Saturday 24 April 2021

வீல்..Sunday_special





Sunday_special

வீல்..

நமக்கு பயம் வரும்போது, திடுக்கிடும் நிழ்ச்சிகள் நடக்கும்போது, இருட்டு நேரத்தில் எதையாவது எதிர்பாராமல் பார்க்கும்போது நம்மை அறியாமல் வீல் என்று கத்திவிடுவோம்.


எனக்கு பத்து வயதிருக்கும். எனக்கு கரப்பான்பூச்சியைக் கண்டால் மிகவும் பயம். அதுவும் பறக்கும் கரப்பான்பூச்சி என்றால் நான் பயந்து ஓட, அது என் பக்கமே பறந்து வர நான் வீல்வீலென்று கத்துவதைக் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் வந்து விடுவார்கள்! நெஞ்சு  படபடவென்று அடித்துக் கொள்ளும். அது என்னமோ கரப்பான் பூச்சிக்கு அப்படி என்ன கோபமோ என்னிடத்தில், என்னிடம் மட்டுமே வந்து பமுறுத்தும்!! என் அம்மா, தம்பிகள் அதன் மீசையைப் பிடித்து தூக்கி எறிவார்கள்!


எங்கள் வீட்டில் அப்பொழுதுதான் டேபிள்ஃபேன் புதிதாக வாங்கியிருந்தார்கள். இரண்டு அறைகளுக்கு நடுவில் ஃபேனை Oscillationல் வைத்துவிட்டு  இரண்டு அறையிலுமாக நாங்கள் படுத்து உறங்குவோம்.


அன்று இரவு நான் படுக்க செல்லும்போது ஒரு கரப்பான்பூச்சி 'விர்'ரென்று பறந்து வந்து சரியாக என்மேல் உட்கார, நான் பதறியபடி 'வீல்' என்று கத்திக் கொண்டே ஃபேன் பக்கம் ஓட...நான் அதில் இடித்து அது கீழே விழுந்து மேலிருந்த மூடி தனியாகக் கீழே விழ...என் எண்ணம் முழுதும் கரப்பான்பூச்சி மேலேதான்! 


என் தம்பிகளோ..வாங்கி நாலு நாள் கூட ஆகல. புது ஃபேனை உடைச்சுட்டியே..என என்மேல் பாய, என் அம்மாவும் அப்பாவும்..இத்தனூண்டு கரப்பான்பூச்சி என்ன பண்ணிடும்னு இந்தப் பாடு படுத்தற..என்று கோபிக்க, அந்த கரப்பான்பூச்சி பயம் இன்னமும் அப்படியேதான்! ஆனால் இந்த சம்பவம் பற்றி நினைக்கும்போது இன்றும் அந்த பதட்டம் மனதிலேயே நிற்கிறது.


அடுத்த 'வீல்' என்னை மட்டுமன்றி என் வீட்டினரையே பயமுறுத்திய என் பேரனின் அலறல்! என் மகள் வயிற்று பேரன் எங்கள் வீட்டில் பிறந்தான். ஒருமாதம் ரொம்ப சமத்தாக இருந்தான். குளிக்கும்போது கூட அழுததில்லை. ரொம்ப சமத்து என்று எல்லோரும் சந்தோஷப் பட்டோம். ஒரு மாதத்திற்கு பின் சரியாக மாலை ஆறு மணிக்கு 'வீல்வீல்' என்று அழ ஆரம்பித்தால் அடுத்த வீட்டு மனிதர்களெல்லாம் 'என்ன ஆச்சு' என்று கேட்டு வந்து விடுவார்கள்! 


யார் கையிலும் எந்த சமாதானம் செய்தாலும் நிறுத்த மாட்டான். எதுவும் சாப்பிடவும் மாட்டான். குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கும். மூச்சு விடாமல் அரைமணி நேரம் அழுதுவிட்டு விளையாட ஆரம்பித்து விடுவான்! டாக்டரிடம் கேட்டபோது..சில குழந்தைகள் வெளி சூழ்நிலைக்கு அட்ஜஸ்ட் ஆகும்வரை அப்படி அழுவதுண்டு. கொஞ்ச நாளில் சரியாகி விடும்...என்றார். கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு அந்த 'வீல்' தொடர்ந்தது. இப்பவும் அதைச் சொல்லி நாங்கள் அவனைக் கலாய்ப்போம்!


No comments:

Post a Comment