Monday 9 November 2020

பரீட்சைக்கு நேரமாச்சு Sunday_special..30.10.'20

 'பரீட்சைக்கு நேரமாச்சு' என்ற தலைப்பைக் கேட்டதும் என் நினைவுக்கு வந்தது சிவாஜி நடித்த திரைப்படம்தான். அதில் பரீட்சை எழுதச் செல்லும்  Y.G.மகேந்திரன் நடித்த வரதுக்குட்டியின் மரணம் என் மனதை வெகுநாள் பாதித்தது.

நான் எப்பவுமே பள்ளி செல்ல அடம் பிடித்ததோ அழுததோ கிடையாது. முதல் வகுப்பு படிக்காமலே இரண்டாம் வகுப்பிற்கு தாவியவள்!
சென்னையில்தான் என் பள்ளிப் படிப்பு முழுவதும்.  வகுப்பிலும் முதல் ரேங்க்கை பெரும்பாலும் தவறவிட்டதில்லை. அப்பொழு
தெல்லாம் 11ம் வகுப்பு S.S.L.C. அதன்பின்பு P.U.C..பின்புதான் பட்டப்படிப்பு.

நான் 11ம் வகுப்பில் இருந்தபோது வங்கிப் பணியில் இருந்த என் அப்பாவுக்கு ஆஃபீஸராக பதவி உயர்வு கிடைத்தது. சாதாரணமாக ஏப்ரல், மே மாதங்களில் transfer வரும்.என் அப்பாவுக்கு அக்டோபர்
மாதம் பதவி உயர்வுடன் ஈரோடு சென்று உடன் பதவி ஏற்க வேண்டும். என் அம்மா தனியாக எங்கும் செல்ல மாட்டார். அப்பாதான் வீட்டு வரவு செலவெல்லாம் கவனிப்பதால் அம்மா சென்னையில் தனியாக இருக்க பயப்பட்டார்.

நாங்கள் நான்கு குழந்தைகள் படித்துக் கொண்டிருந்தோம். என் தம்பிகள் சிறிய வகுப்புகளில் படித்ததால் அவர்களுக்கு பள்ளியில் இடம் கிடைத்து விடும்.நான் S.S.L.C என்பதால் எப்படி வேறு பள்ளி சென்று படிப்பது என்றெல்லாம் கவலை.

என் அப்பா ஈரோடு சென்று அங்கிருந்த பள்ளிகளில் விசாரித்தபோது கலைமகள் கல்வி நிலையம் மிக நல்ல பள்ளி என்று தெரிந்தது. அப்பள்ளி 11ம் வகுப்பில் ஒவ்வொரு வருடமும் 100 % தேர்ச்சி பெறும் பள்ளி என்றும் அங்கு அட்மிஷன்  கிடைப்பது மிகவும் கடினம் என்றும் சொன்னார்களாம்.

தன் பெண்ணுக்கு அங்கு அட்மிஷன் கிடைக்கும் என்பதில் என் அப்பாவுக்கு 100% நம்பிக்கை!அங்கு எனக்கு அட்மிஷன் கிடைக்குமா என்று கேட்க, அவர்கள் பள்ளியில் வைக்கும் பரீட்சையில் தேறினால் மட்டுமே சேர்த்துக் கொள்வோம் என்று சொல்லி விட்டார்களாம்.

சென்னை வந்த என் அப்பா விபரம் சொல்ல, என் அம்மா என்னை நன்றாக எழுதி அட்மிஷன் வாங்கும்படி அறிவுரை சொல்லி அனுப்ப, நாங்கள் ஈரோடு சென்றோம்.

அப்பொழுதெல்லாம் 10,11ம் வகுப்புகளில் Electives என்று ஒரு subject  எடுக்க வேண்டும். நான் Chemistry எடுத்திருந்தேன். எனக்கு தமிழ்,ஆங்கிலம்,
Chemistryயில் பரீட்சை வைத்தார்கள்.  நல்லவேளை கணக்கில் பரீட்சை இல்லை! எனக்கு பிடிக்காத, வராத பாடம் கணக்கு! எப்படியோ மனப்பாடம் செய்து கணக்கில் 80 மார்க் வாங்கி விடுவேன்!

