Saturday, 24 April 2021

வீல்..Sunday_special





Sunday_special

வீல்..

நமக்கு பயம் வரும்போது, திடுக்கிடும் நிழ்ச்சிகள் நடக்கும்போது, இருட்டு நேரத்தில் எதையாவது எதிர்பாராமல் பார்க்கும்போது நம்மை அறியாமல் வீல் என்று கத்திவிடுவோம்.


எனக்கு பத்து வயதிருக்கும். எனக்கு கரப்பான்பூச்சியைக் கண்டால் மிகவும் பயம். அதுவும் பறக்கும் கரப்பான்பூச்சி என்றால் நான் பயந்து ஓட, அது என் பக்கமே பறந்து வர நான் வீல்வீலென்று கத்துவதைக் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் வந்து விடுவார்கள்! நெஞ்சு  படபடவென்று அடித்துக் கொள்ளும். அது என்னமோ கரப்பான் பூச்சிக்கு அப்படி என்ன கோபமோ என்னிடத்தில், என்னிடம் மட்டுமே வந்து பமுறுத்தும்!! என் அம்மா, தம்பிகள் அதன் மீசையைப் பிடித்து தூக்கி எறிவார்கள்!


எங்கள் வீட்டில் அப்பொழுதுதான் டேபிள்ஃபேன் புதிதாக வாங்கியிருந்தார்கள். இரண்டு அறைகளுக்கு நடுவில் ஃபேனை Oscillationல் வைத்துவிட்டு  இரண்டு அறையிலுமாக நாங்கள் படுத்து உறங்குவோம்.


அன்று இரவு நான் படுக்க செல்லும்போது ஒரு கரப்பான்பூச்சி 'விர்'ரென்று பறந்து வந்து சரியாக என்மேல் உட்கார, நான் பதறியபடி 'வீல்' என்று கத்திக் கொண்டே ஃபேன் பக்கம் ஓட...நான் அதில் இடித்து அது கீழே விழுந்து மேலிருந்த மூடி தனியாகக் கீழே விழ...என் எண்ணம் முழுதும் கரப்பான்பூச்சி மேலேதான்! 


என் தம்பிகளோ..வாங்கி நாலு நாள் கூட ஆகல. புது ஃபேனை உடைச்சுட்டியே..என என்மேல் பாய, என் அம்மாவும் அப்பாவும்..இத்தனூண்டு கரப்பான்பூச்சி என்ன பண்ணிடும்னு இந்தப் பாடு படுத்தற..என்று கோபிக்க, அந்த கரப்பான்பூச்சி பயம் இன்னமும் அப்படியேதான்! ஆனால் இந்த சம்பவம் பற்றி நினைக்கும்போது இன்றும் அந்த பதட்டம் மனதிலேயே நிற்கிறது.


அடுத்த 'வீல்' என்னை மட்டுமன்றி என் வீட்டினரையே பயமுறுத்திய என் பேரனின் அலறல்! என் மகள் வயிற்று பேரன் எங்கள் வீட்டில் பிறந்தான். ஒருமாதம் ரொம்ப சமத்தாக இருந்தான். குளிக்கும்போது கூட அழுததில்லை. ரொம்ப சமத்து என்று எல்லோரும் சந்தோஷப் பட்டோம். ஒரு மாதத்திற்கு பின் சரியாக மாலை ஆறு மணிக்கு 'வீல்வீல்' என்று அழ ஆரம்பித்தால் அடுத்த வீட்டு மனிதர்களெல்லாம் 'என்ன ஆச்சு' என்று கேட்டு வந்து விடுவார்கள்! 


யார் கையிலும் எந்த சமாதானம் செய்தாலும் நிறுத்த மாட்டான். எதுவும் சாப்பிடவும் மாட்டான். குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கும். மூச்சு விடாமல் அரைமணி நேரம் அழுதுவிட்டு விளையாட ஆரம்பித்து விடுவான்! டாக்டரிடம் கேட்டபோது..சில குழந்தைகள் வெளி சூழ்நிலைக்கு அட்ஜஸ்ட் ஆகும்வரை அப்படி அழுவதுண்டு. கொஞ்ச நாளில் சரியாகி விடும்...என்றார். கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு அந்த 'வீல்' தொடர்ந்தது. இப்பவும் அதைச் சொல்லி நாங்கள் அவனைக் கலாய்ப்போம்!


ஙே..அனுபவம்

 



Sunday_special

'ஙே'😳😮

'ஙே'நேரங்களை யோசித்து யோசித்து ஆறு நாளாக எழுதாமல் இருந்து விட்டது நினைவு வர, 'அட..இது மறந்து போச்சே' என்று நான் 'ஙே' என்று அசடு வழிந்த நேரத்தை எழுதுகிறேன்!

