Monday, 14 December 2020

ஆன்மிக தரிசனம்..2

 ஆன்மிக தரிசனம்..2..(11.12.2020)

அயல்நாட்டு ஆலயங்கள்
என் பிள்ளைகள் வெளி
நாட்டில் இருப்பதால் நான் அந்த நாட்டுக்கு செல்வதுடன் அருகில் இருக்கும் வேறு நாடுகளுக்கும் சென்று வருவேன். போகும்போதே அங்கு என்ன கோவில் இருக்கிறது என்று நெட்டில் பார்த்து விபரங்களுடன் செல்வேன்.

பெரிய பிள்ளை ஜெர்மனியில் இருப்பதால் அங்கிருந்து ஸ்விட்சர்லாந்து சென்றோம். அங்கு ஜுரிச் சிவசுப்ரமணிய சுவாமி ஆலயம் சென்று வந்தோம். நதிக்கரையில் அமைந்துள்ள அழகான அற்புத ஆலயம்.

சின்ன பிள்ளைக்கு சிங்கப்பூரில் வேலை. அங்கு ஏழெட்டு முறை சென்றிருக்கிறேன். 

அங்குள்ள பல ஆலயங்கள் தரிசனம் செய்திருக்கிறோம். கோவில்களின் அழகும் சுத்தமும், நாள்முழுவதும் நடக்கும் அன்னதானமும் வியக்க வைக்கும் அற்புதமான விஷயங்கள்!

அங்குள்ள தண்டாயுதபாணி ஆலயம் முதலில் அங்கு வேலைக்குச் சென்ற தமிழர்களால் ஒரு வேல் வைத்து தமிழ்க் கடவுள் முருகனுக்கு உருவான முதல் கோயில். இன்று மிகச் சிறப்பான வேண்டுதலை நிறைவேற்றும் ஆலயமாக உள்ளது. கார்த்திகை, தைப்பூசம் சிறப்பான விழா.

கெய்லாங் சிவன் கோவிலின் கலையழகு கண்ணுக்கு விருந்து. அங்கு வெளிபிரகாரத்திலுள்ள சிவலிங்கத்திற்கு எவரும் அபிஷேகம் செய்யலாம்.

சைனாடவுனிலுள்ள மிகப் பழமை வாய்ந்த மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி மிகவும் விசேஷமாக நடைபெறும்.

அழகு நிறைந்த கிருஷ்ணன் ஆலயம், அருள் பொங்கும் ராமர் ஆலயம் என்று ஒவ்வொன்றும் தனி அழகு. ஒருமுறை அன்னையர் தினமன்று ஸ்ரீ நிவாச பெருமாள் ஆலயம் சென்றோம். தேவி மகாலக்ஷ்மிக்கு தாமரைப் பூக்களால் அலங்கரித்து சன்னதியில் அழகுற விளக்குகள் ஒளிவீசின. 'என்ன விசேஷம்?'என்றபோது 'இன்று அன்னையர் தின சிறப்பு வழிபாடு. நாம் பெற்ற அன்னைக்கு மட்டுமா சிறப்பு? இவ்வுலகையே உருவாக்கி நம்மைக் காப்பாற்றும் அவளன்றோ முதல் தாய்' என்றபோது மனம் சிலிர்த்தது. நான் எந்த ஆலயத்திலும் இது போன்ற வழிபாடு கேள்விப்பட்டதில்லை.

மலேசியாவில் கோலாலம்பூரிலுள்ள Batu Caves பத்துமலை முருகன் கோவில் சுண்ணாம்புப் பாறையாலான மலையில் அமைந்துள்ளது. 280 படிகள் ஏறிச் சென்றால் மேலே முருகன் சன்னதி அமைந்துள்ளது. இங்கு தைப்பூச விழா மிக விமரிசையாக நடைபெறும். உலகின் பல பகுதி மக்களும் இவ்விழாவில் கலந்து கொள்ள வருவார்கள்.

நாங்கள் அங்கு தரிசனம் முடித்து வந்தபோது நல்ல பசி. அங்கிருந்த குருக்களிடம், அருகில் சைவ சாப்பாடு ஹோட்டல் இருக்கா என்றபோது, 'இங்கு கிடைப்பது கஷ்டம். என்னுடன் இங்கேயே சாப்பிடுங்கள்' என்றார். ஆஹா..முருகனின் பிரசாதம் என்று மனம் நெகிழ்ந்தோம். அவர் எங்களைப்பற்றி கேட்க நாங்கள் குடந்தை என்றதும், தனக்கும் சுவாமிமலைதான் சொந்த ஊர் என்றார். நம் ஊர் மனிதர்கள் உலகம் முழுதும் இருப்பதை நினைக்க சந்தோஷமாக இருந்தது.

அடுத்தமுறை சிங்கை போனபோது இந்தோனேசியாவில் இந்துக் கோயில்கள் நிறைந்த பாலிக்கு சென்றோம். பாலி முழுக்க முழுக்க இந்துக்கள் வாழும் தீவு. ஊரில் திரும்பிய இடமெல்லாம் கோயில்கள்! சின்னச் சின்ன சந்நதிகள்! ஆனால் எதிலும் ஆண்டவன் உருவமில்லை. அருவத்தையே இறைவனாக வணங்குகிறார்கள் இவர்கள். இரண்டு வீடுகளுக்கு ஒரு ஆலயம் உள்ளதால் பாலியை'ஆயிரம் கோயில் உடைய தீவு' என்றே அழைக்கிறார்கள்! ஆனால் என்ன, எந்தக் கோயிலுக்குள்ளேயும் நம் யாரையும் அனுமதிப்பதில்லை.

'நானும் இந்துதான்'என்று சத்தியம் செய்தாலும்  ம்ஹூம்! நோ என்ட்ரிதான்!

பாலி மக்களும்கூட ஆலயத்திற்குள் செல்ல பிரத்யேக உடை அணிந்தே செல்கின்றனர். ஒவ்வொருவரும் ஒரு வட்டத்தட்டில் பழங்கள்,இனிப்புகளை அழகாக அடுக்கி வைத்தபடி செல்லும் அந்த அழகே தனிதான்.

