Monday 14 December 2020

ஆன்மிக தரிசனம்-3

 ஆன்மிக தரிசனம்-3..(12.12.'20)

ஆயிரம் ஆலயங்களை தரிசித்தாலும் மேலும் பாடல் பெற்ற,வித்யாசமான, விசேஷமான, வரப்ரசாதியான தெய்வங்களை தரிசிக்கும் ஆவல் மட்டும் குறைவதில்லை.
அதில் கிட்டும் ஆனந்தம்...
அவ்வாலயம் பற்றிய ஆச்சரியம்..
அங்கெல்லாம் போக முடியுமா என்ற ஆதங்கம்...
அந்த தரிசனம் கிட்டியதும் கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவேது!

தினமும் வளர்ந்து கொண்டிருக்கும் தஞ்சாவூர் நந்தி...
எப்பொழுதும் சிவன் சன்னிதியில்நீர் சுரக்கும் திருவானைக்காவல்...
அன்னை முகத்தில் வியர்வை முத்துக்கள் காணப்படும் புன்னைநல்லூர் முத்துமாரியம்மன்..
இவை போன்று மும்பை தஹானு என்ற இடத்திலுள்ள சந்தோஷி மாதா ஆலயத்தில் அன்னையின் வலக்கை மேலிருந்து குங்குமம் வருவது அதிசயமாக இருந்தது.

ஆந்திராவில் மங்களகிரி மலையில் அருள் செய்யும் நரசிம்மரிடம் நம் வேண்டுதல் நிறைவேற பானகம் வாங்கிக் கொடுக்க வேண்டும். அதை அர்ச்சகர் வாயில் விடும்போது
'களக்' என்று சத்தம் வருகிறது. அது நின்றவுடன் பானகம் விடுவதை நிறுத்தி மீதியை நமக்கு பிரசாதமாகக் கொடுப்பார்கள். அத்தனை பேரும் கொடுக்கும் பானகம் அப்பெருமான் வாயில் விடப்பட்டும் ஒரு ஈ எறும்பு கூட அங்கு காணப்படாதது இறையருளன்றோ!

திவ்யதேசங்களில் 89வதாகவும், பரமபதத்தின் எல்லை எனப்படுவதும், பாண்டி நாட்டு  நவ திருப்பதிகளில் ஐந்தாவதாக வரும் விளங்கும் ஆழ்வார்திருநகரியில் பிறந்தவர் சடகோபன் என்கிற நம்மாழ்வார். அவர் பிறந்தது முதல் அசையாமல் இருந்தபோது அவர் பெற்றோர் அங்கிருந்த பெருமாள் கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். அவர் ஓடிச்சென்று அங்கிருந்த உறங்காபுளி மரத்தின் கீழ் அமர்ந்து விட்டார்.

16 ஆண்டுகள் உணவின்றி பேசாமல் இருந்தவர் மதுரகவியாழ்வார் வந்து பேசியதும் பதில் கூறினார்.
அவரை நம்மாழ்வார் என்று கூறி மதுரகவி ஆழ்வார் அவரை குருவாக ஏற்றதால் அது குருஸ்தலமாகிற்று.

நம்மாழ்வார் 35வயதில் உயிர் நீத்த பின் அம்மரத்தடியில் புதைத்து ஆலயம் உருவாகியது. 5000 வருடத்துக்கு முந்திய மரம் 7 கிளைகளோடு மிக அழகாகக் காட்சியளிக்கிறது. அதைப் பார்த்தபோது மெய்
சிலிர்த்தது.பெருமாளின் மண்டபத்தை விட நம்மாழ்
வாரின் மண்டபம் சற்று பெரியது. நான் தரிசித்து பிரமித்த ஆலயம் இது!

சபரிமலை...ஐயப்பனை தரிசிக்க அத்தனை ஆவல்..ஆசை. ஆனால் அங்கு போக முடியுமா என்ற நம்பிக்கை மிகக் குறைவாகவே இருந்தாலும்..ஐயப்பா எனக்கு உன் தரிசனம் தரமாட்டியா?..
என்று வேண்டினேன்.

திடீரென்று ஒருநாள் என் தம்பி ஃபோன் செய்து தான் நண்பருடன் சபரிமலை போவதாகவும் எங்களையும் வரும்படி கேட்டான். ஆஹா..
எப்படிப்பட்ட வாய்ப்பு. விரதமில்லாததால் 18படி ஏற முடியாது. சுற்றிச் சென்று தரிசிக்கலாம் என்றான் என் தம்பி.