சில வருடங்களுக்கு முன்பு நாங்கள் என் தம்பி குடும்பத்துடன் மகாபலேஷ்வர் சென்றிருந்தோம். அது மகாராஷ்டிராவின் மிகச் சிறந்த மலைவாசஸ்தலங்களில் ஒன்று. அங்கு நிறைய பாயிண்டுகள் உண்டு. ஒவ்வொன்றும் தனி அழகு. ஒன்று உயரமாக ஏறிச் செல்ல வேண்டும். அடுத்தது சரசரவென்று கீழே இறங்கும். ஒன்றில் மேகங்களைத் தொடலாம்..ஒன்றில் அதல பாதாளத்தை பார்த்து மகிழலாம்!

நாங்கள் சென்ற நேரம் அதிக கூட்டமில்லை. ஒரு உயரமான பாயிண்டில் ஏறிச் சென்றோம். அங்கு எவரையும் காணோம். 'இது ரொம்ப உயரத்தால் யாரும் வரமாட்டார்களோ' என்றபடி ஏறினோம். எங்கள் எதிரில் ஒரு இளவயது ஜோடி மிக நெருக்கமாக பேசிக் கொண்டு இறங்கி வந்தார்கள். அவர்களைப் பார்த்த என் தம்பியும் பிள்ளைகளும் 'ஹனிமூன் ஜோடியோ? மேல கூட்டம் இருக்குனு இறங்கி வந்து விட்டார்களோ'என்றபடி ஏதோ A கமெண்ட் அடித்தபடி வந்தார்கள்! நாங்கள் அங்கிருப்போருக்கு தமிழ் தெரியாது என்பதால் தமிழில் கிண்டல், கேலி செய்து பேசுவதுண்டு!

நாங்கள் மேலே சென்று பார்த்தபோது ஒருவரும் இல்லை. 'ஓ..யாருமில்லாத
தால்தான் அந்த ஜோடி தனியா என்ஜாய் பண்ணிட்டு போயிருக்காங்க' என்று பேசிக்கொண்டு நாங்கள் சிரிக்க...அந்த ஜோடி மேலே ஏறி வந்தார்கள்.

அந்த இளைஞன் என் தம்பியிடம்...சார் இங்க யாரும் இல்லாததால பயந்து நாங்க கீழ வந்தோம். இப்போ நீங்க வந்ததால மறுபடி வந்தோம். ரொம்ப சூப்பரா இருக்கு இந்த இடம்...என்று சொல்ல நாங்கள் அனைவரும் 'ஙே'😮😳

அச்சச்சோ..இவருக்கு தமிழ் தெரியுமோ? நாங்கள் பேசியதைக் கேட்டு என்ன நினைத்திருப்பார்களோ என்று நாங்கள் பதில் சொல்லக் கூட முடியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி ஙே என்று அசடு வழிய...நீங்க சென்னையா சார்...என்று அவர் கேட்க, சுதாரித்துக் கொண்டு பேசினோம்!

அதுமுதல்  தமிழ் தெரியாது என்று யார் முன்னாலும் எதுவும் பேசி 'ஙே' ஆகக் கூடாது என்று புரிந்து கொண்டேன்!

Tuesday, 23 March 2021

மகளிர்_தினம்(8.3.'21)


 உலக மகளிர் தினம் ( International Women's Day). ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டு உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.


உலக மகளிர் தினம் ( International Women's Day). ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டு உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வலியுறுத்துவதற்காக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

18 ம் நூற்றாண்டில் அமெரிக்காவில்  பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருந்தனர்.  பெண்களுக்கு ஆரம்ப கல்வி கூட மறுக்கப்பட்டது.

1857 ம் ஆண்டு முதல் பெண்கள் தொழிற்சாலைகள் ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தும் ஊதியம் மிகக் குறைவாகவே தந்ததால்
பெண்கள் மிகுந்த வருத்தமடைந்து, ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் வழங்கக்கோரி குரல் எழுப்பினர்.  அமெரிக்க அரசு இதற்கு செவி சாய்க்காததால் பெண் தொழிலாளர்கள் 1857ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1910ம் ஆண்டு டென்மார்க் நாட்டில் உலகின் பல நாடுகளை சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்து கொண்ட மாநாட்டில்  ஜெர்மனி கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரே செர்கினே, மார்ச் 8ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட விரும்பியும் இந்த தீர்மானம் நிறைவேறவில்லை.

1920 ல் ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா, ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.
இதையடுத்து 1921ம் ஆண்டு முதல் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடபட்டு வருகிறது. 1975ம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா பிரகடனப்படுத்தியது.
பலநாடுகளில் சர்வதேச மகளிர் தினத்துக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.