கடலுக்கு நடுவில் உள்ள பாறையின் மேல் அமைக்கப்பட்டுள்ள 'தானாலாட்' என்ற கற்கோவில் ஜாவா தீவுகளிலிருந்து வந்த குருமார்களால் 16-ம் நூற்றாண்டில்  கட்டப்பட்டது. இப்பாறையில் மூன்று முகங்களைக் கொண்ட நீரூற்று உள்ளது. இதனை சுயம்புவாக உருவான சிவா,விஷ்ணு, 
பிரம்மா உருவங்களாகவே வழிபடுகிறார்கள். இவற்றிலி
ருந்து வரும் நீர் இனிப்பாக உள்ளதும் அதிசயமே!

'அகுங்க்' என்ற மலையில் அமைந்துள்ள 'புரா பெஸாகி' என்ற தேவி ஆலயம் இங்குள்ள மிகப் பழமையான, புனித ஆலயமாகப் போற்றப்படுகிறது.

'புரா தீர்த் ஆம்புல்' என்ற ஆலயம் மிகப் பெரியது. இதில் உள்ள சிலைகளும், கருட உருவங்களும் மிக அற்புதமான கலையழகுடன் விளங்குகின்றன. இங்கு உள்ள புனித நீரூற்றுகளில் நீராடுவதால் உடல் ஆரோக்கியமும், செல்வமும் கிட்டும் என்பது நம்பிக்கை.

அடுத்தமுறை நான் சென்றது தாய்லாந்து நாட்டின் பாங்காக்.இங்கு புத்த ஆலயங்களே அதிகம்.
 ‘வாட் போ’என்ற ஆலயம்  தாய்லாந்தின் ‘முதல் பல்கலைக் கழகம்’ என்ற சிறப்புடையது.  கைகளில் தலையைத் தாங்கி ஒருக்களித்தவாறு படுத்தபடி காட்சி தரும் 46 மீட்டர் நீளமான சிலை, புத்த பிரான் நிர்வாண நிலையை அடைந்ததைக் குறிப்பிடும் மிகக் கலையழகு மிக்க சிலை.

தமிழர்களால் உருவாக்கப்பட்ட மாரியம்மன் ஆலயம் அழகு. அந்த அம்மனை வழிபடுவதால் ஆரோக்கியமாக வாழலாம் என்பது அந்நாட்டு மக்கள் நம்பிக்கையாம்!

நம் நாட்டில் பிரம்மாவிற்கு ஆலயம் கிடையாது.  இங்கு பிரம்மா ‘எரவான்’ என்ற பெயரில் கோவில் கொண்டு, பக்தர்களின் ஆசைகளையும்,  கனவுக
ளையும் நிறைவேற்றி வைக்கிறார்! இந்நாட்டினர் இவரை ‘நான்குதலை புத்தர்’ என்று கூறி, வாசனைப் பூக்களையும், பத்திகளையும் ஏற்றி வைத்து வணங்குகின்றனர். தங்கள் விருப்பம் நிறைவேறி விட்டால் இவர் எதிரில் நடனமாடி, தம் நன்றியைத் தெரிவித்துக் கொள்வார்களாம்!

இது மட்டுமா? காதல் கடவுளாக நின்று காட்சி தருகிறார் 
திருமூர்த்தி பகவான்! 
சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரும் இணைந்த இவரை வணங்கி வழிபட்டோரின் காதல் தங்கு தடையின்றி நிறைவேறி, காதலித்தவரையே கைப்பிடிக்கலாமாம்!  வியாழக்கிழமை இரவுகளில் இந்தக் கடவுள் சொர்க்கத்
திலிருந்து கீழே இறங்கி வருகிறார் என்பதால் அந்த நாளில் இவ்வாலயம் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது!சிவப்பு வண்ணப்பூக்கள், 
சிவப்பு பழம், சிவந்த மெழுகுவர்த்திகளே இவ்விறைவனுக்கு காணிக்கை! வேடிக்கையான வழிபாடு!

உலகின் மிகப் பெரிய கோவிலாகப்  போற்றப்படும் அங்கோர்வாட் என் அடுத்த விசிட்! இந்து  ஆலயமான அங்கோர்வாட் ஆலயம் பண்டைய 'காம்போஜம்' என்றழைக்கப்பட்ட கம்போடியா நாட்டிலுள்ளது. உலகின் எட்டாவது அதிசயம்' எனப் புகழப்படும் அங்கோர்வாட் ஆலயம் உயர்ந்து, நிமிர்ந்து, 
வானளாவ நின்று நம் இந்தியக் கலாசாரத்திற்கு ஒரு எடுத்துக் காட்டாக விளங்குகிறது. யுனெஸ்கோ
வினால் உலகப் பண்பாட்டுச் சின்னமாக   திகழ்கிறது.

இரண்டாம் சூர்ய வர்மனால் உருவாக்கப்பட்ட அங்கோர்வாட் ஆலயம் பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இவ்வாலயத்தைக் கட்டி முடிக்க 37 ஆண்டுகள் ஆயிற்றாம். பிரம்மாண்டமான ஆலயம். சூரிய வர்மனால் உருவாக்கப்பட்ட விஷ்ணு சிலை அவனை அடுத்து வந்த அரசன் புத்தமதத்திற்கு மாறியதால் முத்தாக மாறிவிட்டது. ஏகப்பட்ட ஆலயங்கள். சிற்பக்கலை கண்களைக் கவர்கிறது.

மலைமேலுள்ள  ஆயிரம் லிங்க நதியின் அடியில் பல சிவலிங்கங்களும் மற்ற
இறை உருவங்களும்
செதுக்கப் பட்டிருப்பது வியப்பு. மூன்று கி.மீட்டர் ஏறிச் செல்வது சற்று கடினமே. எனினும் காணவேண்டிய இடம். அங்கோர்வாட் பற்றி ஒரு தனி பதிவு போட வேண்டும்!