தமிழ் மாதங்களின் முதல் ஐந்து நாட்கள் ஐயன் சந்நிதி திறந்திருக்கும் என்பதால் நாங்கள் ஆவணி மாதம் சென்றோம். நல்ல கூட்டம். பம்பையிலிருந்து மேலே செல்ல 41/2 மணி நேரமாயிற்று. மாலை 5மணிக்கு மேலே சென்றோம். சன்னதிக்கு முன்னால் இருமுடி கட்டியவர்கள் வரிசையைப் பார்த்தாலே எப்ப தரிசனம் கிடைக்குமோ என்ற பயம் வந்து விட்டது. தங்குவதற்கு அறைகளும் கிடைக்கவில்லை.
என்ன செய்வது? இரவு முழுதும்  விழித்திருந்து விடிகாலை தரிசனம் முடித்து திரும்பலாம் என் எண்ணினோம்.

திடீரென்று ஒரே பரபரப்பு. 18படிகளை சுத்தம் செய்த பின்பே மாலை அணிந்தவர்
களுக்கு தரிசனம் என்றதும் அனைவரும் வரிசையில் அமர்ந்து விட்டனர். நாங்கள் தரிசனம் செய்ய மட்டுமே சென்றதால் வேகமாகச் சென்று தரிசன வரிசையில் நின்றோம். அங்கு அதிக கூட்டமில்லாததால் அரை மணிக்குள் தரிசனம். ஐயன் ஐயப்பனை சன்னிதி முன் நின்று நிதானமாக தரிசித்தோம். கூட்டம் இல்லாததால் இன்னொரு முறையும் தரிசனம். ஐயப்பனின் சிரிக்கும் கண்களும் குவிந்த வாயும் என்னிடம் ..இப்ப சந்தோஷமா... என்பது போல இருந்தது! நான் காண்பது நிஜமா கனவா என்று தோன்றியது. இன்னமும் என் கண்களுக்குள் தெரிகிறது அந்த சபரிவாசனின் தரிசனம்🙏

திரும்ப வரும்போது பெண்களின் சபரிமலை எனப்படும் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் ஆலயம், மன்னார்சாலை நாகராஜா ஆலயங்களை தரிசித்து வந்தோம்.

சென்ற ஆண்டு  திட்டமிடாமல் திடீரென்று சென்றது சார்தாம் யாத்திரை.நாங்கள் சென்றது அக்டோபரில் கடைசி ட்ரிப் என்பதால் சற்று பயந்தபடியே சென்றோம். ஆனால் இறைவனருளால் அனைத்து தரிசனங்களும் மிக அற்புதமாகக் கிடைத்தது.
பத்ரியில் சஹஸ்ரநாம தரிசனம், கேதாரேஸ்வரருக்கு நாங்களே செய்த அபிஷேகம் மற்றும் ஹரித்வார், ரிஷிகேஷ் என எல்லா இடங்களிலும் நல்ல தரிசனம்.
கேதார்,பத்ரி பற்றி நான் மத்யமரில் எழுதியவை..
https://www.facebook.com/groups/Madhyamar/permalink/1223278714526607/
பத்ரி பற்றி...
https://www.facebook.com/groups/Madhyamar/permalink/1214274642093681/

ஹைதராபாத் சென்றபோது நான் கண்டு ரசித்த ஆன்மிக அருங்காட்சியகம் சுரேந்திர புரி. யதுகிரி பஞ்ச நரசிம்மர் ஆலயத்திற்கு அருகிலுள்ள சுவாரசியமான அனைவரும் சென்று கண்டு ரசிக்க வேண்டிய இடம்.புராண இதிகாசங்களைப் பற்றி,
அத்தனை கடவுளின் சரித்திரமும், லீலைகளும், நேரில் பார்ப்பது போல் தத்ரூபமாக அறிந்து கொள்ளும் ஒரு அற்புத
ஆன்மிகக் களஞ்சியம்! பாரதத்தின் அத்தனை ஆலயங்களின் மாதிரியும் அங்கே உள்ளது.
அதற்கான லிங்க்..
https://www.facebook.com/groups/Madhyamar/permalink/1321026784751799/

இத்தனை ஆலயங்களை தரிசித்தும் இன்னும் தரிசிக்க வேண்டிய ஆலயங்களாக நான் விரும்புவது காஷ்மீரிலுள்ள வைஷ்ணோ தேவியும், நேபாளில் முக்தி நாத்தும். இறையருள் இருந்தால் அந்த ஆசை நிறைவேறும் என்று நம்பிக்கை உண்டு.

No comments:

Post a Comment