நம் வாழ்வில் பெண்களைக் கொண்டாடி, உலகிற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் நாள் இது. அதே நேரத்தில், சர்வதேச மகளிர் தினத்தின் நோக்கம் பாலின சமத்துவம்.

சமமான பகிர்வு என்பதை தாண்டி இந்த உலகில் எல்லாவற்றையும் சமத்துவமாக மாற்றுவதற்கு அனைவருக்கும் தேவையான பகிர்வை கொடுக்க வேண்டும் என்பதே இதன் பின்னணி. அந்த வகையில் இந்த உலகை நீடித்து கொண்டு செல்வதற்கு ஆண்களையும் விட அதிமாக உழைக்கும் பெண்களுக்கு மரியாதையான அன்பான வார்த்தைகளால் வாழ்த்துக்களை கூறுவோம்!

இந்த ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் கருப்பொருள் "DigitALL: பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம் ஆகும். இந்த கருப்பொருள், தொழில்நுட்பம் மற்றும் ஆன்லைன் கல்விக்கு பெண்கள் ஆற்றி வரும் பங்களிப்பை அங்கீகரித்து கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பெண்கள் தமக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது.. பெண் உரிமைகளை வலியுறுத்தும் நாள் இது …ஆணுக்குப் பெண்ணிங்கே சரிநிகர் சமானம் என்ற பாரதி வாக்கை  உண்மையாக்க மாற்றம் நம்மிடமிருந்து உருவாகட்டும்!

அனைத்து மகளிருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!

மறதி..வரமா சாபமா?

 #Sunday_special

மறதி..வரமா சாபமா?

இந்த வார மத்யமர் பதிவுக்கான தலைப்பு என்ன?? ஹி..ஹி..மறந்தே போச்சே! எத்தனையோ யோசித்தும் நினைவு வராமல் போக, சங்கர்சாரின் பதிவைத் தேடி எடுத்து பார்த்தால் அவரே பதிவு போட மறந்து மறுநாள் போட்ட தலைப்பு..மறதி!

மறதிக்கும் எனக்கும் ரொம்...ப உறவாச்சே! ஐந்து நிமிஷத்துக்கு முன்பு வைத்தது கூட அடுத்த நிமிஷம் மறந்து விடும் மறதிசிகாமணியாச்சே நான்😄 

கேஸில் பாலை வைத்துவிட்டு அடுத்த வேலைக்குப் போய் மறந்துபோய், திரும்ப வந்து தீய்ந்த பாத்திரத்தை கைவலிக்க தேய்த்த கதை நிறைய!  சிலசமயம் நினைவு வந்து ஓடிவர, மேடை முழுதும் பாலாறாக ஓடிக் கொண்டிருக்கும்! 

இப்பொழுதெல்லாம் பாலை இன்டக்ஷன் ஸ்டவ்வில் நேரம் set செய்து விடுவதால் பால் பொங்குவதில்லை! இப்பவும் அப்பப்ப காஃபிக்கு பாலை வைத்து விட்டு அது பொங்கி வழிவது சர்வசாதாரணம்!!

ஒருநாள் ஈயச் சொம்பில் ரசத்தை வைத்ததை மறந்து வேறுவேலையாகப் போய்விட்டேன். கொஞ்ச நேரத்தில் ஏதோ நாற்றம் வர ஈயச்சொம்பு பாவமாக 'என்னைக் காப்பாத்து' என்று உருகி அழுது கொண்டிருந்தது!

என்ன செய்வது..அதற்கு ஆயுள் அவ்வளவுதான்!

பலமுறை வெளியில் போகும்போது வாட்ச், பர்ஸ், மொபைல் என்று எதையாவது மறந்துவிட்டு கொஞ்சதூரம் போனதும் ஞாபகம் வர, என் கணவர் பாவம்..காரைத் திருப்பிக் கொண்டு வந்து வீட்டைத் திறந்து எடுத்துப் போவோம்!

நேரில் பார்த்துப் பழகிய நண்பர்களைக் கூட வெகுநாள் கழித்துப் பார்க்கும்போது யாரென்று யோசிக்க, அவர்களே 'என்னை தெரியலயா? நான்தான்..' என்று அவர்களே சொன்னபின்பே நினைவு வரும்!

சிலநாள் முன்பு என்னை வந்து விசாரித்த ஒருவரைப் பார்த்து நான் திருதிருவென விழிக்க, அந்தப் பெண்ணோ 'நீங்க ரெண்டு வருஷம் முன்னால எங்காத்துக்கு வந்தேளே' என்றதும் என் நினைவைக் கிண்டிக் கிளறி யாரென்று புரிந்து கொண்டு பேரைச் சொல்லவும்..பாவம் அவர் வெறுத்து விட்டார்! இதுபோல் நிறைய்....ய மறதிகள்!