ஆன்மிக தரிசனம்-3

 ஆன்மிக தரிசனம்-3..(12.12.'20)

ஆயிரம் ஆலயங்களை தரிசித்தாலும் மேலும் பாடல் பெற்ற,வித்யாசமான, விசேஷமான, வரப்ரசாதியான தெய்வங்களை தரிசிக்கும் ஆவல் மட்டும் குறைவதில்லை.
அதில் கிட்டும் ஆனந்தம்...
அவ்வாலயம் பற்றிய ஆச்சரியம்..
அங்கெல்லாம் போக முடியுமா என்ற ஆதங்கம்...
அந்த தரிசனம் கிட்டியதும் கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவேது!

தினமும் வளர்ந்து கொண்டிருக்கும் தஞ்சாவூர் நந்தி...
எப்பொழுதும் சிவன் சன்னிதியில்நீர் சுரக்கும் திருவானைக்காவல்...
அன்னை முகத்தில் வியர்வை முத்துக்கள் காணப்படும் புன்னைநல்லூர் முத்துமாரியம்மன்..
இவை போன்று மும்பை தஹானு என்ற இடத்திலுள்ள சந்தோஷி மாதா ஆலயத்தில் அன்னையின் வலக்கை மேலிருந்து குங்குமம் வருவது அதிசயமாக இருந்தது.

ஆந்திராவில் மங்களகிரி மலையில் அருள் செய்யும் நரசிம்மரிடம் நம் வேண்டுதல் நிறைவேற பானகம் வாங்கிக் கொடுக்க வேண்டும். அதை அர்ச்சகர் வாயில் விடும்போது
'களக்' என்று சத்தம் வருகிறது. அது நின்றவுடன் பானகம் விடுவதை நிறுத்தி மீதியை நமக்கு பிரசாதமாகக் கொடுப்பார்கள். அத்தனை பேரும் கொடுக்கும் பானகம் அப்பெருமான் வாயில் விடப்பட்டும் ஒரு ஈ எறும்பு கூட அங்கு காணப்படாதது இறையருளன்றோ!

திவ்யதேசங்களில் 89வதாகவும், பரமபதத்தின் எல்லை எனப்படுவதும், பாண்டி நாட்டு  நவ திருப்பதிகளில் ஐந்தாவதாக வரும் விளங்கும் ஆழ்வார்திருநகரியில் பிறந்தவர் சடகோபன் என்கிற நம்மாழ்வார். அவர் பிறந்தது முதல் அசையாமல் இருந்தபோது அவர் பெற்றோர் அங்கிருந்த பெருமாள் கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். அவர் ஓடிச்சென்று அங்கிருந்த உறங்காபுளி மரத்தின் கீழ் அமர்ந்து விட்டார்.

16 ஆண்டுகள் உணவின்றி பேசாமல் இருந்தவர் மதுரகவியாழ்வார் வந்து பேசியதும் பதில் கூறினார்.
அவரை நம்மாழ்வார் என்று கூறி மதுரகவி ஆழ்வார் அவரை குருவாக ஏற்றதால் அது குருஸ்தலமாகிற்று.

நம்மாழ்வார் 35வயதில் உயிர் நீத்த பின் அம்மரத்தடியில் புதைத்து ஆலயம் உருவாகியது. 5000 வருடத்துக்கு முந்திய மரம் 7 கிளைகளோடு மிக அழகாகக் காட்சியளிக்கிறது. அதைப் பார்த்தபோது மெய்
சிலிர்த்தது.பெருமாளின் மண்டபத்தை விட நம்மாழ்
வாரின் மண்டபம் சற்று பெரியது. நான் தரிசித்து பிரமித்த ஆலயம் இது!

சபரிமலை...ஐயப்பனை தரிசிக்க அத்தனை ஆவல்..ஆசை. ஆனால் அங்கு போக முடியுமா என்ற நம்பிக்கை மிகக் குறைவாகவே இருந்தாலும்..ஐயப்பா எனக்கு உன் தரிசனம் தரமாட்டியா?..
என்று வேண்டினேன்.

திடீரென்று ஒருநாள் என் தம்பி ஃபோன் செய்து தான் நண்பருடன் சபரிமலை போவதாகவும் எங்களையும் வரும்படி கேட்டான். ஆஹா..
எப்படிப்பட்ட வாய்ப்பு. விரதமில்லாததால் 18படி ஏற முடியாது. சுற்றிச் சென்று தரிசிக்கலாம் என்றான் என் தம்பி.

தமிழ் மாதங்களின் முதல் ஐந்து நாட்கள் ஐயன் சந்நிதி திறந்திருக்கும் என்பதால் நாங்கள் ஆவணி மாதம் சென்றோம். நல்ல கூட்டம். பம்பையிலிருந்து மேலே செல்ல 41/2 மணி நேரமாயிற்று. மாலை 5மணிக்கு மேலே சென்றோம். சன்னதிக்கு முன்னால் இருமுடி கட்டியவர்கள் வரிசையைப் பார்த்தாலே எப்ப தரிசனம் கிடைக்குமோ என்ற பயம் வந்து விட்டது. தங்குவதற்கு அறைகளும் கிடைக்கவில்லை.
என்ன செய்வது? இரவு முழுதும்  விழித்திருந்து விடிகாலை தரிசனம் முடித்து திரும்பலாம் என் எண்ணினோம்.

திடீரென்று ஒரே பரபரப்பு. 18படிகளை சுத்தம் செய்த பின்பே மாலை அணிந்தவர்
களுக்கு தரிசனம் என்றதும் அனைவரும் வரிசையில் அமர்ந்து விட்டனர். நாங்கள் தரிசனம் செய்ய மட்டுமே சென்றதால் வேகமாகச் சென்று தரிசன வரிசையில் நின்றோம். அங்கு அதிக கூட்டமில்லாததால் அரை மணிக்குள் தரிசனம். ஐயன் ஐயப்பனை சன்னிதி முன் நின்று நிதானமாக தரிசித்தோம். கூட்டம் இல்லாததால் இன்னொரு முறையும் தரிசனம். ஐயப்பனின் சிரிக்கும் கண்களும் குவிந்த வாயும் என்னிடம் ..இப்ப சந்தோஷமா... என்பது போல இருந்தது! நான் காண்பது நிஜமா கனவா என்று தோன்றியது. இன்னமும் என் கண்களுக்குள் தெரிகிறது அந்த சபரிவாசனின் தரிசனம்🙏

திரும்ப வரும்போது பெண்களின் சபரிமலை எனப்படும் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் ஆலயம், மன்னார்சாலை நாகராஜா ஆலயங்களை தரிசித்து வந்தோம்.

