Tuesday 24 November 2020

தீபாவளி நினைவுகள்..13.11.2020.

தீபாவளி_நினைவுகள்


தீபாவளி என்றதும் நினைவுக்கு வருவது புத்தாடை👗, இனிப்பு🥣, பட்டாசு💈 இவையே! நரகாசுரனின் வேண்டுதலில் நாம் என்ஜாய்💃🕺செய்கிறோம்!


என்றும் நினைவில் நிற்கும் இனிய தீபாவளி...☺️

சிறு வயதில் பெற்றோர் வாங்கித் தரும் உடைகளே. இந்தக் காலம் போல கடைக்குப் போய் நமக்கு பிடித்ததை நாம் வாங்கிக் கொள்வதெல்லாம் கிடையாதே! பிடிக்குமோ பிடிக்காதோ அதைத்தான் உடுத்திக் கொள்வோம். கவுனோ பாவாடை சட்டையோ...இதான் அந்நாளைய உடை! 


விடிகாலை எழுந்து முதலில் நாம்தான் பட்டாசு வெடித்து ஊரை எழுப்ப வேண்டும் என்ற ஆவலில் என் தம்பிகள் தூங்கவே மாட்டார்கள்! அக்கம் பக்கம் எல்லோரும் தீபாவளி கொண்டாடி சாப்பிட்டு 11 மணிக்கு தெருவே காலியாகிவிடும். என் தம்பிகள் வெடிக்காத வெடி, வாணம், சக்கரம் இவற்றை எடுத்து அதிலிருந்து மருந்தைக் கொட்டி அதை புஸ்வாணமாக எரியவிட்டு அடையும் சந்தோஷம் இருக்கே..

அது அலாதியானது😅அன்று நூறு ரூபாய்க்கு நாங்கள் நான்கு பேர் வெடித்த பட்டாசு இன்று ஆயிரம் ரூபாய்க்கு கிடைப்ப

தில்லை.


அம்மா மூன்று நாட்கள் முன்பே ஆரம்பித்து நாலைந்து ஸ்வீட், காரங்கள், மருந்து எல்லாம் செய்வார். அன்று அ.ஆ.பவன், Grand sweets, கங்கா பவன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ், திருநெல்வேலி அல்வா என்று அத்தனை கடை பட்சணங்களின் சுவையும் அருமை அம்மாவின் கைபக்குவத்திலேயே கிடைக்கும்! என் அம்மா செய்யும் மைசூர் பாகின் சுவை இன்னமும் நாவில் ருசிக்கிறது. அந்தக் காலம் பொற்காலம்!


திருமணமானதும் எங்கள் தலைதீபாவளி மறக்க முடியாதது.நாங்கள் இருந்தது திருச்சி. என் பிறந்தவீடு முக்கால் மணி நேரப் பயணத்தில் முசிறி. தீபாவளிக்கு முதல்நாள் கை நிறைய பட்டாசுகளுடன்..(ஸ்வீட், ட்ரெஸ், தீபாவளி கிஃப்டாக வாட்ச், செயினெல்லாம் எங்க வீட்டு உபயமாச்சே😄) எங்கள் வீட்டுக்கு சென்றோம். பட்டாசு வெடித்து அத்திம்பேரை வரவேற்றார்கள் என் தம்பிகள்! 


என் கணவர் மச்சினன்களுடன் வெடிக்க அந்த வருடம் புதிதாக வந்திருந்த ராக்கெட்,ஏரோப்ளேன், 

ஆட்டம்பாம்,  வெடி எல்லாம் வாங்கி வந்திருந்தார். 


அன்று இரவு ராக்கெட் வைக்க பாட்டிலெல்லாம் ரெடி செய்து கொண்டு வெடிக்க ஆரம்பித்

தார்கள். அந்த நாட்களிலெல்லாம் தீபாவளிக்கு முதல்நாள் இரவும் வெடிக்கும் வழக்கம் உண்டு. இப்பொழுது வெடிப்பதே குறைந்து விட்டதே!  


எங்கள் வீட்டில் நிறைய பட்டாசு இருப்பதைப் பார்த்து பக்கத்து வீடு, எதிர்த்த வீட்டில் இருந்த என் தம்பிகளின் நண்பர்களும் சேர்ந்து கொள்ள, ஆளுக்கு ஒரு பாட்டிலில் ராக்கெட்டை வைத்து, சற்று இடைவெளி விட்டு நின்று , சேர்ந்து பற்றவைத்தார்கள். ஒவ்வொன்று ஒவ்வொரு திசையில் போக, அதிக உயரம் செல்லாத ராக்கெட் ஒன்று நேராக எங்கள் வீட்டு எதிரில் இருந்த தோட்டத்தில் போய் விழுந்து, பெரிதாக எரிய ஆரம்பித்து விட்டது. வெளியில் இருந்த முள்வேலி காய்ந்து இருந்ததால் நிமிடத்தில் நெருப்பு சரசரவென்று பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது.


முள்வேலியைத் தாண்டிச் செல்ல தயங்கியபடி  எல்லோரும் விலகி நிற்க, என் கணவர் சட்டென்று பக்கெட்டில் தண்ணீரை எடுத்துக் கொண்டு ஓடிப்போய் வேலியைத் தாண்டிச் சென்று நெருப்பில் கொட்டினார். என் அப்பா, பக்கத்து வீட்டுக்காரர்களும் ஆளுக்கொரு வாளியில் தண்ணீர் கொண்டுவந்து தர, அத்தனை வாளித் தண்ணீரும் கொட்டிய பின் கிட்டத்தட்ட அரைமணி நேரத்துக்கு பிறகே நெருப்பு அணைந்தது. 


அவசரமாக ஓடிய என் கணவர் செருப்பு போட்டுக் கொள்ளாமல் போனதால் கால் முழுதும் வேலி கிழித்து, காலில் முள் குத்தி நடக்க முடியாமல் திண்ணையில் அமர்ந்து விட்டார்.  முழங்கால் வரை முள் கீற்றி ஒரே ரத்தம். மாப்பிள்ளைக்கு இப்படி ஆகிவிட்டதே என்று என் அப்பா மிகவும் கவலையாகி விட்டார்.


என் கணவரோ நிமிடத்தில் ஹீரோவாகி விட்டார்! தெருவில் இருந்தவர்கள் வந்து விசாரித்ததோடு ஒரே பாராட்டு! "வெறும்காலோடு போய் முள்ளைக் கூட கவனிக்காமல் தண்ணீர் கொட்டினாரே.  சமயத்தில தன்னைப் பத்தி நினைக்காம வேகமா ஓடினாரே. நல்லவேளை..கொஞ்சம் தாமதிச்சிருந்தாலும் தோட்டம் முழுக்க நெருப்பு பிடிச்சிருக்கும்" என்று ஒரே Hero worship!என்னவரை பெருமைப்படுத்திய தீபாவளியை மறக்க முடியுமா?

நினைவுகள் தொடரும்...


No comments:

Post a Comment