என் தோழி ஒருத்தி கேஸில் ஒரு தவலையில் வெந்நீருக்கு தண்ணீரை வைத்துவிட்டு ஆஃபீஸுக்கு போய் விட்டாள். மாலை திரும்பி வந்து பார்த்தபோது பாத்திரம் தீய்ந்து கேஸும் தீர்ந்து நாறிக் கொண்டிருந்ததாம்! இதெல்லாம் மறதி சாபமான சம்பவங்கள்!

என் கணவருக்கு ஞாபகசக்தி நிறைய்..ய! அதனால் இப்போதெல்லாம் எந்த சாமானை எங்கு வைக்கிறேன் என்று அவர் காதில் போட்டு விடுவேன்! நான் கேட்கும்போது சரியாக சொல்லிவிடுவார்! 'தாயே..என்னை மட்டும் மறந்துடாதம்மா!' என்று கைகூப்பிக் கெஞ்சும்போது நானே சிரித்து விடுவேன்!

முகநூலும், கூகுளும் நாம் அவற்றில் அக்கவுண்ட் ஆரம்பித்த அன்றுமுதல் நடந்த நிகழ்வுகளை நாள் தப்பாமல் நமக்கு சொல்லிவிடுவ

தாலேயே நாம் எதை மறந்தாலும் அவற்றிலிருந்து குறிப்புகளை எடுக்க முடிவது நமக்கு வரமே!

சில இழப்புகளிலிருந்து நம்மைத் தேற்றி வெளிக் கொண்டுவர மறதி அவசியமே. மறக்க வேண்டிய விஷயங்களை மனதில் போட்டுக் குழப்பி நாம் அதிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும்போது அதை சிறிது சிறிதாக மறப்பதே நல்லது. 

நாம் வஞ்சிக்கப் பட்டாலோ, ஏமாற்றப் பட்டாலோ அந்த நினைவுகளிலிருந்து மாறி இயல்பு வாழ்க்கைக்கு வர மறதி அவசியமே!



மறதி, நம்மை கடந்த காலத்தில் இருந்து எதிர்காலத்தை நோக்கி முன்னேற உதவுகிறது. நடந்தவற்றையே நினைவில் கொண்டால்,  நிகழ்காலம் வீணாகிவிடும். இதனால் நமக்கு மறதியும் ஒரு வரம்தான். 


Saturday, 13 March 2021

மாதவம்..Sunday_special

என்னைப் பொறுத்தவரை என்னை சரியாக வழிநடத்திய  பாசமான பெற்றோர்...அன்பும் காதலும் கொண்ட நான் ஆசைப்படும் எதையும் நிறைவேற்றும் நல்ல கணவர்...அறிவான ஆதரவான சிறந்த குழந்தைகள்...என்னைப் புரிந்து கொண்டு இசைவாக நடக்கும் மருமகள்கள்..நவரத்தினங்களாய் பேரக் குழந்தைகள்...இவையே என் தவப்பயன்தான் என்று நித்தமும் அந்த இறைவனுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்🙏

நான் எழுதப் போவது என் கணவரின் சித்திப் பாட்டி அதாவது என் மாமியாரின் சொந்த சித்தி. தர்மாம்பாள் என்ற அவரை தம்முப் பாட்டி என்றுதான் நாங்கள் அழைப்போம்.அந்த நாளையப் பெண்ணான அவரது தைர்யமும் சாமர்த்தியமும் என்னை வியக்க வைத்த விஷயங்கள்! 

குடந்தையில் நாங்கள் இருந்தபோது அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து ஜாங்கிரி, முறுக்கெல்லாம் செய்து தருவார்! அவர் பட்சணம் செய்யும்போது நானும் கற்றதோடு அவரின் வாழ்க்கை பற்றியும் நிறைய தெரிந்து கொண்டேன்.

அவர்  ஒரு நூற்றாண்டிற்கு முன்பு பிறந்தவர். என் மாமியாரைவிட சில மாதங்களே பெரியவர். என் மாமியாரின் அம்மாவும், அவர் பாட்டியும் ஒரே நேரம் கர்ப்பமாயிருந்ததாகவும்,என் மாமியாரின் அம்மா மாப்பிள்ளை எதிரில் வரவே மிகவும் வெட்கப்படுவார் என்றும் சொல்வார்!

ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து 15 வயதில் திருமணம் நடந்தது. அந்தக்கால முறையில் திருமணம் நடந்தது முதலே மடிசார். வீட்டு வேலைகள் அனைத்தும் அவர் தலையில். அவர் புகுந்த வீட்டில் பட்ட கஷ்டங்களைக் கேட்டால் மனம் கலங்கிவிடும். 