சென்ற ஆண்டு  திட்டமிடாமல் திடீரென்று சென்றது சார்தாம் யாத்திரை.நாங்கள் சென்றது அக்டோபரில் கடைசி ட்ரிப் என்பதால் சற்று பயந்தபடியே சென்றோம். ஆனால் இறைவனருளால் அனைத்து தரிசனங்களும் மிக அற்புதமாகக் கிடைத்தது.
பத்ரியில் சஹஸ்ரநாம தரிசனம், கேதாரேஸ்வரருக்கு நாங்களே செய்த அபிஷேகம் மற்றும் ஹரித்வார், ரிஷிகேஷ் என எல்லா இடங்களிலும் நல்ல தரிசனம்.
கேதார்,பத்ரி பற்றி நான் மத்யமரில் எழுதியவை..
https://www.facebook.com/groups/Madhyamar/permalink/1223278714526607/
பத்ரி பற்றி...
https://www.facebook.com/groups/Madhyamar/permalink/1214274642093681/

ஹைதராபாத் சென்றபோது நான் கண்டு ரசித்த ஆன்மிக அருங்காட்சியகம் சுரேந்திர புரி. யதுகிரி பஞ்ச நரசிம்மர் ஆலயத்திற்கு அருகிலுள்ள சுவாரசியமான அனைவரும் சென்று கண்டு ரசிக்க வேண்டிய இடம்.புராண இதிகாசங்களைப் பற்றி,
அத்தனை கடவுளின் சரித்திரமும், லீலைகளும், நேரில் பார்ப்பது போல் தத்ரூபமாக அறிந்து கொள்ளும் ஒரு அற்புத
ஆன்மிகக் களஞ்சியம்! பாரதத்தின் அத்தனை ஆலயங்களின் மாதிரியும் அங்கே உள்ளது.
அதற்கான லிங்க்..
https://www.facebook.com/groups/Madhyamar/permalink/1321026784751799/

இத்தனை ஆலயங்களை தரிசித்தும் இன்னும் தரிசிக்க வேண்டிய ஆலயங்களாக நான் விரும்புவது காஷ்மீரிலுள்ள வைஷ்ணோ தேவியும், நேபாளில் முக்தி நாத்தும். இறையருள் இருந்தால் அந்த ஆசை நிறைவேறும் என்று நம்பிக்கை உண்டு.

அமாசோம பிரதட்சணம்

அமாசோம பிரதட்சணம்..(14.12.'20)

இன்று அமாவாசையும் சோமவாரமும் இணைந்த அமாசோம பிரதட்சண நாள். ‘மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன்’ என்கிறர் பகவான் ஸ்ரீகிருஷ்ணர், பகவத் கீதையில். அரச மரத்தின் சமஸ்கிருத பதம் ‘அஸ்வத்த விருக்ஷம்!’ மரங்களிலேயே மிக புனிதமும், பெருமையும், உயர்வும் கொண்ட்து அரசமரம். ஸ்ரீமந்நாராயணனின் அம்சமாகப் போற்றப்படுவது அரச மரம்.

அரச மரத்தின் வேரில் பிரம்மாவும், மத்தியில் விஷ்ணுவும், மேல் பகுதியில் சிவனும் குடி கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மற்ற அனைத்து தெய்வங்களும், உப தேவதைகளும் அரச மரத்தின் பழங்களில் வாழ்வதாயும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

உபநிஷதங்களில் மனித உடல், மரத்துக்கு உவமையாகக் கூறப்படுகிறது, உலகியல் ஆசைகள் நிறந்த உடல் மரமாகவும், அதை ‘ஞானம்’ என்ற கோடரியால் வெட்டும்போது, இறைவனை அடையலாம் என்றும் கூறப்படுகிறது. அகன்று, ஆழமாக பூமிக்கடியிலுள்ள வேர் ‘ஆத்மா’. அரசமரம் பெரும்பான்மையான இடத்தை ஆக்ரமித்துக் கொண்டு அகன்று, பெரிதாக வளரும். அதனுடைய இலைகள் சிறு காற்றுக்கும் ‘சல் சல’வென்று சத்தம் ஏற்படுத்தும். 

மனிதன் ‘தான்’ என்ற பெருமையில், ஆணவம் அடைவது போல், அரசின் பூக்களும், பழங்களும் மனிதர்களுக்கு எவ்வகையிலும் பயன்படுவதில்லை. மரம் எந்த தச்சு வேலைகளுக்கும் உபயோகப்படாது. ஆனால் யாகங்கள், ஹோமங்கள் போன்ற புனித காரியங்களுக்கு அரசமர சமித்துகள் மட்டுமே ஏற்றவை.

இது போன்று மனித உடலும் அழகு, ஆரோக்கியம், பலம் இவற்றுடன் விளங்கினாலும். இறுதியில் எதற்கும் உபயோகப்படாமல் அழியக் கூடியது என்பதே உண்மை. மண்ணில் மறைந்துள்ள அரசமர வேர் போன்ற நம் ‘ஆத்மா’வை இறைவன் பால் திருப்புவதே நாம் பிறவி எடுத்ததன் பயன். அதனை உணர்த்தவே இறைவன் ‘மரங்களில் நான் அரசு’ என்று உரைக்கிறார்.

சகல தேவர்களும் இதில் வாழ்வதாலேயே இதனை சமித்துகள் தவிர, வேறு விஷயங்களுக்கு வெட்டுவது பாபம். அப்படி வெட்டுவது தன் மூதாதையரேயே கொலை செய்வதற்குச் சமம் என்பர். அதனாலேயே இம்மரத்தைத் தண்ணீர் விட்டு வளர்ப்பதும், பூஜிப்பதும், பிரதட்சிணம் செய்வதும் ஒருவர் செய்த பாபங்களை அழித்து, விஷ்ணு லோகம் அடையச் செய்யும் எனப்படுகிறது.

