தமும், நாள்முழுவதும் நடக்கும் அன்னதானமும் வியக்க வைக்கும் அற்புதமான விஷயங்கள்!

அங்குள்ள தண்டாயுதபாணி ஆலயம் முதலில் அங்கு வேலைக்குச் சென்ற தமிழர்களால் ஒரு வேல் வைத்து தமிழ்க் கடவுள் முருகனுக்கு உருவான முதல் கோயில். இன்று மிகச் சிறப்பான வேண்டுதலை நிறைவேற்றும் ஆலயமாக உள்ளது. கார்த்திகை, தைப்பூசம் சிறப்பான விழா.

கெய்லாங் சிவன் கோவிலின் கலையழகு கண்ணுக்கு விருந்து. அங்கு வெளிபிரகாரத்திலுள்ள சிவலிங்கத்திற்கு எவரும் அபிஷேகம் செய்யலாம்.

சைனாடவுனிலுள்ள மிகப் பழமை வாய்ந்த மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி மிகவும் விசேஷமாக நடைபெறும்.

அழகு நிறைந்த கிருஷ்ணன் ஆலயம், அருள் பொங்கும் ராமர் ஆலயம் என்று ஒவ்வொன்றும் தனி அழகு. ஒருமுறை அன்னையர் தினமன்று ஸ்ரீ நிவாச பெருமாள் ஆலயம் சென்றோம். தேவி மகாலக்ஷ்மிக்கு தாமரைப் பூக்களால் அலங்கரித்து சன்னதியில் அழகுற விளக்குகள் ஒளிவீசின. 'என்ன விசேஷம்?'என்றபோது 'இன்று அன்னையர் தின சிறப்பு வழிபாடு. நாம் பெற்ற அன்னைக்கு மட்டுமா சிறப்பு? இவ்வுலகையே உருவாக்கி நம்மைக் காப்பாற்றும் அவளன்றோ முதல் தாய்' என்றபோது மனம் சிலிர்த்தது. நான் எந்த ஆலயத்திலும் இது போன்ற வழிபாடு கேள்விப்பட்டதில்லை.

மலேசியாவில் கோலாலம்பூரிலுள்ள Batu Caves பத்துமலை முருகன் கோவில் சுண்ணாம்புப் பாறையாலான மலையில் அமைந்துள்ளது. 280 படிகள் ஏறிச் சென்றால் மேலே முருகன் சன்னதி அமைந்துள்ளது. இங்கு தைப்பூச விழா மிக விமரிசையாக நடைபெறும். உலகின் பல பகுதி மக்களும் இவ்விழாவில் கலந்து கொள்ள வருவார்கள்.

நாங்கள் அங்கு தரிசனம் முடித்து வந்தபோது நல்ல பசி. அங்கிருந்த குருக்களிடம், அருகில் சைவ சாப்பாடு ஹோட்டல் இருக்கா என்றபோது, 'இங்கு கிடைப்பது கஷ்டம். என்னுடன் இங்கேயே சாப்பிடுங்கள்' என்றார். ஆஹா..முருகனின் பிரசாதம் என்று மனம் நெகிழ்ந்தோம். அவர் எங்களைப்பற்றி கேட்க நாங்கள் குடந்தை என்றதும், தனக்கும் சுவாமிமலைதான் சொந்த ஊர் என்றார். நம் ஊர் மனிதர்கள் உலகம் முழுதும் இருப்பதை நினைக்க சந்தோஷமாக இருந்தது.

அடுத்தமுறை சிங்கை போனபோது இந்தோனேசியாவில் இந்துக் கோயில்கள் நிறைந்த பாலிக்கு சென்றோம். பாலி முழுக்க முழுக்க இந்துக்கள் வாழும் தீவு. ஊரில் திரும்பிய இடமெல்லாம் கோயில்கள்! சின்னச் சின்ன சந்நதிகள்! ஆனால் எதிலும் ஆண்டவன் உருவமில்லை. அருவத்தையே இறைவனாக வணங்குகிறார்கள் இவர்கள். இரண்டு வீடுகளுக்கு ஒரு ஆலயம் உள்ளதால் பாலியை'ஆயிரம் கோயில் உடைய தீவு' என்றே அழைக்கிறார்கள்! ஆனால் என்ன, எந்தக் கோயிலுக்குள்ளேயும் நம் யாரையும் அனுமதிப்பதில்லை.

'நானும் இந்துதான்'என்று சத்தியம் செய்தாலும்  ம்ஹூம்! நோ என்ட்ரிதான்!

பாலி மக்களும்கூட ஆலயத்திற்குள் செல்ல பிரத்யேக உடை அணிந்தே செல்கின்றனர். ஒவ்வொருவரும் ஒரு வட்டத்தட்டில் பழங்கள்,இனிப்புகளை அழகாக அடுக்கி வைத்தபடி செல்லும் அந்த அழகே தனிதான்.

கடலுக்கு நடுவில் உள்ள பாறையின் மேல் அமைக்கப்பட்டுள்ள 'தானாலாட்' என்ற கற்கோவில் ஜாவா தீவுகளிலிருந்து வந்த குருமார்களால் 16-ம் நூற்றாண்டில்  கட்டப்பட்டது. இப்பாறையில் மூன்று முகங்களைக் கொண்ட நீரூற்று உள்ளது. இதனை சுயம்புவாக உருவான சிவா,விஷ்ணு, 
பிரம்மா உருவங்களாகவே வழிபடுகிறார்கள். இவற்றிலி
ருந்து வரும் நீர் இனிப்பாக உள்ளதும் அதிசயமே!