நான் என் வாழ்க்கையிலேயே மிகவும் பயந்து தேற வேண்டுமே என்று கடவுளை வேண்டியது அந்த பரீட்சைக்கு மட்டுமே! அன்றைய நிலையில் அப்பாவை விட்டுத் தனியாக இல்லாமல் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும், அதற்கு நான் கண்டிப்பாக பாஸ் ஆகவேண்டுமே என்ற கவலை ஒன்றுதான்.

அங்கிருந்த ஆசிரியைகள் என் கையெழுத்தைப் பார்த்து மிகவும் பாராட்டினார்கள். எனக்கு அந்த சிறந்த பள்ளியில் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. மிகக் கட்டுப்பாடான பள்ளி. காலை 7 மணிக்கு ஸ்பெஷல் கிளாஸ்.பின்பு மாலை 6 மணிவரை பள்ளி வாசம்! ஒவ்வொரு கேள்விக்கும் எப்படி பதில் எழுத வேண்டும் என்று ஆசிரியைகள் சொல்லிக் கொடுப்பது மனதில் அப்படியே பதிந்து விடும். இறுதித் தேர்வில் 80% வாங்கி தேர்ச்சி பெற்றேன்.  கல்லூரிப் படிப்பிற்கு என் பெற்றோர் அனுமதிக்காதது எனக்கு மிகவும் வருத்தம்.

என் முதல் இரண்டு பிள்ளைக
ளும் எந்தக் கவலையும் படாமல் பரீட்சைக்கு செல்வது எனக்கு ஆச்சரியமான விஷயம்!
பெரியவனிடம்..எப்படி பரீட்சை எழுதினாய்?..என்றால்,..பரீட்சை முடிந்து விட்டது. இனி என்ன செய்வது?..என்று கூலாக சொல்லி விடுவான். +2வில்
மாநில மூன்றாமிடமும், மாவட்ட முதலிடமும் பெறறவ, பிலானியில் B.E. படித்து, ஜெர்மனியில் MS, Ph.Dமுடித்து, இப்பொழுது பெர்லின் யூனிவர்சிடியில்  Professorஆக பணி புரிகிறான்.

இரண்டாமவன் +2 பரீட்சை சமயம் உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தது. அவனோ கிரிக்கெட் பார்த்துக் கொண்டே படிப்பான். எனக்கோ ஒரே டென்ஷன். எப்படி மார்க் வாங்குவானோ என்று பயந்தேன். ..ஏன் கவலைப்படுகிறாய்? நான் நல்ல மார்க் வாங்குவேன்..என்றான்.  Commerce எடுத்து +2வில் தமிழக முதல் மாணவனாக வந்து அன்றைய முதல்வர் திரு கருணாநிதி கையால் பரிசும், KKR பாமாயில் கம்பெனியார் கொடுத்த மாருதி800 காரும் பரிசாகப் பெற்றான்.

'நான் கிரிக்கெட் பார்க்கிறேன். மார்க் வராது என்றாயே. அவர்கள் மாதிரி எனக்கும் கார் பரிசு கிடைத்தது பார்' என்றான் என்னிடம். இதைக் கேட்ட என் மனம் ஈன்ற பொழுதின் பெரிதுவந்ததை எப்படி சொல்வேன்! XIMB புவனேஸ்வரில் M.B.A படித்து இன்று Education Consultant ஆக இருக்கிறான்.

என் மகள் 2 வயதிலிருந்து என் பிள்ளைகள் பள்ளி செல்லும்
போது தானும் பள்ளிக்கு செல்வேன் என்று அழுது அடம் பண்ணுவாள். அவள் ஏழாம் வகுப்பு படிக்கும்போது என் கணவருக்கு ஈரோடு மாற்றலாக அவளும் பத்தாம் வகுப்பு வரை நான் படித்த கலைமகள் பள்ளியில் படித்தாள். 'பரீட்சைக்கு நேரமாச்சு கிளம்பு' என்று சொல்லும்வரை படித்து என் விருப்பம் போல மருத்துவர் ஆனாள்!