திங்கட்கிழமையும், அமாவாசையும் சேர்ந்து வரும் நாட்களில் அரச மரத்தை 108 முறை பிரதட்சிணம் செய்வது மகா புண்ணியம் தரும். நீண்ட ஆயுள், பிள்ளைப் பேறு, நோயிலிருந்து நிவாரணம், வைகுண்ட பிராப்தி இவை கண்டிப்பாகக் கிட்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

ஒரு புனித நாளில் இம்மரக் கன்றை நட்டு, தினம் நீர் ஊற்றி, எட்டு வருடங்கள் சொந்த மகன் போல் வளர்க்க வேண்டும். பின் அம்மரத்திற்கு முறைப்படி உபநயனம் செய்வித்து, பூணூல் அணிவித்த பின், அதன் பக்கத்தில் ஒரு வேப்பங்கன்று நட்டு, இரண்டுக்கும் திருமணம் செய்ய வேண்டும். அப்படிச் செய்பவர்களுக்கு குறையாத செல்வம், நிறைந்த இறையருள், நீண்ட ஆயுள், முன்னோர்களுக்கு முக்தி ஆகிய அத்தனை பேறுகளும் கிட்டும். வைகாசி மாதம் இம்மரத்திற்கு நீர் ஊற்றி வழிபடுவது மிக உயர்ந்த பலனைத் தரும்.

சோமவார அமாவாசையன்று விடியற்காலையில் அரசமர ப்ரதட்சணம் செய்வது மிக விசேஷமாகும். அரச பிரதட்சணத்தால் பெண்களின் மலட்டுத் தன்மை நீங்கி, பிள்ளைப் பேறு உண்டாகும். இதனாலேயே ‘அரச மரத்தைச் சுற்றி விட்டு அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தாள்’ என்ற வழக்கு உண்டாயிற்று!. இம்மரத்தின் மருத்துவக் காற்று பெண்களின் உடலில் பட்டு, மலட்டுத் தன்மை நீங்குவதாக விஞ்ஞானக் குறிப்புகள் உரைக்கின்றன.

மாங்கல்ய தோஷம் ஜாதகத்தில் இருக்கும் பெண்கள், விடிகாலை மரத்தை சுத்தம் செய்து, கோலம் போட்டு, மரத்தை அலங்கரித்து வைதீகரின் உதவியோடு பூஜை செய்து, ஒரு வெள்ளை நூலால் மரத்தில் 108 முறை பிரதட்சிணம் செய்தவாறு சுற்ற வேண்டும். இதனால் தோஷம் நீங்கி திருமணம் நடைபெறும். அரசமரத்தின் கீழே நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதும், நாக தோஷம் நீங்குவதற்கேயாகும்.

இன்று கார்த்திகை சோமவார அமாவாசை நாள். மிகப் புண்ணியமான சிறப்பான தினம். இன்று கீழ்கண்ட சுலோகத்தைச் சொல்லி அஸ்வத்த பிரதட்சிணம் செய்து, இகபர சுகங்களை அடைவோமாக!

மூலதோ ப்ரம்ம ரூபா: மத்யதோ விஷ்ணு ரூபிணேஅக்ரத: ஸிவரூபாய வ்ருக்ஷ ராஜயதே நம:


Tuesday, 24 November 2020

தீபாவளி நினைவுகள்..13.11.2020.

தீபாவளி_நினைவுகள்


தீபாவளி என்றதும் நினைவுக்கு வருவது புத்தாடை👗, இனிப்பு🥣, பட்டாசு💈 இவையே! நரகாசுரனின் வேண்டுதலில் நாம் என்ஜாய்💃🕺செய்கிறோம்!


என்றும் நினைவில் நிற்கும் இனிய தீபாவளி...☺️

சிறு வயதில் பெற்றோர் வாங்கித் தரும் உடைகளே. இந்தக் காலம் போல கடைக்குப் போய் நமக்கு பிடித்ததை நாம் வாங்கிக் கொள்வதெல்லாம் கிடையாதே! பிடிக்குமோ பிடிக்காதோ அதைத்தான் உடுத்திக் கொள்வோம். கவுனோ பாவாடை சட்டையோ...இதான் அந்நாளைய உடை! 


விடிகாலை எழுந்து முதலில் நாம்தான் பட்டாசு வெடித்து ஊரை எழுப்ப வேண்டும் என்ற ஆவலில் என் தம்பிகள் தூங்கவே மாட்டார்கள்! அக்கம் பக்கம் எல்லோரும் தீபாவளி கொண்டாடி சாப்பிட்டு 11 மணிக்கு தெருவே காலியாகிவிடும். என் தம்பிகள் வெடிக்காத வெடி, வாணம், சக்கரம் இவற்றை எடுத்து அதிலிருந்து மருந்தைக் கொட்டி அதை புஸ்வாணமாக எரியவிட்டு அடையும் சந்தோஷம் இருக்கே..

அது அலாதியானது😅அன்று நூறு ரூபாய்க்கு நாங்கள் நான்கு பேர் வெடித்த பட்டாசு இன்று ஆயிரம் ரூபாய்க்கு கிடைப்ப

தில்லை.


அம்மா மூன்று நாட்கள் முன்பே ஆரம்பித்து நாலைந்து ஸ்வீட், காரங்கள், மருந்து எல்லாம் செய்வார். அன்று அ.ஆ.பவன், Grand sweets, கங்கா பவன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ், திருநெல்வேலி அல்வா என்று அத்தனை கடை பட்சணங்களின் சுவையும் அருமை அம்மாவின் கைபக்குவத்திலேயே கிடைக்கும்! என் அம்மா செய்யும் மைசூர் பாகின் சுவை இன்னமும் நாவில் ருசிக்கிறது. அந்தக் காலம் பொற்காலம்!


