Saturday, 26 December 2020

🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..23.12.'20



ஆழ்வாரும் அரங்கத்து பெருமாளே தன் மகளுக்கேற்ற மணவாளன் என எண்ணினாலும்  இது எப்படி நடக்கும் என்ற கவலையில் ஆழ்ந்தார். ஸ்ரீ ரங்கப் பெருமான் அவர் கனவில் தோன்றி...கோதையை திருவரங்கத்துத் திருமுற்றத்துக்கு அழைத்து வருக. அங்கே தக்க முறையில் அவள் கைத்தலம் பற்றுவோம்...என்று சொல்ல மன மகிழ்ச்சியுற்றார்.

ஒரு நாள் அரங்கத்துக் கோயில் பரிவாரம் அனைவரும் எம்பிரானின் சத்திரம் சாமரம் போன்ற வரிசைகளோடு வில்லிபுத்தூர் வந்து பெரியாழ்வரைப் பணிந்தனர். ஆண்டாளை அழைத்து வர அரங்கன் பணித்ததாகச் சொன்னார்கள். ஆழ்வாருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

உடன் வட பெருங் கோயில் உடையானை வணங்கி இந்த மகிழ்ச்சியான விஷயத்தை சொல்லி, ஸ்ரீரங்கம் செல்ல அவன் அனுமதி பெற்றார்.

ஆழ்வாரும் அவர் தொண்டர்களும்  ஆண்டாளை பட்டுத் திரையிட்ட பல்லக்கில் ஏற்றி மேளதாளம் முழங்க இசைக்கருவிகள் இசைத்து ...
சூடிக் கொடுத்த சுடர்க்கொடி வந்தாள்!
சுரும்பார்க் குழற்கோதை வந்தாள்!
திருப்பாவை பாடிய செல்வி வந்தாள்!
தென்னரங்கனைத் தொழும் தேசியள் வந்தாள்!
எனும் முழக்கங்களோடு அழகிய மணவாளன் திருமண்டபத்தை அடைந்தனர்.

அங்கே பாண்டிய மன்னன் வல்லபதேவன் போன்ற சீடர்களும் கோவிற் பரிவாரமும் திரண்டிருந்தனர். பல்லக்கின் திரைச்சீலையை ஆழ்வார் திறந்தார். ஆண்டாள் தட்டுச் சேலையணிந்து, பருத்த செங்கழுநீர் மாலை சூடி, சீரார் வளையொலிக்க, சிலம்புகள் சத்தமிட, அன்ன நடையிட்டு அரங்கன் பால் சென்று நின்றாள். அவனைக் காதலுடன் கண்டு அவன் அரவணை மீதேறி, அவன் கைத்தலம் பற்றி  அவனடி சேர்ந்தாள். அங்கிருந்த அனைவரும் வியக்க மறைந்து போனாள்.

திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே! திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே! பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே! பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே! ஒருநூற்று நாற்பத்தொரு மூன்றுரைத்தாள் வாழியே! உயரரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே! மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே!

வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே! ஆண்டாள் திருவடிகளே சரணம்🙏

இன்றைய நிவேதனம்..குதிரைவாலி வெஜிடபிள் பொங்கல்

No comments:

Post a Comment