கடைக்குட்டி பிள்ளைக்கு பள்ளி செல்வதும், பாடம் படிப்பதும், பரீட்சை எழுதுவதும் சிறிதும் பிடிக்காத செயல். தமிழில் எப்பவும் ஃபெயில் மார்க்! எப்படி பாஸ் பண்ணி மேலே படிப்பானோ என்று எங்களுக்கு ஒரே கவலை. கணிதம் கரும்பு என்றால், கம்ப்யூட்டரோ கல்கண்டு அவனுக்கு! மற்ற பாடங்களில் பாஸ் மார்க் வாங்கினாலும் இவற்றில் 100 மார்க் வாங்கி விடுவான். இப்படி படித்தவன் +2வில் 95% எடுத்து பாஸ் செய்தது எப்படி என்பது எங்களுக்கு இன்றும் புரியாத விஷயம்!  மும்பை IITயில் M.Tech முடித்து இன்று லண்டனில் பணிபுரிகிறான். 

அன்று பரீட்சைக்கு நேரமாச்சு என்று பள்ளிக்கு அவசர அவசரமாக அனுப்பினோம்!இன்றோ நம் வீட்டுக் குழந்தைகளை 'பரீட்சைக்கு நேரமாச்சு' என்று சொல்லி வீட்டிலேயே கம்ப்யூட்டரில் எழுதச் சொல்கிறோம். இது புதிய அனுபவம்.

என் பெரிய பேத்தி எட்டாம் வகுப்பு. அவள் onlineல் பரீட்சை எழுதியதைப் பார்த்தேன். கம்ப்யூட்டர் திரையில் கேள்வித்தாள் தெரிய, இவள் பதில் எழுதும் தாளை காமிரா முன் வைத்து எழுதினாள். 'உலகம் உள்ளங்கையில்' என்பது உண்மைதானே!

என் சின்ன பேத்தி இரண்டாம் வகுப்பு. தினமும் அவளை எழுப்பி கம்ப்யூட்டர், Earphone எல்லாம் சரி பண்ணி படிக்க சொல்வது வித்யாசமான விஷயம்!  முதல் period முடிந்ததும் வெளியே வந்து ஏதாவது சாப்பிடுவதும் குடிப்பதும் அவளுக்கு ஜாலியாக இருக்காம்! 'நான் இப்படியே எப்பவும் படிக்கிறேன். ஸ்கூல் எதற்குப் போகணும்?' என்பாள்.நாம் நினைத்தும் பார்க்காத இந்த நிலைமைக்கு காரணம் யாரறிவார்? நம்மை எந்தப் பரீட்சைக்கு தயார் செய்கிறாரோ அந்தக் கடவுள்?

பள்ளியில் எழுதுவது மட்டுமா பரீட்சை? நம் அன்றாட வாழ்க்கையில் செய்யும் ஒவ்வொரு செயலும் நமக்கு பரீட்சைதான்.  ஒரு சின்னக் குழந்தை குப்புறத்திக் கொள்வதோ...காலையில் வாசலில் போடும் புள்ளிக் கோலமோ...அலுவலகத்தில்
மிக முக்கிய பணியோ..
அனைத்துமே பரீட்சைதான்!

இந்த உலகமே ஒரு பள்ளிதான்..ஈசனே இவ்வுலகை நடத்தும் ஆசிரியர்..பள்ளியில் 'பரீட்சைக்கு நேரமாச்சு' என்று பரபரக்கும் நாம், வாழ்க்கை என்று முடியுமோ, அதற்குள் அந்த இறைவனைப் பாடிப் பணிந்து அவனை அடைய பக்தி செய்வோம் என்று நினைப்பதில்லை. நாம் பிறந்தது முதல் இறப்பதுவரை அவன் வைக்கும் பரீட்சைகள்தான் நம் இன்பதுன்பங்கள். எவ்வளவு கடினமான பரீட்சையிலும் நம் வாழ்க்கையை இறை அருளுடன் நடத்தி , பக்தி செய்து முக்தியைப் பெறுவோம்🙏🏼

No comments:

Post a Comment