திருமணமானதும் எங்கள் தலைதீபாவளி மறக்க முடியாதது.நாங்கள் இருந்தது திருச்சி. என் பிறந்தவீடு முக்கால் மணி நேரப் பயணத்தில் முசிறி. தீபாவளிக்கு முதல்நாள் கை நிறைய பட்டாசுகளுடன்..(ஸ்வீட், ட்ரெஸ், தீபாவளி கிஃப்டாக வாட்ச், செயினெல்லாம் எங்க வீட்டு உபயமாச்சே😄) எங்கள் வீட்டுக்கு சென்றோம். பட்டாசு வெடித்து அத்திம்பேரை வரவேற்றார்கள் என் தம்பிகள்! 


என் கணவர் மச்சினன்களுடன் வெடிக்க அந்த வருடம் புதிதாக வந்திருந்த ராக்கெட்,ஏரோப்ளேன், 

ஆட்டம்பாம்,  வெடி எல்லாம் வாங்கி வந்திருந்தார். 


அன்று இரவு ராக்கெட் வைக்க பாட்டிலெல்லாம் ரெடி செய்து கொண்டு வெடிக்க ஆரம்பித்

தார்கள். அந்த நாட்களிலெல்லாம் தீபாவளிக்கு முதல்நாள் இரவும் வெடிக்கும் வழக்கம் உண்டு. இப்பொழுது வெடிப்பதே குறைந்து விட்டதே!  


எங்கள் வீட்டில் நிறைய பட்டாசு இருப்பதைப் பார்த்து பக்கத்து வீடு, எதிர்த்த வீட்டில் இருந்த என் தம்பிகளின் நண்பர்களும் சேர்ந்து கொள்ள, ஆளுக்கு ஒரு பாட்டிலில் ராக்கெட்டை வைத்து, சற்று இடைவெளி விட்டு நின்று , சேர்ந்து பற்றவைத்தார்கள். ஒவ்வொன்று ஒவ்வொரு திசையில் போக, அதிக உயரம் செல்லாத ராக்கெட் ஒன்று நேராக எங்கள் வீட்டு எதிரில் இருந்த தோட்டத்தில் போய் விழுந்து, பெரிதாக எரிய ஆரம்பித்து விட்டது. வெளியில் இருந்த முள்வேலி காய்ந்து இருந்ததால் நிமிடத்தில் நெருப்பு சரசரவென்று பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது.


முள்வேலியைத் தாண்டிச் செல்ல தயங்கியபடி  எல்லோரும் விலகி நிற்க, என் கணவர் சட்டென்று பக்கெட்டில் தண்ணீரை எடுத்துக் கொண்டு ஓடிப்போய் வேலியைத் தாண்டிச் சென்று நெருப்பில் கொட்டினார். என் அப்பா, பக்கத்து வீட்டுக்காரர்களும் ஆளுக்கொரு வாளியில் தண்ணீர் கொண்டுவந்து தர, அத்தனை வாளித் தண்ணீரும் கொட்டிய பின் கிட்டத்தட்ட அரைமணி நேரத்துக்கு பிறகே நெருப்பு அணைந்தது. 


அவசரமாக ஓடிய என் கணவர் செருப்பு போட்டுக் கொள்ளாமல் போனதால் கால் முழுதும் வேலி கிழித்து, காலில் முள் குத்தி நடக்க முடியாமல் திண்ணையில் அமர்ந்து விட்டார்.  முழங்கால் வரை முள் கீற்றி ஒரே ரத்தம். மாப்பிள்ளைக்கு இப்படி ஆகிவிட்டதே என்று என் அப்பா மிகவும் கவலையாகி விட்டார்.


என் கணவரோ நிமிடத்தில் ஹீரோவாகி விட்டார்! தெருவில் இருந்தவர்கள் வந்து விசாரித்ததோடு ஒரே பாராட்டு! "வெறும்காலோடு போய் முள்ளைக் கூட கவனிக்காமல் தண்ணீர் கொட்டினாரே.  சமயத்தில தன்னைப் பத்தி நினைக்காம வேகமா ஓடினாரே. நல்லவேளை..கொஞ்சம் தாமதிச்சிருந்தாலும் தோட்டம் முழுக்க நெருப்பு பிடிச்சிருக்கும்" என்று ஒரே Hero worship!என்னவரை பெருமைப்படுத்திய தீபாவளியை மறக்க முடியுமா?

நினைவுகள் தொடரும்...


தமிழ்தினம்

 தமிழுக்கும் அமுதென்று பேர் என்றுரைத்த பாரதி வழிநின்று வாழ்த்துகிறேன் சார்வரி எனும்

இப்புத்தாண்டில் நாம் 

நிறைந்த நல்வாழ்வும் 

சீரிய சிந்தனையும் 

ஓங்கிய ஒற்றுமையும் பெற்று நோய் நொடியின்றி வாழ யாதுமாகி நின்ற காளி அருள் புரிய வேண்டி🙏🏼


Monday, 9 November 2020

பரீட்சைக்கு நேரமாச்சு Sunday_special..30.10.'20

 'பரீட்சைக்கு நேரமாச்சு' என்ற தலைப்பைக் கேட்டதும் என் நினைவுக்கு வந்தது சிவாஜி நடித்த திரைப்படம்தான். அதில் பரீட்சை எழுதச் செல்லும்  Y.G.மகேந்திரன் நடித்த வரதுக்குட்டியின் மரணம் என் மனதை வெகுநாள் பாதித்தது.

நான் எப்பவுமே பள்ளி செல்ல அடம் பிடித்ததோ அழுததோ கிடையாது. முதல் வகுப்பு படிக்காமலே இரண்டாம் வகுப்பிற்கு தாவியவள்!
சென்னையில்தான் என் பள்ளிப் படிப்பு முழுவதும்.  வகுப்பிலும் முதல் ரேங்க்கை பெரும்பாலும் தவறவிட்டதில்லை. அப்பொழு
தெல்லாம் 11ம் வகுப்பு S.S.L.C. அதன்பின்பு P.U.C..பின்புதான் பட்டப்படிப்பு.