மாமியாரின் கொடுமை மட்டுமல்லாது அவரது இரண்டு புக்ககத்து விதவை அத்தைகளும் படுத்திய பாட்டை கதை கதையாக சொல்லி வருத்தப் படுவார். வீட்டு வேலைகள் அத்தனையும் செய்துவிட்டு ஒருவேளை சாப்பாடு கூட சரியாகப் போடாமல் கஷ்டப் படுத்துவார்களாம். 

'உங்க ஆத்துக்காரர்ட்ட சொல்ல மாட்டேளா'ன்னு கேட்டால், 'என்னை அவர்கூட பேச விட்டால்தானே' என்பார். அவருக்கு காஃபி கொடுக்கும்போது பேசலாம்னு பார்த்தா மூன்று பெண்களும் சேர்ந்து பேச வந்து விடுவார்களாம். 

தனியாகப் பேசுவதைக் கண்டாலே..'அவனை மயக்கப் பார்க்கறியா' என்பதோடு அவர்களைத் தனியாக படுக்கவும் அனுமதிக்க மாட்டார்களாம். அவர் கணவரும் பயந்து கொண்டு அவர்கள் சொல்வதைத்தான் கேட்பாராம்.

ஏழெட்டு மாதமாகியும் கர்ப்பமாகவில்லை என்ற சாக்குடன் பிறந்த வீட்டுக்கு அனுப்பி விட, அவரின் பெற்றோர் திரும்ப சமாதானம் செய்து கொண்டுவிட, இப்படியே இரண்டு வருடங்களாக... 'உங்கள் பெண்ணுக்கு குழந்தை பிறக்காததால் நாங்கள் வேறு திருமணம் செய்யப் போகிறோம்' (அவரோடு படுத்தால்தானே எனக்கு குழந்தை பிறக்கும் என்பார்!) என்று சொல்லி மொத்தமாக திருப்பி அனுப்பிவிட, பாவம் அவர் வாழாவெட்டி என்ற பெயரோடு பிறந்தவீட்டில் இருந்த நாட்களின் கொடுமையை சொல்லும்போது என் கண்கள் கலங்கிவிடும். 

17 வயதில் ஒரு பெண் மணமாகி வாழாமலிருப்பது எத்தனை கஷ்டமான விஷயம். அதிலும் ஊராரின் ஏச்சு பேச்சு வேறு. இந்தக் காலம் போல் இன்னொரு திருமணமும் செய்ய முடியாத நிலை.

'இரண்டாவது மனைவிக்கும் குழந்தை பிறக்காவிட்டாலும், அவள் சாமர்த்தியமாக இருந்து விட்டாள். நான்தான் ஏமாளி' என்று அழுவார். பெற்றோர் காலத்துக்கு பின் உடன் பிறப்புகளுடன் அவர்களுக்கு சுமையாக இருக்க முடியாதவர் வெளியிடங்களுக்கு சென்று பட்சணம், சமையல் செய்து கொடுத்து சுயமாக சம்பாதிக்க ஆரம்பித்தாராம். 

இடையில் கணவரின் மரணம் கேட்டு அந்தக்கால முறையில் மடி செய்து விட்டார்களாம். அவருடன் வாழாவிட்டாலும் இதுதான் அவரால் நான் பெற்ற கோலம் என்பார். 

அவருக்கு 35 வயதாக இருந்தபோது இவரைப் பற்றி அறிந்த ஒருவர் 'அரசு வேலையில் இருந்த உங்கள் கணவருக்கு பென்ஷன் கிடைக்கும்' என்று சொல்ல, 'அதற்கு ஆதாரம் இல்லையே?'என்றபோது, 'இரண்டாவது மனைவிக்கு பென்ஷன் வந்து கொண்டிருந்தால் உங்களுக்கு கிடைக்காது' என்றபோது யோசித்திருக்கிறார்!

தன்னைத் திருமணம் செய்து கொண்டு ஒழுங்காக வாழ்க்கை நடத்தாததால்தானே தான் இன்று இப்படி எல்லோராலும் ஏசப்படுகிறோம் என்று நிறைய அழுதபின் ஒரு முடிவுக்கு வந்தாராம். அந்த மனிதரின் பென்ஷனை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற உறுதியுடன் தனியாக அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார். 

அவர் கணவர் ஆசிரியராயிருந்த பள்ளியில் சென்று விபரங்களை சொல்லி அவர் வேலை பற்றிய அனைத்து விஷயங்களையும் அவர்கள் கைப்பட எழுதி வாங்கிக் கொண்டு, பென்ஷன் அலுவலகத்திற்கு சென்று அந்தப் பெயரில் யாராவது பென்ஷன் வாங்குகிறார்களா என்று விசாரித்ததில்,  இல்லை என்பதை அறிந்தார். தான் அவரது மனைவி என்பதை நம்பாதவர்கள் சாட்சிகளைக் கேட்டனராம்.

