Saturday 24 April 2021

ஙே..அனுபவம்

 



Sunday_special

'ஙே'😳😮

'ஙே'நேரங்களை யோசித்து யோசித்து ஆறு நாளாக எழுதாமல் இருந்து விட்டது நினைவு வர, 'அட..இது மறந்து போச்சே' என்று நான் 'ஙே' என்று அசடு வழிந்த நேரத்தை எழுதுகிறேன்!

சில வருடங்களுக்கு முன்பு நாங்கள் என் தம்பி குடும்பத்துடன் மகாபலேஷ்வர் சென்றிருந்தோம். அது மகாராஷ்டிராவின் மிகச் சிறந்த மலைவாசஸ்தலங்களில் ஒன்று. அங்கு நிறைய பாயிண்டுகள் உண்டு. ஒவ்வொன்றும் தனி அழகு. ஒன்று உயரமாக ஏறிச் செல்ல வேண்டும். அடுத்தது சரசரவென்று கீழே இறங்கும். ஒன்றில் மேகங்களைத் தொடலாம்..ஒன்றில் அதல பாதாளத்தை பார்த்து மகிழலாம்!

நாங்கள் சென்ற நேரம் அதிக கூட்டமில்லை. ஒரு உயரமான பாயிண்டில் ஏறிச் சென்றோம். அங்கு எவரையும் காணோம். 'இது ரொம்ப உயரத்தால் யாரும் வரமாட்டார்களோ' என்றபடி ஏறினோம். எங்கள் எதிரில் ஒரு இளவயது ஜோடி மிக நெருக்கமாக பேசிக் கொண்டு இறங்கி வந்தார்கள். அவர்களைப் பார்த்த என் தம்பியும் பிள்ளைகளும் 'ஹனிமூன் ஜோடியோ? மேல கூட்டம் இருக்குனு இறங்கி வந்து விட்டார்களோ'என்றபடி ஏதோ A கமெண்ட் அடித்தபடி வந்தார்கள்! நாங்கள் அங்கிருப்போருக்கு தமிழ் தெரியாது என்பதால் தமிழில் கிண்டல், கேலி செய்து பேசுவதுண்டு!

நாங்கள் மேலே சென்று பார்த்தபோது ஒருவரும் இல்லை. 'ஓ..யாருமில்லாத
தால்தான் அந்த ஜோடி தனியா என்ஜாய் பண்ணிட்டு போயிருக்காங்க' என்று பேசிக்கொண்டு நாங்கள் சிரிக்க...அந்த ஜோடி மேலே ஏறி வந்தார்கள்.

அந்த இளைஞன் என் தம்பியிடம்...சார் இங்க யாரும் இல்லாததால பயந்து நாங்க கீழ வந்தோம். இப்போ நீங்க வந்ததால மறுபடி வந்தோம். ரொம்ப சூப்பரா இருக்கு இந்த இடம்...என்று சொல்ல நாங்கள் அனைவரும் 'ஙே'😮😳

அச்சச்சோ..இவருக்கு தமிழ் தெரியுமோ? நாங்கள் பேசியதைக் கேட்டு என்ன நினைத்திருப்பார்களோ என்று நாங்கள் பதில் சொல்லக் கூட முடியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி ஙே என்று அசடு வழிய...நீங்க சென்னையா சார்...என்று அவர் கேட்க, சுதாரித்துக் கொண்டு பேசினோம்!

அதுமுதல்  தமிழ் தெரியாது என்று யார் முன்னாலும் எதுவும் பேசி 'ஙே' ஆகக் கூடாது என்று புரிந்து கொண்டேன்!

No comments:

Post a Comment