நான் 11ம் வகுப்பில் இருந்தபோது வங்கிப் பணியில் இருந்த என் அப்பாவுக்கு ஆஃபீஸராக பதவி உயர்வு கிடைத்தது. சாதாரணமாக ஏப்ரல், மே மாதங்களில் transfer வரும்.என் அப்பாவுக்கு அக்டோபர்
மாதம் பதவி உயர்வுடன் ஈரோடு சென்று உடன் பதவி ஏற்க வேண்டும். என் அம்மா தனியாக எங்கும் செல்ல மாட்டார். அப்பாதான் வீட்டு வரவு செலவெல்லாம் கவனிப்பதால் அம்மா சென்னையில் தனியாக இருக்க பயப்பட்டார்.

நாங்கள் நான்கு குழந்தைகள் படித்துக் கொண்டிருந்தோம். என் தம்பிகள் சிறிய வகுப்புகளில் படித்ததால் அவர்களுக்கு பள்ளியில் இடம் கிடைத்து விடும்.நான் S.S.L.C என்பதால் எப்படி வேறு பள்ளி சென்று படிப்பது என்றெல்லாம் கவலை.

என் அப்பா ஈரோடு சென்று அங்கிருந்த பள்ளிகளில் விசாரித்தபோது கலைமகள் கல்வி நிலையம் மிக நல்ல பள்ளி என்று தெரிந்தது. அப்பள்ளி 11ம் வகுப்பில் ஒவ்வொரு வருடமும் 100 % தேர்ச்சி பெறும் பள்ளி என்றும் அங்கு அட்மிஷன்  கிடைப்பது மிகவும் கடினம் என்றும் சொன்னார்களாம்.

தன் பெண்ணுக்கு அங்கு அட்மிஷன் கிடைக்கும் என்பதில் என் அப்பாவுக்கு 100% நம்பிக்கை!அங்கு எனக்கு அட்மிஷன் கிடைக்குமா என்று கேட்க, அவர்கள் பள்ளியில் வைக்கும் பரீட்சையில் தேறினால் மட்டுமே சேர்த்துக் கொள்வோம் என்று சொல்லி விட்டார்களாம்.

சென்னை வந்த என் அப்பா விபரம் சொல்ல, என் அம்மா என்னை நன்றாக எழுதி அட்மிஷன் வாங்கும்படி அறிவுரை சொல்லி அனுப்ப, நாங்கள் ஈரோடு சென்றோம்.

அப்பொழுதெல்லாம் 10,11ம் வகுப்புகளில் Electives என்று ஒரு subject  எடுக்க வேண்டும். நான் Chemistry எடுத்திருந்தேன். எனக்கு தமிழ்,ஆங்கிலம்,
Chemistryயில் பரீட்சை வைத்தார்கள்.  நல்லவேளை கணக்கில் பரீட்சை இல்லை! எனக்கு பிடிக்காத, வராத பாடம் கணக்கு! எப்படியோ மனப்பாடம் செய்து கணக்கில் 80 மார்க் வாங்கி விடுவேன்!

நான் என் வாழ்க்கையிலேயே மிகவும் பயந்து தேற வேண்டுமே என்று கடவுளை வேண்டியது அந்த பரீட்சைக்கு மட்டுமே! அன்றைய நிலையில் அப்பாவை விட்டுத் தனியாக இல்லாமல் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும், அதற்கு நான் கண்டிப்பாக பாஸ் ஆகவேண்டுமே என்ற கவலை ஒன்றுதான்.

அங்கிருந்த ஆசிரியைகள் என் கையெழுத்தைப் பார்த்து மிகவும் பாராட்டினார்கள். எனக்கு அந்த சிறந்த பள்ளியில் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. மிகக் கட்டுப்பாடான பள்ளி. காலை 7 மணிக்கு ஸ்பெஷல் கிளாஸ்.பின்பு மாலை 6 மணிவரை பள்ளி வாசம்! ஒவ்வொரு கேள்விக்கும் எப்படி பதில் எழுத வேண்டும் என்று ஆசிரியைகள் சொல்லிக் கொடுப்பது மனதில் அப்படியே பதிந்து விடும். இறுதித் தேர்வில் 80% வாங்கி தேர்ச்சி பெற்றேன்.  கல்லூரிப் படிப்பிற்கு என் பெற்றோர் அனுமதிக்காதது எனக்கு மிகவும் வருத்தம்.

என் முதல் இரண்டு பிள்ளைக
ளும் எந்தக் கவலையும் படாமல் பரீட்சைக்கு செல்வது எனக்கு ஆச்சரியமான விஷயம்!
பெரியவனிடம்..எப்படி பரீட்சை எழுதினாய்?..என்றால்,..பரீட்சை முடிந்து விட்டது. இனி என்ன செய்வது?..என்று கூலாக சொல்லி விடுவான். +2வில்
மாநில மூன்றாமிடமும், மாவட்ட முதலிடமும் பெறறவ, பிலானியில் B.E. படித்து, ஜெர்மனியில் MS, Ph.Dமுடித்து, இப்பொழுது பெர்லின் யூனிவர்சிடியில்  Professorஆக பணி புரிகிறான்.

இரண்டாமவன் +2 பரீட்சை சமயம் உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தது. அவனோ கிரிக்கெட் பார்த்துக் கொண்டே படிப்பான். எனக்கோ ஒரே டென்ஷன். எப்படி மார்க் வாங்குவானோ என்று பயந்தேன். ..ஏன் கவலைப்படுகிறாய்? நான் நல்ல மார்க் வாங்குவேன்..என்றான்.  Commerce எடுத்து +2வில் தமிழக முதல் மாணவனாக வந்து அன்றைய முதல்வர் திரு கருணாநிதி கையால் பரிசும், KKR பாமாயில் கம்பெனியார் கொடுத்த மாருதி800 காரும் பரிசாகப் பெற்றான்.

'நான் கிரிக்கெட் பார்க்கிறேன். மார்க் வராது என்றாயே. அவர்கள் மாதிரி எனக்கும் கார் பரிசு கிடைத்தது பார்' என்றான் என்னிடம். இதைக் கேட்ட என் மனம் ஈன்ற பொழுதின் பெரிதுவந்ததை எப்படி சொல்வேன்! XIMB புவனேஸ்வரில் M.B.A படித்து இன்று Education Consultant ஆக இருக்கிறான்.