தன்னிடமிருந்த திருமணப் பத்திரிகை, கணவரின் புகைப்படம் மற்றும் அவர் பள்ளியில் பெற்ற விபரங்களுடன் பலமுறை சென்றாராம். அந்நாளில் விவாகரத்து பத்திரம் இல்லாததோடு, மீண்டும் அவர் திருமணம் செய்ததற்கான சாட்சியும் இல்லாததால், இவரே அவர் வாரிசு என்பதால் பென்ஷன் அப்ரூவ் ஆகியதாம்.

அவர் ஓய்வு பெற்ற நாளிலிருந்து அரியர்ஸ் சேர்ந்துவர, பாட்டி ஒரே நாளில் பணக்காரியாகிவிட்டேன் என்பார் சிரித்துக் கொண்டே! ஆனால் அதற்காக தான் இரண்டு வருடங்கள் நடந்த நடையும், அவர்களுக்கு கொடுத்த லஞ்சமும் வீண் போகவில்லை என்று மிகப் பெருமையாக சொல்வார்!

'ஏன் பாட்டி! இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த பென்ஷனை ஏன் வாங்கினேள்?' என்றால்,'என்னைக் கடைசிவரைக் காப்பாற்றுவேன் என்று என் கைப்பிடித்தவர் தைரியமில்லாமல் அடுத்தவர் பேச்சைக் கேட்டு நடுவில் விட்டதால்தானே இந்த கஷ்டம். இன்று நான் அவர் பணத்தில் வாழ்கிறேன் என்ற நினைவே நான் பெற்ற வெற்றி. ஏதோ ஒரு விதத்தில் அவரைப் பழி வாங்கிய சந்தோஷம்' என்றபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 

வெறும் மூன்றாவது வரை படித்தவர் தனியாக,தைரியமாக இத்தனை விபரங்களை சேகரித்து மாதாமாதம் பென்ஷன் வாங்கியது எவ்வளவு பெரிய விஷயம். அந்த நாளில் இப்படிப்பட்ட பெண்களைக் காண்பதே அபூர்வம்தானே? எண்பது வயதுவரை வாழ்ந்து அவர் மறைந்த விஷயம் என் மனதை மிகவும் பாதித்தது.

என்னைப் பொறுத்தவரை இவர் கணவனோடு வாழ 'மாதவம்' செய்யாவிட்டாலும், தன் திறமையால் அவரால் கிடைத்த பணத்துடன் வாழ்ந்தது 'மா தவம்'தானே!

ராதாபாலு


Saturday, 6 March 2021

Second Innings(28.2.'21)




#Sunday_special

இந்தத் தலைப்பை பார்த்ததும் நான் யோசித்தது..இது எத்தனையாவது இன்னிங்ஸ்?..என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு பருவமும் ஒரு இன்னிங்க்ஸ்தான்! ஒன்றில் பந்தாக..அடுத்ததில் பேட்( bat)டாக..மற்றொன்றில் ஆடுபவராக..இன்னொன்றில் மைதானமாக! இறுதியில் ஆட்டம் முடிந்து வெற்றியா தோல்வியா என்பதை தீர்மானிப்பவன் அந்த இறைவன்தான். ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா..!

பிறந்து 15 வயதுவரை சீரும் சிறப்புமாக வளர்க்கப் படுகிறோம். நம் ஆசைகள் மறுக்கப் படுவதில்லை. கேட்குமுன்பு எல்லாம் கிடைக்கும்.பெற்றோர் ஆலோசனைபடி படித்து முடித்து ஓரளவு உலகம் பற்றி அறிந்து கொள்கிறோம். எனினும் சரியான புரிதல் கிடைப்பதில்லை.

30வயது வரை..அடுத்து மேலே என்னபடிப்பது..என் வேலைக்குச் செல்வது..நாம் ஒரு முடிவெடுக்க பார்த்தவர் பழகுபவர் அவரவர் அனுபவம் கூற, எதிலும் குழம்பிப் போகாமல் நம் வாழ்வை தீர்மானிக்கும் பருவம் இதுதான். இங்குதான் நம் ஆசைகள் பந்து போல் அடிபடுகிறது! நம் ஆசைப்படியா..பெற்றோர் விருப்பப்படியா என்ற மன வேற்றுமைகள். ஆசை முறையானபடி நிறைவேறுபவர்கள் வெல்கிறார்கள்.

