Monday 14 December 2020

ஆன்மிக_தரிசனம்..1

ஆன்மிக தரிசனம்(..9.12.'20)

ஆன்மீகம் என்பது ஆன்மாவைப் பற்றிய ஞானம். நம்முள் குடிகொண்டிருக்கும் ஆன்மாவை, பிறவி, பிணி, மரணம் என்ற தளைகளிலிருந்து மீட்க, நாம் நம்மை உணர்ந்து  இறைவனோடு சேரும் வழியாகும்.பெரியோர்களால் அதற்கான பாதயாகக் காட்டப்பட்டவையே ஆலய வழிபாடு, பண்டிகைகள், பூஜைகள், ஜபங்கள், பஜனைகள் மற்றும் கதாகாலட்சேபங்கள்.

ஆன்மிகப் பயணங்கள் நமக்குள் பக்தியைப் பெருக்குவதை ஆலய தரிசனங்கள் மூலம் நன்கு அறிய முடியும். நாம் வேண்டுவதும் விரும்புவதும் நிறைவேறும்போது மனதில் இறைபக்தி அதிகரிப்பதை நம்மால் உணர முடியும். 

சிறுவயது முதலே என் பெற்றோர் எங்களைப் பல ஆலயங்களுக்கு அழைத்துச் செல்வதுண்டு. பக்தியை எனக்குள் உருவாக்கிய என் பெற்றோருக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். சுவாமிமலை சுவாமி நாதஸ்வாமி என் பிறந்தவீடு, புகுந்த வீடு இரண்டிற்கும் குலதெய்வம் என்பதால் வருடம் தோறும் செல்வோம். 

சென்னையில் பெற்றோருடன் இருந்தபோது வடபழனி முருகனையும், மயிலை கபாலி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருவேற்காடுகருமாரியம்மன், மாங்காடு காமாட்சி,கந்தசாமி கோயில் மற்றும் பல ஆலயங்களுக்கு அடிக்கடி செல்வோம்.

திருப்பதிக்கு செல்வது கடினமாக நினைத்த காலங்கள் அவை. 1971ல் முதன்முதலாக திருப்பதி தரிசனம். மெய்சிலிர்த்த அனுபவம்! கூட்டமில்லாததால் 2,3 முறை அற்புத தரிசனம்! அதன்பின் அடிக்கடி திருப்பதி தரிசனம்! இருமுறை நடந்து ஏறிச் சென்று கோவிந்தனை தரிசித்திருக்கிறேன்.

என் அப்பாவிற்கு அடிக்கடி வரும் மாற்றலால் கரூர், ஈரோடு, நாகர்கோவில், வேலூர், திருவண்ணாமலை கன்யாகுமரி, ஸ்ரீ வில்லி புத்தூர்  ஆலயங்களுக்கு  அருகிலிருந்த பல ஆலயங்களிலும் சென்று தரிசிக்கும் வாய்ப்பு.

தஞ்சை பெரிய கோவிலுக்கு பல முறைகள் சென்றாலும் இன்னும் பிரமிப்புதான். அங்கு பிரகதீஸ்வரர் சன்னிதியில் சுற்றுப் பிரகாரத்தில் உள்ளே ராஜராஜசோழனால் செதுக்கப்பட்ட 64 நடன தோற்றங்கள் காணக்கிடைக்காத பொக்கிஷம். அவற்றில் கடைசி சில தோற்றங்கள் முற்றுப் பெறவில்லை. இதனைக் காண சிறப்பு அனுமதி பெற வேண்டும்.

கோபுரத்திலுள்ள ஆங்கிலேயனின் வடிவம் நம் நாட்டில் ஆங்கிலேய ஆட்சி வருமென்பதை ஆயிரம் வருடங்களுக்கு முன்பே எடுத்துக் கூறுவது வியப்பான விஷயம்.

கடவுள் நம்பிக்கையும் பக்தியும் நிறைந்த என் கணவருடன் திருமணத்திற்கு பின் தரிசித்த ஆலயங்கள் பல! என் கணவருக்கு மாயக்கண்ணன் பிறந்த மதுராவுக்கு மாற்றல்!மதுராவில் கண்ணன் ஆலயங்கள் அத்தனையும் அதிஅற்புதம்! 

ஆஹா..கண்ணனிடம் பக்தியும் காதலும் கொண்ட என் சந்தோஷத்துக்கு அளவேது! நினைத்தால் பிருந்தாவன பிரவேசம்! அங்குள்ள ஒவ்வொரு ஆலயத்திலும் காட்சி தரும் ராதாகிருஷ்ணனின் அழகைக் காண இரு கண்கள் போதாது.

எங்கள் முதல் திருமண நாளன்று காசியில் இருந்தோம். என் கணவரின் 85  வயது தாத்தா தன்னை காசிக்கு அழைத்துப் போக விரும்பினார். 