'அகுங்க்' என்ற மலையில் அமைந்துள்ள 'புரா பெஸாகி' என்ற தேவி ஆலயம் இங்குள்ள மிகப் பழமையான, புனித ஆலயமாகப் போற்றப்படுகிறது.

'புரா தீர்த் ஆம்புல்' என்ற ஆலயம் மிகப் பெரியது. இதில் உள்ள சிலைகளும், கருட உருவங்களும் மிக அற்புதமான கலையழகுடன் விளங்குகின்றன. இங்கு உள்ள புனித நீரூற்றுகளில் நீராடுவதால் உடல் ஆரோக்கியமும், செல்வமும் கிட்டும் என்பது நம்பிக்கை.

அடுத்தமுறை நான் சென்றது தாய்லாந்து நாட்டின் பாங்காக்.இங்கு புத்த ஆலயங்களே அதிகம்.
 ‘வாட் போ’என்ற ஆலயம்  தாய்லாந்தின் ‘முதல் பல்கலைக் கழகம்’ என்ற சிறப்புடையது.  கைகளில் தலையைத் தாங்கி ஒருக்களித்தவாறு படுத்தபடி காட்சி தரும் 46 மீட்டர் நீளமான சிலை, புத்த பிரான் நிர்வாண நிலையை அடைந்ததைக் குறிப்பிடும் மிகக் கலையழகு மிக்க சிலை.

தமிழர்களால் உருவாக்கப்பட்ட மாரியம்மன் ஆலயம் அழகு. அந்த அம்மனை வழிபடுவதால் ஆரோக்கியமாக வாழலாம் என்பது அந்நாட்டு மக்கள் நம்பிக்கையாம்!

நம் நாட்டில் பிரம்மாவிற்கு ஆலயம் கிடையாது.  இங்கு பிரம்மா ‘எரவான்’ என்ற பெயரில் கோவில் கொண்டு, பக்தர்களின் ஆசைகளையும்,  கனவுக
ளையும் நிறைவேற்றி வைக்கிறார்! இந்நாட்டினர் இவரை ‘நான்குதலை புத்தர்’ என்று கூறி, வாசனைப் பூக்களையும், பத்திகளையும் ஏற்றி வைத்து வணங்குகின்றனர். தங்கள் விருப்பம் நிறைவேறி விட்டால் இவர் எதிரில் நடனமாடி, தம் நன்றியைத் தெரிவித்துக் கொள்வார்களாம்!

இது மட்டுமா? காதல் கடவுளாக நின்று காட்சி தருகிறார் 
திருமூர்த்தி பகவான்! 
சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரும் இணைந்த இவரை வணங்கி வழிபட்டோரின் காதல் தங்கு தடையின்றி நிறைவேறி, காதலித்தவரையே கைப்பிடிக்கலாமாம்!  வியாழக்கிழமை இரவுகளில் இந்தக் கடவுள் சொர்க்கத்
திலிருந்து கீழே இறங்கி வருகிறார் என்பதால் அந்த நாளில் இவ்வாலயம் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது!சிவப்பு வண்ணப்பூக்கள், 
சிவப்பு பழம், சிவந்த மெழுகுவர்த்திகளே இவ்விறைவனுக்கு காணிக்கை! வேடிக்கையான வழிபாடு!

உலகின் மிகப் பெரிய கோவிலாகப்  போற்றப்படும் அங்கோர்வாட் என் அடுத்த விசிட்! இந்து  ஆலயமான அங்கோர்வாட் ஆலயம் பண்டைய 'காம்போஜம்' என்றழைக்கப்பட்ட கம்போடியா நாட்டிலுள்ளது. உலகின் எட்டாவது அதிசயம்' எனப் புகழப்படும் அங்கோர்வாட் ஆலயம் உயர்ந்து, நிமிர்ந்து, 
வானளாவ நின்று நம் இந்தியக் கலாசாரத்திற்கு ஒரு எடுத்துக் காட்டாக விளங்குகிறது. யுனெஸ்கோ
வினால் உலகப் பண்பாட்டுச் சின்னமாக   திகழ்கிறது.

இரண்டாம் சூர்ய வர்மனால் உருவாக்கப்பட்ட அங்கோர்வாட் ஆலயம் பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இவ்வாலயத்தைக் கட்டி முடிக்க 37 ஆண்டுகள் ஆயிற்றாம். பிரம்மாண்டமான ஆலயம். சூரிய வர்மனால் உருவாக்கப்பட்ட விஷ்ணு சிலை அவனை அடுத்து வந்த அரசன் புத்தமதத்திற்கு மாறியதால் முத்தாக மாறிவிட்டது. ஏகப்பட்ட ஆலயங்கள். சிற்பக்கலை கண்களைக் கவர்கிறது.

மலைமேலுள்ள  ஆயிரம் லிங்க நதியின் அடியில் பல சிவலிங்கங்களும் மற்ற
இறை உருவங்களும்
செதுக்கப் பட்டிருப்பது வியப்பு. மூன்று கி.மீட்டர் ஏறிச் செல்வது சற்று கடினமே. எனினும் காணவேண்டிய இடம். அங்கோர்வாட் பற்றி ஒரு தனி பதிவு போட வேண்டும்!

No comments:

Post a Comment