அடுத்தது வாழ்வில் முக்யமான திருமணகாலம். அதிலும் காதல் மோதல் என்று பல நிலைகள். திருமணங்கள் யாரால் நிச்சயிக்கப் பட்டாலும் விட்டுக் கொடுத்து வாழ்பவர்கள் வெற்றி பெற்றவர்கள்! மனதில் திருப்தி இல்லாவிட்டாலும் வாழக் கிடைத்த வழி என்று ஏற்றுக் கொள்கிறோம். 

40-50 வயது வரை..அடுத்தபடி குழந்தைகள்..குடும்பம் பெருக  குழந்தைகள் பெரியவர்களாகி அவர்கள் விருப்பங்கள் சில நமக்கு சரியெனத் தோன்றும்..பலதில் விருப்பம் இருக்காது. தலைமுறை இடைவெளியால் நம் பேச்சுக்கு மதிப்பில்லாமல் போகும் நிலை. எல்லாரிடமும் மனம் வேறுபட்டு..போதுமடா வாழ்க்கை..என்ற எண்ணம் வலுத்து ஆட்டத்திலிருந்து விலகி விடுகிறோம்!

50க்கு மேல்..இது வாழ்வின் இறுதிக் கட்டம். வேலையில் ஓய்வு.. வியாதிகளின் ஆரம்பம்..பிள்ளைகள் பெரியவர்களாகி பெற்றோரை அதிகாரம் செய்யும்போது, விட்டு விலகும்போது அவர்கள் மேல் வைத்த பாசமே மனதுக்கு பாரமாகி கடவுளை அடிபணிவது ஒன்றே கடைசி வழியாகிறது.

என்னைப் பொறுத்தவரை இன்றுவரை நடந்த அனைத்துமே மிக சரியாக நடந்ததற்கு அந்த இறையருளே காரணம் என்பேன். அன்பான கணவர், ஆதரவான குழந்தைகள். என் ஆசையோடு அவர்களுக்கு விருப்பமான படிப்பு, அதில் சிறப்பாக இருந்து இன்றிருக்கும் உயர்நிலை, அருமையான மருமகன், மருமகள்கள் பேரன் பேத்திகள்...நிறைவான வாழ்வு.

இனிவரும் நாட்களும் இதே போல் வாழ அந்த இறைவனிடம் வேண்டுகிறேன்.

நம் மத்யமர் குழுவில் இருப்பவர்கள் பலரும் கடமைகளை முடித்து கடைசி இன்னிங்க்ஸில்தான் இருக்கிறோம். நாம் ஆசா

பாசங்களிலிருந்து விலகி நாம் மனம் திறந்து பல விஷயங்களை இங்கு பகிர்வதால் மனம் லேசாகிறது. 

அடுத்தவர் பகிரும் விஷயங்களைப் படிக்கும்போது..இதைவிட நம் நிலை உயர்வுதான் என்றும், கடவுள் இவரது கஷ்டங்களை தீர்க்கட்டும் என்று மனமுருகி வேண்டுவதாலும் நம் துன்பம் குறைகிறது.

நம் உறவுகள், பிள்ளைகள் நம் திறமைகளை அறிந்து எதுவும் சொல்லாமல் இருக்கும்போது, மற்றவர் பாராட்டுவது நமக்கு மனமகிழ்ச்சியைத் தருகிறது.

வாழ்வில் உற்சாகமும் நாமும் ஏதாவது செய்வோம் என்ற உத்வேகமும் கூடும்போது உடல் நோய்கள் கூட பெரிதாகத் தெரிவதில்லை. 

முகமும் முகவரியும் தெரியாததெரியாத நட்புகளின் ஆதரவும் ஆறுதலும் நமக்கு ஒரு டானிக் எனலாம். இந்த இன்னிங்க்ஸி



ல் மனதை லேசாக்கி இயல்புநிலையில் நம் வாழ்வைத் தொடர நிச்சயம் மத்யமர் ஒரு காரணம். 


Thursday, 4 March 2021

புத்தாண்டே வருக🌻(31.12.'20)

 

🌺புத்தாண்டே வருக🌻

2020..ஆரம்பித்தபோதே ஆனந்தம்தான். எப்பொழுதும் நவராத்திரியிலிருந்தே நான்  பிஸியாகி விடுவேன்.மார்கழி முழுவதும் விடிகாலை பூஜை, விதவிதமாய் கோலம்.. நேரம் சரியாக இருக்கும்.

ஜனவரி 3 மும்பையில் என் பெண்ணின் மாமனாருக்கு 75வயது நிறைவு விழாவுக்கு சென்றபோது அங்குள்ள மத்யமர் தோழிகளான மோகனா, விஜியை சந்தித்தது இவ்வருடத்தின் முதல் சந்தோஷம்!