என் மகள் 2 வயதிலிருந்து என் பிள்ளைகள் பள்ளி செல்லும்
போது தானும் பள்ளிக்கு செல்வேன் என்று அழுது அடம் பண்ணுவாள். அவள் ஏழாம் வகுப்பு படிக்கும்போது என் கணவருக்கு ஈரோடு மாற்றலாக அவளும் பத்தாம் வகுப்பு வரை நான் படித்த கலைமகள் பள்ளியில் படித்தாள். 'பரீட்சைக்கு நேரமாச்சு கிளம்பு' என்று சொல்லும்வரை படித்து என் விருப்பம் போல மருத்துவர் ஆனாள்!

கடைக்குட்டி பிள்ளைக்கு பள்ளி செல்வதும், பாடம் படிப்பதும், பரீட்சை எழுதுவதும் சிறிதும் பிடிக்காத செயல். தமிழில் எப்பவும் ஃபெயில் மார்க்! எப்படி பாஸ் பண்ணி மேலே படிப்பானோ என்று எங்களுக்கு ஒரே கவலை. கணிதம் கரும்பு என்றால், கம்ப்யூட்டரோ கல்கண்டு அவனுக்கு! மற்ற பாடங்களில் பாஸ் மார்க் வாங்கினாலும் இவற்றில் 100 மார்க் வாங்கி விடுவான். இப்படி படித்தவன் +2வில் 95% எடுத்து பாஸ் செய்தது எப்படி என்பது எங்களுக்கு இன்றும் புரியாத விஷயம்!  மும்பை IITயில் M.Tech முடித்து இன்று லண்டனில் பணிபுரிகிறான். 

அன்று பரீட்சைக்கு நேரமாச்சு என்று பள்ளிக்கு அவசர அவசரமாக அனுப்பினோம்!இன்றோ நம் வீட்டுக் குழந்தைகளை 'பரீட்சைக்கு நேரமாச்சு' என்று சொல்லி வீட்டிலேயே கம்ப்யூட்டரில் எழுதச் சொல்கிறோம். இது புதிய அனுபவம்.

என் பெரிய பேத்தி எட்டாம் வகுப்பு. அவள் onlineல் பரீட்சை எழுதியதைப் பார்த்தேன். கம்ப்யூட்டர் திரையில் கேள்வித்தாள் தெரிய, இவள் பதில் எழுதும் தாளை காமிரா முன் வைத்து எழுதினாள். 'உலகம் உள்ளங்கையில்' என்பது உண்மைதானே!

என் சின்ன பேத்தி இரண்டாம் வகுப்பு. தினமும் அவளை எழுப்பி கம்ப்யூட்டர், Earphone எல்லாம் சரி பண்ணி படிக்க சொல்வது வித்யாசமான விஷயம்!  முதல் period முடிந்ததும் வெளியே வந்து ஏதாவது சாப்பிடுவதும் குடிப்பதும் அவளுக்கு ஜாலியாக இருக்காம்! 'நான் இப்படியே எப்பவும் படிக்கிறேன். ஸ்கூல் எதற்குப் போகணும்?' என்பாள்.நாம் நினைத்தும் பார்க்காத இந்த நிலைமைக்கு காரணம் யாரறிவார்? நம்மை எந்தப் பரீட்சைக்கு தயார் செய்கிறாரோ அந்தக் கடவுள்?

பள்ளியில் எழுதுவது மட்டுமா பரீட்சை? நம் அன்றாட வாழ்க்கையில் செய்யும் ஒவ்வொரு செயலும் நமக்கு பரீட்சைதான்.  ஒரு சின்னக் குழந்தை குப்புறத்திக் கொள்வதோ...காலையில் வாசலில் போடும் புள்ளிக் கோலமோ...அலுவலகத்தில்
மிக முக்கிய பணியோ..
அனைத்துமே பரீட்சைதான்!

இந்த உலகமே ஒரு பள்ளிதான்..ஈசனே இவ்வுலகை நடத்தும் ஆசிரியர்..பள்ளியில் 'பரீட்சைக்கு நேரமாச்சு' என்று பரபரக்கும் நாம், வாழ்க்கை என்று முடியுமோ, அதற்குள் அந்த இறைவனைப் பாடிப் பணிந்து அவனை அடைய பக்தி செய்வோம் என்று நினைப்பதில்லை. நாம் பிறந்தது முதல் இறப்பதுவரை அவன் வைக்கும் பரீட்சைகள்தான் நம் இன்பதுன்பங்கள். எவ்வளவு கடினமான பரீட்சையிலும் நம் வாழ்க்கையை இறை அருளுடன் நடத்தி , பக்தி செய்து முக்தியைப் பெறுவோம்🙏🏼

Sunday, 8 November 2020

மலரும் நினைவுகள்

Saturday_special..7.11.2020

நான் முறையாக கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டவள். நான் பாட்டு கற்றுக் கொள்ளும்போதே மேடையில் பக்க வாத்யத்துடன் பாடியதுண்டு. சின்ன வயதில் சினிமா பாட்டுகளை நானும் என் தம்பியும் இணைந்து பாடியதுண்டு. 

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு என் மகனுடன் இணைந்து பாடிய அனுபவம் மறக்க முடியாதது. என் கடைசி பிள்ளை திரைப்படப் பாடல்களை மிக நன்றாகப் பாடுவான். 

நாங்கள் மும்பையில் இருந்தபோது Vashi Fine Arts society 'ல் நான் உறுப்பினராயிருந்தேன். அங்கு திரைப்பாடல் நிகழ்ச்சி ஒன்றில் நானும் என் மகனும் இணைந்து திரு S.P.B அவர்கள் பாடிய அந்திமழை பொழிகிறது பாடலைப் பாடினோம். எங்கள் இருவருக்குமே முதல் அனுபவம். 

அந்தநாளில் இப்பொழுது போல் காமிரா மொபைல் இல்லாததால் வீடியோ இல்லை. என் பெண் பாடலை மட்டும் record செய்தாள். 

புகைப்படங்களும் சரியாக வரவில்லை. இந்த ஒரு புகைப்படம் மட்டுமே இருந்ததால், இத்துடன் பாடலை இணைத்தேன்.நீங்களும் கேட்டு ரசிக்கலாமே!