எனக்கும் மாமனார் இல்லாததால் நாங்களும் பித்ருகாரியம் செய்யலாமென்பதால் முதல் வருடம் எங்கள் திருமண நாளன்று, தனியாக காசியாத்திரை சென்றவர் என்னையும் அழைத்துச் சென்றார். அலகாபாத் கயா எல்லாம் சென்று தரிசித்தோம். கங்கையின் அழகில் மெய்மறந்தேன் நான்! 

அத்துடன் அருகில் டில்லியில் உத்தரசுவாமிமலை, ராஜஸ்தான் புஷ்கர் பிரம்மா கோயில், ஹரித்வார் ரிஷிகேஷ் தரிசனம்.

மீண்டும் தமிழ்நாட்டுக்கு மாறிவந்தபோது மதுரைவாசம்.நினைத்த நேரம் மீனாக்ஷி அம்மன் தரிசனம். ராமேஸ்வரம், குருவாயூர், திருவனந்தபுரம், மருதமலை, திருத்தணி, காளஹஸ்தி, காஞ்சி, மகாபலிபுரம் என்று  புகழ் பெற்ற பாடல் பெற்ற பல ஆலய தரிசனங்கள். 

அடுத்து மகாராஷ்டிராவில் கோலாப்பூருக்கு மாற்றல். மகாலக்ஷ்மியை மனமார அடிக்கடி தரிசித்தேன்! பின் மும்பை வாசம். மும்பையின் மகாலக்ஷ்மி, மும்பாதேவி, சித்திவிநாயகர், பாபுல்நாத் போன்ற  பெரும்பாலான ஆலயங்களை தரிசித்தோம். மேலும் சீரடி, பூனா, நாக்பூர், நாசிக், கோவாவின் சிறப்பான ஆலயங்கள், அஷ்டவிநாயகர் ஆலயங்களை தரிசித்தது மனதை மிகவும் மகிழ்வித்தது. 

புவனேஸ்வரில் என் மகன் படித்தபோது அங்குள்ள கட்டிடக் கலை சிறப்பு மிக்க ஆலயங்களான பூரி,  கொனாரக்  இவை கண்கவர் அழகுச்சிலைகளுடன் காட்சி தரும் ஆலயங்கள். 

சண்டிகரில் இருந்தபோது அருகிலிருந்த குருக்ஷேத்திர தரிசனம் மறக்க முடியாதது. அங்கு பாரதப்போர் நடந்த இடமும் பகவத்கீதை உபதேசித்த இடமும் தரிசித்து மனம் சிலிர்த்தேன். 

அமிர்தசரஸில் தகதகக்கும் பொற்கோயில் கண்களை அகற்ற முடியாத அழகு. மனாலியில்  இடும்பா ஆலயம், மனு மற்றும் காயத்ரி தேவி ஆலயங்களை வேறிடத்தில் காண முடியாது.

பீகாரில் என் பெண் இருந்தபோது அருகிலிருந்த கல்கத்தா காளி கோவில்,   சீதை பிறந்த இடமான சீதாமரி ஆலயம் தரிசித்தேன்.

சென்ற ஆண்டு திருநெல்வேலி அருகிலுள்ள நவ திருப்பதி, நவ கைலாயம், திருச்செந்தூர்,திருநெல்வேலி ஆலயங்கள் தரிசனம். 

தஞ்சை மாவட்டத்தின் பல பிரசித்தி பெற்ற ஆலயங்களை தரிசித்து விட்டேன். அறுபடை வீடு, சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்கள் தரிசனம் செய்தாயிற்று. சமீபத்தில் நவகிரக ஆலயங்கள் , சப்தஸ்தான ஆலயங்கள் தரிசித்தோம். தற்போது பாடல் பெற்ற 274 சிவாலயங்களை தரிசித்துக் கொண்டிருக்கிறோம்.

பல ஆலயங்களை தரிசித்தபோது  இவ்வாலயங்களைப் பற்றி வாரமாத இதழ்களில் எழுதினால் பலரும் பயன் பெறுவார்கள் என்றுஎன் கணவர் கூறினார். ஆலயங்களைப் பற்றி அறிந்து தரிசிக்கும் போதே அல்லாமல் சிறப்புகளையும் கேட்டு அறிந்து கொள்வேன். புகைப்படங்களும் எடுத்து கட்டுரைகளுடன் இணைத்து எழுதுவேன். 

இப்படி நான் எழுதிய ஆலயதரிசனக் கட்டுரைகள் மங்கையர் மலர், பக்தி,சக்தி, விகடன், ஞானபூமி, ஞான ஆலயம், இந்து தமிழ், பெண்மணி, சிநேகிதி போன்ற பல இதழ்களில் தொடர்ந்து பிரசுரமானது. வெளிநாடு

களுக்கு சென்றாலும் அங்குள்ள ஆலயங்களைத்  தேடிச் சென்று தரிசித்து விட்டே வருவேன்.

வெளிநாட்டு ஆலயம் பற்றி அடுத்த பதிவில்...


No comments:

Post a Comment