பொங்கல் முடிந்ததும் relaxation ற்காக ஹைதராபாதிலுள்ள பெண் வீட்டிற்குச்  சென்று ஒரு மாதம் இருந்துவிட்டு  வருவோம். அதனாலேயே இரண்டு வருடங்களாக மத்யமர் ஆண்டு விழாவிற்கு
வரமுடியவில்லை. இந்த ஆண்டும் அதேபோல் சென்று பல ஆலயங்கள்,  விசாகப்
பட்டினம், ஹோட்டல் சாப்பாடு என்று ஜாலியாக enjoy பண்ணிவிட்டு  வந்தோம்!

ஏப்ரல் மாதம் பிள்ளைகள் வீட்டுக்கு லண்டனும் பெர்லினும் சென்றுவர விஸா apply செய்திருந்தோம். அங்கு போக வேண்டிய இடங்களுக்கெல்லாம் லிஸ்ட் போட்டு, அதில் பத்மாவை சந்திக்க Denmark போகும் programmeம் உண்டு...

நாங்கள் குடந்தையில் புண்யக்ஷேத்ரம் என்ற இடத்தில் வீடு கட்டிக் கொண்டிருந்ததால் திருச்சியிலிருந்து இங்கு மார்ச் 18 வந்தோம்...
மார்ச்22முதல் ஊரடங்கு ஆரம்பிக்க...
கொரோனாவால் உலகமே ஸ்தம்பிக்க...
விஸா cancel ஆகி என் ஆசை புஸ்வாணமாயிற்று!

கட்டிட வேலைகளும் நின்றுவிட...
வெளியில் எங்கும் செல்ல முடியாமல்...
இங்கு மாசில்லாத காற்றும், காலடியில் காவேரியும்..
பசுமையான சுற்றுச் சூழலும் எங்களுக்கு புத்துணர்வுதர..
இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை இன்பமயம்தானே!

ஜூன் மாதத்தில் என் கணவரின் சித்தப்பா பிள்ளை கொரோனாவிற்கு பலியாக..சற்றே நிலைகுலைந்து போனோம் நாங்கள். வெளியில் வரவே பயந்த நாட்கள் அவை..
மனிதரைப் பார்த்து மனிதரே பயந்த கொடுமையான நாட்கள்...

ஜூலைக்குப் பின்பே வீட்டு வேலைகள் நடந்து, எங்கள் ஆசைப்படி வீடு கட்டி ஆகஸ்ட்டில் கிரகப்ரவேசம் செய்தோம். சென்னையி
லிருந்து வந்த என் பிள்ளை குடும்பம் இந்த சூழ்நிலையில் மயங்கிப் போனார்கள்!

பங்களா போல வீடு..பக்கத்தில் தோட்டம்..விளையாட நாய்க்குட்டி..மாஸ்க் போட வேண்டாம்..கால்வீசி நடக்கலாம்..காவேரியில் குளிக்கலாம் என்று பேத்திகளுக்கு பரம சந்தோஷம்!

பேத்திகளுக்கு online classes.. என் பிள்ளைக்கும் work from home என்பதால் கடந்த ஆறு மாதங்களாக இங்குதான் இருக்கிறார்கள். என் பெண்ணும் குழந்தைகளுடன் வர ஒரே கொண்டாட்டம்தான்.
பேத்திகளோ இனி ஜூன்மாதம்
பள்ளி திறக்கும்போது
போனால் போறும் என்று ஒரே குஷியில் இருக்கிறார்கள்!

வீட்டு வேலைகள் அதிகம் என்பதால் மத்யமரில் அதிகம் என்னால் எழுத முடியவில்லை. இந்தமுறை 'மத்யமர் மார்கழி வைபவத்'தில் கலந்து கொண்டு  திவ்யதேசங்கள் பற்றி பேசியதும், என் மருமகள் திருப்பாவைக்கு நடனம் ஆடியதும் மறக்க முடியாத சந்தோஷ நேரங்கள்!

கொரோனாவால் பல கஷ்டங்கள் வருத்தங்கள் இருந்தாலும் குடும்ப மக்கள் ஒன்றாக இருக்கும்போது ஒருவரை ஒருவர் இன்னும் அதிகம் புரிந்து கொள்ளவும், நேசிக்கவும் முடியும் என்பது மறுக்க முடியாத நிஜம்.

சென்ற ஆண்டு நாம் நினைத்தே பார்க்காத மாற்றங்களைத் தந்தாலும் அவை நம்மை நம் மனதை சுற்றுப் புறத்தை எப்படி தலைகீழாக மாற்றியது என்பதை நம்மால் மறக்க முடியாது. 

இனிவரும் 2021ம் ஆண்டு நமக்கு ஏற்றங்களைத் தரும் சிறந்த ஆண்டாக இருக்க இறையருளை வேண்டுவோம்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💐💐